உலகச் செய்திகள்

அரை நிர்வாண ஆர்ப்பாட்டத்தால் ஆடிப்போன பிரசல்ஸ்!

ஆப்கான் ஜனாதிபதி மாளிகை மீது தலிபான்கள் அதிரடித் தாக்குதல்!

உத்தரகண்டில் தொடரும் அழிவுகள்: உணவின்றி 20 பேர் பலி

ஸ்னோடெனை ஒப்படைக்க முடியாது: அமெரிக்காவின் கோரிக்கையை நிராகரித்தது ரஷியா

உத்தரகண்டில்  அழிவுகள் ( படங்கள் )


==========================================================================

அரை நிர்வாண ஆர்ப்பாட்டத்தால் ஆடிப்போன பிரசல்ஸ்!

26/06/2013     பெல்ஜியம் நாட்டின் தலைநகரான பிரசல்ஸில் வைத்து டுனீசிய நாட்டு பிரதமர் அலி லராயெட்டின் வாகனத்தொடரணி மீது பாய்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அரை நிர்வாணப் பெண்களால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமது சக பெண் ஆர்வலர்களை விடுதலை செய்யும் படி வலியுறுத்தி உக்ரேன் நாட்டு பெண்கள் இயக்கமான 'பெமென்' இயக்க உறுப்பினர்களே இவ் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
பிரசல்ஸில் உள்ள ஐரோப்பிய ஒன்றிய தலமைக் காரியாலயத்திற்கு விஜயம் செய்த டுனீசிய நாட்டு பிரதமர் அலி லராயெட் அங்கிருந்து திரும்பும் போதே அவரது வாகனத் தொடரணி மீது இரண்டு பெண்கள் பாய்ந்துள்ளனர்.



 இவர்கள் மேலாடையின்றி இருந்ததுடன், அண்மையில் கைதுசெய்யப்பட்ட பெண் ஆர்வலர்களை விடுதலை செய்யும் படி வாசகங்களை உடலில் எழுதியிருந்தனர்.
வாகனத்தொடரணி மீது பாய்ந்த இவர்களை பாதுகாப்பு அதிகாரிகள் அங்கிருந்து இழுத்து உடனடியாக அவ்விடத்தை விட்டு அகற்றியுள்ளனர்.

உலகின் கவனத்தினை இலகுவாக ஈர்க்கும் பொருட்டு 'பெமென்' இயக்கத்தினர் இத்தகைய ஆர்ப்பாட்டங்களை தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

நன்றி வீரகேசரி 







ஆப்கான் ஜனாதிபதி மாளிகை மீது தலிபான்கள் அதிரடித் தாக்குதல்!

25/06/2013   ஆப்கானிஸ்தானின் ஜனாதிபதி மாளிகை மீது தலிபான்கள் இன்று காலை தாக்குதல் நடத்தியுள்ளனர்.
அந்நாட்டு நேரப்படி காலை 6.30 மணியளவில் காபுலில் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகை மீது முதல் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
ஆயுததாரியொருவர் முதலில் மாளிகையின் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
பின்னர் ஜனாதிபதியின் பாதுகாப்புப் பிரிவினருக்கும், ஆயுததாரிகளுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
நீண்ட நேரம் மோதல் இடம்பெற்றதாகவும், தலிபான்கள் குண்டுகளை வீசித் தாக்குதல் நடத்தியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
தாக்குதல் நடத்திய அனைவரும் பின்னர் கொல்லப்பட்டதாக ஆப்கான் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஜனாதிபதி மாளிகை, அங்குள்ள சி.ஐ.ஏ.வின் தலைமையகமாகக் கூறப்படும் ஹெரியான ஹோட்டல்,  அதனைச் சூழ உள்ள கட்டிடங்கள் என பலவற்றை இலக்கு வைத்து தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.
இத்தாக்குதலை தாமே நடத்தியதாக தலிபான் அமைப்பினர் ஊடகவியலாளர்களுக்கு குறுந்தகவல் அனுப்பியுள்ளனர்.
தாக்குதலில் எத்தனை பேர் உயிரிழந்தனர் என்பது தொடர்பில் எவ்வித தகவலும் இதுவரை வெளியாகவில்லை.நன்றி வீரகேசரி 





உத்தரகண்டில் தொடரும் அழிவுகள்: உணவின்றி 20 பேர் பலி

23/06/2013 மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட உத்தரகண்ட் மாநிலத்தில் மோசமான வானிலை நிலவுவதால் மீட்பு பணிகள் தாமதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும்  துண்டிக்கப்பட்ட மலைப் பகுதிகளில் சுமார் 22 ஆயிரம் பேர் வரை சிக்கித் தவிப்பதாகவும், கடந்த ஒரு வாரத்தில் மட்டும் உணவு கிடைக்காமல் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 200ஐத் தாண்டி விட்டது என்றும் அம் மாநில முதல்வர் விஜய் பகுகுணா தெரிவித்துள்ளார்.
இந்திய வட மாநிலங்களில் கடந்த வாரம் பெய்தகன மழை, உத்தரகண்ட் மாநிலத்தையே புரட்டிப் போட்டுவிட்டது.
கங்கை, யமுனை ஆறுகளில் ஏற்பட்ட வரலாறு காணாத வெள்ளத்தில் பல ஆயிரக்கணக்கான வீடுகள் அடித்து செல்லப்பட்டன. பல இடங்களில் கடுமையான நிலச்சரிவு ஏற்பட்டது.

வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர். மாநிலத்தின் பல பகுதிகள் அடியோடு துண்டிக்கப்பட்டு விட்டன.
கேதார்நாத், பத்ரிநாத், உத்தரகாசி உள்ளிட்ட புண்ணிய ஸ்தலங்களுக்கு யாத்திரை வந்த பக்தர்கள் மலைப் பகுதிகளில் சிக்கித் தவிக்கின்றனர்.
கடந்த ஒரு வாரமாக அங்கு ராணுவத்தினரும் மாநில பொலிஸார் மற்றும் சமூக சேவை அமைப்புகளை சேர்ந்தவர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். நிவாரணப் பணிகளுக்கு மத்திய அந்நாட்டு அரசு ரூ.1000 கோடி ஒதுக்கியுள்ளது. உத்தரகண்ட் மாநிலத்தை சீரமைக்க 3 ஆண்டுகள் ஆகும் என கூறப்படுகிறது.
உத்தரகண்ட் முதல்வர் விஜய் பகுகுணாவோடு மத்திய உள்துறை அமைச்சர் சுசில்குமார் ஷிண்டே தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறார். மீட்பு பணிகளை விரைவு படுத்தவும் உத்தரவிட்டுள்ளார்.
கேதார்நாத், பத்ரிநாத், உத்தரகாசி போன்ற இடங்களில் இன்னும் ஆயிரக்கணக்கானோர் தவித்து வருவதாக மீட்புப் படையினர் தெரிவித்துள்ளனர். பல இடங்களிலும் போக்குவரத்து மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டு, அந்த பகுதிகளில் சிக்கியிருப்பவர்களை பத்திரமாக மீட்க திட்டமிட்டிருப்பதாக முதல்வர் விஜய் பகுகுணா தெரிவித்தார்.
துண்டிக்கப்பட்ட மலைப் பகுதிகளில் இன்னும் 22 ஆயிரம் பேர் வரை சிக்கியிருக்கலாம் என்றும் அவர் தெரிவித்தார்.
இந்நிலையில், மீட்பு பணிகள் காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ளன. சில பகுதிகளில் மோசமான வானிலை காணப்படுவதால் ஹெலிகாப்டர்கள் மூலம் மீட்பு பணிகளை செய்ய இயலாத நிலை ஏற்பட்டிருப்பதாக பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர். சில பகுதிகளில் மழையும் பெய்வதாக தெரிகின்றது.

மேலும் காடுகளில் சிக்கித் தவிக்கும் ஏராளமான பக்தர்கள் உணவு, தண்ணீர் கிடைக்காமல் தவித்து வருகின்றனர். அவர்களுக்கு தேவையான உணவுப் பொருட்களை எடுத்துச் செல்லவும் வழியில்லை.
கடந்த ஒரு வாரத்தில் மட்டும் பல இடங்களில் உணவு கிடைக்காமல் பட்டினியால் இறந்தவர்களின் எண்ணிக்கை 200 வரை எட்டியுள்ளதாக முதல்வர் விஜய் பகுகுணா கவலை தெரிவித்துள்ளார்.
உத்தரகண்டில் நாளை முதல் மீண்டும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருப்பது, மக்களை மேலும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
மீட்பு படையினரும் செய்வதறியாமல் தவிக்கின்றனர். மழை பெய்தாலும் தொடர்ந்து மீட்பு பணிகள் நடக்கும் என மாநில அரசு தெரிவித்துள்ளது. சில இடங்களில் 30 மீட்டர் நீளமுள்ள தற்காலிக பாலங்கள் அமைக்கப்பட்டும், துண்டான நிலப்பகுதிகளில் சில மரங்களை வெட்டி காட்டாற்று வெள்ளத்தை தாண்டி வருவதற்கும் இராணுவத்தினர் ஏற்பாடுகள் செய்து வருகின்றனர்.
ஜங்கல் சத்தி என்ற மலைப்பகுதியில் அபாயகரமான வனப்பகுதியில் 500 சிக்கித் தவிப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த மலைப்பகுதி ராமபாரா, கேதார்நாத், கவுரிகுந்த் ஆகிய மலைகளுக்கு இடையே அமைந்துள்ளது.
கேதார்நாத் பகுதியில் இன்னும் 8 ஆயிரம் பேர் தவித்து வருகின்றனர். அவர்களில் இன்று 500 பேர் பாதுகாப்பான இடத்திற்கு வந்து விட்டதாக தகவல் கிடைத்துள்ளது. பிதேர்கார் என்ற இடத்தில் 1000 பேரும் ஹேமகுந்த் என்ற இடத்தில் தனியாக 100 பேரும் சிக்கி தவிப்பதாக கூறப்படுகிறது.

கேதார்நாத் உள்ளிட்ட பகுதிகளில் கிடக்கும் உடல்களை கணக்கெடுக்கும் பணியும் நடந்து வருகிறது. ஒரு வாரம் ஆகிவிட்டதால் சில பகுதிகளில் சடலங்கள் அழுகத் தொடங்கியுள்ளன. இதனால் தொற்று நோய்கள் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.
டேராடூன் உள்பட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளும் தொடர்ந்து உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இதுவரை 18 ஆயிரம் பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ள போதிலும், 30 ஆயிரம் பேர் வரை தவித்து வருவதாக இராணுவ அதிகாரி அனில் ஷெட்டி தெரிவித்துள்ளார்.     நன்றி வீரகேசரி 





ஸ்னோடெனை ஒப்படைக்க முடியாது: அமெரிக்காவின் கோரிக்கையை நிராகரித்தது ரஷியா

snowdenஅமெரிக்காவின் ரகசிய உளவு வேலைகளை அம்பலப்படுத்திய ஸ்னோடெனை பிடித்து ஒப்படைக்குமாறு அமெரிக்கா விடுத்த கோரிக்கைய ரஷியா நிராகரித்துள்ளது. அமெரிக்க உளவு அமைப்பான என்.எஸ்.ஏ.வின் முன்னாள் பணியாளரான ஸ்னோடென், ஹாங்காங்கில் இருந்து ரஷியாவுக்கு பயணம் மேற்கொண்டதாக தகவல் வெளியானது. அங்கிருந்து வெனிசூலா வழியாக ஈக்வடார் சென்று தஞ்சமடைய அவர் திட்டமிட்டுள்ளார் என்றும் கூறப்பட்டது.அரசு உடமைகளைத் திருடியது, அரசை உளவு பார்த்தது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் பேரில் ஸ்னோடென் மீது அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது.இந்நிலையில், மாஸ்கோ வந்துள்ள ஸ்னோடனை பிடித்து தங்களிடம் ஒப்படைக்க வேண்டுமென்று ரஷியாவிடம் அமெரிக்கா கோரியது. இது தொடர்பாக ரஷியா வெளியறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோ மாஸ்கோவில் கூறியதாவது: அமெரிக்க சட்டத்தை ரஷியா மீறி விட்டது என்பது போன்ற குற்றத்தை எங்கள் மீது சுமத்த முயற்சி நடக்கிறது என்றே கருதுகிறோம். இதனை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது. ஸ்னோடென் விஷயத்தில் ரஷியா எதுவும் செய்ய முடியாது. அவருடன் எங்களுக்கு எந்தத் தொடர்பும் கிடையாது. இது தொடர்பாக பத்திரிகைகளில் வந்துள்ள செய்திகள் மட்டுமே எங்களுக்குத் தெரியும் என்றார். ரஷியாவில் இருந்து கியூபா செல்லும் விமானத்தில் ஸ்னோடென் முன்பதிவு செய்துள்ளார். ஆனால் அவர் அதில் பயணம் செய்யவில்லை. எனவே அவர் ரஷியாவில் தான் மறைந்திருக்க வேண்டுமென்று அமெரிக்கா சந்தேகிக்கிறது.ஈக்வடாரில் ஸ்னோடென் தஞ்சமடைய அனைத்து உதவிகளையும் செய்யத் தயாராக இருப்பதாக விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே கூறியுள்ளார். நன்றி தேனீ



உத்தரகண்டில் அழிவுகள் ( படங்கள் )
























































No comments: