சிட்னியில் உலகத் தமிழ் மாநாடும் திருவள்ளுவர் சிலை திறப்பும்

கலாநிதி சந்திரிகா சுப்ரமண்யன்
( விழா மலர்க்குழு மற்றும் மக்கள் தொடர்பு சார்பாக  )
சிட்னியில் செப்டெம்பர் 2013 இல் உலகத் தமிழ் மாநாடு நடக்கவுள்ளது. அந் நிகழ்வின் போது திருவள்ளுவர் சிலை ஒன்று அமைக்கப்படவுள்ளது. உலகத்தமிழ் சங்கமும் , தமிழ் இலக்கிய கலை மன்றமும் இணைந்து இந் நிகழ்ச்சியில் வள்ளுவப் பெருந்தகையின்  ஏழு அடி உயரமுள்ள சிலை ஒன்றை சிட்னியில் நிறுவத் திட்டமிடப் பட்டுள்ளது.
இம்மாநாட்டின் முக்கிய நோக்கம் உலகளாவி பரந்து வழும் தமிழர்களை ஒன்றிணைத்து இளைய  தலைமுறைக்கு தமிழின் தொன்மையை, அதன் மகிமையை எடுத்துக் கூறுவதாகும்.அதன் ஒரு பகுதியாக , இடைக்காடர் , ‘கடுகைத்துளைத்து எழு கடலைப் புகுத்தி குறுகத்தறித்த குறள் ‘என்று அளவிற் சிறிய அதிசயம் என வியந்த திருகுறளை மேன்மை படுத்தி ஐயன் வள்ளுவனைப்  பணிந்து வியந்து வணங்கும் முகமாக திருவள்ளுவர் சிலை அமைக்கப் பட உள்ளது.
இந்த நிகழ்ச்சியில் முழுமுயற்சியாக ஈடு பட்டுள்ள தமிழ் இலக்கிய கலை மன்றத்தை சேர்ந்த , திரு மகேந்திரன், இம் மாபெரும் விழாவில் கருத்தரங்கு, கவியரங்கு, ஆய்வரங்கு, இசை அரங்கு, நடன அரங்கு, தமிழின் தொன்மையையும் , பெருமையையும்  எடுத்து இயம்பும் கண்காட்சி ஆகிய முத்தமிழ் அம்சங்களும் இடம் பெறும்’ எனத் தெரிவித்தார்.


இவ் விழாவினை சிறப்பிக்கும் முகமாக வெளி நாடுகளிலிருந்து வரும் சுமார் ஐம்பதுக்கும் மேற்பட்ட தமிழ் அறிஞர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்க இருக்கின்றார்கள். கலைஞர்கள், தமிழ் பேராசிரியர்கள், இசைவாணர்கள் போன்ற பல்துறை முத்தமிழ் வித்தகர்கள் சிட்னியல் கூடி, ஊர் கூடி தேர் இழுக்கும் இந்த தமிழ் தொண்டை செய்ய இருக்கின்றனர்.
‘மெல்லத் தமிழினிச் சாகும்-. அந்த மேற்குமொழிகள் புவிமிசையோங்கும்’ என்று மகாகவி பாரதியின் கவலை நீக்கி ‘இதோ ஒரு யுகப் புரட்சி’,  எழுந்தோம் , விழித்தோம், தமிழினை வளர்ப்போம் என்று ஒரு எழுச்சி மாநாடாக இந்த விழாவினை  நடத்த இவ் விழாக் குழு திட்டமிட்டுள்ளது.

உள்ளுர் அறிஞர்களும், கலைஞர்களும், தமிழ் ஆன்றோர்களும் பங்கேற்கும் இவ் விழாவில் ‘தமிழ்  இளைஞர்களிடையே தமிழின் சிறப்பை, பண்பாட்டை, தமிழர்களின் வாழ்வியல் மாண்பை’ கொண்டு சேர்ப்பதே நோக்கமாகும். தமிழரென்ற அடையளாத்துடன் பெருமிதத்துடன் கலந்து கொள்ள அனைவரையும், உலகத்தமிழ் சங்கமும் , தமிழ் இலக்கிய கலை மன்றமும் இணைந்து வரவேற்கின்றன.
யாழ்ப்பாணம் கரம்பனில் 02-08-1913 ஆண்டு பிறந்த தனிநாயகம்  அடிகள் என மக்களால் அறியப்பட்ட சேவியர் ஸ்தனிஸ்லாஸ் தனிநாயகம் அவர்களின் முயற்சியாலே தமிழ் ஆராய்ச்சிக் கழகம் தோற்றம் பெற்றது. முதல் உலகத் தமிழ் மாநாடு நடத்தப் பட்டது. பின்னர் தமிழக் மக்கள் பலமுறை உலகத் தமிழ் மாநாடுகளை நடத்தினர்.இந்த ஆண்டு சிட்னிக்கு அத்தகைய ஒரு வாய்ப்புக் கிட்டியுள்ளது நமக்கெல்லாம் மிகப் பெருமையாகும்.
இவ்விழாவினை  ஒட்டி விழா மலர் ஒன்று வெளியிடப் பட்டுள்ளது. ஆய்வுக் கட்டுரைகளை அனுப்பி பங்களிக்க விரும்பும் தமிழ் நண்பர்கள் கட்டுரைகளை ஜூன் 30 ஆம் தேதிக்குள் (lawyer.chandrika@gmail.com) மின்னஞ்சலுக்கு அனுப்பவும்.
ஆலோசனை  வழங்க விரும்புவோர்  P O Box 96, Regents Park, NSW 2143,  அல்லது (lawyer.chandrika@gmail.com) மின்னஞ்சலுக்கு அனுப்பவும்
திங்களொடும் செழும்பரிதி தன்னோடும் விண்ணோடும் உடுக்களோடும்,மங்குல் கடல் இவற்றோடும் பிறந்த தமிழுடன் பிறந்தோம் நாங்கள்.’ என்ற பாரதிதாசன் பாடல் வரிக்கமைய தமிழ் முழங்க சிட்னியில் இடம் பிடிப்போம்.தமிழ் தாயின் திருத்தேரின் வடம் பிடிப்போம்.
துடிப்புள்ள இளையவர் உழைப்பினைத் தருக.
முது தமிழறிஞர்கள் அறிவுரை தருக.
ஆர்வமுள்ள அனைவரும் வருகை தருக.

தமிழால் இணைவோம் ! தமிழை நுகர்வோம்!!
கரம் கோர்ப்போம்! தமிழ் வளர்ப்போம்!!
கட்டுரை விதி முறைகள்

·        கொடுக்கப் பட்டுள்ள தலைப்புகளுக்குள் ஒன்றாக அடங்க வேண்டும்.

·        அரசியல்,  இன உணர்வு தூண்டும் கட்டுரைகள் மறுதலிக்கப் படும்.

·        கட்டுரைகளின் தரம், அடங்கல், எழுத்து ஆகியவை நடுவர் குழு பரிந்துரைக்கு ஏற்புடையதாக இருக்க வேண்டும்.

·        நடுவர்களின் முடிவே கட்டுரை பிரசுரமாவதை  தீர்மானிக்கும்.

·        A 4 -5 பக்கங்களுக்கு மிகை படாமல்.

·        12 அளவு ஒற்றை குறீயீட்டு எழுத்துரு.(Unicode).

·        மின்னஞ்சலில் உடல் பகுதியில் ஒட்டி அனுப்பவும். இணைப்பாக அனுப்ப வேண்டாம்.

·        கட்டுரைகளின் கருத்துக்கள்  படைப்பாளியின் பொறுப்பாகும்.

·        நடுவர்களின் பார்வையில் கட்டுரைகளின் கருத்துக்களில் சில பகுதிகள் அகற்றப் பட வேண்டும் எனப் பட்டால் அகற்ற வேண்டியது  படைப்பாளியின் பொறுப்பாகும்.

·        கட்டுரைகள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் 30.06.2013

கட்டுரைத் தலைப்பு கீழ் கண்ட பரந்த தலைப்புகளை சார்ந்த  ஏதாவது ஒன்றின் கீழ் இருக்கலாம்.

·        சங்கத் தமிழ் பாடி தமிழர் புகழ் வளர்ப்போம்
·        இலக்கியங்களில் சிறந்தது தமிழ் இலக்கியங்கள்
·        தமிழர் வரலாற்றை இளம் தலை முறையினருக்கு…….
·        தமிழர் வரலாறு
·        சங்க இலக்கியங்களில் சிறப்பியல்
·        சங்க காலம் காட்டும் தமிழரின் வளம்
·        யாமறிந்த மொழியே தமிழ்
·        தொன்மையான  மொழி தமிழே!
·        புலம் பெயர்ந்தோர் வாழ்வில் தமிழ்
·        சங்க கால போர் முறைகள்
·        தமிழ் மொழி செம்மொழியே…
·        இலங்கைத் தமிழர் வரலாறு
·        சிந்து வெளீ நாகரிகத்தில் தமிழர்
·        தமிழின் நவீனத்துவம்
·        கணனித் தமிழ்