இணையற்ற அருள்மொழி


எப்போதும் உதவு, ஒருபோதும் புண்படுத்தாதே

பகவான் ஸ்ரீ சத்ய சாயி பாபா அருளிய அற்புத மொழிகள் ஆயிரமாயிரம். பாமரரும் பண்டிதரும் கூடிய சபையில் அவர் அருள்மொழி வழங்கினால், ஒவ்வொருவருக்கும் அவருக்கென ஒரு செய்தி இருக்கும். அவர் சுமந்து வந்த கேள்விக்கு விடை இருக்கும். அவருக்கென ஒரு வழிகாட்டல் கிடைக்கும். “இது வறட்டுத் தத்துவம், எனக்குப் புரியாது” என்று எவரும் நினைக்க வாய்ப்பே இருக்காது.

வேதசாரத்தை எளிய சொற்களில், அன்றாட வாழ்விலிருந்து எடுத்த உதாரணங்களோடு, வெகு சரளமாக வழங்குவது பகவானின் அருட்பிரவாகம். தமிழில் 36 தொகுதிகள் 42 புத்தகங்களாக (சில தொகுதிகள் இரண்டு பகுதிகளாக) ‘பகவான் ஸ்ரீ சத்ய சாயி பாபாவின் அருளமுதம்’ என்ற பெயரில் வெளியாகியுள்ளது. தவிர, ‘சனாதன சாரதி’ என்ற தமிழ் மாத இதழும் வெளியாகிறது.

பகவான் திருவாய் மலர்ந்தருளிய எல்லாமே விலைமதிப்பற்ற வைரங்கள்தாம் என்றாலும், எவர் மனதையும் கேட்டவுடனே கவரும் தன்மை படைத்தவை சில அருள்மொழிகள். அவற்றில் ஒன்று “எப்போதும் உதவு, ஒருபோதும் புண்படுத்தாதே” (Help Ever, Hurt Never) என்பதாகும்.

பகவானின் அருள்மொழிகளை நினைவுகூர்வதும், அவற்றின் அருமை பெருமைகளையும், அவற்றுள் அடங்கிய அற்புதப் பாடங்களையும் எளியேனின் அறிவுக்கேற்ப விவரிக்க, விளக்க முயல்வது  இந்த வலைப்பக்கத்தின் நோக்கம்.

தவிர, பகவானின் வியத்தகு வாழ்க்கையின் சில அம்சங்களை, நமக்கு எட்டியவரை மீளக்கூறி, அதன் இனிமையிலே தோய்வதும், தோய்விப்பதும்கூட இந்த எளியேனின் முயற்சியில் அடங்கும்.

பகவான் இவற்றைச் சாத்தியப்படுத்தட்டும்.

ஓம் ஸ்ரீ சாயிராம்!
நன்றி சாயி கீதை வலைப்பக்கம்

No comments: