மாமாங்கேஸ்வரர் ஆலயத் திருவிழா தி. - துலக்சனா கிழக்குப் பல்கலைக் கழகம்..

.
மாமாங்கேஸ்வரர் ஆலயத் திருவிழாவும் கிழக்குப் பல்கலைக்கழக நுண்கலைத் துறையின் பாரம்பரிய அரங்க விழாவும்:


மாமாங்கேஸ்வரர் ஆலயத்திருவிழாச் சூழலில் கிழக்குப் பல்கலைக்கழக நுண்கலைத்துறையினர் நடாத்திய பாரம்பரிய அரங்க விழா - 2014

பாரம்பரியக் கலைகளின் சமகாலத் தேவைகளையும் முக்கியத்துவத்தினையும் அறிந்து கொள்ளும் வகையில் அரங்கக் கலைஞர்களுடனும் சமூகங்களுடனும் இணைந்த வகையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற கல்விச் செயற்பாடுகளில் பாரம்பரிய அரங்க விழா நான்காவது வருடமாக இம்முறையும் மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலயதிருவிழா முற்றத்தில்; நான்கு நாட்களாக ( 21.07.2014 – 24.07.2014) இரவு பகலாக வெகு சிறப்பாக நடைபெற்று முடிந்தது.

இந்த வருடம் பாரம்பரிய அரங்க விழாவானது 21.07.2014 திங்கட்கிழமை காலை 10.00 மணியளவில் மாமாங்கேஸ்வரர் ஆலயமுற்றத்தில் அமைக்கப்பட்ட கூத்துக் களரியிலே ஆரம்பமானது. நிகழ்வினைக் கிழக்குப் பல்கலைக்கழக நுண்கலைத் துறையின் தலைவர் கலாநிதி வ. இன்பமோகன் அவர்கள் தலைமை தாங்கி நடத்திச் சென்றார்.
பிரதம அதிதியாக கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் கலாநிதி கி. கோவிந்தராஜா அவர்களும், சிறப்பு அதிதிகளாக கிழக்குப் பல்கலைக்கழக கலை கலாசார பீடாதிபதி க. இராஜேந்திரம் அவர்களும், விவசாயபீட பீடாதிபதிஅவர்களும், வர்த்தக முகாமைத்துவபீட பீடாதிபதி அவர்களும்,கிழக்குப் பல்கலைக் கழகத்தின் சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவகத்தின் பணிப்பாளர் அவர்களும்,கிழக்குப் பல்கலைக் கழகத்தின் உதவிப்பதிவாளர்,மற்றும் மாமாங்கேஸ்வரர் ஆலய வண்ணக்கர், உதவி வண்ணக்கர் ஆகியோரும் வருகைதந்து இப்பாரம்பரிய கலைத்திருவிழாவினைச் சிறப்பித்திருந்தனர்.


நிகழ்வானது மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பமானது. தொடர்ந்து கிழக்குப் பல்கலைக்கழக நுண்கலைத் துறையின் மாணவர்களினால் மங்களப் பாடல், பாரம்பரியக் கூத்துப் பாடல் என்பன இசைக்கப்பட்டன. அறிமுக உரையினைக் கலாநிதி சி. ஜெயசங்கர் அவர்கள் வழங்கியிருந்தார். தலைமை உரையினைக் கலாநிதி வ. இன்பமோகன் அவர்களும் பிரதம விருந்தினர் உரையினை கலாநிதி கி. கோவிந்தராஜா அவர்களும் வழங்கியிருந்தனர். சிறப்பு விருந்தினர் உரையானது கலாநிதி க. இராஜேந்திரம், ம. அரசரெட்ணம் (வண்ணக்கர் மாமாங்கேஸ்வரர் ஆலயம்) ஆகியோர்களாலும் நிகழ்த்தப்பட்டது.

தொடர்ந்து “கூத்து ஆளுமைகளை மாண்பு செய்தல்” எனும் சிறப்பு நிகழ்ச்சி இடம்பெற்றது. இதில் புலவர் கி. அருளம்பலம் (மூத்த கூத்துக் கலைஞர்,கூத்துப் பனுவல் எழுத்தாளர்), க. கிரு~;ணர் (தப்பு வாத்தியக் கலைஞர்), க. சண்முகம் (வேடுவர் சடங்கு), மா. கேதீஸ்வரன் (இளம் கூத்துக் கலைஞர், கூத்துப் பனுவல் எழுத்தாளர்),கி. புவிக்குமார் (இளம் கூத்துக் கலைஞர், கூத்துப் பனுவல் எழுத்தாளர்), கி. குலராஜ் (பாரம்பரிய ஓவியர்), செ. சிவநாயகம் (மீளுருவாக்கக் கூத்துப் பனுவல் எழுத்தாளர்) ஆகியோர் மலர்மாலை, கைத்தறியால் நெய்யப்பட்ட பொன்னாடைகள் அணிவித்துக் கௌரவிக்;கப்பட்டதுடன் பலர் முன்னிலையில் பாராட்டையும் பெற்றுக்கொண்டனர்.

இந்நிகழ்வானது எமது மூத்த கலைஞர்களின் சேவைகளைப் பாராட்டி அவற்றினை நினைவுகூர்ந்து அவர்களினை மாண்பு செய்வதுடன்  இன்று எமது சூழலில் பாரம்பரிய அரங்க வளர்ச்சிக்கு தங்களது பங்களிப்பினை வழங்கிக் கொண்டிருக்கின்ற இளம் கூத்துக் கலைஞர்கள்;, கூத்துப் பனுவல் எழுத்தாளர்கள் ஆகியோரது பணியினை மேலும் ஊக்குவிப்பதுடன் இவர்களது கலைச் செயற்பாட்டினைத் தொடர்ந்தும் முன்னெடுக்க வேண்டும் என்கின்ற நோக்கிலேயுமாகும். அத்துடன் சமூகத்தில் இவர்களுக்கான அந்தஸ்த்தினைப் பெற்றுக் கொடுப்பதாகவும் இந்த நிகழ்வானது அமைந்திருந்ததென்பது பெருமைக்குரிய விடயமாகும்.

அடுத்த நிகழ்வானது பாரம்பரிய இசை வடிவங்களுள் ஒன்றான “ தப்பு ”வாத்திய இசை முழக்கத்துடன் கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் அவர்களினால் “ பாரம்பரிய அரங்கக் காட்சிக்கூடம் ” திறந்து வைக்கப்பட்டது. இதில் கண்ணகி வழிபாட்டுடன் தொடர்புடைய கொம்புமுறிச் சடங்கில் பயன்படுத்தும் பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. வடசேரிக் கொம்பு, தென்சேரிக் கொம்பு, மரவளையம், பில்லி, தாய் அடை, ஆப்பு என்பனவற்றுடன் பாரம்பரிய இசை வாத்தியங்களும் காண்பியப் பொருளாக வைக்கப்பட்டிருந்தது. இம்முறை கொம்புமுறி சடங்கினைப் பிரதானப்படுத்தியதாக கண்காட்சிக்கூடமானது அமைக்கப்பட்டதற்குப் பல காரணங்கள் உள்ளன. கொம்புமுறியானது வெறுமனே சடங்காக காணப்படுவது மாத்திரன்றி சமூகத்தினை ஒன்றிணைக்கின்ற ஊடகமாகவும் திகழ்கின்றது. இதில் பயன்படத்தப்படுகின்ற கொம்புகளின் அளவிலே மறைமுகமாகத் தொழில்நுட்பத் திறன் காணப்படுகின்றது. இதனை உற்றுநோக்கும் போது எமது மூதாதையரிடம் காணப்பட்ட நுட்பமான அறிவினைப் புரிந்துகொள்ளலாம். இச்சடங்கானது அம்மக்களை ஒன்றிணைக்கின்ற, சிறந்த தலைமைத்துவப் பண்பினை வளர்க்கின்ற தன்மையுடையதாக இருப்பதுடன் இவ்விளையாட்டு மகிழ்ச்சியை, ஒற்றுமையினை காட்டும் பெரு விழாவாகவே அமைகின்றது. இந்தக் காட்சிக்கூடமானது எமது பாரம்பரிய கலை வடிவங்களை மக்களுக்கு வெளிப்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டிருந்தது.

தொடர்ந்து “ பறை முழக்கம் ”  களரியிலே நிகழ்த்தப்பட்டது. இதனைக் கலைஞர் க. தர்மராசா, கலைஞர் மோ. மேகன்ராஜ் ஆகியோர்கள் ஆற்றுகை செய்திருந்தனர். ஆரம்பகாலங்களிலே பறை மேளம் எமது பாரம்பரியமான வாத்தியமாகக் கருதப்பட்டு தமிழ் மக்களின் வாழ்வியல் அம்சங்களுடன் இணைந்ததாகக் காணப்பட்டது. குறிப்பாக ஆலயங்களிலே பறைமேளம் முக்கிய இடத்தினைப் பெற்றிருந்தது. ஆனால் தற்காலங்களில் இவ்வாத்தியத்தினை அமங்கலத்திற்குரிய பொருளாகக் கருதி ஒதுக்குகின்ற மனநிலைக்கு மக்கள் மாறிவிட்டார்கள்..இன்றைய நவீன அறிவுப்பரப்பிலும் காலனித்துவம், சமஸ்கிருதமயமாக்கம் காரணமாகவும் சில சமூகங்கள் மீதும், அவர்களுக்கே உரித்தான கலை வடிவங்கள் மீதும் கட்டுப்பாடுகள், தடைகள் என்பவற்றினை விதித்து அவற்றினை ஒதுக்குகின்ற தன்மை காணப்படுகின்றது. இவ்வாறான எண்ணக்கருக்களைக் கட்டுடைத்து எமது பாரம்பரியத்தைத் தக்கவைக்கின்ற நோக்கிலே இந்நிகழ்வானது இடம்பெற்றிருந்தது.

பறைமுழக்கம் நிறைவுற்றதும் களரியிலே தப்பு வாத்தியம் இசைக்கப்பட்டது. இது மட்டக்களப்பு மாவட்டத்தின் நாவற்குடா கிராமத்தில் வாழும் அருந்ததியர் சமூகத்தினைச் சேர்ந்த கலைஞர் க. கிரு~;ணன்மற்றும் அவரது சகோதரன் க. நாராயணன் ஆகியோரால் ஆற்றுகை செய்யப்பட்டது. இது அம்மக்களுடைய பாரம்பரியக்கலை என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு சமூகதத்தினுடைய பாரம்பரிய கலை வடிவங்களானது தங்களது அடையாளங்களை மற்றவர்களுக்குத் தெரியப்படுத்துவதாகவும், ஏனையோர் அவர்களை அடையாளம் கண்டுகொள்வதற்குமான ஓர் சாதனமாகவும் காணப்படுகின்றன. ஆகவே இவ்வாறான அழிவடைந்து வருகின்ற கலை வடிவங்களை மீள் உயிர்ப்பிப்பதற்கான களத்தினை பாரம்பரிய அரங்க விழா ஏற்படுத்திக்கொடுத்திருந்தமை வரவேற்கத்தக்க ஒன்றாகும்.
அடுத்த நிகழ்வாக, நிகழ்வில் கலந்துகொண்ட கூத்துக் கலைஞர்கள் மற்றும் கூத்து ஆர்வலர்களால் வடமோடி, தென்மோடிக் கூத்துப் பாடல்கள் களரியிலே இசைக்கப்பட்டன. பாடல்களுக்கு வலுச்சேர்ப்பதாய் அண்ணாவிமார்களது மத்தளஅடி, தாளஒலி என்பன அமைந்திருந்தன. இது பார்ப்போரைக் கவரும் வகையில் சிறப்பாக ஆற்றுகை செய்யப்பட்டது.

கிழக்குப் பல்கலைக்கழக நுண்கலைத்துறை விரிவுரையாளர் திரு. சு. சந்திரகுமார் அவர்களினால் தொகுத்தளிக்கப்பட்ட காலை நேர நிகழ்வானது கிழக்குப் பல்கலைக்கழக நுண்கலைத் துறையின் ,உதவி விரிவுரையாளர் திருமதி ஜெ. நிலுஜா அவர்களின் நன்றியுரையுடன் நிறைவுபெற்றது. தொடர்ந்து பாரம்பரியக் கலைகள் பற்றிய உரையாடல் களத்தில் இடம்பெற்றது. இதன் போது தப்புக்கலை , பறை மேளம், பாரம்பரிய கூத்துக் கலை, கூத்து எழுத்துப் பனுவல்கள் உருவாக்கும் விதம், வேடுவர் சடங்கு போன்றவை பற்றிக் கலந்துரையடப்பட்டது.

மாலை நிகழ்வுகளில் பாரம்பரிய இசை வாத்திய நிகழ்ச்சிகள் இடம்பெற்றது. தொடர்ந்து முனைக்காடு நாகசக்தி மன்றத்தினரின் வடமோடிக் கூத்தான “ பவளக்கொடி நாடகம்” முழுநேர இரவுக் கூத்தாகக் களரியேற்றப்பட்டது. இவற்றுடன் முதல்நாள் நிகழ்வுகள் அனைத்தும் இனிதே நிறைவுபெற்றது.
இரண்டாம் நாள் நிகழ்வுகள் 22.07.2014 (செவ்வாய்க்கிழமை) முற்பகல் 10.30 மணிக்கு ஆரம்பமாகியது. இதில் “ கூத்தரங்கின் எழுத்துப் பனுவல்களை ஆக்கும் புலவர்களின் சந்திப்பு ” இடம்பெற்றிருந்தது. இந்த நிகழ்விலே புலவர் கி. அருளம்பலம் (பருத்திச்சேனை), புலவர் செ. சிவநாயகம் (சீலாமுனை), எழுத்தாளர் மா. கேதீஸ்வரன் (முனைக்காடு), எழுத்தாளர் க. புவிக்குமார் ( கன்னங்குடா) ஆகியோர்கள் பங்குபற்றித் தங்களது கூத்துப் பனுவல் எழுதிய அனுபவம், கூத்துப் பனுவல் எழுத இருக்கவேண்டிய தகைமைகள், ஆளுமைகள் போன்றவை பற்றிக் கலந்துரையாடினர். இதனைக் கலாநிதி சி. ஜெயசங்கர் அவர்கள் தலைமை தாங்கி நடத்திச் சென்றார். கிழக்குப் பல்கலைக்கழக நுண்கலைத்துறை விரிவுரையாளர்கள், சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவக விரிவுரையாளர்கள்,கிழக்குப் பல்கலைக்கழக நுண்கலைத்துறையின் சிறப்புக் கற்கை மாணவர்கள் மற்றும் கூத்துக்கலை ஆர்வலர்கள் எனப் பலரும் கலந்துகொண்டு தங்களது கருத்துக்களைத் தெரிவித்திருந்ததுடன், வினாக்கள், சந்தேகங்கள் என்பனவற்றையும் கேட்டுத் தெரிந்து கொண்டனர். அத்துடன் கூத்துக்கள் ஆற்றுகை செய்யப்படுவதன் நோக்கம், இதனால் சமூகத்தில் ஏற்படும் மகிழ்ச்சி, ஒற்றுமை என்பன பற்றியும் கருத்துக்கள் வெளிப்படுத்தப்பட்டன. மேலும் கூத்துப் பனுவல் எழுதுவது எவ்வாறு? அதில் இருக்கும் சவால்கள், கதைத் தெரிவு எவ்வாறு இருத்தல் வேண்டும்,கூத்துப் பனுவலின் கட்டமைப்பு, கூத்துப் பனுவல் எழுதுகையில் நடைமுறையில் எதிர்கொள்ளும் சவால்கள் என்பனபற்றியும் சிறுவர் கூத்தரங்கு பற்றியும் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. அதுமட்டுமன்றி கூத்துக் கலைஞர்களை உருவாக்குவது எப்படி? அதற்கு எவ்வாறு வலுச்சேர்ப்பது போன்றன பற்றியும் பேசப்பட்டன. இறுதியில் இவர்களுக்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர், இவற்றுடன் இரண்டாம் நாள் நிகழ்வின் முதற்கட்டம் நிறைவு பெற்றது.

தொடர்ந்து மாலை நிகழ்வுகளில் மத்தளக்கச்சேரி, பறை முழக்கம் என்பன களரியிலே ஆற்றுகை செய்யப்பட்டன. தொடர்ந்து “ புலிக்கூத்து ஆற்றுகையும் கலந்துரையாடலும் ”  இடம்பெற்றது. இதில் வந்தாறுமூலைக் கிராமத்தினைச் சேர்ந்த புலிக்கூத்துக் கலைஞர்கள் பங்கு கொண்டனர். வந்தாறுமூலைக் கிராம மக்கள் மத்தியில் காணப்படுகின்ற பாரம்பரியக் கலை வடிவங்களுள் இதுவும் ஒன்று. இன்று இக்கிராம மக்களிடம் மாத்திரமன்றி, ஏனைய பல மக்களாலும் அறியப்படாத, பேசப்படாத கலையாகவே உள்ளமையினைக் காணமுடிகின்றது. இக் கூத்தின் கதைக் கருவானது வேடுவர்கள் காட்டிற்குள் சென்று வேட்டையாடித் தேன் எடுப்பதனை மையமமாகக் கொண்டுள்ளது. வேடன், வேடுவிச்சி, புலி, புலியினை வளர்த்து வருபவன் என்பன இதில் வருகின்ற பாத்திரங்களாக உள்ளன. எனவே தொன்மையான இக்கலையினை வெளியுலகிற்குத் தெரியப்படுத்தும் நோக்கிலும், புலிக்கூத்துக் கலைஞர்களைப் பாராட்டி ஊக்குவிக்கும் முகமாகவும் இந்த நிகழ்ச்சி இடம்பெற்றது.

பின்னர் “ மங்கியூர் மகிமை ”  எனும் தென்மோடிக் கூத்து பருத்திச்சேனைக் கிராமத்தினைச் சேர்ந்த கூத்துக் கலைஞர்களால் முழு நேரக்கூத்தாகக் களரியேற்றப்பட்டது. இவற்றுடன் இரண்டாம் நாளிற்கான நிகழ்வுகள் நிறைவுபெற்றன.

பாரம்பரிய அரங்க விழாவின் மூன்றாம் நாள் நிகழ்வுகள் 23.07.2014 புதன்கிழமை முற்பகல் 10.30 மணியளவில் ஆரம்பமாகியது. இன்றைய தினம் “ சமகால கூத்தரங்க இயக்கப் பின்புலத்தில் செம்மையாக்கம்,நவீனவாக்கம், மீளுருவாக்கம் ” என்ற எண்ணக்கருக்கள் பற்றிய கலந்துரையாடல் இடம்பெற்றது. இவ்வுரையாடலினைக் கலாநிதி சி. ஜெயசங்கர் அவர்கள் ஆரம்பித்து வைத்தார். இந்த நிகழ்விற்கும் கிழக்குப் பல்கலைக்கழக நுண்கலைத்துறை விரிவுரையாளர்கள், சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவக விரிவுரையாளர்கள், கிழக்குப் பல்கலைக்கழக நுண்கலைத்துறையின் சிறப்புக் கற்கை மாணவர்கள் மற்றும் கூத்துக்கலை ஆர்வலர்கள் எனப் பலரும் கலந்துகொண்டார்கள். இதன் போது செம்மையாக்கம் பற்றியும்;, ஒரு சம்பவத்தை அல்லது உள்ளுர் விடயங்களை கூத்துப் பிரதியாக எழுதுதல், அவ்வாறு எழுதும் போது உள்ள பிரச்சினைகள் பற்றியும் விரிவாகப் பேசப்பட்டது. அத்துடன் கூத்து மீளுருவாக்க அனுபவம் பற்றி செ. சிவநாயகம் அவர்கள் தனது அனுபவங்களையும், கருத்துக்களையும் எம்முடன் பகிர்ந்து கொண்டார். இதனுடன் இணைந்தவாறு சிறுவர் கூத்தரங்கு பற்றியும், அதன் தோற்றம், முக்கியத்துவம் பற்றியும் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன. அத்துடன் பாரம்பரியக் கூத்தரங்கில் வரும் “ பறையறைவோன்” பாத்திரம் பற்றியும், அதனைச் செம்மையாக்குவது, இதில் ஏற்படும் சவால்கள் பற்றியும் விவாதிக்கப்பட்டது. இவற்றுடன் பகல்நேர நிகழ்வு முடிவுற்றது.

தொடர்ந்து இன்றைய தினமும் மாலை நிகழ்வுகள் வழமை போல் பாரம்பரிய இசை வாத்திய நிகழ்வுடன் ஆரம்பமானது. இந்நிகழ்வு நிறைவுபெற்றதனைத் தொடர்ந்து “ வேடுவர் சடங்கு ‘’நிகழ்த்திக் காட்டப்பட்டது. இலங்கையின் பழங்குடியினர், ஆதிக்குடியினராகக் காணப்படுகின்ற வேடுவர் சமூகத்தவரின் வாழ்வியலுடன் இணைந்து காணப்படுகின்ற வழ்பாட்டு முறைகள், சடங்குகள், உணவு பதனிடும் முறைகள் போன்றவற்றினை இன்றுவரை பேணிப் பாதுகாத்து வருகின்றனர். நவீன நாகரிகத்தின் வருகை, நகரமயமாக்கம், குடியேற்றமயமாக்கம் போன்றவை காரணமாகத் தமது கலாசாரத்தைக் கைவிட்டு ஏனைய கலாசார விழுமியங்களை உள்வாங்கும் தேவையேற்பட்டபோதும் தமது மூதாதையரின் கலை வடிவங்களை அழியவிடாது பாதுகாத்துவருவது சிறப்பம்சமாகும். இச்சடங்கிலே முக்கியம் பெறுவோராக பாட்டுக்காரர், கொட்டு எனும் வாத்தியம் வாசிக்கும் பறைக்காரர், கபுறாளா எனும் தெய்வக்காரர் ஆகியோர் இடம்பெறுகின்றனர். கொட்டு வாசிக்க வேடுவ மொழிப் பாடல் பாட தெய்வக்காரர் தலையில் சீலை கட்டி தென்னங்குருததினால்; சட்டை அணிந்து வில், அம்பு,ஈட்டி, சட்டம் முதலிய ஆயுதங்களை எடுத்து ஆடுவார். இவர்களின் வழிபாட்டில் மூதாதையர் வழிபாடு முதன்மைப்படுத்தப்பட்டு ஏனைய தெய்வங்கள் வரவழைக்கப்படும். கரடித் தெய்வம், மாறாத் தெய்வம் முதலியன முக்கிய தெய்வங்களாகும். இவ்வாறாக இச்சடங்கு நிகழ்த்தப்பட்டு வருகின்றது.

இத்தகைய பழங்குடி மக்களின் வாழ்வியல் அம்சங்கள், நம்பிக்கைகளை ஏனைய சமூகத்தினருக்கு தெரியப்படுத்தும் வகையிலே அன்றைய தினம் வேடுவர் சடங்கு நிகழ்த்திக் காட்டப்பட்டது. தொடர்ந்து சொர்வாமுனை வேல்விழி கலைக் கழகத்தினரால் “ அல்லி அர்ச்சுனா ” எனும் வடமோடிக் கூத்து ஆற்றுகை செய்யப்பட்டது. இக் கூத்தாற்றுகையுடன் மூன்றாம் நாள் நிகழ்வுகள் முடிவடைந்தது.

பாரம்பரிய அரங்க விழாவின் இறுதி நாள் நிகழ்வுகள் 24.07.2014 வியாழக்கிழமை காலை 10.30 மணியளவில் ஆரம்பமானது. “ இசைக் கருவிகள் உருவாக்குதல், இணக்குதல் தொடர்பான தொழில் முனைவோர் சந்திப்பும், கூட்டுருவாக்க முன்னெடுப்பும் ‘’ எனும் தொனிப்பொருளின் கீழ் உரையாடல் ஆரம்பமானது. இன்றைய தினமும் வழமை போல் ஆர்வலர்கள் பலர் பங்கு கொண்டிருந்தனர். திறன் பகிர்தல், மேலதிக திறனை உருவாக்குதல், இக்கலைஞர்களைச் சந்திக்கவும், அவர்கள் உருவாக்குகின்ற வாத்தியக் கருவிகளை விற்பனை செய்வதற்குமான இடத்தினை உருவாக்குதல் பற்றிய கருத்துக்களும் பகிரப்பட்டன. வாத்தியங்களை உருவாக்கும், இணக்கும் முறைகள் பற்றி உரையாடப்பட்டது. அத்துடன் இவற்றினை உருவாக்குவதற்குத் தேவையான மரம், மிருகங்களின் தோல் என்பனவற்றைப் பெற்றுக் கொள்வதில் எதிர்கொள்ளும் சட்டச் சிக்கல், சவால்கள் என்பன பற்றியும் கலந்தாலோசிக்கப்பட்டது. மேலும் இவ்வாறான கலைஞர்களை ஒரு கூட்டு அமைப்பொன்றினை உருவாக்கி அதனூடாக இப்பொருட்களை இலகுவாகப் பெற்றுக் கொடுப்பது பற்றியும் பேசப்பட்டது.  இவற்றுடன் காலை நேர உரையாடலும் கருத்துப் பகிர்வும் நிறைவிற்கு வந்தது.

பின் மாலைநிகழ்வுகள் வழமை போலவே பாரம்பரிய இசை வாத்திய நிகழ்வுடன் ஆரம்பமாகி தொடர்ந்து “ அருச்சுனன் தவநிலை” எனும் வடமோடிக் கூத்து நாவலடிக் கூத்துக் கலைஞர்களால் களரியேற்றப்பட்டது. எமது பாரம்பரியக் கூத்துக்களிலே பெண் பாத்திரங்களை ஆண்களே பாத்திரமேற்று நடித்து வருகின்ற நிலையில் இக்கூத்தில் பெண் பாத்திரங்களுக்கு பெண்களே ஆடியமை சிறப்பம்சமாகக் காணப்பட்டது.

எமது பாரம்பரியக் கூத்தரங்கிலே அண்ணாவியாரே முக்கியம் பெறுகின்றார். கூத்தினை முகாமைத்துவம் செய்பவராக முகாமையாளர், பஞ்சாயத்துக்காரர் இருப்பார். இங்கு நெறியாளர் எனும் ஒருவர் பாரம்பரியக் கூத்தரங்கிலே காணப்படவில்லை. நெறியாளர் எனப்படுபவர் நவீன அரங்கிலே ஆற்றுகைகளை நெறிப்டுத்துபவர். பாரம்பரிய அரங்கின் அண்ணாவியாரது பணி நவீன அரங்கின் நெறியாளனது பணியினை ஒத்தாக இருக்கின்றதே தவிர எமது பாரம்பரிய அரங்கிலே நெறியாளர் என்று ஒருவர் இல்லை. ஆகவே அண்ணாவியாருக்குப் பதிலாக நெறியாளர் என்று குறிப்பிட்டு தனிப்பட்ட ஒரு நபரின் பெயரினை கூறுவதானது பாரதூரமான விடயமாகும். நெறியாளர் எனும் பதம் பாரம்பரியக் கூத்தரங்கில் பயன்படுத்த முடியாது தவிர்க்கப்பட வேண்டிய ஒன்றாகும். எனவே இத்தன்மையான விடயங்களைக் கருத்தில் கொண்டு எமது செயற்பாடுகளை மிகச் சரியான முறையில் முன்னெடுக்கவேண்டிய தேவைபாடு எம் அனைவரையுமே சார்ந்துள்ளது.

இவ்வாறாக நுண்கலைத்துறை நடாத்திய பாரம்பரிய அரங்க விழாவானது இந்த வருடமும் தொடர்ந்து நான்கு நாட்கள் நடைபெற்று முடிந்தது. இதிலே பல ஆர்வலர்கள் பங்குகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த வருட விழாவானது வழமையான விடையங்களுடனும், நிகழ்ச்சிகளுடனும்  மேலதிகமாகத் தப்பாட்டம், புலிக்கூத்து ஆகிய ஆற்றுகைகளும் இங்கு இடம்பெற்றிருந்தது. கடந்த ஆண்டு மத்தள ஏற்றுனர், இணக்குனர், கூத்து உடை கட்டுபவர், ஒப்பனைக்காரர், காற்சதங்கை வழங்குனர் ஆகியோர் மாண்பு செய்யப்பட இந்த வருடம் ‘’ மூத்த கூத்துக் கலைஞர்கள், இளம் கூத்து ஆளுமைகளை மாண்பு செய்தல் ‘’ நிகழ்வு முக்கியப்படுத்தப்பட்டிருந்தது.

இன்றைய நவீன அறிவுப் புலத்தில் மனிதர் தம்மை மறந்து அல்லது தேவை கருதி இயந்திரமாக மாறித் தனது வாழ்க்கையினை ஓட்டிச் செல்லும் காலத்திலே இவ்வாறான செயற்பாடானது கிழக்குப் பல்கலைக் கழக நுண்கலைத் துறையினரால் பரந்த சூழலில் முன்னெடுக்கப்பட்டு வருகின்கின்றமையானது முக்கியமான விடயமே. இதற்கான காரணம் ஆலயம் என்பது மக்கள் பலரும் வந்து செல்லும் இடமாகும். குறிப்பாக திருவிழாக் காலத்தில் பல பிரதேசங்களிலிருந்தும் மக்கள் ஒன்றுகூடுவர். இவர்களுக்குப் பாரம்பரிய அரங்க விழாவினைக் காணும் சந்தர்ப்பம் கிடைக்கின்றது. இணைய வலைத்தளங்களும், தொலைக்காட்சிப் பெட்டியுமே உலகம் என்று நம்பித் தங்களையே மறந்து மூழ்கித் தடுமாறும் இன்றைய தலைமுறையினருக்கு எமது பாரம்பரியங்களையும், அதன் ஆற்றுகை வடிவங்களையும் பார்வையிடுகின்ற, அறிந்துகொள்கின்ற சந்தர்ப்பமானது பலருக்கும் கிடைத்திருந்தது. சிறுவர், இளைஞர், முதியோர் என்கின்ற வேறுபாடின்றி விடிய விடிய கூத்துக்களைப் பார்த்துச் சென்றமையினையும் என்னால் காணமுடிந்தது.

பாரம்பாரிய அரங்க விழாவானது நுண்ககைலத் துறையினரால் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதற்கான காரணம் எமது பாரம்பரிய அரங்கின் யதார்த்த நிலையை, கிராமிய மக்களுக்குப் பரீட்சயமான விடயத்தை நகரமயப்பட்ட பகுதியில் வாழும் மக்களுக்கும் அறிமுகப்படுத்துவது எனும் நோக்கிலேயாகும். அழகியல் என்பது பன்மைத் தன்மையானது. உயர்ந்தவை, தாழ்ந்தவை எனும் பார்வை கலைகளுக்கு உரியவையன்று என்கின்ற நிலமையினை மக்கள் விளங்கிக் கொள்ளும் வண்ணம் இங்கு பலதரப்பட்ட வாத்தியங்களின் இசை நிகழ்ச்சிகளும், பாரம்பரிய அரங்க ஆற்றுகைகளும் களரியிலே நிகழ்த்தப்பட்டன. அத்துடன் தோரணம், களரி என்பனவும் பாரம்பரியமான முறையிலே அமைக்கப்பட்டிருந்தது.

இவ்விழாவிலே மாண்பு செய்யப்பட்ட கலைஞர்களுக்கு மலர்மாலை, கைத்தறியினால் நெய்யப்பபட்ட பொன்னாடைகள் ஆகியன அணிவித்துக் கௌரவிக்கப்பட்டன. பிளாஸ்டிக் பொருட்களினால் செய்யப்பட்ட மாலைகளே தற்காலத்தில் பெரும்பான்மையாகக் அணிவிக்கப்படுகின்ற சூழலில் மலர்மாலை அணிவிக்கப்பட்டதன் நோக்கம் இயற்கைப் பூவின் முக்கியத்துவத்தினை சுட்டுவதாக இருந்தது. பூங்கன்றுகளை நட்டு பசுமையான சூழலை உருவாக்குவதல், மலர்மாலை கட்டுதல் போன்ற செயற்பாடுகளை மக்கள் மத்தியில் அதிகரிக்கச் செய்வதும் இந்நிகழ்வில்; நோக்கமாக அமைந்திருந்தது. மட்டக்களப்பு மாவட்டத்தில் காணப்படுகின்ற கைத்தொழில் துறையில் நெசவுக் கைத்தொழிலும் ஒன்று. இங்கு நெய்யப்படுகின்ற துணிகளின் முக்கியத்துவத்தினை மக்களுக்குத் தெரியப்படுத்வதற்கும், தொழில்த் துறையின் வளர்ச்சியை அதிகரிப்பதற்கும் இந்நிகழ்வு எடுத்துக்காட்டாக அமைந்திருந்தது.

 நுண்கலைத் துறையினரால் நான்காவது வருடமாகவும் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்விற்கு மாமாங்கேஸ்வரர் ஆலய பரிபாலன சபையினரும், அச்சமூக மக்களும் பூரண ஆதரவினை வழங்கியிருந்தனர். இது இவ்விழாவின் வெற்றிக்குக் காரணமாய் அமைந்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

நவீனமயமாக்கத்தின் ஆதிக்கத்தினாலும், சமஸ்க்கிருத மயமாக்கத்தின் காரணமாகவும் எங்களுக்கே உரித்தான கலைவடிவங்கள் இன்று எங்களாலேயே ஏற்றுக்கொள்ள முடியாதவையாக மாறியுள்ளளன. தப்பு, பறை ஆகிய வாத்தியங்களைக் குறிப்பிட்டுச் சொல்லலாம். இவற்றைக் கேள்விக்கு உட்படுத்தும் வகையிலும், இவற்றின் இருப்பினை நிலைநாட்டவும் என அரங்க விழாவிலே தப்பு, பறை வாத்தியக் கச்சேரிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டடு இருந்மையினைக் காணலாம். இவ்வேளைகளில் பறை வாசிக்கும் ஆர்வமுள்ள சிறுவர்களும், பெரியவர்களும் களரிக்குள் நுழைந்து பறை வாத்தியத்தினை வாசித்தமையினைக் காணமுடிகின்றது. இங்கு ஒழுங்குபடுத்தப்பட்ட நிகழ்வுகளுடன் தினமும் மாலை வேளைகளில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பாரம்பரிய வாத்திய இசை கச்சேரிகளின் நோக்கம் வெறுமனே கலைஞர்களால் வாசித்துக் காட்டப்படுவது மாத்திரமன்றி,ஆலய முற்றத்துக்கு வருகின்ற பார்வையாளர்களுக்கும், ஆர்வலர்களுக்கும் களம் அமைத்துக் கொடுப்பதுமாக இருந்தது.

இந்தப் பாரம்பரிய அரங்க விழா பற்றிய செய்திகள் ஏற்கனவே ஊடகங்கள் வாயிலாகத் தெரியப்படுத்தப்பட்டிருந்தும் நாடகமும் அரங்கியலும் எனும் பாடத்தினை பாடசாலைகளில் கற்பிக்கின்ற ஆசிரியர்களும்,கற்கின்ற மாணவர்களும் இந்த விழாவினைப் பார்வையிடாதது பாரதூரமான விடயமேயாகும். இப் பாடத்திட்டத்துடன் தொடர்புடைய ஆற்றுகைகள் நேரடியாக நிகழ்த்தப்பட்டிருந்தும் இதனை நேரடியாகப் பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்திருந்தும் இவற்றைத் தவற விட்டிருக்கின்றனர். பாரம்பரியமான முறையில் வட்டக்களரியில் ஆற்றுகை செய்யப்படும் கூத்தானது இன்று பாடசாலைகளில் படச்சட்ட மேடைகளிலே ஆடுவதற்குக் கற்பிக்கின்றனர். இது ஏற்றுக்கொள்ளமுடியாத செயலாகும். இது பற்றி ஏற்கனவே சுட்டிக் காட்டியிருந்தும் அரங்க விழா நடைபெற்ற வேளை அண்மையிலுள்ள பாடசாலைகள் கூட தங்களது மாணவர்களை அழைத்துவந்து வட்டக்களரியில் பாரம்பரியமாக ஆற்றுகை செய்வதனை நேரடியாகக் காட்டிக்கற்பிக்கத் தவறிவிட்டனர். இவ்வாறான சந்தர்ப்பங்களைத் தவற விட்டுவிட்டு செயன்முறைக் கல்வியை மாணவர்களுக்கு எவ்வாறு வழங்குவது என்பது கேள்விக்குறியே.

கல்வி என்பது செயன்முறையாகவும், சமுதாயமயப்பட்டதாகவும், நடைமுறை வாழ்க்கையை எதிர்கொள்வதாகவும் அமையும் கல்வி முறையாகப் பாரம்பரிய அரங்க விழா வடிவமைக்கப்பட்டு முன்னெடுக்கப்படுகிறது. இக் கலைத்திருவிழாவானது கிழக்குப் பல்கலைக்கழக நுண்கலைத்துறையினரால் முன்னெடுக்கப்படுகின்றமை முனைப்பான செயற்பாடகவே அமைகின்றது என்றால் அது மிகையாகாது.

தி. துலக்சனா
கிழக்குப் பல்கலைக் கழகம்..
நுண்கலைத் துறை.

No comments: