நினைவுகள் இனிமை: துயரங்கள் நிறைந்த கணங்களுடன்:4 - திருநந்தகுமார்

.

பொலிஸ் கடேற்படையின் முதலாவது முகாம், களுத்துறை பொலிஸ் பயிற்சிக் கல்லூரியில் நடைபெற்றது. அங்கு யாழ். இந்துக் கல்லூரி அணி விருது எதனையும் பெற்றுக்கொள்ள முடியவில்லை எனினும் கடேற்படையில் இருந்த மாணவர்களிடம் ஒரு உற்சாகம் கரைபுரண்டு ஓடியது.  சில காலம் ஓய்விலிருந்த போதும் யாழ்ப்பாணத்தில் பாடசாலைகளின் மாவட்ட நிகழ்வுகளில் வாகன நெரிசலைக் கட்டுப்படுத்தல் மற்றும் கூட்டத்தைக் கட்டுப்படுத்தல் ஆகிய கடமைகளில் பொலிஸ் கடேற் படையினர் ஈடுபட்டனர். 1973ஆம் ஆண்டு மே மாதம் 22ஆம் திகதி முதலாவது குடியரசு தினக் கொண்டாட்டங்கள் கொழும்பில் நடைபெற்ற போது அதற்கென எமது கடேற்படையிலிருந்து எழுவர் குழு எனது தலைமையில் மீண்டும் கொழும்பு சென்றது. அதற்கு முன்னதாக ஒரு மாதம் மீண்டும் கடும் பயிற்சியில் ஈடுபட்டோம். கொழும்பில் ஐந்து நாட்கள் பொலிஸ் றிசேர்வ் தலைமையகத்தில் தங்கியிருந்து பயிற்சி மேற்கொண்டோம். ஏனைய ஐந்து பாடசாலைகளில் இருந்து வந்தவர்களும் நாமும் ஒரு அணியாக இருந்தோம். காலி முகத்திடலில் நடைபெற்ற கொண்டாட்டங்களில் பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்க கலந்துகொண்டு அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.



யாழ்ப்பாணத்தில் ஒரு நாள் எனது ஆசிரியர் சுந்தரதாஸ் அவர்களிடம் பேசிக்கொண்டிருந்தபோது எனக்குக் கிடைத்த தகவல்கள் அதிர்ச்சி தருவதாக இருந்தன. தனது இருபத்திரண்டாவது வயதில் உதவி இன்ஸ்பெக்டராக பயிற்சிபெற்றவர் ஆசிரியர். அப்போது பொலிஸ் பயிற்சிக் கல்லூரியின் இயக்குனராக இருந்தவர் ஸ்டான்லி சேனாநாயக்க. பயிற்சி முடிந்ததும் மூன்று ஆண்டுகள் தற்காலிகப் பணி, நேரடியாக இயக்குனரின் மேற்பார்வையில் பணிசெய்யவேண்டும். சுந்தரதாஸ் ஆசிரியர் அப்போது களுத்துறை மாவட்டத்தில் ஒரு பொலிஸ் நிலையத்தில் பணியிலிருந்தார். அப்போது எம்.இ.பி அரசாங்கம் பதவியில் இருந்தது. எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்க பிரதமர்.  எனது ஆசிரியர் தனது ஜீப் வண்டியில் சென்றுகொண்டிருந்த போது ஓர் இரயில் கடவையில் சில நிமிடங்கள் காத்திருக்கவேண்டி வந்தது. கடவையின் கதவு திறக்கப்பட்டதும் வாகனங்கள் இரண்டு புறத்திலும் இரயில் கடவையைக் கடக்க முறபட்டபோது வாகன நெரிசல் ஏற்பட்டதாகவும் அதனைச் சரிசெய்ய எனது ஆசிரியர் சென்றபோது நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் வாகனம் அதில் நின்றதாகவும் சாரதியிடம் வாகனத்தை சற்றே பின்னே எடுத்து முன்னே வந்த வாகனத்துக்கு வழிவிடுமாறு ஆசிரியர் கூறவே, சாரதி வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் அப்போது தனது இடுப்புப் பட்டியில் யாரோ கைவப்பது போல் தான் உணர்ந்ததாகவும் ஆசிரியர் கூறினார். அவர் வேறு எதனையும் சிந்திக்கவில்லை.

 இடுப்புப்பட்டியில் கைவைத்தவர் கன்னத்தில் அறைந்துவிட்டார். அவர் ஒரு பிரதி அமைச்சராக இருப்பார் என ஆசிரியர் நினைத்திருக்கவில்லை. ஆம், தென்னிலங்கையில் அம்பாந்தோட்டைப் பகுதியைச் சேர்ந்த பிரதியமைச்சராக இருந்த ஒருவரை அடித்துவிட்டதாக பின்னர் தான் தனக்குத் தெரிந்ததாம். பத்திரிகைச் செய்திகள் சலசலப்பை ஏற்படுத்தின. ஆசிரியரை உடனடியாக மலைநாட்டிலுள்ள பொலிஸ் நிலையம் ஒன்றிற்கு அனுப்பிவிட்டனர். துறைசார் விசாரணை ஒன்றுக்கு உத்தரவிடப்பட்டது. பாராளுமன்றத்திலும் ஒரு தமிழ்ப் பொலிஸ்காரன் சிங்கள எம்பியை அடித்துவிட்டதாகப் பேசப்பட்டதாம். எப்படியும் சமாளிக்கலாம் என்று ஆசிரியர் நினைத்திருந்த வேளையில் ஒரு நாள் ஸ்டான்லி சேனநாயக்க களுத்துறையில் இருந்து நீண்ட தூரம் பயணம் செய்து ஆசிரியர் பணி செய்த பொலிஸ் நிலையம் வந்து அதிர்ச்சிச் செய்தியை சொல்லியிருக்கிறார். இவரைத் தானாகவே பதவி விலகும்படியும், அல்லாவிடின் பதவி நீக்கம் செய்யப்படுவார் என்று விசாரணை முடிவில் தீர்மானித்ததாகவும் தன்னால் எதுவும் செய்யமுடியவில்லை எனவும் அவர் கூறியிருக்கிறார். ”ஐ.ஸே, இருபத்து நாலு வயதில் கனவுத் தொழிலை, காக்கிச் சட்டையை கைவிட்டு வீட்டுக்குத் திரும்பிய சோகத்தைச் சொல்லமுடியாது” என்று அவர் சொல்லும் போது அவர் கண்கள் கலங்கியிருந்தன. 

தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்த பின்னர் ஆசிரியர் சுந்தரதாஸ் ஆங்கில ஆசிரியராக பயிற்சி பெற்று எமது கல்லூரியில் ஆசிரியராக வந்தார். அவர் ஆசிரியராக வந்த சிறிது காலம் முதற்கொண்டு அவர் கனடாவிற்குப் புலம்பெயர்ந்து பின்னர் இரண்டாயிரம் ஆண்டு வரை அவருடன் எனக்கு தொடர்பிருந்தது. சிட்னி ஒலிம்பிக் போட்டிகளின் போது இங்கு வந்தவர் பிரிஸ்பேன் வந்து என்னைச் சந்திப்பதாகச் சொன்னவர் அங்கு வராமலே சில மாதங்களில் காலமாகிவிட்டார். சுந்தரதாஸ் எனக்குக் கற்பித்தவை ஏராளம். ஆசிரியர் என்ற கம்பீரத்தை எனக்குள் உருவாக்கியவர் அவர் தான்.

குமாரசாமி வினோதனின் நட்பு
சுந்தரதாஸ் ஆசிரியர் எனக்கு ஏற்படுத்திய நட்பு வட்டத்தில் முக்கியமானவர் குமாரசுவாமி வினோதன். உடுவில் தொகுதியில் ஸ்ரீ.ல.சு.க வின் அமைப்பாளராக இருந்த வினோதன் அவர்கள் ஆசிரியரை நெருக்குவித்து மானிப்பாய் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்திற்கு உப தலைவராக்கினார். ஆசிரியரின் வீட்டில் வாரத்தில் மூன்று நாட்களாவது நான் மாலை வேளையில் செல்வதுண்டு. அங்கு வினோதனும் இன்னும் இருவரும் வருவார்கள். அவர்கள் அரசியல் பேசுவார்கள். நான் மௌனமாகக் கேட்டுக்கொண்டிருப்பேன். எந்தக் காலத்திலும் தனது கூட்டத்திற்கு நான் வரவேண்டும் என்று என்னைக் கேட்டதில்லை. எனினும் ஒருமுறை நீர் ஒரு கூட்டத்திற்கு வரவேண்டும். உமது வீட்டிலிருந்து கூப்பிடு தொலைவில் இருக்கிறது நாகம்ஸ் தியேட்டர். அங்கு தான் கூட்டம் நடக்கிறது. எனது இரு நண்பர்கள் வருகிறார்கள் என அவர் அழைத்திருந்தார். இதுவரை எதுவும் கேட்காதவர் இபோது கேட்கிறாரே என்பதனால் நானும் கூட்டத்திற்குச் சென்றேன். இது 1974 பிற்பகுதி அல்லது 1975 முற்பகுதியாக இருக்கலாம். நாகம்ஸ் தியேட்டரில் சுமார் நூற்றைம்பது பேர்வரையில் தான் இருந்திருப்பார்கள். திரையரங்கைச் சுற்றி இருந்த பொலிசார் தொகை சற்று கூடுதலாகவே இருந்தது. ஆசனங்களில் முன்வரிசை இரண்டும் காலியாகவே இருந்தன. நான் முன்வரிசையில் வாயிலுக்கு சமீபமாக அமர்ந்துகொண்டேன். சிவில் உடையில் வந்த இரு பொலிசார் என்னை சற்றே தள்ளி அமரும்படி கேட்டனர். நானும் முன்வரிசையின் நடுப்பகுதிக்குச் சற்றே அண்மையாக அமர்ந்துகொண்டேன்.


சில நிமிடங்களில் மூன்று இளைஞர்கள் உள்ளே நுழைந்தனர். அவர்களோடு வந்தவர் அல்பிரட் துரையப்பா. மூன்றாது வினோதன். முதல் இருவரும் வந்து கூட்டத்தை வணங்கிவிட்டு அமர்ந்தனர். வினோதன் தலைமை தாங்கிய விருந்தினர்களை விளித்த போது அவர்கள் இருவரின் பெயர்களைச் சொன்னார். ஒருவர் சுதந்திரக் கட்சி வாலிப முன்னணித் தலைவர் அனுர பண்டாரநாயக்க. மற்றவர் மகிந்த ராஜபக்ச, அப்போது அவர் பெலியத்த தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர். நாடாளுமன்ற உறுப்பினர்களில் வயதில் குறைந்தவர் அவரே. கூட்டத்தில் பேசியவர்கள் வழக்கமான அரசியல் பேசினார்கள். தமிரசுக் கட்சி, தமிழர் கூட்டு முன்னணி, அமிர்தலிங்கம் என்று எல்லோரையும் கடுமையாகவே விமர்சித்தார்கள். அனுரவும் மகிந்தவும் அம்மையார் ஆட்சியில் விவசாயம் செழிக்கிறது, வாழ்க்கை பூக்கிறது, உணவில் தன்னிறைவு காணும் நாள் வெகு தூரத்தில் இல்லை என்று பேசினார்கள். தமிழ்த் தலைவர்களை விட்டுவிட்டார்கள். அரசியல் விளையாட்டின் புகு முக நாயகர்கள் என்பதனால் அப்படி நடந்தார்களோ தெரியவில்லை. அவர்கள் மீது ஒரு நல்ல அபிப்பிராயம் தோன்றியது. கூட்ட முடிவில் வினோதன் என்னை அழைத்து அவர்கள் இருவருக்கும் அறிமுகம் செய்துவைத்தார். குமாரசுவாமி வினோதனுடனான எனது உறவு அவர் கொல்லப்படும் நாளுக்கு முந்தைய நாள் கொழும்பில் நான் அவரைச் சந்தித்த வரைக்கும் இருந்தது. ஏற்கனவே சண்டிலிப்பாயில் அவரது இல்லத்தில் ஒரு கொலை முயற்சி நடைபெற்றது. அது கேள்விப்பட்டதும் நானும் இன்னொரு நண்பனும் சண்டிலிப்பாய் கல்வளையில் உள்ள அவரது இல்லத்திற்குச் சயிக்கிளில் சென்று பார்த்து வந்தோம். வீட்டைச் சூழ பொலிசார் நிறைந்திருந்தமையினால் அவரைக் நேரில் சந்திக்க முடியவில்லை. பின்னர் பல தடவைகள் அவரைக் கடித மூலமும், நேரிலும் சந்தித்துள்ளேன். என் மனதில் நீங்காத இடம் பிடித்தவர் வினோதன். அவரின் கொலை அநியாயமாக இடம்பெற்ற ஒரு கொலை என்றே நான் இன்னமும் கருதுகிறேன்.

உபாலி சகாபந்துவின் நட்பு


எழுபத்தைந்தாம் ஆண்டுக்கு முன்னதாக உபாலி சகாபந்து வல்வெட்டித்துறைப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியாக கடமையேற்றிருந்தார். கடமையேற்ற பின் இரண்டு தடவைகள் யாழ்.இந்துக் கல்லூரிக்கு வந்து எனது ஆசிரியர்கள் சுந்தரதாசையும் மரியதாசனையும் சந்தித்திருக்கிறார். அப்போது நானும் கூட இருந்திருக்கிறேன்.  அவர் திருமணமாகி மனைவியுடன் வந்து வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையததிற்கு அருகிலுள்ள பொலிஸ் விடுதியில் தங்கியிருந்தபோது எமது மாணவ பொலிஸ் படையின் குழு ஒன்று வல்வெட்டித்துறைக்குச் சென்று அவருக்கு திருமண வாழ்த்துக் கூறி பரிசுப்பொருள் அளித்ததும், எம்மை நன்றாக இருவரும் உபசரித்ததும் இன்னமும் பசுமையாக நினைவில் உண்டு. பின்னாளில் உபாலி சகாபந்து கட்டுக்குருந்த பொலிஸ் பயிற்சிக் கல்லூரியில் பயிற்சியாளராக இருந்த வேளையிலும், கம்பஹா பொலிஸ் தலையகப் பொறுப்பதிகாரியாக இருந்தபோதும் அவரைச் சென்று சந்தித்துள்ளேன். அவரின் மனைவியும் விருந்தோம்பலில் எவருக்கும் சளைத்தவர் அல்ல.

யாழ்ப்பாணத்தில் ஆங்காங்கே சம்பவங்கள் நடைபெறுவதும் அதன்போது இளைஞர்கள் கைது செய்யப்படுவதும் வாடிக்கையான ஒன்று. இரண்டாவது தடவை உபாலி சகாபந்து வந்தபோது கல்லூரி வாயிலில் நின்றபடியே பேசிக்கொண்டிருந்தோம். மோட்டார் சயிக்கிளில் அவர் வந்திருந்தார்.  வடமராட்சிப் பகுதியில் நடைபெற்ற ஒரு சம்பவத்தில் கலாபதி என்ற ஒரு இளைஞரைத் அவர் கைது செய்திருக்கிறார். விசாரணை முடிவில் அவர் மீது குற்றம் இல்லை எனத் தீர்மானித்து அவரை விடுதலை செய்யவதற்காக பருத்தித்துறை நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லத் திட்டமிட்டிருந்தார். இதனைக் கேள்விப்பட்ட சி.ஐ.டி இன்ஸ்பெக்டர் பஸ்தியாம்பிள்ளை கலாபதியைத் தன்னிடம் கையளிக்குமாறு கேட்டிருக்கிறார். அதற்கு மறுப்புத் தெரிவித்த உபாலி சகாபந்து இந்த ஆபத்தைப் பற்றி கலாபதியிடமே கூறியிருக்கிறார். அதன் பின் நீதிமன்றில் அவரை ஆஜர்படுத்தி விடுவித்திருக்கிறார். எனினும் சி.ஐ.டி பஸ்தியாம்பிள்ளை கலாபதியைச் கைதுசெய்திருப்பார் என்றே தான் நம்புவதாகச் சொன்ன உபாலி தனது வேலை சுவாரசியமானதாக இருப்பதாகவும் ஒரு வருடத்தில் தான் வேறு இடம் செல்லவேண்டும் என்றும் தனது மனைவி ஆசிரியராக இருப்பதால் தனக்கு வேறு இடம் கிடைக்கும் என்றும் அவர் கூறியிருந்தார்.

காங்கேசன்துறை இடைத்தேர்தல்
இடையில் ஒரு முக்கியமான நிகழ்வு நடைபெற்றது. குடியரசு அரசியல் யாப்பு 1972 மே 22இல் நடைமுறைக்கு வந்தது. அந்த வருடம் ஒக்டோடபர் மாதம் தமிழரசுக் கட்சித் தலைவரும் காங்கேசந்துறைத் தொகுதி உறுப்பினருமான எஸ்.ஜே.வி செல்வநாயகம் தனது உறுப்பினர் பதவியைத் துறப்பதாகக் கூறி அப்போதய தேசிய அரசுப் பேரவையில் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். ஒரு விவாதத்தில் உங்கள் கட்சிக்கு போதுமான மக்கள் ஆணை கிடைக்கவில்லை என அரச தரப்பு பிரமுகர் ஒருவர் பேசியிருந்தார். தமிழரசுக் கட்சியின் ஓர் உறுப்பினர் பேசும்போது குறிக்கிட்ட இன்னொரு அரச தரப்புப் பிரமுகர், உங்கள் தலைவருக்குக் கிடைத்த வாக்குகளை விட அவருக்கு எதிராக விழுந்த வாக்குகளே அதிகம் என கிண்டலடித்திருந்தார்.  இத்தகைய சூழலில் செல்வநாயகம் தனது பதவியைத் துறந்து தான் தனித்தமிழ் ஈழம் என்ற கோரிக்கையை முன்வைத்து மீண்டும் தேர்தலில் போட்டியிடப் போவதாக கூறியிருந்தார்.  முறைப்படி ஒரு உறுப்பினர் பதவி காலியான அறிவித்தல் கிடைத்த குறித்த சில மாதங்களுக்குள் அந்தத் தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறவேண்டும். எனினும் இம்முறை காங்கேசன்துறைத் தொகுதிக்கான இடைத்தேர்தல் குறித்த காலத்தில் நடைபெறவில்லை. 1973-1974 காலப்பகுதியில் இலங்கைத் தீவில் நான்கு தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடந்தபோதும் காங்கேசந்துறை இடைத்தேர்தல் மட்டும் நடைபெறவில்லை. ஒரு வழியாக 1975 பெப்ரவரியில் அந்த இடைத்தேர்தல் நடைபெற்றது.


தமிழரசுக் கட்சியின் செல்வநாயகம், கம்யூனிஸ்ட் கட்சியின் வி.பொன்னம்பலம் மற்றும் சுயேட்சை வேட்பாளர் அம்பலவாணர் ஆகியோர் போட்டியிட்டனர். கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய பிரமுகர் வி.பி எனப்படும் வி. பொன்னம்பலம் அவர்கள் ஒரு ஆசிரியர். முற்போக்குச் சிந்தனையாளர். கம்யூனிச சித்தாந்தத்தில் ஆழந்த நம்பிக்கை கொண்டவர். சென்ற முறை போட்டியிட்ட தமிழ்க் காங்கிரஸ் கட்சி இம்முறை போட்டியிடவில்லை.  அபோது தமிழர் கூட்டணி உருவாகியிருந்தது. காங்கேசன் இடைத்தேர்தல் பிரசாரத்திற்கு மக்கள் அரசாங்கத்தின் அமைச்சர்கள் காங்கேசந்துறைக்குப் படையெடுத்திருந்தனர். ஆங்காங்கே பிரச்சாரங்கள் சூடுபிடிக்கத் தொடங்கியிருந்தன. வீடமைப்பு அமைச்சர் பீட்டர் கெனமன் தனது தோழருக்காக அதிகம் பாடுப்பட்டார். தேர்தல் நடைபெறுவதற்கு ஓரிரு வாரங்களுக்கு முன்னதாக பத்திரிகைகளில் ஒரு அறிக்கை வந்து கல்விச் சமூகத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.  பெரும்பாலும் பேராதனைப் பல்கலைக்கழகத்தைச் சார்ந்த பதினேழு கல்விமான்கள் – பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், கலாநிதிகள் உட்பட – ஒன்றாக காங்கேசந்துறை வாக்காளர்களுக்கு விடுத்த அறிக்கையில் தனிநாட்டுக் கோரிக்கையை நிராகரித்து கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் வி.பொன்னம்பலத்துக்கு வாக்களித்து அவரை வெற்றிபெறச் செய்யவேண்டுமென அவர்கள் அறிக்கையில் கோரியிருந்தனர். காங்கேசந்துறையில் நடைபெற்ற கம்யூனிஸ்ட் கட்சியில் இறுதிப் பிரசாரத்திற்கு அமைச்சர்கள் படைஒன்று வந்திருந்து பிரச்சாரத்தில் ஈடுபட்டது. தமிழரசுக் கட்சியின் இறுதிப் பிரசாரக் கூட்டம் தெல்லிப்பளையில் நடைபெற்றது. கே.கே.எஸ்.வீதி அருகே தோட்டவெளியில் நடைபெற்ற கூட்டத்திற்கு இணுவிலில் இருந்து நண்பர்கள் கூட்டம் ஒன்றுடன் நானும் சென்றிருந்தேன்.  அங்கு மேடையில் அமர்ந்திருந்தவர்களில் அடங்காத் தமிழர் சி.சுந்தரலிங்கம், கூட்டணியின் செயலாளர்கள் மு.சிவசிதம்பரம் மற்றும் அ.அமிர்தலிங்கம் ஆகியோர் அடங்குவர். மக்கள் வெள்ளம் தோட்டவெளியெங்கும் நிறைந்திருந்தது. காங்கேசன்வீதியும் மக்கள் கூட்டத்தால் நிரம்பியிருந்தது. எதிர்ப்புறத்தே உள்ள மாடி வீடு, மதில்கள் எங்கும் தலைகளே தெரிந்தன. செல்வநாயகம் உரத்தகுரலில் பேசுவதில்லை. அவர் மிக மெதுவாகப் பேச அருகில் இருந்து ஒருவர் அதை உரத்த குரலில் ஒலிவாங்கியில் சொல்வார். அப்படித்தான் அன்றும். எனினும் கூட்டம் அமைதியாக இருந்து அவர் பேச்சைக் கேட்டது. கூட்டம் நடைபெற்றுக்கொண்டிருக்கும் போது காங்கேசந்துறையில் தமது பிரச்சாரத்தை முடித்துக்கொண்டு அமைச்சர்களின் வாகன அணி கே.கே.எஸ்.வீதி வழியாக வந்துகொண்டிருந்தபோது தெல்லிப்பழையில் கூட்டம் நடைபெறும் இடத்தைக் கடக்க சற்று நேரம் எடுத்தது.

தனிநாடு கோரிக்கையை முன்வைத்து போட்டியிட்ட செல்வநாயகம் அவர்கள் இருபத்தையாயிரத்துக்கும் அதிகமான வாக்குகள் பெற்று வெற்றியீட்டினார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட வி.பி ஒன்பதினாயிரம் வாக்குகள் பெற்றிருந்தார். சுயேட்சை வேட்பாளர் இருநூறுக்கும் குறைவான வாக்குகளே பெற்றிருந்தார். மொத்தமாக முப்பத்தைந்தாயிரம் வாக்குகள் அளிக்கப்பட்டிருந்தன. செல்வநாயகத்தின் வெற்றி தனிநாட்டுக் கோரிக்கையின் வெற்றி என்றும், தமிழ் மக்கள் தனிநாட்டை அங்கீகரித்துவிட்டார்கள் என்றும் தமிழரசுக் கட்சியின் பத்திரிகையான சுதந்திரன் கொட்டை எழுத்தில் எழுதியது.  காங்கேசன் இடைத்தேர்தல் தமிழர் அரசியல் வரலாற்றில் ஒரு முக்கியமான காலக்கட்டம்.
அல்பிரட் துரையப்பாவின் கொலை
எழுபத்தைந்து ஜூலை 27ஆம் திகதி யாழ். நகர பிதாவும், சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளருமான திரு அல்பிரட் துரையப்பா பொன்னாலை வரதராஜப் பெருமாள் ஆலயத்திற்கு வழிபாட்டிற்காகச் சென்றபோது கோவில் வாசலில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டார். அப்போது யாழ்ப்பாணத்தில் அது மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. பல்வேறு பொலிஸ் குழுக்கள் அமைக்கப்பட்டு விசாரணைகள் நடைபெற்றன. இதோ துப்பு கிடைத்துவிட்டது, இன்னும் சில நாளில் கொலையாளிகள் 


அகப்படுவர் என்றெல்லாம் பத்திரிகைகள் எழுதினர். துரையப்பாவின் மரணச்சடங்கிற்கு பிரதமர் சிறிமாவோ அம்மையார் வந்திருந்தார். துரையப்பா சுயேட்சை வேட்பாளராக யாழ்ப்பாணம் தொகுதியில் போட்டியிட்டு 1965 தேர்தலில் வென்றவர். பல தடவை மாநகர பிதாவாக தெரிவுசெய்யப்பட்டவர். எந்தப் பாமரனுடனும் தோழமையுடன் பழகுப் வழக்கமுடையவர்.  அதனால் அவரின் மரணச்சடங்கில் ஏராளமானோர் கலந்துகொண்டனர். பிரதமர் சிறீமாவோ பண்டாரநாயக்கா நேரில் வந்து அஞ்சலி செலுத்திச் சென்றார்.
துரையப்பாவின் கொலைக்கு முன்பாக தமிழினத் துரோகி என்ற பட்டத்தை அவருக்குச் சூட்டியவர்கள் தமிழர் கூட்டு முன்னணியினர். சுதந்திரக் கட்சி அமைப்பாளர், குடியரசு அரசியல் யாப்பிற்கு ஆதரவானவர், யாழ்ப்பாணத்தில் தமிழாராய்ச்சி மாநாட்டை நடாத்தவிடாது நின்ற அரச தரப்போடு ஒத்துழைத்தவர், நிறைவுநாளில் நடந்த உயிர்ப்பலிக்குக் காரணமானவர் என்று பேசப்பட்டவர், இளைஞர்கள் பெருமளவில் கைதுசெய்யப்பட்டு பொலிஸ் விசாரணையில் சித்திரவதைக்கு உள்ளானபோதும் அரசுக்கு தொடர்ந்தும் ஆதரவை வழங்கிக்கொண்டு சுதந்திரக் கட்சியை வளர்க்கப் பாடுபட்டவர் என்ற காரணங்களால் தமிழர் கூட்டு முன்னணித் தலைவர்களும் இளைஞர் அமைப்பின் தலைவர்களும் அவரைத் துரோகிகள் பட்டியலில் இணைத்திருந்தனர். பொது நலனிலும், பொது மக்களிலும் அக்கறை கொண்ட அல்பிரட் துரையப்பா, தமிழர் நலன் சார்ந்து செயற்படாதது ஆச்சரியமாக இருந்தது. தமிழர் கட்சிகளோடு சேராவிட்டாலும், சுயேட்சையாகவேனும் அவர் அரசின் தமிழர் விரோதப் போக்கைக் கண்டிக்கவில்லையென்பது தவிக்கமுடியாத உண்மை தான். துரோகிகளுக்கு ஏற்படும் மரணம் இயற்கை மரணமாக அமையாது என்ற பொருள்பட காசி ஆனந்தன் முதலாய இளைஞர் தலைவர்கள் பேசியதாக மக்கள் பேசிக்கொண்டனர். தற்போது புலிகள் விரோத அமைப்புகளின் ஊடகங்களில் காசி ஆனந்தனையும் அமிர்தலிங்கத்தையுமே அல்பிரட் துரையப்பாவின் கொலைக்குத் தூபம் போட்டவர்கள் என்ற பொருள்பட விமர்ச்சித்துக்கொண்டிருக்கின்றனர்.

தமிழர்களின் அரசியல் அபிலாசகளை ஒரு புறம் தள்ளி வைத்துவிட்டு, தமது நலனுக்காக மட்டும் அரசியல் செய்தவர்களையும், தமிழர் உரிமைகளை நசுக்கும் செயல்களில் ஈடுபட்டுவரும் அரச தரப்பினருடன் தொடர்பில் இருந்தவர்களையும் துரோகிகளாக தமிழ்த் தலைவர்கள் கூறிக்கொண்ட போதும் அவர்கள் உலகில் இருந்தே ஒழிக்கப்பட வேண்டும் என அவர்கள் நினைத்திருக்க மாட்டார்கள். எனினும் இளைஞர்களையும், இளைய தலைவர்களையும் மொத்தமாக நிராகரிக்க முடியாமலும், இளைஞர்களின் செயல்களை முழுவதுமாக ஆமோதிக்க முடியாமலும் அவர்கள் தர்ம சங்கடத்திற்கு உள்ளாயினர்.

அல்பிரட் துரையப்பா கொலையில் கொலையாளிகளை நெருங்கிவிட்டோம் எனப் பத்திரிகைகளில் வந்த அறிக்கைகளுக்கு அப்பால் எதுவும் பெரிதாக நடைபெற்றிராத ஒரு நாளில் தான் வீரகேசரி பத்திரிகையில் அந்த உரிமை கோரல் வந்தது. சரியாகப் பெயர் நினைவில் இல்லையாயினும் புலிகளின் பெயரில் அந்த உரிமைகோரல் பிரசுரம் அப்படியே பிரசுரமானது. அபோது எல்லோருடைய பேச்சும் புலிகள் பற்றியதாகவே இருந்தது. மகிழ்ச்சியும், எழுச்சியும், அச்சமும் கொண்டதாக இளையோர்களும் பெரியோர்களும் காணப்பட்டனர். சில வாரங்களில் பிரபாகரனின் சிறியவயது படம் ஒன்றைப் பிரசுரித்து அல்பிரட் துரையப்பா கொலையில் அவரைத் தேடுவதாக தேசியப் பத்திரிகைகள் செய்தி வெளியிட்டன. அந்தப்படம் அவரின் பத்தாம் வகுப்புப் பொதுப் பரீட்சைக்கான தபால் அடையாள அட்டைக்காக எடுத்த புகைப்படம் என்றும் பிரபாகரனின் தற்போதயை தோற்றத்தை யாராலும் அறிய முடியாது என்றும் ஊரில் பேசிக்கொண்டனர்.

இக்காலத்தில் காசி ஆனந்தன், வண்ணை ஆனந்தன், மாவை சேனாதிராஜா ஆகியோர் அடிக்கடி காவல்துறையால் சிறைபிடிக்கப்படுவதும் பின்னர் விடுதலை செய்யப்படுவதுமாக இருந்தனர். சுதந்திரன் பத்திரிகை அவர்கள் சிறையிருந்த நாட்களின் எண்ணிக்கையை ஒவ்வொரு வாரமும் வெளிவரும் தனது பதிப்பில் வெளியிட்டுக்கொண்டிருந்தது. காசி, வண்ணை சிறையில் இன்று நூறாவது நாள் என்பது போன்று அது அமைந்திருந்தது.

மாவை சேனாதிராசாவும் அடிக்கடி கைதுசெய்யப்படுவதும் பின் நீண்டகாலத் தடுப்புக்காவலின் பின் விடுவிக்கப்படுவதும் வாடிக்கையாகிவிட்டது. சிறையிலிருந்து அவர்கள் விடுவிக்கப்பட்டு யாழ். திரும்பும்போது அவர்களை மாலை சூட்டி வரவேற்பது வழமையாகிவிட்டிருந்தது.


இங்குள்ள படத்தில் எனது ஊரவர் திரு மயில்வாகனம் இடது புறத்திலுள்ளார். அருகில் நிற்பவர் தியாகி சிவகுமாரனின் தாயார். மாலையோடு நிற்பவர் மாவை சேனாதிராஜா. மாவைக்கு வலது புறம் சிறீசபாரத்தினம். இடது புறத்தில் காசியும், கோவை மகேசனும் போல் தெரிகிறது. வலது பக்கதில் கைகளைப் பின்புறம் கட்டிக் கொண்டிருப்பவர் திரு.ஈழவேந்தன்.
காசி ஆனந்தன் நீண்டகாலம் கொழும்பு வெலிக்கடைச் சிறையில் வைக்கப்பட்டுப் பின்னர் விடுதலை செய்யப்பட்டிருந்தார். அவரை கொழும்பில் தமிழர் கூட்டணியினர் வரவேற்று ஆரவாரத்துடன் யாழ்ப்பாணத்திற்கு அழைத்து வந்தனர். அவர்கள் பயணம் செய்த யாழ் தேவி புகையிரதம் கொழும்பிலிருந்து காலையில் புறப்பட்டு மதியம் வவுனியாவை அடைந்த போது வவுனியாவில் உள்ள கூட்டணி இளைஞர்கள் யாழ்.தேவி எஞ்சினை வாழை தோரணங்களால் அலங்கரித்திருந்தனர். யாழ். தேவி நிறுத்தப்பட்ட மாங்குளம், பளை, கொடிகாமம், சாவகச்சேரி ஆகிய நிலையங்களில் ஏராளமான மக்கள் குழுமியிருந்து காசி ஆனந்தனைப் பார்த்து நலன் விசாரித்தனர். 

 இத்தனை களேபரங்களுக்கு மத்தியில் மதியம் ஒரு மணியளவில் வரவேண்டிய யாழ் தேவி மாலை நாலரை மணிக்குப் பின்னர் தான் வந்தது. அன்று மாலை யாழ் நகருக்குச் சென்றிருந்த நானும் புகையிரத நிலையம் சென்று காசி ஆனந்தனின் வரவேற்பில் கலந்துகொண்டேன்.  காசி ஆனந்தனை ஊர்வலமாக அழைத்துக் கொண்டு, யாழ். பிரதான வீதியில் அமைந்திருந்த கூட்டணியின் தலைமை அலுவலகத்திற்குச் சென்றனர். அங்கு கூடியிருந்தவர்கள் மத்தியில் காசி ஆனந்தன் பேசினார். தனக்குச் சிறையில் நடந்தவற்றையும் தனது அனுபவங்களையும் பேசினார். அப்போது ஒருவர் கொழும்பில் நடைபெற்ற கூட்டத்தில் நீங்கள் கூறிய கவிதையைக் கூறுங்கள் எனக் கேட்டபோது காசி ஆனந்தன் வெண்பா வடிவில் அமைந்த அந்தக் கவிதையைக் கூறினார். அது வெலிக்கடைச் சிறையில் அவருக்குக் கிடைத்த உணவு எப்படிப்பட்டது என்ற கூறும் கவிதை.

இரையாகும் காலைப் பாணில் வண்டிருக்கும்
சுரையளவு கல்லிருக்கும் சோற்றில் – அரையவியல்
மாட்டிறைச்சித் துண்டில் மயிரிருக்கும் என்னுயிரைக்
கேட்டுநிற்கும் கீரை கறி.

காசி ஆனந்தன் விடுதலைக்குப் பின்னால், முன்னரே அரம்பிக்கப்பட்டிருந்த தமிழ் இளைஞர் பேரவையின் கிளைகளை கிராமங்கள் தோறும் அமைக்கும் வேலைகள் மும்முரம் பெற்றது. இணுவிலில் காசி ஆனந்தனுக்கு வரவேற்பளிக்கும் விழா ஒரு பகல் பொழுதில் இணுவில் பரமாநந்த வாசிகசாலையில் நடைபெற்றது. ஏராளமான மக்கள் கூட்டம். இளைஞர்களும் தாய்மார்களும் அதிகளவில் நிறைந்திருந்தனர். மாலை அணிவிக்க முட்டி மோதியவர்களில் நானும் ஒருவன். அதன் பின்னர் ஒரு நாள் எமது ஊரவர் புலேந்திரன் அவர்களின் இல்லத்துக்கு காசி வந்திருந்தார். அவரும் பொலிசாரால் ஏலவே கைதுசெய்யப்பட்டு விடுவிக்கப்பட்டவர். காங்கேசந்துறை வீதியில் அமைந்திருந்த அந்த வீட்டில் காசி ஆனந்தனைக் காண உறவினர் கூட்டம் இருந்தது. வெளியில் யாருக்கும் தெரியவில்லை. காசியோடு அங்குள்ள மரவெள்ளித் தோட்டத்தில் நின்று ஒரு புகைப்படம் எடுத்துக்கொண்டேன். (வீட்டில் இருந்த அந்தப் புகைப்படம் 1979இல் நடைபெற்ற நெருக்கடிகளின்போது அம்மா அதனைத் தேடி எடுத்து அழித்துவிட்டார்) பின்னர் இணுவிலில் உள்ள பெரியவர் சபா ஆனந்தர் அவர்களின் வீட்டிற்கும் காசி வந்திருந்தார். அங்கும் நான் சென்றிருந்தேன். தமிழ் உணர்வாளரான சபா ஆனந்தர் நாவலப்பிட்டி, நயினாதீவு ஆகிய இடங்களில் கற்பித்து தனது மாணவர்களின் அபிமானம் பெற்றவராகவும் ஊரில் அனைவரும் அணுகக்கூடிய இனிய மொழிகளைப் பேசுபவராகம் விளங்கினார். ஓய்வின் பின் விவசாயத்தில் ஈடுபட்டிருந்தார். அவரின் பிள்ளைகளும் தமிழ் உணர்வுள்ளவர்களாக விளங்கினர்.  அவரின் ஒரு மகன் எனத் பள்ளித் தோழன். காசி ஆனந்தன் எனது நண்பனின் பெயரைக் கேட்க அவர் சேனாதிபதி பால கார்த்திகைக் குமரன் என்றதும் உங்களை எல்லாம் சேனாதிபதி ஆக்குவோம் என்றார்.

அதன் பின்னர் சபா ஆனந்தர் மகளின் திருமணத்திற்குக் காசி வந்திருந்தார். மணமகனும் இணுவில் என்பதால் எல்லோரும் தெரிந்தவர்களாக இருந்தனர். எனினும் முன்னர் அறிந்திராத இளையோர்களும் அங்கு இருந்தனர். ஆனந்தர் மாஸ்டரின் புதல்வர்களும் அரசியலில் ஈடுபாடு கொண்டவர்கள். அங்கு அப்போது லண்டனில் இருந்து வந்திருந்த வெற்றிவேலு யோகேஸ்வரனும் வந்திருந்தார்.

அடுத்த தேர்தலில் யாழ்ப்பாணத்தில் போட்டியிடுவார் என அப்போதே பேசப்பட்டவர் யோகேஸ்வரன்.


இதற்கு முன்னராக அப்போதய வட்டுக்கோட்டை எம்பி தியாகராஜா மீது ஒரு கொலைமுயற்சி நடைபெற்றது.  கொலை செய்ய இருவரில் ஒருவர் கட்டையானவர் என்றும் மற்றவர் நெட்டையானவர் என்றும் பொலிஸ் விசாரணையில் தெரியவந்தது.  பொலிசார் கட்டை-நெட்டை சோடிகளைத் தேடியலைந்த நேரம் அது. அப்போது இணுவிலில் கலகலப்பு எனும் நகைச்சுவை இதழை வெளியிட்டுக்கொண்டிருந்த தீசன் அவர்களையும் அவரது நெட்டையான நண்பர் இணுவையூர் பாஸ்கரையும் பொலிசார் விசாரணைக்கு அழைத்திருந்தனர். தீசன் இணுவில் இளம் விவசாயிகள் கழகத்திண்ட் தலைவராகவும் அப்போது இருந்தார். அந்த விசாரணை பற்றி கலகலப்பு தீசன் மிகுந்த நகைச்சுவையுடன் பின்னர் எழுதியிருந்தார்.
தமிழர் கூட்டு முன்னணியின் முதலாவது மாநாட்டை அமிர்தலிங்கத்தின் வட்டுக்கோட்டை தொகுதியில் அவரின் சொந்த இடமான பண்ணாகத்தில் அமைந்துள்ள மெய்கண்டான்

 வித்தியாசாலையில் நடாத்த த.கூ.மு முடிவெடுத்தது ஆச்சரியமல்ல. அப்போது தமிழ் இளைஞர் பேரவையின் நெருக்குதல்களால் கூட்டணியின் தலைவர்கள் சற்றே ஆடிப்போயினர். ஒரு காலத்தில் தலைவர்கள் பின்னால் கைகட்டி நின்ற இளைஞர்கள் எல்லோரும் இப்போது வேண்டுகோள் என்ற பெயரில் கட்சிக்கு நெருக்கடி கொடுக்கத் தொடங்கியிருந்தனர். ஏலவே சிறைசென்று பலவாரங்கள் சிறைவாசம் அனுபவித்து வந்த மாவை சேனாதிராஜா, காசி ஆனந்தன் ஆகியோர் இவர்களில் முக்கியமானவர்கள். தமிழரசுக் கட்சியின் பத்திரிகையான சுதந்திரன் பத்திரிகையின் ஆசிரியர் கோவை மகேசன் மற்றும் ஈழவேந்தன் ஆகியோர் திவிர போக்குடைய இளைய தலைவர்கள் அணியிலேயே இந்ருந்தனர்.

எஸ்.ஜே.வி செல்வநாயகம் தலைமையில் பண்ணாகத்தில் நடந்த மாநில மாநாட்டில் கூட்டு முன்னணியின் பெயரை தமிழர் விடுதலைக் கூட்டணி என்று மாற்றுவதாக தீர்மானம் மேற்கொண்டனர். அந்த மாநாட்டில் தான் வட்டுக்கோட்டைத் தீர்மானம் என்று புகழ்பெற்ற தீர்மானம் நிறைவேறியது. இளைஞர்களின் நெருக்குதலே மாநாட்டுத் தீர்மானம் சுதந்திரத் தமிழ் ஈழத்தை நோக்கியாதாக இருக்கக் காரணமாயிற்று.
வட்டுக்கோட்டைத் தீர்மான வாசகங்களை விளக்கிய துண்டுப்பிரசுர வினியோகத்தில் நடந்தபோது தான் அமிர்தலிங்கமும் ஏனையவர்களும் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர்.


No comments: