உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே. -வானொலி மாமா நா. மகேசன்-




ஒரு பெரியவர் நண்பர் ஒருவருடைய வீட்டுககுச் சென்றார். தனது வீட்டிலிருந்து இரண்டு மயில் தூரம் நடந்தே சென்றார். மத்தியான வேளை. பசியும் களைப்புமாக இருந்தது. நண்பர் அவரை வரவேற்றுக் களைப்பாறக் குளிர்பானம் கொடுத்து உசரித்தார். வெகு நேரம் பலதும் பத்தும் பேசிக்கொண்டிருந்தார்கள். மத்தியானம் சாப்பிட்டு விட்டுத்தான் போக வேண்டும் என்று வற்புறுத்தினார் நண்பர். பெரியவர் மறுக்காது இருவரும் ஒன்றாக உணவருந்தினார்கள். உண்டபின் மிகுந்த திருப்தியுடன் பெரியவர் “உண்டி கொடு;த்தோர் உயிர் கொடுத்தோரே” என்று சொல்லித் தனது திருப்தியைத் தெரிவித்துக் கொண்டார். நண்பர் நல்ல வார்த்தை சொன்நீர்கள். இந்தச் சொற் தொடரை எப்படித் தெரிந்து கொண்டீர்கள். இதை யார் சொன்னார்கள் என்று நண்பர் கேட்டார்.

என்னுடைய தகப்பனார் அடிக்கடி சொல்லுவார். அதைப்பார்த்தும் கேட்டும் பழக்கமாகிவிட்டது. நானும் சொல்லத் தொடங்கிவிட்டேன் என்றார் பெரியவர். இப்படிப் பல சொற்தொடர்களைப் பலர் நாளாந்த வாழ்க்கையில் பயன்படுத்திப் பேசுகிறார்கள்;. ஆனால் அந்த வார்த்தைகளின் மூலம் தெரிவதில்லை. போகட்டும். பழைய வார்த்தைப் பிரயோகங்கள் நடை முறையில் இருக்கின்றனவே என்று பெருமை கொள்வோம்.

உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே என்புது சங்க இலக்கியமான புறநாநூற்றில் இருந்து வருகிறது. இது குட புலவியனார் என்னும் புலவர், தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன் என்ற மன்னனை வாழ்த்திப் பாடிய பாடலில் உள்ளது. பாடலின் எண் 18;. புலவர் மன்னனைக் கோடி ஆண்டுகள் வாழ்க என வாழ்த்திவிட்டுச் சில புத்திமதிகளைக் கூறகின்றார்.

மன்னனுடைய ஆட்சி நெடுநாள் நிலைக்க வேண்டுமானால் அவர் நீர்வளத்தைப் பெருக்க வேண்டும். நீர்வளம் பெருக அவன் குளங்களை; கட்ட வேண்டும். ஆதனால் நன்செய் நிலங்கள் பெருக வேண்டும். நிலவளம் பெருகினால் உணவு விளைச்சல் பெருகும். உணவு பெருகினால் நாட்டு மக்கள் நன்மை பெறுவார்கள். நல்லுணவு பெற்றோர் நல்ல ஆரோக்கியமாக உயிர் வாழ்வார்கள். உணவே உயிரை வளர்க்கிறது. உணவை உற்பத்தி பண்ணிக் கொடுத்தோர் மக்களுக்கு உயிர் கொடுத்தவர் ஆவர்; என்ற பெருள் படப் பாடல் விரிந்து செல்கிறது. 30 வரிகள் கொண்ட பாடல். அற்புதமான அறிவுரை. பழந்தமிழர்களுடைய
அறிவும்; ஆற்றலும் எந்த அளவில் இருந்திருக்கிறது என்பகைத் காட்டுகிறது. பாட்டின் ஒரு சில வரிகளைப் பாருங்கள்:

            “நீர் இன்று அமையா யாக்கைக்கு எல்லாம்
            உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே
            உண்டி முதற்றே உணவின் பிண்டம்.

            உணவெனப் படுவது நிலத்தொடு நீரே
            நீரும் நிலனும் புணரியோர் ஈண்டு
            உடம்பும் உயிரும் படைத்திசி னோரே
            வித்தி வான் நோக்கும் புன்புலம் கண்ணகன்
            வைப்பிற்று ஆயினம் நண்ணி ஆளும்.

“நீரின்று அமையாது உலகெனின், யார் யார்க்கும் வானின்று அமையாது ஒழுக்கு.” என்ற
திருக்குறளின் சொல் அமைப்பு மேற்கண்ட சங்கப் பாடலில் கண்டு மகிழக்கூடியதாக உள்ளது. நாம் நமது தாய் மொழியில் உள்ள சிறப்பான எக்காலத்தும் மாறுபடாத கருத்துகளை  தேடி ஆராய்ந்து மகிழாமல் இருப்பது வருத்தத்துக்கு உரியதே.
சிட்னி    23. 06. 2013.

No comments: