நகரங்கள் -கவிதை -தேவ அபிரா.

.


இலையுதிர்காலத்தின் எதிர்பாராத வெப்பம் தவழ்கையில்
இந்த நகரத்தை வந்தடைந்தேன்.
நகரத்தின் காலடியில் நகர்கிறது நதி.

கரையோர உணவகங்களில் நடுகுடைகள் விரிந்துள்ளன.
முறுகச்சுட்ட பாணில் உருகி வழியும் பாலாடைக் கட்டிகளுக்கருகில்
மென் பொன் மதுக்குவளையை இருத்தி
நங்கைகள் விரைந்து பரிமாறுகிறார்கள்.
பங்குச்சந்தை காய்கிறது.
வங்கிகள் சரிகின்றன.
ஆயினும் கொழுத்த முகங்களின் எண்ணைப்படிவுகளில்
இலையுதிகாலச்சூரியன் பளபளக்கிறது.

மிதவைப்படகின் தோசைக்கடைகளில் சிறுவர்கள் காத்திருக்கிறார்கள்.
நூற்றாண்டுகளாக நகரும் ஆற்றின் ஈரத்தைத்
தன்காதலியின் உதடுகளுக்குள் விட்டுக்கொண்டிருந்தான் ஒருவன்.
இலையுதிர்காலத்தின் வெப்பம் தவற விடக்கூடியதா என்ன?

நான்கு தசாப்தங்களின் முன்பு
இந்த நதிக்கரையில் எதிரி காத்திருந்தான்.
விமானங்கள் குண்டுகளைப் பொழிந்தன.
நினைவுச்சின்னங்களாக நசுங்கிப்போன அந்தக்காலத்தின் கல்லறையில் ஒரு வாசகம் எழுதப்பட்டிருந்தது
"இது எமது நகரம்"

என் வாழ்வின் நினைவுத் தடத்தில்
உறங்கிக்கிடந்தவென் நகரங்கள் விழித்தன...
உறையாதே நடந்து போவென்றன..
காலத்தினூடே பயணம் செய்யும் * நியூற்றினோக்களைத் தேடி
குறுகலான சந்துகளினூடே நடந்தேன்.
நூற்றாண்டுகள் கடந்தும்
கடல் கடந்து அள்ளிவந்த செல்வங்கள்
இன்னும் சிதறிக்கிடந்தன.
தொன்மையை இழந்து நகரத்துள் நசுங்கிக் கிடந்த பூங்காவெளியில்
கண்கள் படாமலும் காமம் சுடாமலும்
பெண்ணுடல் கிடத்தி வெய்யில் சுகிக்கிறது.
என் நகரத்திலோ பூதங்களுக்கஞ்சி
ஒடுங்கிய பெண்களின் சாபத்தில்
இன்னுமெரிகிறது எரிக்கிறது சூரியன்.

நினைவுகளின் தகிப்புத்தாளாது
நிமிர்ந்து நின்ற நினைவுசின்னத்தின் அடியில் அமர்ந்தேன்.
அதன் வேர்கள் எத்தனை ஆண்டுகள் நீண்டிருந்தவென்றறியேன்.
ஆனாலும் அதன் மடியில் இருந்தது ஒரு கவிதை:

"இந்த நகரத்தில் அதிக நாள் நான் வாழவில்லை
ஆயினும் எனது இளமைக்காலம் இங்கேயிருந்தது
நான் எங்கு சென்றபோதும் என்னருகில் இருப்பதும் இந்த நகரமே".*

ஓலங்கள் மட்டும் மௌனமாக அலையும்
எனது நகரங்களில் என்றாவது ஓர் நாள்
நானும் நினவுச்சின்னமொன்றை எழுப்புவேன்.
ஏனேனில் யுகங்களைக்கடந்து செல்ல விரும்பும்
அற்ப மனிதன் நான்.

மனிதர்களற்ற வெளியில் நுழையும்;
சூரியன் விழுந்து சிவப்பாகும் இரவு நதிப்படுக்கையில்
நான் சரிந்தபோது,
என் காதருகில் கேட்கிறது
என் நகரத்தின் ஆழியின் ஓங்காரம்.


நன்றி: தேவ அபிரா.

No comments: