மெல்பேணில் எழுச்சியுற நடைபெற்ற தமிழின உணர்வாளர் திரு. மணிவண்ணன் அவர்களின் நினைவு வணக்க நிகழ்வு


அண்மையில் மறைந்த தமிழின உணர்வாளர் இயக்குநர் - திரு. மணிவண்ணன் அவர்களின் நினைவு வணக்க நிகழ்வு அவுஸ்திரேலியா மெல்பேணில் எழுச்சியுற நடைபெற்றுள்ளது.

22.06.2013 சனிக்கிழமையன்று அகவணக்கத்துடன் தொடங்கிய இந்நிகழ்வு, வேர்மன்ற் சவுத் மண்டபத்தில் நடைபெற்றுள்ளது. தமிழ்ச்செயற்பாட்டாளர் திரு. ஜெயக்குமார் அவர்கள், தமிழின உணர்வாளர் இயக்குநர் - திரு. மணிவண்ணன் அவர்களின் திருவுருவப்படத்திற்கு ஈகச்சுடரேற்றியதைத் தொடர்ந்து, நிகழ்விற்கு வந்த தமிழ் உணர்வாளர்களின் மலர்வணக்கம் இடம்பெற்றது.

தமிழர் ஓருங்கிணைப்புக் குழுவின் திரு. வசந்தன் தொகுத்து வழங்கிய இந்நிகழ்வில், இயக்குநர் மணிவண்ணன் அவர்களுடனான் தனது அனுபவங்களை திரு தெய்வீகன் அவர்கள் பகிர்ந்துகொண்டார். “ஈழத்தமிழர்களின் கதைகளைப் படமாக்குவதை விடவும் ஈழத்தமிழர்களைக் கொண்டே தான் ஒரு படத்தை இயக்கவிருப்பதாகவும்,


 அதற்கான முயற்சியிலேயே தான் தாயகம் வந்திருப்பதாகவும் பத்தாண்டுகளின் முன்னர் தெரிவித்த மணிவண்ணன் அவர்கள், எமது விடுதலைப் போராட்டம் பற்றிய ஆழ்ந்த கரிசனையைக் கொண்டிருந்தார். விடுதலைப் பயணமென்பது முட்கள் நிரம்பிய ஒரு கொடிய பாதை; எவ்வித அர்ப்பணிப்பையும் செய்யத் தயாரானவர்களே அப்பாதைவழியே பயணத்தை வழிநடத்திச் செல்லவேண்டும்; அவ்வகையில் ஈழவிடுதலைப் பயணத்தில் பங்குபற்றும் அனைவரும் அர்ப்பணிப்புள்ளவர்களாக இருந்தால் மட்டுமே விடுதலையை வென்றெடுக்க முடியும் என்று தான் கருதுவதாக அப்போது தெரிவித்த மணிவண்ணன், தானும் அர்ப்பணிப்போடும் தூய்மையான மனத்தோடும் ஈழப்போராட்டத்துக்கான பங்களிப்பைச் செய்தார்” என்று தெய்வீகன் தனதுரையில் தெரிவித்தார்.


அதனைத் தொடர்ந்து திரு. வித்தியானந்தன் அவர்கள் இயக்குநர் மணிவண்ணன் குறித்துத் தான் எழுதிய கவிதையை வாசித்தார். அடுத்துப் பேசிய திரு. நந்தகுமார் அவர்கள், திரு. மணிவண்ணன் அவர்களின் செயற்பாட்டு வரலாற்றைச் சுருக்கமாகத் தெரிவித்ததோடு அவரின் தூய்மையான இனப்பற்றையும் சுட்டிக்காட்டினார். மணிவண்ணன் அவர்களது திரைத்துறைப் பங்களிப்பையும் அதில் அவரின் செயற்பாட்டையும் விளக்கிய நந்தகுமார் அவர்கள், மணிவண்ணன் அவர்களின் இழப்பு தமிழின விடுதலைக்கான பயணத்தில் பேரிழப்பே என்று தெரிவித்தார்.

ஈழவிடுதலைக்காகத் தென்னிலங்கையிலிருந்து குரல்கொடுத்தும் தீவிரமாகச் செயற்பட்டுக்கொண்டுமிருந்தவர்கள் அவுஸ்திரேலியா வந்தபோது, ‘நீங்கள் இலங்கையை விட்டு வெளியேறி வெளிநாடுகளிலிருந்து செயற்பட்டால் உங்கள் உயிருக்கும் பாதுகாப்பு, அதேவேளை தமிழ்மக்களுக்காக நீண்டநாட்கள் உழைக்கமுடியும்’ என்று அவர்களிடம் குறிப்பிட்டபோது, அவர்கள் அக்கருத்தை மறுத்து, தாம் அங்கிருந்தபடியேதான் செயற்படுவோமென்று சொல்லிச் சென்றார்கள். பயந்தது போலவே அவர்கள் அரசபயங்கரவாதத்தால் கொல்லப்பட்டார்கள். அதனால் எமது போராட்டத்துக்குப் பேரிழிப்பு ஏற்பட்டது. அதேபோல் தனது உடல் நிலையையும் கருத்திற்கொள்ளாது தொடர்ந்து செயற்பட்ட மணிவண்ணன் அவர்களின் இழப்பு எமக்குப் பேரிழப்பே எனத் தெரிவித்தார்.

நிகழ்வைத் தொகுத்துப் பேசிய வசந்தன், திரு. மணிவண்ணன் அவர்களின் எளிமையையும், தாயகத்தில் அவர் வந்து சென்ற காலப்பகுதியில் அவர் எவ்வாறு தமிழீழக் கட்டுமானங்களைப் பார்த்து நெகிழ்ந்தார் என்பது பற்றியும், புலம்பெயர் நாடுகளுக்கு ஈழத்தமிழரின் நிகழ்வுக்காகப் பயணம் மேற்கொண்ட ஒரு சந்தர்ப்பத்தில் தனது அனைத்துச் செலவுகளையும் தானே கவனித்துக்கொண்டு எந்தவித பொருளாதார உதவியையும் எதிர்பாராமல் செயற்பட்ட சம்பவத்தையும் சுட்டிக்காட்டினார். எந்தக் கட்டுமானங்களுக்குள்ளும் அமைப்புக்களுக்குள்ளும் தன்னைச் சிறைப்படுத்தாமல் சுதந்திரப் பறவையாகச் செயற்பட்ட அவரின் தன்மை குறித்துப் பேசினார்.

இறுதி நிகழ்வாக, திரு கஜன் கணேசன் அவர்கள், திரு. மணிவண்ணன் அவர்களின் அரசியற் செயற்பாடுகள் தொடர்பான அறிமுகத்தோடு  தனதுரையைத் தொடங்கி, சமகாலத்தில் நாமிருக்கும் நிலை, எமது போராட்டமிருக்கும் நிலை, தாயக நிலை என்பவற்றைக் குறிப்பிட்டு, இனிமேல் நாம் என்ன செய்ய வேண்டும் என்ற தனது உணர்வுமிக்க பார்வையை வெளிப்படுத்தினார்.

இறுதியாக ‘தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்’ என்ற உறுதியுரையோடு நிகழ்வு நிறைவுற்றது.

நன்றி.







No comments: