நெடுநல்வாடையை நுகரவாருங்கள் - 6 கீதா மதிவாணன்

.
அரண்மனையின் உள்ளே ஆட்சி செய்த அற்புத எழிலையும் செல்வச் செழிப்பையும் காண்போம் வாரீர்.
நெடுநல்வாடைப் பாடல் ((101- 107)
யவனர் இயற்றிய வினைமாண் பாவை
கைஏந்தும் ஐஅகல் நிறைய நெய்சொரிந்து
பரூஉத்திரி கொளீஇய குரூஉத்தலை நிமிர்எரி
அறுஅறு காலைதோறு அமைவரப் பண்ணிப்
பல்வேறு பள்ளிதொறும் பாய்இருள் நீங்க
பீடுகெழு சிறப்பின் பெருந்தகை அல்லது
ஆடவர் குறுகா அருங்கடி வரைப்பின் 
யவனரின் புதுமைக் கலைநயத்தையும்
யாவினும் மேவிய எழில்நலத்தையும்
யாமம் முழுவதும் எடுத்துரைப்பர்
யவ்வனமிகு பாவைப்பதுமையர்! 
 நளினம் நிறைந்த அவர்தம்
வளமான கையேந்திய விக்குகளில்
அளவோடு நெய்யூற்றி அடர்ந்த திரியேற்றி
நிமிர்ந்தெரியும் பொன்சுடர் யாவும்
அணைந்துபோகுமென அறியுந்தோறும்
எண்ணெயிட்டு எரிய ஊக்கியும்
எங்கெங்கும் இருள் நீக்கியும்
மங்கிய இரவு முழுவதும்
மாளிகையை ஒளிரச்செய்தனர்.

ந்தப்புறம் இருக்கும் அந்தப்புரம் தன்னில்
அரசனை அல்லாது அந்நிய ஆடவர் செல்லாது
பலத்தக் காவலிருந்தார்வலுத்தக் காவல்வீரர்!
  
வரை கண்டன்ன தோன்றலவரைசேர்பு
வில் கிடந்தன்ன கொடிய பல்வயின்
வெள்ளி அன்ன விளங்கும் கதைஉரீஇ
மணி கண்டன்ன மாத்திரள் திண்காழ்
செம்பு இயன்றன்ன செய்வுஉறு நெடுஞ்சுவர்
உருவப் பல்பூ ஒருகொடி வளைஇ
கருவொடு பெயரிய காண்புஇன் நல்இல் (108 – 114)


மாமலையென எழுந்தோங்கிய  மாளிகையதனை,
மாமலை சூழ்ந்த வானத்துவில்லென
மாளிகை சூழ்ந்த வண்ணப் பூங்கொடிகள் அசைய... 

பளபளக்கும் வெள்ளிபோல் பலவிடங்கள் பொலிந்தும்
கருகருக்கும் நீலமணிபோல் கரிய தூண்கள் எழுந்தும்
செம்பினாற் செய்தாற்போன்ற பெருஞ்சுவரில் காணும்
கொம்பற்ற கொடியோடு கோடிமலரோவியம் யாவும்
காட்டியதே நல்லதொரு இல்லம் கொண்ட
கவின்மிகு கர்ப்பக்கிரகம் இதுவேயென்று.

 தசநான்கு எய்திய பணைமருள் நோன்காள்
இகல்மீக் கூறும் ஏந்துஎழில் வரிநுதவல்
பொருதுஒழி நாகம் ஒழிஎயிறு அருகு எறிந்து
சீரும் செம்மையும் ஒப்ப வல்லோன்
கூர்உளிக் குயின்ற ஈர்இலை இடைஇடுபு
தூங்குஇயல் மகளிர் வீங்குமுலை கடுப்பப்
புரை திரண்டிருந்த குடத்த இடைதிரண்டு
உள்ளி நோன்முதல் பொருந்தி அடிஅமைத்து
பேர்அளவு எய்திய பெரும்பெயர் பாண்டில், (115 – 123) முரசறையும் பெரும் போர்க்களத்தில்
முரசனைய பெருங்கால்களோடும்
ஏற்றமிகு வரி ஓடும் நெற்றியோடும்
போற்றத்தக்க வெற்றி வேட்கையோடும் 

நாற்பதாண்டு பூரணம் பெற்ற
சீற்றமிக்க வாரணம் ஒன்று
வீழ்த்தப்பட்ட காரணம் கொண்டு
வீழ்ந்துவிட்ட கூர்தந்தம் கொண்டு 

நேரிய கலை பயின்ற சிற்பி
கூரிய உளிகொண்டு செதுக்கிய
ஈரிலைகளின் இடையே....இடைபெருத்த கர்ப்பிணியின்
புடைத்தெழுந்த மார்பையொத்து
கடைந்தெடுத்த மரக்குடத்தை
இடையேந்திய எழிலுடனும்
பூண்டின் வலிய தலைபோன்று
வலிமை பூண்ட கால்களுடனும்
பரந்து விரிந்து திகழ்ந்தது
பாண்டில் என்னும் வட்டக்கட்டில்!

No comments: