.
வானம் அழுதுகொண்டிருந்த அந்தக்காலைப்பொழுதில் எனது பேத்தி மாயாவும் அழத்தொடங்கிவிட்டாள். எப்பொழுதும் மாயப்புன்னகையுடன் தோன்றும் அவளை அழுகையுடன் பார்க்கச் சகிக்கவில்லை.
திருவிளையாடல் படத்தில் நகேஷ் தருமி சிவாஜி சிவனிடம் கேட்கும் கேள்விகளில் ஒன்று சகிக்கமுடியாதது…? பதில் பச்சிளம்குழந்தையின் அழுகை. ஆம்…உண்மைதான். இயக்குநரும் வசனகர்த்தாவுமான ஏ.பி.நாகராஜன் தனது அனுபவத்தில்தான் அதனை எழுதியிருப்பார் என்று சொல்லவேண்டிய அவசியம் இல்லை. எல்லோருடைய அனுபவமும் அப்படித்தான்.
தொடர்ந்து மூன்று நாட்களுக்கு மழைபெய்யும் என்று வானிலை அவதானநிலையத்தினர் தொலைக்காட்சிகளிலும் வானொலி மற்றும் ஊடகங்களிலும் சொல்லியிருந்தனர். அத்தகைய மழைக்காலத்தில் ஒருநாள் மருத்துவபரிசோதனை முடிந்து மெல்பனிலிருந்து தொலைவில் உள்ள எனது புதிய ஊருக்குச்செல்லவிருந்தேன்.
ரயிலையும் பஸ்ஸையும் தவறவிட்டபடியால் மெல்பனிலிருக்கும் மகள் வீட்டுக்குச்செல்லும்போது இரவு 11 மணியாகிவிட்டது. பேத்தி ஆழ்ந்த உறக்கம். காலை எழுந்ததும் அவளுடன் விளையாடலாம் பொழுதைப்போக்கலாம் என்று நம்பியிருந்தேன். பேத்தி வாரத்தில் ஒருநாள் குழந்தை பராமரிப்பு நிலையத்துக்கு சென்று வருகிறாள் என்பதை அறிந்தவுடன் சற்று கவலை வந்துவிட்டது. மறுநாள் விடிந்தால் வெள்ளிக்கிழமை. அன்று பேத்தி குறிப்பிட்ட பராமரிப்பு நிலையத்திற்குப்போகவேண்டும்.
மகளும் மருமகனும் காரை ரயில் நிலையத்தில் தரித்துவிட்டு நகரத்திற்கு வேலைக்குச்செல்லவேண்டும். அத்துடன் மகளை வாரத்தில் ஒருநாளாவது பராமரிப்பு நிலையத்தில் விடவேண்டும்.
நான் அந்த வீட்டிலிருந்து பேத்தியை பார்த்துக்கொள்ளலாம். ஆனால் இங்கு குழந்தை பராமரிப்புக்கும் விசேட பயிற்சிகள் இருக்கின்றன. என்னிடம் அவை இல்லை இலங்கையில் எனது குழந்தைகளையும் அக்காää தங்கை குழந்தைகளையும் நன்றாக பராமரித்து வளர்த்த அனுபவம் இருந்தபோதிலும் அந்த அனுபவம் இந்த கடல்சூழ்ந்த கங்காரு நாட்டுக்குப்பயன்படாது.
“ அப்பா…. உங்கள்…பேத்தி வெளியே ஏதாவது ஒரு பராமரிப்பு நிலையத்தில் வாரம் ஒருமுறையாவது சில மணிநேரங்கள் இருந்தால்தான் பின்னர் தன்னம்பிக்கையுடனும் சூழலைப்புரிந்துகொண்டும் வாழும் வளரும். அங்கே இவளைப்போன்று பல பிள்ளைகள் வருகிறார்கள். அவர்களுடன் இவள் பேசிச்சிரித்து விளையாடினால்தான் பின்னர் பாடசாலைக்குச்செல்லும்போது தயக்கம் பயம் இல்லாமல் படிப்பாள்” என்று எனக்கு ஆறுதல் சொன்னாள் மகள்.
மகளது கருத்தையும் ஏற்றுக்கொண்டுää அவர்களின் காரில் நானும் புறப்பட்டேன். பேத்தி உற்சாகமாகத்தான் சிரித்தவாறு புறப்பட்டுவந்து காரில் ஏறி தனக்குரிய ஆசனத்தில் அமர்ந்தாள்.
மகள் “ அப்பா….இவளை அங்கே விட்டுவிட்டு புறப்படும்பொழுது BYE ன்ற மூன்று எழுத்துக்களை சொல்லவேண்டாம்…” என்று எச்சரித்தாள்.
அப்படிச்சொன்னால் அவள் அழத்தொடங்கிவிடுவாளாம். அதாவது விட்டுவிட்டு போவதற்கான அடையாளச்சொல்தான் அந்த BYE
அந்தக் குழந்தை பராமரிப்பு நிலையத்திற்கு (Child Care Centre) ெளியே நின்றவாறு உள்ளே கண்ணாடி ஊடாகப்பார்த்தேன். அங்கு அந்த குளிர்காலவேளையிலும் எனது பேத்தியின் வயதை ஒத்த சில குழந்தைகள் வந்து விளையாடிக்கொண்டிருந்தன. மகளும் மருமகனும் பேத்தியை அங்கு கடமையிலிருந்த பெண்ணிடம் ஒப்படைத்தபோது அவள் விம்மி விம்மி அழத்தொடங்கிவிட்டாள். என்னால் அந்தக்காட்சியை சகிக்கமுடியவில்லை.
நான் எனக்குள் அழத்தொடங்கிவிட்டேன். மகளும் மருமகனும் வெளியே வந்தார்கள். எனது வாடிய முகத்தைப்பார்த்த மகள் சொன்னாள் “ அப்பா முன்பொரு காலத்தில் இலங்கையில் நீங்களும் வேலைக்குப்போகும்போது என்னை பாலர்பாடசாலையில் (Kinder Garden) ிட்டுச்சென்றீர்கள்தானே…? அப்பொழுதும் நான் அழுதிருப்பேன். அதுபோன்றே இதனையும் ஏற்றுக்கொள்ளுங்கள். உங்கள் பேத்தி இப்போது அழுவாள். பிறகு சமாதானமடைந்து ஏனைய குழந்தைகளுடன் விளையாடத்தொடங்கிவிடுவாள்.” என்று எனக்கு ஆறுதல்சொன்னாள்.
எனினும் கனத்த மனதுடன் அவர்களிடமிருந்து விடைபெற்று வேறு ஒரு திசையில் செல்லும் ரயிலில் ஏறினேன். பேத்தியின் விம்மிய முகமே கண்களை நிறைத்திருந்தது. மகளும் மருமகனும் நகரத்திற்கு வேலைக்குச் செல்லும் திசையில் ரயில் ஏறினார்கள்.
உலகத்தில் எல்லோருமே வௌ;வேறு திசைகளில்தான் பயணித்துக்கொண்டிருக்கிறார்கள். அந்தத்திசைகள் சிந்தனையாகவும் இருக்கிறது.
மனிதப்பிறவியில் குழந்தைப்பருவத்திற்கும் முதுமைப்பருவத்திற்கும் இடையே நிரம்ப ஒற்றுமைகள் இருக்கின்றன.
குழந்தைகளும் முதியவர்களும் குறிப்பிட்ட பருவத்தில் பராமரிப்புக்குரியவர்கள்தான். அதனால்தான் உலகெங்கும் குழந்தை மற்றும் முதியோர் பராமரிப்பு நிலையங்கள் பல்கிப்பெருகியுள்ளன.
இயந்திரமாக மக்கள் இயங்கிக்கொண்டிருக்கும் நான் வாழும் அவுஸ்திரேலியா உட்பட மேலைநாடுகள் எங்கும் இந்த நிலையங்களில் பணியிலிருப்பவர்கள் விசேட தொழிற் பயிற்சிகளுக்குச்சென்று சான்றிதழும் பொலிஸ் சான்றிதழ் மற்றும் Working with children, Working with elderly people அடையாள அட்டையும் பெற்றிருக்கவேண்டும். பின்னர் காலத்துக்குக்காலம் நடக்கும் பயிலரங்குகளிலும் பங்கேற்கவேண்டும். முதலுதவி சிகிச்சைகள் பற்றிய அனுபவங்கள் பெறவேண்டும்.
இலங்கையில் பலாங்கொடையில் எனது அக்காவின் கணவர் ஒரு தேயிலைத்தோட்டத்தில் Field officer ஆக பணியிலிருந்தார். பாடசாலை விடுமுறைகாலங்களில் அக்காவீட்டிற்கு வந்துவிடுவேன். மச்சானுடன் தோட்டத்தை சுற்றிப்பார்க்கப்போவேன். அங்கே கொழுந்து பறிப்பவர்களையும் தேயிலைக்கொழுந்து நிறுக்கும் இடம் மற்றும் பிள்ளை மடுவம் ஆகியனவற்றையும் அதிசயத்துடன் பார்ப்பேன்.
தோட்டப்புறங்களில் பிள்ளை மடுவத்தில் தேயிலைத்தோட்டத்தொழிலாளர்களின் பச்சிளம் குழந்தைகள் அழும் விளையாடும் தொட்டில்களில் உறங்கும் காட்சிகளைப்பார்த்தவேளைகளிலும் என்னால் சகிக்கமுடியாதிருக்கும். அந்தப்பிள்ளை மடுவங்களையும் நாம் ஆங்கிலத்தில் Child care எனச்சொல்லலாம்.
சில வருடங்களுக்கு முன்னர் லண்டனில் நண்பர் ராஜகோபால் வெளியிடும் தமிழன் இதழில் ஒரு விளம்பரம் பார்த்து ஆச்சரியப்பட்டேன்.
இதுதான் அந்த விளம்பரம்: “ 80 வயது தமிழ் அம்மாவுடன் காலை 8 மணி முதல் மாலை 5 மணிவரையும் பேசிக்கொண்டிருப்பதற்கு பெண் தேவை. வாராந்த ஊதியம் தரப்படும்.”
இதனைப்படிக்கும் நாம் அந்த விளம்பரத்தின் பின்னணியை புரிந்துகொள்வது இலகுவானது. அந்த வீட்டிலிருக்கும் கணவன் மனைவி வேலைக்குப்போய்விடுவார்கள். பிள்ளைகள் பாடசாலைக்கோ அல்லது வேலைக்கோ சென்றுவிடுவார்கள். வயது முதிர்ந்த அந்த மூதாட்டியை பகல் பொழுதில் பராமரிக்க ஆள் தேவைப்படுகிறது. முதியோர் இல்லத்திற்கு அந்த மூதாட்டி செல்லவிருப்பமற்றவராக இருக்கலாம். அல்லது அதற்கான செலவை சமாளிக்க முடியாமல் வீட்டுக்கு ஒரு ஆளை சில மணிநேரங்களுக்கு நியமித்து பராமரிக்க முடிவுசெய்திருக்கலாம்.
அந்த மூதாட்டிக்குத்தேவையான மதிய உணவு குளிர்சாதனப்பெட்டியிலிருக்கலாம். பகலில் பராமரிக்க வருபவர் அதனை எடுத்து சூடாக்கி உண்ணக்கொடுக்கலாம். தொலைக்காட்சியை இயக்கிவிடலாம். தேநீர்ää கோப்பி. சூப் தயாரித்துக்கொடுக்கலாம். குளியலறைக்கும் மலகூடத்துக்கும் கைபற்றி அழைத்துச்செல்லலாம்.
குறிப்பிட்ட விளம்பரத்தை லண்டன் இதழில் பார்த்து சுமார் பத்துவருடங்களின் பின்னர் இலங்கையில் கொழும்பில் ஒரு தமிழ் தினசரியிலும் அதே போன்றதொரு விளம்பரம் பார்த்து அதிசயித்தேன். அப்படியாயின் இலங்கையிலும் இயந்திரகதியான வாழ்க்கை முறை தொடங்கிவிட்டதா?
இலங்கையிலும் பல இடங்களில் முதியோர் இல்லங்களை காணமுடிகிறது. வெள்ளவத்தையில் ஒரு தமிழ் முதியோர் இல்லத்தை பார்த்தேன். அங்கிருக்கும் மூதாட்டிகளின் பிள்ளைகள் வெளிநாடுகளில் வசிக்கிறார்கள்.
பணம் கிரமமாக வருகிறது. அதனால் அவர்கள் அங்கு சிறப்பாக பராமரிக்கப்படுகிறார்கள். வெளிநாடுகளில் வாழும் எம்மவருக்கும் அந்திமகாலம் முதியோர் பராமரிப்பு நிலையம்தான் என்பது தெளிவானது.
ஒரு சம்பவத்தை இச்சந்தர்ப்பத்தில் சொல்லாம்.
ஒரு மூதாட்டியை அவளது மகள் ஒரு முதியோர் பராமரிப்பு நிலையத்தில் அனுமதிப்பதற்கு அழைத்துச்சென்றாள்.
அந்த மூதாட்டி அழத்தொடங்கிவிட்டாள். “ ஏனம்மா என்னை இங்கே அழைத்துவருகிறாய். வீட்டிலே நான் பேரப்பிள்ளைகளை பார்த்துக்கொண்டு சந்தோஷமாக இருந்திருப்பேனே…” என்று கலங்குகிறார்.
உடனே மகள் “ அம்மா ஒரு காலத்தில் நீங்கள் என்னை Child care ல் விட்டுவிட்டு வேலைக்குப்போனீர்கள். தற்போது நீங்கள் முதுமையடைந்துவிட்டீர்கள். நான் வேலைக்குப்போகவேண்டும். கணவரும் போகவேண்டும். எனது பிள்ளைகள் பாடசாலைக்குப்போகவேண்டும். அதனால்தான் உங்களை Age care இல் அனுமதிக்கின்றேன்.” எனச்சொன்னாள்.
மாமியாரும் ஒரு வீட்டு மருமகளே என்பதுபோன்று மகளும் ஒரு நாளைக்கு மூதாட்டிதான். வாழ்க்கையின் இந்த சுழற்சியிலிருந்து எவரும் தப்பவே முடியாது.
ஓரிடத்தில் பிறந்தாலும் பயணங்கள் வௌ;வேறு திசையில்தான். எனது மகளும் என்னை ஒரு நாள் முதியோர் இல்லத்தில் விடலாம். அதேபோன்று தற்போது குழந்தை பராமரிப்பு நிலையம் செல்லும் எனது பேத்தியும் தனது தாயை அதாவது எனது மகளை ஏதாவது ஒரு முதியோர் இல்லத்தில் விடலாம்.
அப்பொழுது விஞ்ஞான தொழில் நுட்பங்களும் மாறி இருக்கலாம்.
No comments:
Post a Comment