திரும்பிப்பார்க்கின்றேன் - முருகபூபதி

. 
வேரைத்தேடி  கடல்  கடந்து  சென்றேன்.   இன்று  எனது  பேரன்  பேத்திகளுக்கு   காண்பிக்க   மீண்டும்   கடல்   கடக்க வேண்டும். 
எம்மவரில்   படர்ந்திருக்கும்    வேரும்  வாழ்வும்
ராமாராமநாதன்   நினைவுகள்

                                                       
 எழுத்தாளனுடைய    படைப்பை    பார்.    அவனது   தனிப்பட்ட வாழ்க்கையைப்பார்க்காதே   என்று    ஒரு   மூத்த   கவிஞர் சொல்லியிருக்கிறார்.   ஏனென்று   கேட்டதற்கு   ஒரு  மரத்தின் கிளையைப்பார்   அதில்    பூத்துக்குலுங்கும்   மலர்களையும்   அதிலிருந்து தோன்றும்   காய்    கனிகளையும்  பார்.   ஆனால்   அந்த   மரத்தின் வேரைப்பார்க்க    முனையாதே.   பார்க்க   முயன்றால்   மரம்தான் பட்டுப்போகும்.    ஒரு   கட்டிடத்தின்   அத்திவாரமும்    அப்படித்தான் அதனைத்தோண்டிப்பார்க்க    முயன்றால்   கட்டிடமே    சரிந்துவிடும்    என்றார். மேலும்   விளக்கம்   தருகையில்  -   ஒரு  ஹோட்டலுக்குச்சென்றால் சாப்பிட்டுவிட்டு  அதற்குரிய   பணத்தை    செலுத்திவிட்டு திரும்பிவிடவேண்டும்.    அந்த   உணவுவகைள்   தயாராகும்   சமையல் கூடத்தின்   பக்கம்   சென்றால்  சில  வேளை  அங்கு   சாப்பிடவும்   மனம் வராது   என்றும்   சொன்னார்.
தன்னை   ஒரு   திறந்த  புத்தகமாக  வைத்திருந்து    தன்னைப்படிப்பவர்கள் தன்னைப்போன்று   ஆகிவிடக்கூடாது   என்றும்   எச்சரித்தவர்தான் அந்தக்கவிஞர்.
அவர்தான்   கவியரசு   கண்ணதாசன்.
வேரைத்தேடி  மரத்தை   நாடக்கூடாதுதான்.    ஆனால் - ஒரு  மனிதன்  தனது பூர்வீகத்தின்   வேரைத்தேடுவது   சுவாரஸ்யமான    அனுபவம்தான்.   நான் சந்திக்கும்  சிலரிடம்   இந்தப் பூர்வீகம்    பற்றிய   உரையாடல்   வரும்பொழுது   உங்களது   நினைவிலிருக்கும்   மூதாதையர்களின்   பெயர் தெரியுமா?   எனக்கேட்பேன்.
அப்பா   பெயர்   தெரியும்.   அப்பாவின்   அப்பா   (தாத்தா)  பெயரும்  தெரியும். தாத்தாவின்   அப்பா   (கொள்ளுத்தாத்தா)   பெயரும்   தெரியும்.    அதற்கு அப்பால்    தெரியாது.    தெரிந்தவர்களிடம்   கேட்டுத்தெரிந்துகொள்ளவும் முடியாது.    அவர்களும்    போய்விட்டார்கள்   எனச்சொல்வார்கள்.




     Alex Haley (1921 - 1992) ; Root: The Saga Of An American Family   என்ற   அமெரிக்க   கறுப்பின  எழுத்தாளர்   Root: The Saga Of An American Family  என்ற  நூலை  எழுதியிருக்கிறார்.  அவர்  தனது  வேரின்   சால்பைத்தேடியவர்.
மலேசியாவில்   வதியும்   எழுத்தாளர்  பீர் முகம்மது  வேரும்  வாழ்வும்  என்ற   மலேசிய   படைப்பாளிகள்   பலரின்    கதைகளைத்தொகுத்திருக்கிறார். புகலிடத்தில்   வாழும்   எம்மவர்களும்   (தமிழர்கள்)   தமது வேர்களைப்பற்றிய    சிந்தனையுடன்தான்    பயணிக்கிறார்கள்.    விடுமுறை காலத்தில்   தமது   குழந்தைகளை   ஊருக்கு    அழைத்துச்சென்று   வீடு -நிலங்களைக்காத்துவரும்    தாத்தா   பாட்டி    உட்பட    அங்கிருக்கும் உறவினர்களுக்கும்     காண்பிக்கின்றார்கள்.
வேரை    அறுக்கமுடியாத   பந்தம்    அந்தப்பயண   உறவில்    நீடிக்கிறது.
எனக்கும்   எனது   அப்பாவின்   பூர்வீகம்    பற்றி  தெரிந்துகொள்ளவேண்டும் என்ற   ஆவல்   எனது   பத்துவயதுப்பருவத்தில்  வந்தது.    காரணம் அப்பாவின்    நெருங்கிய    உறவினரான   தொ.மு. பாஸ்கரத்தொண்டமான் அவர்கள்   1961   இல்  இலங்கை   வந்தார்.    கொழும்பில்   இயங்கும் விவேகானந்த   சபை   அவரை   அழைத்திருக்கிறது.
எங்களுக்கு   அவரைத் தெரியாது.
ஒருநாள்   மதியம்   நானும்   சகோதரங்களும்    பாடசாலைவிட்டு  வந்து மதிய   உணவிலிருக்கின்றோம்.    அப்பா    வியாபாரம்   நிமித்தம்    வெளியூர் சென்றுவிட்டு   திடுதிப்பென    வந்து    இறங்கிவிட்டார்.    கையிலே    இரண்டு பெரிய    பைகளில்   மரக்கறி -   பழங்கள்.       வீட்டுக்குத்தான்   வாங்கி வந்திருக்கிறார்    என்று   அம்மா  நினைத்தார்கள்.
அப்பாவிடம்    இனம்புரியாத   பரபரப்பு.
பாபா   ( அம்மாவின்   செல்லப்பெயர்)    என்னுடைய    மாமா தமிழ்நாட்டிலிருந்து    வந்திருக்கிறார்.   அவர்    பெரிய    எழுத்தாளர்.    அத்துடன் அவர்    பாளையங்கோட்டையின்    கலெக்டர்.    அவரை   இரவு   விருந்துக்கு அழைத்துவரப்போகிறேன்.    அவர்    மச்சம்    மாமிசம்    சாப்பிடமாட்டார்.    இரவு விருந்துக்கு    ஏற்பாடு  செய்  -   என்றார்.
எங்களுக்கு    ஆச்சரியம்.    அப்பாவின்   மாமனார்  ஒரு    எழுத்தாளரா? கலெக்டரா?
சும்மா   பொய்    சொல்லாமல்    கால்    முகத்தை   கழுவிட்டு   வாங்க. சாப்பிடலாம்  -    என்று  அம்மா   சொன்னார்கள்.
நான்  பொய்   சொல்லவில்லை.    இதோ    பேப்பரைப்பார். எனச்சொல்லிவிட்டு   அன்றைய   தினகரன்   பத்திரிகையை   காண்பித்தார். அதிலே  பாஸ்கரத்தொண்டமான்   பற்றி   கட்டுரையும்    அன்றைய   கொழும்பு    நிகழ்ச்சி   செய்தியும்   இருந்தது.
  செய்தி   சரியாக   இருந்தாலும்   அப்பாவின்   கூற்றைத்தான் நம்பமுடியாமலிருந்தது.   அப்பா   உடனடியாகவே   ஒரு   காரை   வாடகைக்கு    அமர்த்திக்கொண்டு   ஊரில்   எமது   பாடசாலை   தலைமை ஆசிரியர்    பண்டிதர்    மயில்வாகனன்    மற்றும்    தமிழ் - சரித்திர   பாட ஆசிரியர்   உடப்பூர் பெரி. சோமஸ்கந்தர்    (பின்னாளில் வில்லசைக்கலைஞராக   புகழ்பெற்றவர்)    மற்றும்    எமது   தாய்   மாமனார் சுப்பையா    ஆகியோருக்கெல்லாம்   தகவல்   சொல்லிவிட்டு   கொழும்புக்கு பறந்துவிட்டார்.
தான்   அதிகம்  படிக்கவில்லை.   படித்த    ஒருவர் -   தமிழக   அரசில் பதவியிலிருப்பவர்    வீட்டுக்கு    வரும்பொழுது    படித்த   அறிஞர்குழாம் வீட்டிலிருக்கவேண்டும்     என்ற   எண்ணத்தில்தான்   அப்பா அவர்களையெல்லாம்   அந்த   இராப்போசன   விருந்துக்கு    அழைத்தார் என்று    அம்மா    எங்களிடம்   பிறிதொரு   சந்தர்ப்பத்தில்   சொன்னார்.
எதுவித    முன்னறிவித்தலும்    இன்றி  கொழும்பு   விவேகானந்தா  சபைக்குச்சென்று    பாஸ்கரத்தொண்டமான்    மேடையில்    பேசி   முடிக்கும் வரையில்   காத்திருந்து   அவர்   அருகே   ஓடிச்சென்று   அவரது   கரத்தில் ஒரு   எலுமிச்சம்   பழத்தை   வைத்து  தன்னை  அவருக்கு அறிமுகப்படுத்தியிருக்கிறார்   அப்பா.
பொதுவாக   இலங்கையில்   மாலை   அணிவித்து    கௌரவிப்பதுதான்   மரபு. ஆனால் -  தமிழக    மரபில்   அப்பா   அவரது   கையில்   எலுமிச்சம் பழத்தை   வைத்தவுடன்   அவர்  ஏறிட்டுப்பார்த்து  அடையாளம் கண்டுகொண்டார்.     அப்பா   அவரை   கட்டி   அணைத்து  அழுது தீர்த்திருக்கிறார்.


அவரும்  தனது   நிகழ்ச்சி  நிரலை   மாற்றிக்கொண்டு   அங்கிருந்து அப்பாவுடன்   புறப்பட்டு  வந்தார்.   அன்று   இரவு    அடைமழை.   மாமா மழையையும்    உடன்   அழைத்துவந்துவிட்டீர்கள்.  இது   நல்ல  சகுனம். என்று  அப்பா  நாதழுதழுக்கச்சொல்லிவிட்டு    என்னையும்   அக்கா  தம்பிமார் தங்கைகளையும்    அவரது    காலில்   விழுந்து    வணங்கச்சொன்னார்.
அவர்    என்னை  தனது   மடியில்     இருத்திக்கொண்டு    எனது   படிப்பு பற்றிக்கேட்டார்.   அந்த    இரவு   விருந்திலே    அவர்   தயிர்   கேட்டார்.   நாங்கள் வாங்கிவைத்திருக்கவில்லை.
' இந்த  மழை  காலத்தில்  இரவில்   தயிர்   சாப்பிடலாமா?    என்று   பாட்டி கேட்டார்.
' எங்கள்   ஊர்  பழக்கம்"    என்றார்.
விருந்து   முடிந்து    புறப்பட்டபொழுது    அப்பாவே  அவரை  மீண்டும் கொழும்புக்கு    அழைத்துச்சென்றார்.
இச்சம்பவம்   நடந்தது  1961    இல்.
அதற்கு  முன்னர்   அவரது   தம்பி   தொ.மு. சிதம்பர ரகுநாதன்    1956  இல் வந்தார்.    அச்சமயம்    அப்பா   ஊரில்  இல்லை.     எனக்கு   ஐந்து   வயது. அவர்    எழுத்தாளரா   என்பது   அப்பொழுது    எனக்குத்தெரியாது.
பின்னாளில் 1970  களில்  இலக்கியப்பிரவேசம்   செய்த   காலத்தில்   இந்த அண்ணன்  -  தம்பி   பற்றி   அதிகம்    தெரிந்துகொண்டேன்.
1956  இல்   இலங்கை  முற்போக்கு  எழுத்தாளர்  சங்கம்   நாடளாவிய   ரீதியில்   பாரதி    விழாக்களை    நடத்தியபொழுது    இலங்கை    வந்திருந்த ரகுநாதன்   பின்னர்  1983   மார்ச்   மாதம்  பாரதி    நூற்றாண்டு   விழாவுக்கு வந்தார்.   எமது   வீட்டுக்கும்   வந்து    திரும்பினார்.   எங்கள்   ஊர்   இந்து இளைஞர்   மன்ற  மண்டபத்தில்   பாரதியும்   வள்ளுவரும்   என்ற தலைப்பில்   உரையாற்றினார்.
ரகுநாதன்   கம்யூனிஸ வாதி.    அவரது   அண்ணன்   பாஸ்கரத்தொண்டமான் ஆன்மீக வாதி.
காரை  நகர்  சிவன்  கோயிலை   தரிசித்துவிட்டு   அதனை  ஈழத்துச்சிதம்பரம்   என்று   அவர்    வருணித்துவிட்டுச்சென்றார்.   அன்று முதல்    அந்தப்பெயரும்   அந்த   திருத்தலத்துடன்    இணைந்துகொண்டது.
பாஸ்கரத்தொண்டமான்   எழுதியிருக்கும்    நூல்கள்:
பிள்ளையார்   பட்டி   பிள்ளையார்   -   இந்திய  கலைச்செல்வம்  -   பட்டி மண்டபம்  -   வேங்கடம்   முதல்   குமரி   வரை   ( 5 பாகங்கள்)   கம்பன் சுயசரிதை   -   வேங்கடத்துக்கு   அப்பால்  -  ஆறுமுகமான   பொருள்   -   சீதா கல்யாணம்.
சிதம்பர  ரகுநாதன்  ஆக்க   இலக்கிய   படைப்பாளி.   பாரதி   இயல் ஆய்வாளர்  -   மொழிபெயர்ப்பாளர்.
சேற்றில்  மலர்ந்த  செந்தாமரை  (சிறுகதை)   ரகுநாதன்   கவிதைகள் -  கன்னிகா - பஞ்சும்   பசியும்  (நாவல்கள்)   புதுமைப்பித்தன்   வரலாறு -  கங்கையும்   காவிரியும்  -   பாரதியும்   ஷெல்லியும்  -   பாரதி:  காலமும் கருத்தும்   (இந்திய   சாகித்திய   அக்கடமி   விருது   பெற்றது)   பாரதியும் புரட்சி   இயக்கமும்  -   பாஞ்சாலி  சபதம்   உறைபொருளும்   மறைபொருளும் -   இளங்கோவடிகள்   யார்?   உட்பட   பல   நூல்கள்   எழுதியிருக்கிறார்.
மாக்ஸிம்   கோர்க்கியின்    உலகப்புகழ்    பெற்ற   தாய்  நாவலை   தமிழுக்கு மொழிபெயர்த்தார்.
இந்த   அண்ணனும்   தம்பியும்   உடன்பிறந்தவர்களாக    இருந்தபொழுதும் கருத்தியலில்   தொடர்ந்தும்   மாறுபட்டிருந்தனர்.   அரசியலிலும்   வேறு வேறு   துருவங்கள்.
பாஸ்கரத்தொண்டமான்   காங்கிரஸ்  ஆதரவாளர்.   ரகுநாதன்   கம்யூனிஸ்ட் கட்சியில்   இருந்தவர்.
இருவரும்   சுதந்திர  போராட்டத்தில்   இணைந்திருந்தார்கள்.   ரகுநாதன் சிறைக்கும்   சென்றார்.
ரகுநாதனின்   மகன்   ஹரீந்திரனின்   மனைவி  எனக்கு   அண்ணி முறையானவர்.   அவர்  ஒரு  கல்லூரிப்பேராசிரியர்.   தனது   பட்ட   ஆய்வுக்கு மாமனார்   ரகுநாதனின்   படைப்புகளையே   எடுத்துக்கொண்டார்.   அவர் எழுதிய   கவிதை   நூலுக்கு   முன்னுரை    தந்தவர்   கவிஞர்  கண்ணதாசன்.
தனது   மருமகள்   தன்னை -   தனது   பட்டத்தின்  ஆய்வுக்கு எடுத்துக்கொண்டதை    ரகுநாதன்   பொருட்படுத்தவில்லை. ஆய்வுப்பட்டங்கள்   குறித்து   அவரிடம்    சிறந்த   அபிப்பிராயம் இருக்கவில்லை.
இவ்வாறு   ஒரு   குடும்பத்தில்   மூன்று   பேர்   இலக்கியத்துறையிலும் சிந்தனையிலும்   வேறு வேறு  திசைகளிலேயே   பயணித்தார்கள். 
இந்தப்பின்னணிகளிலிருந்தே   இந்தத் திரும்பிப்பார்க்கிறேன்   தொடருக்குள் பிரவேசிக்கின்றேன்.
அவுஸ்திரேலியாவுக்கு   நான்   புலம்பெயர்ந்து   சுமார்  11  வருடங்களின் பின்னர்  இலங்கைக்கு   எனது   மகன்   முகுந்தனுடன்   வந்திருந்தேன். அப்பொழுது   அவனுக்கும்   11   வயது தான்.
எனது  இலக்கிய  நண்பர்களையெல்லாம்   தேடித் தேடி  விசாரித்து அவர்களைப்   பார்க்கச்  செல்லும்    போது   அவனும்   என்னுடன் பயணித்தான்.
என்னருகே   இருந்துகொண்டே   நண்பர்கள்  -   அவர்களின் குடும்பத்தினர்களுடன்   நான்   உரையாடுவதை    அவதானித்தான்.   தலாத்து   ஓயா  சென்று   நண்பர்   கே.கணேஷ்   இல்லத்தில்   தங்கியிருந்து பின்பு    அவருடன்   மகனுக்கு    கண்டி   மாநகரத்தை   காண்பிக்க புறப்பட்ட வேளையில்    கவிஞர்   பண்ணாமத்து   கவிராயரை   அறிமுகப்படுத்த  கணேஷ்    எம்மை   அழைத்துச்  சென்றார்.
இப்படி   பல   நாட்களாக   என்னுடன்   பயணித்த  மகன் திடீரென்று சொன்னான்:  -   அப்பா--  நீங்கள்   போகும்   இடம்   எல்லாம்   உங்களுக்கு நிறைய   நண்பர்கள்    இருக்கிறார்கள்.    இது   எப்படி?   நான்    நினைக்கிறேன் உங்கள்   பொக்கட்டில்    இருக்கும்   பேனாதான்    உங்களுக்கு    இவ்வளவு நண்பர்களைத்   தேடித் தந்திருக்கிறது.   என்ன   அப்பா---?  நான்   சொல்வது சரிதானே---
அவனது    மழலைத் தமிழைத்   கேட்டதும்   நானும்    நண்பரும்   வாய்விட்டுச்   சிரித்தோம்.   கணேஷ்   மகனை    மார்போடு   அணைத்துக் கொண்டார்.
சில  நாட்களின்  பின்பு  - வத்தளையில்   வசிக்கும்   நண்பர்   தெளிவத்தை ஜோசப்   அவர்களின்   வீட்டுக்கு   ஒரு  மாலை  நேரம்  சென்றோம்.
அப்பொழுது   அவர்  சொன்னார்  -   இன்னும்  சொற்ப  நேரத்தில்   ஒருவர் உங்களைப் பார்க்க    வருகிறார்.   நீங்கள்    அவுஸ்திரேலியாவிலிருந்து வந்துள்ள   தகவல்    அவருக்குத் தெரியும்.     இன்று    நீங்கள்   என்னிடம் வரவிருப்பதாகச் சொன்னேன்.   ஆனால் -   அவர்   யார்   என்று   இப்போது சொல்ல மாட்டேன்  -   என்றார்.
யாராக   இருக்கும்   என்று   நான்  யோசித்துக் கொண்டிருக்கையில் நண்பர் ராமா -   வேகமாக   வந்து   என்னை   ஆரத்தழுவினார்.
எத்தனை  வருஷம் .... ? அவரது   நா   தழுதழுத்தது.
பின்பு   நாம்  மூவரும்   உரையாடிக் கொண்டிருந்தபொழுது    -  ராமா  விடம் கண்டியில்  மகன்  சொன்னதை   குறிப்பிட்டேன்.
உடனே   மகனை   அருகில்  அழைத்து   ராமா சொன்னார்:-  தம்பி .... பொக்கட்டில்    பேனா   இருந்தால்   மட்டும்    போதாது.... நல்ல    மனமும் இருக்க     வேண்டும்.   இந்தா ..... பார்....  எவ்வளவு    காலத்துக்குப் பிறகு சந்திக்கின்றோம்.
1972   இல்   எனது   முதலாவது   சிறுகதை   மல்லிகையில்   பிரசுரமானதைத்   தொடர்ந்து   நானும்   ராமாவின்  மனதில்   இடம் பிடித்தேன்.    என்னைப் பார்க்க   வேண்டுமென்ற   ஆவல்    அவருக்கிருந்தது என்பதை   ஓராண்டு   காலத்தின்   பின்பே   என்னால்   அறிய   முடிந்தது.
அக்காலப்பகுதியில்   எனக்கு   அறிமுகமான  பல   இலக்கிய   நண்பர்கள்  அவரைப்பற்றி   எனக்கு   நிறையவே   சொல்லியிருந்தார்கள்.
ஏதாவது   ஒரு  இலக்கியக் கூட்டத்தில்   அவரைச்   சந்திக்கலாமென்ற ஆவலும்   எனக்கு   இருந்தது.   ஆனால்    அவரைக் காணமுடியவில்லை.
பின்பு   அவரது   முகவரியை   விசாரித்துக் கொண்டு   ஒரு   காலை   நேரம் கொட்டாஞ்சேனையில்   அமைந்துள்ள   தொடர்மாடி    குடியிருப்பு வீட்டுக்குப்  போனேன்.
எனது   பெயரைச் சொல்லி   அறிமுகப்படுத்தியதும்   அவரது   முகத்தில் பிரகாசமும்   அதே   சமயம்   திகைப்பும்    படர்ந்திருந்ததை   அவதானித்தேன். அப்பொழுது   எனக்கு   23  வயது தான்.
உம்முடைய   கதைகளைப்  படித்து  விட்டு -  நீர்   குறைந்தது  50 - 60 வயதுள்ளவர்   என்று தான்   கற்பனை  செய்திருந்தேன்.   என்னால்   நம்பவே முடியவில்லை.... நீர்   முருகபூபதி தானா...?     ஆச்சரியமாக   இருக்கிறது -  என்றார்.
எனது  ஊர்  -   பூர்வீகம்  சொன்னதும்  -  அடடே   எங்கட  ‘ரகுவின் சொந்தக்காரனா.....
அவர்  ரகு  எனச் செல்லமாக  அழைத்தது    தொ.மு.சி.ரகுநாதனை.
உரையாடிக் கொண்டிருந்த   போதுதான்   தெரிந்தது   அவரும்   எனது அப்பாவைப் போன்று   தமிழ்   நாட்டைச்  சேர்ந்தவர்தானென்று.
இலக்கியக்களஞ்சியமாகவே   வாழ்ந்தவர்  ராமா  இலக்கிய ஆய்வாளர்களுக்கு   அவர்   நல்ல  துணையாக  விளங்கியவர்.
இலங்கை   கம்யூனிஸ்ட்  கட்சியுடன்   (மாஸ்கோ சார்பு)   அவருக்கு நெருக்கமான   தொடர்பு   இருந்தது.   அது   ஒரு   சந்தர்ப்பத்தில்  பிளவுண்ட போது   அவர்   பீட்டர்  கெனமன்  பக்கம்   சார்ந்து   நின்றார்.   அவரது  இனிய நண்பர்கள்    பலர்   விக்கிரமசிங்கா   பக்கம்   சார்ந்து   நின்றனர்.   மிதவாத – தீவிரவாத   நிழல்யுத்தம்    நடந்து கொண்டிருந்தது.
எது  சரி?  எது  பிழை ? என்று  கூறமுடியாதவிதமாக   ஆரோக்கியமற்ற  சூழல் நிலவியது.
ஏற்கனவே  –  பிளவுபட்டிருந்த   இலங்கையின்    இடதுசாரிகள் - மேலும் மேலும்   பிளவுபட்டமை   கவலைக்கும்    கண்டனத்துக்குமுரியது.
என்னை  இச்சந்தர்ப்பத்தில்  கொழும்பு – காலி   முகத்திடலில் பாராளுமன்றத்திற்கு   முன்பாக    எதிர்பாராதவிதமாக   சந்தித்த  ராமா சொன்னார்:-
பூபதி.... இந்தப் பிரச்சினைகளைப்   பற்றி   யோசித்து   மனம் குழம்பவேண்டாம்.    நீர்   எழுதும்...  நீர்   எழுத   வேண்டியவை   நிறைய இருக்கின்றன.    நிறைய   வாசியும்.   உமக்கு   என்ன   புத்தகம் வேண்டுமானாலும்    தயங்காமல்   கேளும்.... எழுத்தாளர்கள்   நிறைய வாசிக்க   வேண்டும்  -   எழுதவும்  வேண்டும்.
இலங்கை   முற்போக்கு   எழுத்தாளர்   சங்கத்தில்  நான்   இணைந்து   சில மாதங்களில்    கொழும்பில்   தேசிய   ஒருமைப்பாடு  மாநாடு   நடந்தது.    அங்கு     வெளியிடப்பட்ட   புதுமை  இலக்கியம்  –  மாநாட்டு  மலரில் பேராசிரியர்   சிவத்தம்பியின்   நீண்ட   கட்டுரையின்   முடிவில் - ஓரிடத்தில்    கறுப்புமையினால்   ஒருவரது   பெயர்   மறைக்கப்பட்டிருந்தது.
அந்தப்  பெறுமதியான  மலர்   பல   அருமையான   ஆக்கங்களைக் கொண்டிருந்த   போதிலும் -- அந்தக்  கறுப்புமை  –  மலரை களங்கப்படுத்திவிட்டது.   மாநாட்டுக்கு   அது   ஒரு  கறையாகவும்   பலருக்கு தென்பட்டது.
கறுப்புமையினால்  மறைக்கப்பட்டிருந்த   பெயர் :   ராமநாதன்
இது   அநாவசியமான   செயல்.  பலரையும்   ஆத்திரமடையச்  செய்திருந்தது. கட்டுரை   எழுதியிருந்த    சிவத்தம்பியையும்    மாநாட்டில் காணக்கிடைக்கவில்லை.
அங்கே   என்ன   நடக்கிறது   என்பதும்    எனக்குப்   புரியவில்லை.    அன்றுதான் தோழர்  வி.பொன்னம்பலத்தையும்    சந்திக்கின்றேன்.
ஒருவர்   வி.பி.யிடம்   வந்து   அந்தக் கறுப்புமை    அழிப்பு   வேலைக்கு நியாயம்    சொல்லிக் கொண்டிருந்தார்.
பின்னாட்களில்   அந்நபர்   இலக்கிய   உலகிலிருந்து    காணாமலே போய்விட்டார்.    ஆனால்   ராமா    மறைந்தாலும்   இன்றும்    எம்முடனேயே வாழ்கின்றார்.
அந்தச்  சம்பவத்தின்   பிறகு –  ராமா   வை   சந்தித்து   நான்  கேட்டேன்.   எனது   சந்தேகங்களுக்கு   விடை  தேடினேன்.
அவரது   பார்வையில்   அப்பொழுதும்   நான்   ஒரு   குழந்தையாகவே தென்பட்டிருக்க   வேண்டும்.
அவர்   புன்னகைதான்   சிந்தினார்.    எதுவுமே   சொல்லவில்லை.
நீ   சின்னப்பிள்ளை.... ஏன்   இதனையெல்லாம்   யோசித்து  மனம்  கலங்க வேண்டும்.   படி....   படி.... எழுது … எழுது..... என்று    பார்வையாலேயே   எனக்குச்   சொன்னார்    ராமா.
நான்   எழுதத் தொடங்கி   சுமார்   இரண்டு   வருடகாலத்துள்   5  கதைகள் வெளியாகிவிட்டன.   மல்லிகை  -  பூரணி  -   புதுயுகம்   ஆகியவற்றில்தான்   எனது  ஆரம்ப  கால   படைப்புக்கள்   வெளியாகின.
குறிப்பிட்ட  5  கதைகளைப்  படித்த   நண்பர்   எம்.சிறிபதி   16.4.1974 தினகரனில்   எழுத்துலக  இளம்  பங்காளி   என்ற   தலைப்பில்   விரிவான   விமர்சனம்   எழுதியிருந்தார்.
அதற்கு    முன்பதாக  1972  ஆகஸ்ட்   மல்லிகை    இதழில்   ரத்னசபாபதி  ஐயர் - சுலோ ஐயர்   என்ற    பெயரில்   எனது   முதல்   கதையான   கனவுகள் ஆயிரம்    குறித்து   சிலாகித்து   எழுதியிருந்தார்.
இவற்றையெல்லாம்   படித்திருந்த   ராமா -    தம்பி  பூபதி.... உமக்கு    நல்ல எதிர்காலம்    இருக்கிறது....  அரசியல்  -   இலக்கிய    குழப்பங்களை   மனதில் இருத்திக் கொள்ள   வேண்டாம்.     நீர்    எங்கள்    ரகுவின்  வாரிசு.    அரசியல்  -  இலக்கிய   உலகில்   தெளிவும்  -  உறுதியும்   மனித   நேயமும்   இருக்க வேண்டும்.   அதனை    வளர்த்துக்கொள்ளும்.    அவ்வளவுதான்    நான்  உமக்குச் சொல்லக் கூடிய   ஆலோசனை - என்றார்.
ராமா -   சொன்ன   அந்த   வார்த்தைகள்   இன்றும்   எனது   காதில் ஒலிக்கின்றது.
பொது   வாழ்வில் - பல  தரப்பட்ட   மனிதர்களையும்   சந்திக்கும்   நான்  -  மாற்றுக் கருத்துக்   கொண்டவர்களுடனும்   சிநேகபூர்வமாக உறவாடுகின்றேன்   என்றால் -   அதற்கு   நண்பர்   ராமா   சொன்ன ஆலோசனைகளும்தான்   காரணம்   என்று  இன்றும்   நம்புகின்றேன்.
நானும்   நண்பர்   ராஜஸ்ரீகாந்தனும்   அவரை   பல   இலக்கியக்கூட்டங்களில்   பேச வைக்க   பல   தடவைகள் முயன்றுள்ளோம்.
அவரது   பதில்   வெறும்   புன்னகைதான்.   கூட்டங்களுக்கு   வரச் சம்மதிப்பார்.    ஆனால் -  பேசமாட்டார்.   சில   சமயம்   கூட்டங்களுக்கு   வரவும்   மாட்டார்.
காயம் பட்ட    மனிதராகவே   இறுதிவரையில்   அவர்  எனக்கு காட்சியளித்தார்.
ராமா   மறைந்தார்    என்ற   செய்தியை  நண்பர்   கணேஷ்   மூலம்தான் தொலைபேசி    வாயிலாக   அறிந்தேன்.
அவுஸ்திரேலியா   புறப்படும்  முன்னர்  - ராமா வை   கொழும்பில்   கணேஷ் இல்லத்தில்    சந்தித்தேன்.   அதன்  பிறகு  11  ஆண்டுகள்  கழித்து  நண்பர் தெளிவத்தை  ஜோசப்பின்   இல்லத்தில்   அவருடன்   உரையாடினேன்.
எனது   எழுத்துக்களை   தொடர்ந்தும்    படித்து  எனக்கு   ஊக்கமளித்தவர் ராமா –    அதே  சமயம்    எனக்குப்  புதிராகவும்   தென்பட்டவர்.
11.08.2002   வீரகேசரி   வாரவெளியீட்டில்   நந்திதா    என்பவர்    ராமாவின் மறைவின்   பின்னர்    எழுதியிருந்த   ஆக்கத்தின்    தலைப்பு :- பட்டுக்கோட்டைக்கொரு    கல்யாணசுந்தரம்   -   பட்டமங்களத்துக்கொரு ராமநாதன் –    உபதலைப்பு :-    இலைமறை   காயாக    வாழ்ந்தவர்தான் இலட்சியவாதி   பட்டமங்களம்  ராமா.
இந்த   ஆக்கத்தை   படித்தபின்புதான்   எனக்கு   ஒரு   உண்மையும் வெளிச்சமாகியது.  ராமா   ஏன்   என்னை   அளவுகடந்த   பாசத்துடன் நேசித்தார்   என்பது   புலனாகியது.
முன்னாள்    அமைச்சர்   அமரர்   தொண்டமானின்    பூர்வீக   ஊரான பட்டமங்களத்தில்    பிறந்தவர்தான்  ராமா.      ராமா   -   தொண்டமானின் உறவினர்.
எனக்கு   ஒரு   தாத்தா   திருநெல்வேலியில்    இருந்தார்.    அவரது   பெயர் வண்ணமுத்து    தொண்டமான்.   1984   இல்  நான்   அவரை   சந்தித்தபோது – அமைச்சர்    தொண்டமான்    எமது    உறவினர்.    நான் சொன்னேன்   என்று அவரிடம் சொல்....  உனக்கு   ஏதும்  நல்ல   வேலைக்கு    சிபாரிசு   செய்வார். என்றார்.
ஆனால் -   நானோ    அமைச்சரை    அதற்காக    சந்திக்கவே    இல்லை. உறவைப்   பேணவும்   இல்லை.   
எனது   அப்பாவின்       பெயர்   லெட்சுமணன்   -  அப்பாவின் அண்ணன்    பெயர்  சுப்பையா   தொண்டமான்.    அமைச்சரின்    பெயர்  சௌமியமூர்த்தி    தொண்டமான்   -  அப்பாவின்   மாமன்   முறையான அமரர்    சிதம்பரரகுநாதனின்   அண்ணா     தொ.மு.பாஸ்கரத் தொண்டமான். (இவரது  பெயரில்  திருநெல்வேலியில்   ஒரு  வீதி    இருக்கிறது).
எனது   அப்பாவோ   நானோ   ரகுநாதனோ    எமது    பெயரின்    பின்னால் - தொண்டமான்   என   பதிவு  செய்யவில்லை.
ராமாவும் அப்படியே !
வேரைத்தேடிச்சென்று    எத்தனையோ   சுவாரஸ்யமான   தகவல்களை அறிந்தேன்.   ஆனால்......
என்னை    நேசித்த   ராமா   எனக்கு    எதுவும்    சொல்லாமலேயே     மறைந்து விட்டார்.    அவரது    ஒளிப்படத்தையும்    எனக்குத்தராமலேயே   போய்விட்டார்.
                                                ---0---   


No comments: