உலகச் செய்திகள்


காஸாவில் நெஞ்சை உறைய வைக்கும் இஸ்ரேல் போர் விமானத் தாக்குதல்

போர் நிறுத்த உடன்பாடு முறிவுக்குப் பின் காஸா மீது இஸ்ரேல் தாக்குதல் தீவிரம்: பலியான பாலஸ்தீனர்கள் எண்ணிக்கை 1,650 ஆக உயர்வு

தென் ஆபிரிக்காவை உலுக்கிய 5.3 ரிச்டர் பூமியதிர்ச்சி;ஒருவர் பலி

ஆஸியில் புகலிடம்கோரியோரை இந்தியா ஏற்கத் தயார்
=================================================================

காஸாவில் நெஞ்சை உறைய வைக்கும் இஸ்ரேல் போர் விமானத் தாக்குதல்
05/08/2014 வெளியே சென்று வந்தால் உயிருக்கு உத்தரவாதம் இல்லை என்ற நிலைக்கு உதாரணமாக இருக்கிறது பாலஸ்தீனத்தின் காஸா பகுதி. இஸ்ரேல் ராணுவத்தின் தாக்குதல் உக்கிரமடைந்துள்ள நிலையில், காஸா மக்களிடையே பீதி அதிகரித்துள்ளது.

காஸா பகுதியை தங்களின் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் ஹமாஸ் இயக்கத்தினர் மீதும், அவர்களுடன் தொடர்புடையவர்கள் மீதும் தாக்குதல் நடத்தி வருவதாகவும், இது இஸ்ரேலின் பாதுகாப்புக்கு மிகவும் முக்கியமானதொரு நடவடிக்கை என்றும் இஸ்ரேல் நியாயம் கற்பித்து வருகிறது.

28 நாட்களாக நீடிக்கும் போர் என்பதாலோ என்னவோ, தாக்குதலில் இருந்து தப்பிக்கும் அளவுக்கு மக்கள் பழகிப்போயிருக்கிறார்கள். இதில் சில விசித்திரமான சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன.

போரின் 24-வது நாளில், மதியம் 2.30 மணியளவில் காஸா நகரின் அல்-ஜல்லா தெருவில் வழக்கம்போல வாகனங்கள் சென்று கொண்டிருந்தன. திடீரென்று எங்கிருந்தோ வருகிறது இஸ்ரேலின் ஆளில்லா விமானம். அதிலிருந்து ஒரு வீட்டை மட்டும் குறிவைத்து குண்டு வீசப்பட்டது. அருகில் இருக்கும் வீடுகளின் வாசலில் இருந்து பார்க்கும் மக்கள் குரல் கொடுத்ததைத் தொடர்ந்து சாலைகளில் செல்வோர் அவசர அவசரமாக விலகிச் செல்கின்றனர்.

அந்த வீட்டின் மீது துல்லியமாக குண்டு விழுந்த அதே சமயத்தில், அந்த கட்டிடத்தில் வசிக்கும் பஷிர் அல்-ராம்லாவியின் மகனுக்கு தொலைபேசி அழைப்பு வந்தது. அதில் பேசியவர், உங்கள் வீட்டின் மீது குண்டு வீச்சு நடைபெறப் போகிறது, உடனடியாக வெளியேறுங்கள் என்று தெரிவித்தார்.

அப்போது ராம்லாவியின் உறவினர்கள் 35 பேர் அந்த கட்டிடத்தில் தஞ்சம் அடைந்திருந்தனர். தகவல் அறிந்ததும், ராம்லாவி மற்றும் உறவினர்கள் வீட்டிலிருந்து வெளியேறி உயிர் பிழைத்தனர்.

கண் இமைக்கும் நேரத்தில் அந்த சிறிய ரக குண்டு, வீட்டின் மீது விழுந்து புகையை கிளப்பியது. அதைத் தொடர்ந்து போர் விமானம் ஒன்று அங்கு வந்து தொடர்ச்சியாக அடுத்தடுத்து 2 குண்டுகளை வீசின. கட்டிடம் முற்றிலும் சேதமடைந்த பின்புதான் குண்டுவீச்சு நின்றது. அதுவரை சாலையோரங்களில் ஒதுங்கியிருந்த மக்கள், பின்னர் தங்களின் பயணத்தை தொடர்ந்தனர்.

இது போன்ற மிகவும் துல்லியமான தாக்குதல்களை இஸ்ரேல் ராணுவத்தினர் நடத்தி வருகின்றனர். சிறிய ரக குண்டு வருகிறது என்றவுடனே, மக்கள் முன்னெச்சரிக்கையாக அந்த இடத்திலிருந்து விலகிச் சென்று விடுகின்றனர். இந்த தாக்குதலில் கட்டிடம் சேதமடைந்த அதே நேரத்தில் உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை.

ராம்லாவியின் மகன் கூறும்போது, “எங்களின் தொலைபேசி எண்ணுக்கு யார் அழைத்தார்கள் என்று தெரியவில்லை. இங்கு குண்டு வீசப்போவது பற்றி இஸ்ரேல் ராணுவத்துக்கு மட்டுமே தெரியும். அந்த தகவலை இஸ்ரேல் ராணுவத்தினர் தெரிவித்தனர் என்றால், அவர்களுக்கு எனது தொலைபேசி எண் எவ்வாறு கிடைத்தது என்பது புரியாத புதிராக உள்ளது. அல்லது ஆளில்லா விமானம் வட்டமிட்டு வருவதைப் பார்த்து எனது வீட்டின் அருகில் வசித்தவர்கள் எனக்கு தொலைபேசியில் தெரிவித்தனரா என்றும் தெரியவில்லை. எப்படியிருந்தாலும், இப்போது எனது வீட்டை இழந்துவிட்டேன். மீண்டும் புகலிடம் தேடி அலைந்து வருகிறேன்.

ஹமாஸ் இயக்கத்தினருடன் எனக்கோ, எனது குடும்பத்தினருக்கோ எந்தவிதமான தொடர்பும் இல்லை. அப்படியிருக்கும்போது எனது வீட்டை மட்டும் குறிவைத்து தாக்குதல் நடத்தியது ஏன் என்று தெரியவில்லை” என்று தெரிவித்தார். நன்றி தேனீ 


போர் நிறுத்த உடன்பாடு முறிவுக்குப் பின் காஸா மீது இஸ்ரேல் தாக்குதல் தீவிரம்: பலியான பாலஸ்தீனர்கள் எண்ணிக்கை 1,650 ஆக உயர்வு
04/08/2014   காஸாவின் தெற்குப் பகுதியில் இஸ்ரேல் ராணுவம் தாக்குதலைgaza_blastதீவிரப்படுத்தியுள்ளது. அதோடு, ஹமாஸ் இயக்கத்தினரால் பிடித்து வைக்கப்பட்டிருப்பதாகக் கருதப்படும் இஸ்ரேல் ராணுவ வீரரை தேடும் பணியையும் தொடங்கியுள்ளது.

இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலில் உயிரிழந்த பாலஸ்தீனர்கள் எண்ணிக்கை 1,650 ஆக உயர்ந்துள்ளது. மொத்தம் 8,900 பேர் காயமடைந்துள்ளனர்.

ஹமாஸ் - இஸ்ரேல் இடையேயான 72 மணி நேர போர் நிறுத்த உடன்பாடு, கடந்த வெள்ளிக் கிழமை அமலுக்கு வந்த சிறிது நேரத்திலேயே முறிந்தது. இதைத் தொடர்ந்து கடந்த வெள்ளிக் கிழமை இரவு இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 160 பேர் கொல்லப்பட்டனர். இதில் ராபா பகுதியில் மட்டும் 50-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.

போர் நிறுத்தம் முறிந்ததற்கு ஹமாஸ் இயக்கத்தினர்தான் காரணம் என்று இஸ்ரேல் குற்றம் சாட்டியுள்ளது. இஸ்ரேல் வீரர்கள் இருவரை சுட்டுக் கொன்ற துடன், மேலும் ஒருவரை கைது செய்து ஹமாஸ் இயக்கத்தி னர் அழைத்துச் சென்றுள்ள னர். அதனால்தான் மீண்டும் தாக்கு தலை தீவிரப்படுத்தியுள்ளோம் என்று இஸ்ரேல் தரப்பில் கூறப்படு கிறது.

ஆனால், அமெரிக்க நாடு மற்றும் ஐ.நா. உதவியுடன் கொண்டு வரப்பட்ட மனிதாபிமான ரீதியிலான போர் நிறுத்தம் தொடங் குவதற்கு முன்புதான், இஸ்ரேல் ராணுவ வீரர்கள்மீது தாக்குதல் நடத்தியதாகவும், இஸ்ரேலின் குற்றச்சாட்டில் உண்மையில்லை என்றும் ஹமாஸ் இயக்கம் கூறியுள்ளது. இதற்கிடையே இஸ்ரேல் பகுதியில் ராக்கெட் குண்டுகளை வீசித் தாக்குவதை ஹமாஸ் இயக்கத்தினர் தீவிரப்படுத்தி யுள்ளனர்.

கடந்த சனிக்கிழமை அதிகாலையில் காஸா பகுதி யிலிருந்து ஏவப்பட்ட 51 ராக்கெட்டு கள் தங்கள் பகுதிகளை தாக்கிய தாகவும், 9 ராக்கெட்டுகளை வானிலேயே சுட்டு வீழ்த்தியதாக வும் இஸ்ரேல் ராணுவ செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார். இதுவரை இப்போரில் 63 இஸ்ரேல் ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். 400 வீரர்கள் காயமடைந்தனர். 4 பொதுமக்கள் உயிரிழந்தனர்.

ஒபாமா குற்றச்சாட்டு

அமெரிக்க அதிபர் ஒபாமா கூறும்போது, “போர் நிறுத்த உடன்பாட்டை ஹமாஸ் இயக்கம் மதித்து நடக்கும் என்ற நம்பிக்கை, இஸ்ரேலுக்கும், சர்வதேச நாடுகளுக்கும் ஏற்படாத பட்சத்தில் மற்றொருமுறை போர் நிறுத்தம் ஏற்படுவது சாத்தியமில்லை” என்றார்.
காஸாவிலிருந்து ராணுவத்தை திரும்பப் பெறுகிறது இஸ்ரேல் அரசு
காஸா பகுதியிலிருந்து ராணுவத்தை திரும்பப் பெறும் நடவடிக்கையை இஸ்ரேல் தொடங்கியுள்ள நிலையில், காஸாவிலுள்ள ஐ.நா.பள்ளி மீது ஞாயிற்றுக்கிழமை அந்நாடு நடத்திய தாக்குதலில் 10 பேர் பலியாகினர். 30 பேர் காயமடைந்தனர்.

இது குறித்து காஸா பகுதி சுகாதாரத்துறை அமைச்சர் அஷ்ரஃப் அல் காத்ரா கூறுகையில், "எகிப்து எல்லையில் அமைந்துள்ள ரஃபா பகுதியில் போரால் பாதிக்கப்பட்டவர்கள் ஐ.நா.வால் தங்க வைக்கப்பட்டுள்ள பள்ளி மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 10 பேர் உயிரிழந்தனர். 30 பேர் காயமடைந்தனர். முன்னதாக ஐ.நா. பள்ளி மீது இதேபோல் தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது' என்றார்.

ஐ.நா.பள்ளியில் உயிரிழந்த 10 பேர் உள்பட ரஃபா பகுதியில் 30 பேர் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தனர். இதைத் தொடர்ந்து 27ஆவது நாளாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,712ஆக உயர்ந்துள்ளது. காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 9 ஆயிரத்தை எட்டியுள்ளது.

அதேபோல் இஸ்ரேல் தரப்பில் உயிரிழந்த ராணுவ வீரர்களின் எண்ணிக்கை 64ஆகவும், காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 400ஆகவும் உயர்ந்துள்ளது.

இந்நிலையில் இஸ்ரேல் பாதுகாப்புப்படை செய்தித்தொடர்பாளர் ரோனே கப்ளான் கூறுகையில், ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு எதிரான "ஆபரேஷன் புரொடக்டிவ் எட்ஜ்' என்ற நடவடிக்கை இன்னும் தொடர்ந்துகொண்டிருக்கிறது.

காஸா பகுதியிலுள்ள சாதக, பாதங்களை மதிப்பிட்டு வருகிறோம். எனவே முழுவதுமாக ராணுவ வீரர்கள் திரும்பப் பெறப்படமாட்டார்கள். நாங்கள் இன்னும் எச்சரிக்கையுடனே இருக்கிறோம்' என்றார்.

வீரர் உயிரிழந்ததாக இஸ்ரேல் அறிவிப்பு: தங்கள் நாட்டு வீரரை தீவிரவாதிகள் வெள்ளிக்கிழமை கடத்திச் சென்றதாகக்கூறி, அன்று அறிவிக்கப்பட்டிருந்த 72 மணி நேர போர் நிறுத்தத்தை மீறி மீண்டும் காஸா மீது கடும் தாக்குதலை இஸ்ரேல் தொடங்கியது. இந்தப் புகாரை ஹமாஸ் தீவிரவாதிகள் மறுத்து வந்த நிலையில், தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட அந்த வீரர் உயிரிழந்துள்ளதாக இஸ்ரேல் அரசு சனிக்கிழமை அறிவித்தது.
"லட்சியத்தை அடையும் வரை சண்டையை நிறுத்த மாட்டோம்'

"எங்களது லட்சியத்தை அடையும் வரை இஸ்ரேலுக்கு எதிரான சண்டையை நிறுத்தமாட்டோம்' என்று ஹமாஸ் தீவிரவாதிகள் அறிவித்துள்ளனர்.

இது குறித்து ஹமாஸ் தீவிரவாத இயக்க செய்தித்தொடர்பாளர் ஃபாஸி பர்ஹும் கூறுகையில், "எங்களது லட்சியத்தை அடையும் வரை இஸ்ரேலுக்கு எதிரான சண்டை தொடரும். இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு குழப்ப நிலையில் உள்ளார். இது அவர் உண்மையான நெருக்கடியை சந்தித்து வருகிறார் என்பதை காட்டுகிறது' என்று தெரிவித்தார்.  நன்றி தேனீ 
தென் ஆபிரிக்காவை உலுக்கிய 5.3 ரிச்டர் பூமியதிர்ச்சி;ஒருவர் பலி

07/08/2014 தென் ஆபிரிக்காவை 5.3 ரிச்டர் பூமியதிர்ச்சி செவ்வாய்க்கிழமை தாக்கியதில் குறைந்தது ஒருவர் பலியாகியுள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளனர்.
தலைநகர் ஜொஹன்னஸ்பேர்க்கின் தெற்கே சுரங்கங்கள் நிறைந்த ஒர்க்னி நகரை தாக்கிய இந்த பூமியதிர்ச்சியால் இடிந்து விழுந்த கட்டடமொன்றின் கீழ் சிக்கியே மேற்படி நபர் உயிரிழந்துள்ளார்.
அதே சமயம் பூமியதிர்ச்சியால் ஒர்க்னி நகரிலுள்ள தங்கச் சுரங்கத்தில் பணியில் ஈடுபட்டிருந்த 17 சுரங்கத் தொழிலாளர்கள் காயமடைந்துள்ளனர்.
ஜொஹன்னஸ்பேர்க் நகரின் தெற்கே 180 கிலோமீற்றர் தூரத்தில் தாக்கிய இந்தப்பூமியதிர்ச்சியால் தலைநகரிலுள்ள கட்டடங்கள் நடுங்கியதால் மக்கள் அலறியடித்துக் கொண்டு கட்டடங்களை விட்டு வெளியேறியதாக கூறப்படுகிறது. நன்றி வீரகேசரி 
ஆஸியில் புகலிடம்கோரியோரை இந்தியா ஏற்கத் தயார்


07/08/2014 அவுஸ்திரேலியாவில் புகலிடம்கோரிய 157 பேரில்  இந்தியர்களை மாத்திரம் ஏற்றுக்கொள்ள தயார் என்று மத்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது. 
தமிழகத்தின் பல்வேறு அகதிகள் முகாம்களை சேர்ந்த 157 பேர் கடல் மார்க்கமாக தப்பிச் சென்று அவுஸ்திரேலியாவில் புகலிடம்கோரினர். இவர்களை ஆறுவார காலம் சிறைவைத்த அவுஸ்திரேலியா, மனித உரிமை ஆர்வலர்கள் கொடுத்த நெருக்கடியை அடுத்து முகாம் ஒன்றுக்கு மாற்றியது. 
இவர்களை இந்தியாவிற்கு  திருப்பி அனுப்ப எடுத்த முயற்சிகளை அகதிகள் ஏற்றுக்கொள்ளாததால் அவுஸ்திரேலியாவுக்கு அருகில் உள்ள நவுரு தீவில் அவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதனிடையே இவர்களை திரும்பி செல்லுமாறு நவுரு தீவில் உள்ள அதிகாரிகள் வற்புறுத்துவதாக கூறப்படுகிறது. 
இந்நிலையில் 157 பேரில் இந்தியர்கள் எவராவது இருப்பின் அவர்களை ஏற்றுக்கொள்ள தயார் என்று இந்திய மத்திய அரசு அறிவிதுள்ள்ளது.
இது தொடர்பில் ஊடகவியலாளர்களிடம் கருத்துத் தெரிவித்த வெளியுறவுத்துறை அமைச்சக செய்திதொடர்பாளர் சையது அக்பருதீன்,
அகதிகளில் இந்திய குடியுரிமை உள்ளவர்கள் எவ்வித தயக்கமும் இன்றி திரும்பி வரலாம் என்று தெரிவித்தார். மற்றயவர்களை பொருத்தவரை இலங்கை அகதிகளாக இருந்தால் இந்தியா கையெழுத்திட்டுள்ள சர்தேச ஒப்பந்தம் அடிப்படையில் எற்றுக்கொள்ளப்படுவார்கள் என்று தெரிவித்தார். இதனையடுத்து நவுரு தீவில் உள்ள அகதிகள் விரைவில் இந்தியாவிற்கு திரும்ப வாய்ப்புள்ளமை குறிப்பிடத்தக்கது. 
நன்றி வீரகேசரி

No comments: