.
Nantri:solvanam.com
1998-ம் வருடம் என்று நினைக்கிறேன். Indian Council for Cultural Relations, இந்தியா சுதந்திரம் அடைந்து 50 வருஷங்கள் ஆனதை ஒட்டி, இந்திய மொழிகள் அனைத்திலும் காணும் இலக்கிய வளர்ச்சியைப் பற்றி எழுதப் பலரைக் கேட்டிருந்தார்கள். அத்தோடு ஒரு சில, மாதிரிப்படைப்புக்களையும் மொழிபெயர்த்துத் தரச் சொல்லிக் கேட்டார்கள். தமிழ் மொழி வளர்ச்சி பற்றி எழுத என்னைப் பணித்திருந்தார், இதன் ஆசிரியத்வம் ஏற்ற ICCR இயக்குனர் திரு ஓ.பி. கேஜ்ரிவால். இவை அனைத்தும் தொகுக்கப் பெற்று Indian Horizons என்ற தலைப்பில் 500 பக்கங்கள் கொண்ட ஒரு தொகுப்பு ஜனவரி-ஜூன், 1999-ல் வெளியானது. இந்திய மொழிகள் அனைத்திலிருந்துமான (டோக்ரி, கஷ்மீரி, ஸிந்தி, உருது மொழிகள் உட்பட) இலக்கிய வளர்ச்சி பற்றிய மதிப்பீட்டுக் கட்டுரைகளுடன், அந்தந்த மொழிகளின் சில கதைகள், கவிதைகளும் மொழி பெயர்க்கப்பட்டு சேர்க்கப்பட்டன. இவற்றில் தமிழ் மொழிக்காகச் சேர்க்கப்பட்டவை, ஜெயமோகனின் மாடன் மோட்சம் என்ற கதையும் சல்மாவின் சில கவிதைகளும். எனது தமிழ் இலக்கிய வளர்ச்சி பற்றிய கட்டுரைக்கு Enigma of Abundance என்று தலைப்பு கொடுத்திருந் தார்கள். Enigma of Abundance………..!!! தலைப்பு என்னமோ வசீகரமாகத்தான் இருக்கிறது. ஆனால் கட்டுரையில் சொல்லப்பட்ட விஷயங்கள் இதை நியாயப்படுத்துமா என்பது தெரியவில்லை. ஆகவே இப்போது எனக்குள்ள சுதந்திரத்தில் மிகச் சாதாரண மொழியில்,
தமிழ் இலக்கியம் – ஐம்பது வருட வளர்ச்சியும் மாற்றங்களும்
இந்தியா சுதந்திரம் அடைந்ததைத் தொடரந்த பல பத்து வருடங்கள், பொதுவாக தமிழ்க் கலாசாரச் சூழலிலோ, அல்லது குறிப்பாக தமிழ் இலக்கியச் சூழலிலோ ஏதும் ஆர்ப்பரித்து உற்சாகம் கொள்ளும் வருடங்களாக இருக்கவில்லை. புதுமைப் பித்தன் (1906-1948) என்றொரு இலக்கிய சிருஷ்டி மேதை, எதையும் சட்டை செய்யாத தன் வழியில், எதையும் திட்டமிட்டுச் செயல்படாத தன் சிருஷ்டிகரத்தோடு தமிழ்ச் சிறுகதையை இதுகாறும் அது எட்டிராத சிகரத்திற்கு எடுத்துச் சென்றிருந்தார். அனேகமாக ஒரு நூறு கதைகள் எழுதியிருப்பார் அவர். அந்த ஒவ்வொரு கதையும் ஒரு மாறுபட்ட வடிவில் அமைந்திருக்கும். அவரது சொந்த திருநெல்வேலி மாவட்டத்தின் பேசு மொழியையும் குறிப்பாகப் பிள்ளைமார்களின் கொச்சையையும் அவர் கையாண்டிருந்தது அன்று பண்டிதர்களின் ரசனைக்கும் மொழித் தூய்மைக்கும் விருப்பமாக இருக்கவில்லை. ஒரு மேதையின் சிருஷ்டி மலர்ச்சிக்கும், இயல்பாக பிரவகிக்கும் எழுத்துத் திறனின் நேர்த்திக்கும் அவர் ஒரு சிகர முன் மாதிரியாக இருந்தார். அவரது வாழ்க்கையின் கடைசி நாட்களில் அவர் ஈடுபாடு சினிமாவின் பக்கம் திரும்பியது. படப்பிடிப்பின் போது புனே சென்றார். சுதந்திரம் கிடைத்த சில மாதங்களில் தனது 41-வது வயதில் அவர் காலமானார்.
அன்றைய தமிழ் இலக்கிய நிறப்பிரிகையில் புதுமைப் பித்தன் ஒரு கோடி என்றால், மறுகோடியில் வணிக உலகின் பிரகாசத்திலும் பிராபல்யத்திலும் ஒளிவீசிக்கொண்டிருந்தவர் கல்கி என்னும் (1899 – 1954) புனை பெயர் கொண்ட, மிகச் சக்தி வாய்ந்த பத்திரிகையாளரும் மக்களிடையே ஈடு இணையற்ற புகழ் பெற்றவருமான ரா. கிருஷ்ணமூர்த்தி. அவர் அளவுக்கு எழுதிக் குவித்தவர் யாரும் இன்று வரை இல்லை. அவர் காலத்தில் பல லக்ஷக்கணக்கில் இருந்த, அவரைப் படித்த மக்களின் மனத்தையும் சிந்தனையும் தன் வசப் படுத்தும் அவரது அளப்பறிய ஆற்றல் என்றும் பெருவாரி மக்களைச் சென்றடையும் சாக்கில் ஆபாச அருவருப்பு தரும் எல்லைகளுக்குச் சென்றதில்லை. அவரது எழுத்தும் செயல்களும் தேசீயம், மக்கள் பண்பாடு ஆகியன பற்றிய சிந்தனைகளால் உருவானவை. 1941- ம் வருடம் ஒரு நாள் மகாத்மாவின் அழைப்புக்கு செவி சாய்த்து, மாதம் ஆயிரம் ரூபாய் சம்பளம், டிரைவரோடு கூடிய கார், வசிக்க ஒரு பங்களா, எங்கும் செல்ல பிரயாணச் செலவு எல்லாம் கொடுத்து வந்த ஆனந்த விகடன் ஆசிரியப் பதவி எல்லாவற்றையும் ஒரு கணத்தில் மறு சிந்தனையின்றி, உதறித்தள்ளி, சிறை செல்ல முடிவு எடுக்க முடிந்திருக்கிறது அவரால். பல லக்ஷக்கணக்கில் தமிழ் மக்களுக்கு, தம் வீட்டோடு கட்டுப்பட்டுக் கிடந்த பெண்களையும் சேர்த்து, தம் பத்திரிகை எழுத்தின் மூலம் படிக்கும் ஆர்வத்தையும் பழக்கத்தையும், நிகழ் கால தமிழ் இலக்கியத்தில் ஆர்வத்தையும் தூண்ட அவரால் முடிந்திருக்கிறது. 1953-ல் அவர் காலமானபோது அவருக்கு வயது 54. இவர்கள் இருவரும் தான், அன்றைய தமிழ் இலக்கிய நிறப்பிரிகையின் இரு முனைகளில், ஒரு முனையில் புதுமைப் பித்தன், ஒரு சிறந்த இலக்கிய சிருஷ்டி மேதை, மறுமுனையில் கல்கி, லக்ஷிய தாகம் கொண்ட, தன் மண்ணின் கலாசாரத்தில் பண்பாட்டில் வேர்கொண்ட, மக்கள் மனம் கவர்ந்த எழுத்தாளன்.
இதற்குப் பின் தொடர்ந்த பல தசாப்தங்கள் கண்டது தமிழ் இலக்கியத்தில் மிக மோசமான வியாபார சக்திகளின் ஆதிக்கப் போட்டியும் மக்களின் கீழ்த்தர ரசனைகளைத் திருப்தி செய்ய முனைந்த போட்டியும், இவற்றின் விளைவாக சீரிய இலக்கியச் செயல்பாடுகளின் தொடர்ந்த தேக்கமும் தான் என்றே சொல்ல வேண்டும். இந்த நோய் தமிழ் சமூகத்தில் இலக்கியத்தோடு மாத்திரம் கட்டுப் பட்டிருக்கவில்லை. நாடகம், சினிமா, கல்விக்கூடங்கள் என இன்னும் மற்ற அறிவியல், கலைத்துறைகள் என தமிழ் சமூகம் முழுதையுமே பீடித்திருந்தது என்றே சொல்லவேண்டும்.
முப்பதுக்கள், நாற்பதுக்களில் மணிக்கொடி என்ற இலக்கியப் பத்திரிகையைச் சுற்றி புதுமைப்பித்தனோடு எழுந்த மௌனி (1907-1985), ந.பிச்சமூர்த்தி (1900-1976), கு.ப.ராஜகோபாலன் (1902-1944), சிதம்பர சுப்பிரமணியம் (1912-1978). சி.சு. செல்லப்பா (1912 – 1998), பி.எஸ்.ராமையா (1905-1983) போன்ற பெருந்தலைகள், ஒரு புதிய எழுச்சியையும், சகாப்தத்தையும் உருவாக்கியவர்கள், மறக்கப் பட்டுவிட்டனர். ஒருவர் இறந்துவிட்டால், உடன் இருந்த மற்ற சிலர் எழுதுவதையே முற்றிலும் மறந்துவிடுவார்கள். இன்னும் சிலருக்கு எழுத ஒரு மேடை கிடைப்பதில்லை. இன்னும் சிலர், ஆர். ஷண்முகசுந்தரம் கு. அழகிரிசாமி(1924-1970), தி.ஜானகிராமன்(1921-1982), தெ.மு.சி. ரகுநாதன் (1923), லா.ச.ராமாமிர்தம் (1916) போன்றோர் வியாபார எழுத்துக்களின் வெள்ளப் பெருக்கில் மூழ்கடிக்கப்பட்டனர். வியாபார எழுத்துக்கள் போடும் இரைச்சலில் இவர்களது உணர்ச்சிப் பெருக்கெடுத்து பொங்கி எழாத நிதானம் கேட்கப் படாமலேயே போய்விட்டது. கோடிக்கணக்கிலான மக்கள் திரளிடம் பெறும் பிராபல்யம் இதுவரை அறிந்திராத செல்வச் செழிப்பை மாத்திரம் அல்லாது, பிராபல்யமும் செல்வச் செழிப்புமே இலக்கிய மதிப்பீட்டையும் கல்வி ஸ்தாபனங்களின் அங்கீகாரத்தையும் கூட பெற்றுத் தந்தது. இது இர்விங் வாலஸுக்கு நோபெல் இலக்கியப் பரிசு கிடைப்பது போலவும், அமெரிக்க பல்கலைக் கழகங்கள் எதுவும் வில்லியம் ஃபாக்னரா, ஹெமிங்வேயா, யார் இந்தப் பேர்வழிகள் என்று கேட்பது போலவுமான ஒரு அவலமும் ஆபாசமும் நிறைந்த நிலைதான் சுதந்திரத்திற்குப் பின் மலர்ந்த தமிழ் இலக்கியச் சூழல்.
இந்தப் பின்னணியில் தான், க.நா.சுப்ரமணியம் (1912-1988) என்னும் ஒரு சிறுகதை, நாவலாசிரியரும், சி.சு.செல்லப்பா (1912-1998) என்னும் சிறுகதையாசிரியரும், இந்த அவல நிலையை மாற்ற ஏதும் செய்யவேண்டும் என்று துணிந்தனர். இலக்கிய மதிப்பீடுகள் பற்றியும், வெகுஜனங்கள் ரசனைக்கு ஏற்ப எழுதுவது இலக்கியமாகாது என்றும் அவர்கள் வாசகர்களுக்கு திரும்பத் திரும்ப உணர்த்த வேண்டியிருந்தது. இது அவர்கள் இருவருக்கும் பிரபல எழுத்தாளர்களின் பகைமையை மாத்திரம் அல்ல, கல்வி ஸ்தாபனங்களின் பகைமையையும் சம்பாதித்துத் தந்தது.
செல்லப்பா 1959-ல் எழுத்து என்று ஒரு சிறு பத்திரிகையைத் தொடங்கினார். அதில், முப்பது நாற்பதுக்களில் எழுதிக்கொண்டிருந்த, பின் மேடையேதுமற்று எழுதுவதை நிறுத்திவிட்டிருந்த தன் சக எழுத்தாளர்களுக்கு ஒரு மேடை அமைத்துத் தர எண்ணினார். வெகுஜன எழுத்தின் ஆரவார இரைச்சலில் தம் குரல் இழந்து புறக்கணிக்கப்பட்டவர்களுக்கு ஒரு புத்துயிர்ப்பு தருவதாக அது அமைந்தது. எழுத்து என்னும் அந்த சிறுபத்திரிகை தன் பன்னிரண்டு வருட கால வாழ்வில், ஒரு ஆயிரம் பிரதிகள் கூட என்றும் விற்றிராது. ஆனால் அதன் தாக்குவலு அதன் பிரதிகள் விற்பனை எண்ணிக்கையை மிகவும் மீறியது. அதன் காலத்தில், வெகு ஜனப் பத்திரிகைகள் ஒவ்வொன்றும் தம் வாசகர்களின் எண்ணிக்கை பல லக்ஷங்களைக் கொண்டதாக தம் வெற்றியை அவ்வப்போது பறைசாற்றிக்கொண்டிருந்தன, ABC (Audit Bureau of Circulation) தரும் சான்றுகளைக் காட்டி. ஆனால் ஆச்சரியம், எழுத்து என்ற அந்த சிறு பத்திரிகை தான் எண்ணிப்பாராத, எதிர்பார்த்திராத தளங்களில் வெற்றி பெற்றிருந்தது.
தமிழ்க் கவிதைக்கு இரண்டாயிரம் ஆண்டு நீண்ட வரலாறும் மரபும் உண்டு. ஆனால் இந்த நீண்ட வரலாறும், மரபுமே, கவிதா சிருஷ்டிக்கும் புதுமை வேட்டலுக்கும் தடையாகி, ஜீவனற்ற வெற்றுச் செய்யுள் ஆக்கலையே கவிதை எனத் தமிழ்ப்பண்டிதர்களை ஏற்க வைத்தது. இத்தடை மெல்லப் பிளந்தது ஒரு தற்செயலே. சி.சு. செல்லப்பா தன் முதல் எழுத்து இதழுக்கு அன்றிருந்த முன்னோடியான ந.பிச்சமூர்த்தியிடம் எழுதக் கேட்க அவர் அவசரத்துக்கு ஒரு பழைய கவிதையைத் தந்தார், அது 1947இல் எழுதி மறக்கப்பட்டிருந்த கவிதை. 2000 வருஷப் பழமை கொண்ட யாப்பு விதிகளைப் புறம் தள்ளி, சொல்லும் கருத்துக்கு ஏற்ப வேகம் கொள்ளும் சுதந்திர நடை பயின்ற கவிதை அது. அதனாலேயே அது கவனிப்பாரற்று இருந்தது. அந்தக் கவிதை 15 வருடங்களுக்கு முன் கவனிப்பாரற்றிருந்த அந்த கவிதை இப்போது 1959-ல் ஒரு பெரும் கவித்வ எழுச்சிக்கு மூல காரணமாகியது. அக்கவிதை தந்த சுதந்திரத்தையும் அது தன் கருத்துக்கேற்ப கொண்டவடிவையும் கண்டு உற்சாகம் கொண்ட ஒரு பெரும் இளைஞர் கூட்டமே தாமும் அப்பாதையில் கவிதைகள் எழுதத் தொடங்கினர். தி.சோ. வேணுகோபாலன், பசுவய்யா, எஸ். வைதீஸ்வரன், நகுலன், தருமூ சிவராமூ, சி.மணி, ஆத்மாநாம், கலாப்ரியா, ஞானக் கூத்தன் என்று நீளும் அக்கவிஞர் அணிவகுப்பில் ஒவ்வொருவரது கவிதையும், பெரும்பாலும் ஒவ்வொரு கவிதையும், தனிக் குரலும், சொல்லும், நடையும், வடிவும் கொண்டதாக இருந்தது. இவர்களுக்கெல்லாம் முன்னோடியாகத் தலைமையில் இருந்தவர் வேதகால ரிஷி போல, ந.பிச்சமூர்த்தி. இதன் பிறகு, தமிழ்க் கவிதை திரும்பிப் பார்க்கவில்லை. இது எழுத்து பத்திரிகையின் எதிர் பாரா முதல் சாதனை.
எழுத்து அன்றைய வெகு ஜனச் சூழலில், ஒரு சிறுபான்மை இலக்கியச் சூழலை உருவாக்கியது. அச்சூழல் தன் இலக்கிய உணர்வுகளில், விமர்சனப் பார்வையில், தீவிர கவனம் கொண்டதாக, இலக்கிய சிருஷ்டிக்கான புதிய பாதைகளைக் காண்பதில் வேகம் கொண்டதாக இருந்தது. ஒரு இலக்கியச் சிறுபத்திரிகை, அது பெரும்பான்மையின் அசுர பலத்தினூடே கூட, என்ன சாதிக்கமுடியும் என்பது எழுத்து பத்திரிகையின் மூலம் நிரூபணம் ஆனதும், ஆங்காங்கே எண்ணற்ற சிறு குழுக்கள் தம் பார்வைக்கும் கருத்துக்கும் ஏற்ப தமக்கென ஒரு சிறுபத்திரிகை வேண்டும் எனத் துணியவே சிறுபத்திரிகைகள் பெருகத் தொடங்கின. இது எழுத்து பத்திரிகையின் இரண்டாம் சாதனை.
மூன்றாவதாக, எழுத்து போன்ற ஒரு பத்திரிகையின் தோற்றத்துக்காகவே காத்திருந்தது போல, புதிய விமர்சனக் குரல்கள் கேட்க ஆரம்பித்தன, எழுத்து பத்திரிகையில். இதில் இரண்டு குரல்கள் பிரதானமானதும், குறிப்பிடத்தக்கது மாணவர்களது. ஒன்று தருமூ சிவராமூ (1939-1997) இலங்கையின் தமிழ் பேசும் பகுதியான ஈழத்திலிருந்து. இரண்டாவது வெங்கட் சாமிநாதன் (1933) இந்தியா வின் வடகோடி ஜம்முவிலிருந்து. இருவருமே அன்று தமிழ் நாட்டு வாசிகள் இல்லை.
தருமூ சிவராமூ எழுத்து பத்திரிகை கண்டு பிடித்த புதுக்கவிஞர். அவர் ஆளுமையிலிருந்த கவித்வம் அவர் கையாண்ட மொழியிலும், விமர்சனப் பார்வையிலும் காணப்பட்டது. வெங்கட் சாமிநாதனின் மொழி, வசனத்தின் சாதாரணத்வம் கொண்டது. அவரது விமர்சனப் பார்வையும் எழுத்தும், இலக்கியம், விஞ்ஞானம், தத்துவம், சங்கீதம், நாட்டியம், கிராமீயக் கலைகள், சிற்பம் ஓவியம் என அனைத்தையும் தன்னுள் கொண்டு ஒருங்கிணைந்த பார்வையாக இருந்தது. இவை ஒவ்வொன்றையும் தன் பிரியா அங்கங்கங்களாகக் கொண்ட முழுமை அது. பின்னர், கேட்ட குரல்கள் சுந்தர ராமசாமியும் தமிழவனும். சுந்தர ராமசாமி தனக்கென ஒரு ஈடு இணையற்ற அழகும் ஒட்டமும் கொண்ட நடை ஒன்றை சிருஷ்டித்துக் கொண்டு எழுதுபவர். அது அவரது விமர்சன எழுத்தில் கூட காணும். தமிழவன் தன் பயணத்தில் பல கட்டங்களைக் கடந்தவர். முதலில் மார்க்ஸிஸ்ட், பின்னர் அமைப்பியல்வாதியானார். இடையிடையே திராவிட இயக்கப் பார்வையும் தலை காட்டும். தமிழ் இலக்கியத்தை அமைப்பியல் பார்வையில் அணுகிய முதல் மனிதர் அவரே. அவர் அமைப்பியலை மிக விரிவாக விளக்கி ஒரு பெரிய புத்தகமே எழுதியிருக்கிறார்.
பின் வந்த அறுபது எழுபதுகளில் நிகழ்ந்த நிறைய சிறுபத்திரிகைகளின் திடீர் தோற்றம், வெகுஜன ரசனையே ஆக்கிரமம் கொண்டிருந்த சூழலில், இலக்கிய உணர்வுகொண்ட ஒரு சிறுபான்மையின் தோற்றம், இவையெல்லாம் புதிய இலக்கிய அனுபவங்களை எதிர்பார்த்து வரவேற்கும் மனநிலைகொண்ட ஒரு வாசகக் கூட்டமும் எழுந்தது. இக்கூட்டத்திற்கு வெகுஜன ரசனைக்கு தீனி போடுவதற்கே தயாரிக்கப்படும் பிராபல்ய எழுத்து எது என்றும், இவற்றிலிருந்து மிகவும் ஒதுங்கி வாழ்ந்த பாரதி, புதுமைப்பித்தன் போன்ற மணிக்கொடி எழுத்தாளர்களின் தேடலையும் அவற்றின் இலக்கிய மதிப்புகளை விமர்சன பூர்வமாக பிரித்தறியத் தெரிந்தது அந்த வாசக கூட்டத்துக்கு. லா.ச.ராமாமிர்தம், தி.ஜானகிராமன் போன்றோர் முதலில் மத்திம தரப் பத்திரிகைகளாலும், பின்னர் வெகுஜனப் பத்திரிகைகளாலும் ஆதரிக்கப்பட்டாலும் அவர்கள் எழுத்துக்களை வெகுஜன பிராபல்ய எழுத்துக்களிலிருந்து பிரித்தறியும் விமர்சனப் பார்வையும் அவ்வாசக கூட்டத்திற்கு இருந்தது. உண்மையில் சொல்லப் போனால், ஐம்பது அறுபதுகளில் இவ்விருவரும் தான் தமிழ் இலக்கியத்தைப் பெருமைப் படுத்தியவர்கள். இலக்கிய மதிப்பீட்டில் சிகர சாதனை செய்தவர்கள்.
தி.ஜானகிராமன்(1921-1962) தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்தவர். தஞ்சை சங்கீதம், நாட்டியம், இன்னும் மற்ற க்ளாஸிகல் கலைகள் அனைத்துக்கும் பிறப்பிடம், வளர்ப்பிடம். தி.ஜானகிராமனின் கதைகள், நாவல்கள் எல்லாவற்றிலும் இந்த தஞ்சை மண்ணின் வாழ்க்கை நோக்கும் தர்மமும் உயிர்பெற்று உலவும். அவரது எழுத்துக்களில் காணும் மனிதர்களின், அன்றாட வாழ்க்கை அம்சங்களும், பேச்சுக்களும் படிப்போரை மிக எளிதில் கவரும் இனிமையும் கொண்டது. அவரது சிகர சாதனையான மோகமுள் (1956) நாவலில் தன் இளமைக் கால கனவுகள், ஏமாற்றங்கள், ஏக்கங்கள், கடைசியில் தன் குடுமத்திலிருந்து பிதிரார்ஜிதமாகப் பெற்ற சங்கீதமே சரணாக அடைந்தும் தொடரும் ஏக்கங்கள் அனைத்தும் அந்நாவலில் அனுபவங்களாக விரிகின்றன. முதன் முறையாக, சங்கீதமே தமிழ் எழுத்தில் ஒரு புது அனுபவமாக வெளிப்பாடு பெறுகிறது.
லா.ச. ராமாமிர்தம் (1917) தந்தத்தில் வேலை செய்யும் சிற்பியைப் போல, மொழியை மிக நுணுக்கமாக கையாள்பவர். ஒவ்வொரு சொல்லின் சப்த ரூபத்தையும் அது இடம் பெறும் சந்தர்ப்பத்தையும் கொண்டு நகாசு வேலை செய்பவர். ஒரு பாரா எழுதுவதற்கு சில சமயங்களில் ஒரு நாள் பூராவும் எடுத்துக்கொள்வதாகச் சொல்வார். அவர் கதைகள் உலகம் அவர் குடும்பத்தை விட்டு என்றும் வெளியே விரிவடைந்ததில்லை. அவரது குடும்பக் கதை தான், மூன்று தலைமுறைக்காலம் நீளும் பெண்களும் ஆண்களுமாக, அவர்கள் ஒவ்வொருவரும் ஏதோ சாமியாட்டம் ஆடுபவர்களாக, அதீத உணர்ச்சி வசப்பட்டு தம் நிலை இழந்தவர்கள் போல, எந்நேரமும் இறுக்கமும் கொந்தளிப்புமாகவே, தம்மையும் வருத்தி, சுற்றியுள்ளோரையும் வருத்திக்கொண்டிருப்பவர்கள். அக்குடும்பம் தான் லா.ச.ராமாம்ருதத்திற்கு அவரது பிரபஞ்சத்தின் அணுரூபம். தாகூர் தன் வீட்டு வாசல் வெளியில் இருக்கும் புல் இதழின் பனித்துகளில் அண்டவெளி முழுதுமே பிரதிபலித்திருப்பதைக் கண்டது போல. இவ்விருவரும் தான் இன்றைய தமிழ் இலக்கியத்தின் சிருஷ்டி உச்சத்தின் இரு சிகரங்கள், மொழியைக் கையாளும் திறனிலும் அது வெளிப்படுத்தும் சிருஷ்டி தரிசனத்திலும்.
இந்த ஆண்டுகளில் தான் சி.சு. செல்லப்பா (1912-1998) இரண்டு சிறிய ஆனால் செதுக்கிய வைரம் போன்ற ஒளிவீசும் இரண்டு நாவல்கள் எழுதினார். ஒன்று வாடிவாசல்(1959) அவர் பிறந்த சிறு வயதுப் பருவத்தைக் கழித்த மதுரை மாவட்டத்தின் ஜல்லிக்கட்டு எனப்படும் காளை பொருதும் விழா. இதில் ஆயுதம் ஏதும் அற்று தன் கை பலத்தின் மூலமே வெறியேற்றப்பட்ட காளையை அடக்கும் வீர விளையாட்டு. இரண்டாவது குறுநாவல் ஜீவனாம்சம் (1962). விவாக ரத்து கோரி புகுந்த வீட்டாரால் ஒதுக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ள மறுமகள் தன் கணவன் இறந்துவிட்டது அறிந்து புகுந்த வீடு செல்லத் தீர்மானிக்கிறாள். அவளுக்கு யார் துணையுமின்றி தனித்து விடப்பட்டுள்ள தன் முதிய மாமியாரையும் சிறுவனான மைத்துனனையும் கவனித்துக்கொள்ள வேண்டும். அவர்களுக்கு யாரும் துணையில்லை என்ற காரணத்தால். அவள் மனத்தில் ஓடும் எண்ணங்களின் பிரவாஹம் தான் இக்குறுநாவல். க.நா.சுப்பிரமணியம் (1912-1989) தன் விமர்சனங்களிலும் சரி, சிருஷ்டி எழுத்திலும் சரி, நிறையவே எழுதியிருப்பவர்; அவரது நாவலகளில் முக்கியமாகக் குறிப்பிடப் பட வேண்டியவை இரண்டு. ஒன்று சுதந்திரத்திற்கு முந்திய ஆண்டில் எழுதப் பட்டது பொய்த்தேவு (1946). எளிய சிறு பிராய ஆரம்பத்திலிருந்து வெற்றிகரமான வியாபாரியான காலம் வரையிலான தன் வாழ்க்கை முழுதுமே பொய்யான தெய்வங்களைத் தேடி அலைந்த வாழ்க்கை தான் என் உணர்ந்து தன் கிராமத்துக்குத் திரும்புகிறவன் தன் கிராமத்து வெளியில் யாரும் அறியாத அனாதைப் பரதேசியாக இறந்து கிடக்கிறான். அடுத்தது 1951-ல் எழுதிய ஒரு நாள் என்னும் குறுநாவல். இரண்டாம் உலகப் போரில் பங்கு கொண்டு பல இடங்களில் போர்முனையைப் பார்த்தவன், உலகம் முழுதும் சுற்றியவன் தன் கிராமத்துக்குத் திரும்புகிறான். அங்கு தன் கிராமத்தையே தம் உலகமாகக் கண்டு அங்கு அமைதியாக தம் பெண்களுடன் வாழும் மாமா வீட்டில் ஒரு நாள் கழிகிறது. மாமாவும் உலகமும் கிராமத்து வாழ்க்கையின் அமைதியும் தான் உலகம் சுற்றிய வீர சாகஸங்களை விட அர்த்தமுள்ளது எனத் தோன்றுகிறது. கிராமத்திலேயே தங்கிவிடுவது என்று தீர்மானிக்கிறான்.
(தொடரும்)
No comments:
Post a Comment