இலங்கைச் செய்திகள்

.
இலங்கையில் முஸ்லிம் மக்கள் ஒடுக்குமுறைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்: அமெரிக்கா

வட மாகாண சபைத் தேர்தல் தேவையில்லை : பொதுபல சேனா

செல்வராஜா கஜேந்திரனிடம் மீண்டும் யாழில் விசாரணை

பொதுபலசேனாவின் தலைமையகத்திற்கு வெளியே பிக்குமார் ஆர்ப்பாட்டம் - பெரும் பதற்றம்; பொலிஸார் தலையீடு

தனி ஈழத்துக்கான வாக்கெடுப்பே வடமாகாணத் தேர்தல்:ஹெல உறுமய

இலங்கைக்கு சீனா மீண்டும் கடனுதவிகளை வழங்கத் தீர்மானம்

மத்தளயில் விமான நிலையத்துக்கு பதிலாக குளத்தை கட்டியிருக்கலாம்; பொது பலசேனா

======================================================================

இலங்கையில் முஸ்லிம் மக்கள் ஒடுக்குமுறைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்: அமெரிக்கா21/05/2013 இலங்கையில் முஸ்லிம் மக்கள் ஒடுக்குமுறைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக அமெரிக்க ராஜாங்கத் திணைக்களம் அறிவித்துள்ளது.

2012ஆம் ஆண்டுக்கான அமெரிக்க ராஜாங்கத் திணைக்களத்தின் சர்வதேச மதச் சுதந்திர அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

கிறிஸ்தவ தேவாயலங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக அமெரிக்க தூதரகம் அந்நாட்டு ராஜாங்கத் திணைக்களத்திற்கு அறிவித்துள்ளது. குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக விசாரணை நடாத்தி தண்டனை விதிக்கப்பட வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


இன ரீதியான முரண்பாடுகளை தடுப்பதற்கு இலங்கை அரசாங்கம் காத்திரமான நடவடிக்கைகளை எடுக்கத் தவறியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. மத நம்பிக்கை இன சமூக அடிப்படையில் சமூக ரீதியான ஒடுக்குமுறைகள் இடம்பெறுவதாகவும் இதனை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மத வழிபாட்டுத் தளங்கள் மீதான தாக்குதல் சம்பவங்கள் முன்னைய ஆண்டுகளுடன் ஒப்பீடு செய்யும் போது குறைவாகக் காணப்பட்டாலும், பௌத்த கடும்போக்காளர்கள், முஸ்லிம்கள்; மீது அதிகளவு அழுத்தங்களை பிரயோகித்து வந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. நன்றி வீரகேசரிவட மாகாண சபைத் தேர்தல் தேவையில்லை : பொதுபல சேனா


21/05/2013 வட மாகாண சபைத் தேர்தலை நடத்த வேண்டிய அவசியமில்லை. முதலில் அங்கு சிங்கள மக்களை பதிவுசெய்து குடியேற்ற வேண்டும் என பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார்.
பொதுபல சேனாவின் தலைமையலுவலகமான சம்புத்தத்வ ஜயந்தியில் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
வடக்குத் தேர்தல் தேவையில்லை. அதனை நடத்துவதற்கு பொதுபல சேனா ஒருபோதும் அனுமதிக்காது. முதலில் அங்கு பெரும்பான்மை இனத்தவர்களாகிய சிங்கள மக்களை பதிவு செய்து குடியமர்த்த வேண்டும்.

இந்நிலையில் மாகாண சபை முறைமையை இல்லாதொழிக்க வேண்டும். நாட்டுப் பற்று இருந்தால் 13 ஆவது திருத்தத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஏனைய 8 மாகாண சபைகளிலும் அங்கம் வகிக்கும் உறுப்பினர்கள் அனைவரும் பதவியை இராஜினாமா செய்து மக்களுக்கு முன்மாதிரியாக திகழ வேண்டும்.
இதேவேளை, வடக்குத் தேர்தல் இடம்பெற்றால் அது தமிழீழத்திற்கு வழி வகுக்கும். இரண்டாவது பிரபாகரனாக மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் செயற்படுகின்றார்.
வட மாகாண சபைத் தேர்தலை நிறுத்துமாறு நாம் அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்து கடிதம் எழுதியுள்ளோம். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பொதுபல சேனா அனைத்து மக்களையும் ஒன்றுதிரட்டி வீதியில் இறங்கி போராடும் என அவர் மேலும் தெரிவித்தார்.   நன்றி வீரகேசரி 

(pics by : j.sujeewkumar)
செல்வராஜா கஜேந்திரனிடம் மீண்டும் யாழில் விசாரணை

22/05/2013 தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராஜா கஜேந்திரனிடம் மீண்டும் பயங்கரவாத குற்றத்தடுப்புப் பிரிவினர் இன்று விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
பயங்கரவாத குற்றத்தடுப்புப் பிரிவினரின் யாழ்.அலுவலகத்தில் இன்று நண்பகல் 12.30 மணியிலிருந்து பிற்பகல் 3.00 மணிவரை இந்த விசாரணைகள் இடம்பெற்றுள்ளன.
இவ் விசாரணை தொடர்பாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன் கருத்துத் தெரிவிக்கையில்,
பயங்கரவாத குற்றத்தடுப்புப் பிரிவினர் யாழ்ப்பாணம், நாவலர் வீதியிலுள்ள அவர்களுடைய அலுவலகத்திற்கு இன்று நண்பகல் 12.00 மணிக்கு என்னை வருமாறு அழைத்திருந்தனர். அதற்கமைய நானும் குறித்த நேரத்திற்கு அவ் அலுவலகத்திற்குச் சென்றிருந்தேன். என்னிடம் பயங்கரவாத குற்றத்தடுப்புப் பிரிவினர் கட்சியின் நடவடிக்கைகள் தொடர்பாக சுமார் மூன்று மணித்தியாலங்கள் விசாரணைகளை மேற்கொண்டனர். மேலும் பல்வேறு விடயங்கள் தொடர்பாகவும் என்னிடம் விசாரித்தனர் என்றார்.
கடந்த 18ஆம் திகதி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் மன்னாரில் நடைபெறவிருந்த முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தவர்களுக்கான அஞ்சலி நிகழ்வில் கலந்து கொள்வதற்காகச் சென்றபொழுது குறித்த கஜேந்திரன் உள்ளிட்டவர்களை பொலிஸார் கைது செய்து குற்றத்தடுப்பு பயங்கரவாதப் பிரிவினரிடம் ஒப்படைத்து விசாரணைகளை மேற்கொண்டிருந்தனர்.
இதன் தொடர்ச்சியாகவே இன்றும் விசாரணைகள் இடம்பெற்றதாகவும் இவ் விசாரணைகளின் பொழுது கட்சியின் செயற்பாடுகள் தொடர்பாகவும் கட்சியின் நிதி நிலைமைகள் தொடர்பாகவும் குற்றத் தடுப்புப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.    நன்றி வீரகேசரி 

பொதுபலசேனாவின் தலைமையகத்திற்கு வெளியே பிக்குமார் ஆர்ப்பாட்டம் - பெரும் பதற்றம்; பொலிஸார் தலையீடு

22/05/2013 பொதுபலசேனா அமைப்புக்கு எதிராக நேற்றுக் காலை பெளத்த பிக்குகள் குழுவொன்று ஆர்ப்பாட்டப் பேரணியொன்றை நடத்த முற்பட்டதைத் தொடர்ந்து தும்முல்லையில் அமைந்துள்ள பொதுபலசேனா தலைமையகக் காரியாலயத்திற்கு வெளியே பதற்ற நிலை ஏற்பட்டது.
மேற்படி எதிர்ப்புப் பேரணியை நடத்த முற்பட்ட பிக்குமாரை பொதுபலசேனா உறுப்பினர்கள் தூஷித்துக் கொண்டிருந்த அதே சமயம் ஆர்ப்பாட்டக்காரர்களைக் கலைப்பதற்கென பொலிஸார் வரவழைக்கபட்டிருந்தனர். தும்முல்லையில் அமைந்துள்ள பொதுபலசேனாவின் தலைமைக் காரியாலயத்திற்கு வெளியே கடந்த மாதம் நடத்தப்பட்டிருந்த மெழுகுவர்த்தி ஏந்திய அமைதிப் பேரணியை பொதுபலசேனா அமைப்பினர் பொலிஸாரின் உதவியுடன் தடுத்து நிறுத்தியிருந்தனர்.
ஏனைய சிறுபான்மையின மதங்களை நிந்திக்கும் உரைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கக் கோரி பிக்குகள் அடங்கிய சிறிய கூட்டத்தினர் பொதுபலசேனாவிடம் கேள்விக்கணை தொடுக்கும் பெளத்தர்கள் ’’ என்ற வாசகம் அடங்கிய பதாதையுடன் மேற்படி தலைமைக் காரியாலயத்திற்கு முன்பாக ஒன்று திரண்டிருந்தனர்.
எது எப்படியிருந்தபோதிலும் பொதுபலசேனாவின் நிறைவேற்று உறுப்பினர் டிலாந்த விதானகே பொதுபலசேனா ஆதரவாளர்கள் சிலருடன் மேற்படி கூட்டுத்தினரை நெருங்கி அவர்களை அங்கிருந்து கலைந்து செல்லுமாறு கோரினார்.
பொதுபலசேனாவுக்கு இதற்கு முன்னர் பலத்த பாதுகாப்பை வழங்கியிருந்த பொலிஸார் பின்னர்ஆர்ப்பாட்டக்காரர்களை அங்கிருந்து கலைந்து செல்லுமாறு பணித்தனர்       நன்றி வீரகேசரி 

 

 

 

 

தனி ஈழத்துக்கான வாக்கெடுப்பே வடமாகாணத் தேர்தல்:ஹெல உறுமய

- பி.பி.சி

champika-ranawakaஇலங்கையின் வட மாகாண சபைக்கான தேர்தல் எதிர்வரும் செப்டம்பர் மாதம் நடைபெறும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வெளிப்படையாக அறிவித்திருந்தாலும் அந்தத் தேர்தல் நடைபெறுமா என்று கேள்விக் குறிகளும் எழுந்துள்ளன.

ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் அமைச்சர் விமல் வீரவன்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணி, தேசப்பற்றுள்ள மக்கள் முன்னணியின் தலைவர் குண்தாச அமரசேகர ஆகியோர் இதற்கு முதலில் எதிர்ப்பு தெரிவிக்க ஆரம்பித்தனர்.

பின்னர் பௌத்த கடும்போக்கு அமைப்பு என்று கருதப்படும் பொதுபல சேனா எதிர்ப்பை வெளியிட்டது. இப்போது ஆட்சியில் அங்கம் வகிக்கும் ஜாதிக ஹெல உறுமயவும் இதை எதிர்க்கிறது.

மாகாண சபைகளை உருவாக்கி அவற்றுக்கு அதிகாரங்களை வழங்கும் அரசியல் சாசனத்தின் 13 ஆவது திருத்தம் இந்திய அழுத்தங்களின் காரணமாகவே கொண்டு வரப்பட்டது என்றும், உச்சநீதிமன்றத்தின் அனுமதியை பெறவில்லை என்றும் ஹெல உறுமயவின் தலைவரும அமைச்சருமான சம்பிக்க ரணவக்க இன்று கொழும்பில் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

இது அரசியல் சாசனத்தில் உள்ளது என்பதும் அரசுக்கு அதை அமல் செய்ய வேண்டிய கடப்பாடு உள்ளது என்பதும் உண்மை என்றும், சட்டத்தின்படி அது சரியென்றாலும் அதை நியாயப்படுத்த முடியாது எனவும் சம்பிக்க ரணவக்க கூறுகிறார்.

வடமாகாண சபைத் தேர்தலை தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் தமிழ் ஈழத்துக்கான ஒரு மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பாக பயனபடுத்தக் கூடும் எனவும் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் விரோத மனப்பான்மையை வளர்த்து, நாட்டை காப்பாற்றிய போர் வீரர்களை அவமானப்படுத்துகின்றனர் எனவும் ஹெல உறுமயவின் தலைவர் மேலும் தெரிவித்தார்.

பழையதைக் கிளறும் அவர்கள் நாட்டின் ஜனாதிபதியை போர்க்குற்ற நீதிமன்றங்களின் முன்னர் இழுக்க முயல்கிறார்கள் என்றும் குற்றஞ்சாட்டியுள்ளார் ரணவக்க.

ஆனால் அவரது இந்தக் கருத்துக்கள் எந்த வகையிலும் ஏற்புடையது அல்ல என்று இலங்கையின் பல தமிழ்க் கட்சிகளும், இடதுசாரி அமைப்புகளும் கூறியுள்ளன.

"நம்பகத்தன்மை கேள்விக்குறியாகிவிடும்" -மனோ கணேசன்

இந்தத் தேர்தலின் மூலமே இலங்கை அரசு தனது நம்பகத்தன்மையை நிலைநிறுத்த முடியும் என்று தமிழோசையிடம் கூறினார் ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன்.

தொடர்ச்சியாக வந்த இலங்கை அரசுகள் அதிகாரத்தைப் பகிர முன்வாரததுதான் இலங்கையில் இனப்பிரச்சினைக்கு வழி வகுத்தது என்றும் மனோ கனேசன் கூறுகிறார்.

வடமாகாண சபைக்கான தேர்தல்கள் நடத்தப்படும் என்று இலங்கை அரசு ஐ நா உட்பட சர்வதேச நாடுகள் மற்றும் அமைப்புகளுக்கு வாக்குறுதி அளித்துள்ளன என்பதையும் அவர் சுட்டிக்காட்டுகிறார். நன்றி தேனீ

 

 

 

 

இலங்கைக்கு சீனா மீண்டும் கடனுதவிகளை வழங்கத் தீர்மானம்

23/05/2013 இலங்கை அரசாங்கத்திற்கு சீனா மீண்டும் கடனுதவிகளை வழங்கத் தீர்மானித்துள்ளது. சீன அபிவிருத்தி வங்கி இலங்கைக்கு 580 மில்லியன் அமெரிக்க டொலர்களை கடனுதவியாக வழங்கவுள்ளது.
இந்தக் கடன் தொகையுடன் சீன அபிவிருத்தி வங்கி மொத்தமாக இலங்கைக்கு 1.4 பில்லியன் அமெரிக்க டொலர்களை கடனுதவியாக வழங்கியுள்ளது. முக்கியமான கீழ்கட்டுமான வசதிகளை மேம்படுத்துவதற்கு இந்த கடனுதவி பயன்படுத்தப்படவுள்ளது.

பாதை அபிவிருத்திக்கு 300 மில்லியன் டொலர்களும், நீர் வடிகாலமைப்புத் திட்டங்களுக்கு 200 மில்லியன் டொலர்களும், எஞ்சிய தொகை தேசிய வர்த்தக கல்வி நிறுவனத்தின் அபிவிருத்திக்காகவும் பயன்படுத்தப்படவுள்ளன.நன்றி வீரகேசரி

 

 

 

 

 

மத்தளயில் விமான நிலையத்துக்கு பதிலாக குளத்தை கட்டியிருக்கலாம்; பொது பலசேனா


23/05/2013 மத்தளயில் சர்வதேச விமான நிலையத்தை கட்டியதற்கு பதிலாக அங்கு குளம் ஒன்று கட்டியிருந்தால் மஹா பராக்கிரமபாகு போன்று ராஜபக்ஷ பெயரும் வரலாற்றில் பதிவாகியிருக்கும் என்று தெரிவித்துள்ள பொதுபலசேனா ஜனாதிபதியை சூழவுள்ள ஆலோசகர்கள் இவ்வகையான பயனற்ற திட்டங்களை ஜனாதிபதிக்கு கூறி மக்களின் நிதிக்கு ஆப்பு வைக்கக் கூடாது என்றும் அவ்வமைப்பு குறிப்பிட்டுள்ளது.
பொதுபலசேனாவின் தலைமையகத்தில் நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டின்போது மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டது.
இங்கு உரையாற்றிய அவ்வமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் கூறுகையில்,
ஜனாதிபதியை சூழவுள்ள ஆலோசகர்கள் புதுமையானவர்கள். விசித்திரமான ஆலோசனைகளை வழங்கி வருகின்றார்கள். உண்மையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு நான் ஆலோசகராக இருந்திருந்தால் நிச்சயம் மத்தளயில் விமான நிலையத்தை கட்ட அனுமதித்திருக்க மாட்டேன். மாறாக பராக்கிரம சமுத்திரம் போன்று பாரிய குளத்தை கட்டுமாறு வலியுறுத்தியிருப்பேன் எனக் கூறினார்.நன்றி வீரகேசரி