உ
சிற்சபையோன் அடிக்கமலச் சீர்த்திறம் பாடிடச் சித்திரத்தேர் ஏறினையோ? சாந்தி! சாந்தி!!
தீந்தமிழின் இனிமையெலாம் தெவிட்டிடா தென்றும்
சிந்தைதனில் மலர்ந்தினிக்கச் செய்த தீரா!
வேந்தனென இசையுலகில் ஐபத் தாண்டு
விருந்துவைத்த பெற்றியெலாம் பேசப் போமோ?
சேந்தனுன்றன் மதுரகானம் தினமும் மாந்தத்
திருவடியிற் சேர்த்தனனோ சாந்தி பெற்றாய்!
ஏந்தலுனக் கென்றும்பிரி வில்லை எங்கள்
இதயமதில் இசையாய்நீ என்றும் வாழ்வாய்!
அற்புதமாய் இராகங்கள் நான்கும் கொஞ்ச
அமரர்வீ ரமணிஐயர் இயற்றிப் போந்த
“கற்பகவல் லி”யின்பொற்பதம்” பாடியே மெல்லிசைக்
கலைக்குமகுடஞ் சூட்டியென்றோ கவினச் செய்தாய்!;
இற்றைவரை இசைவேந்தே சௌந்தர ராஜனுன்
இன்னிசையில் இன்புற்றோர் கோடி அன்றோ?
சிற்சபையோன் அடிக்கமலச் சீர்த்திறம் பாடிடச்
சித்திரத்தேர் ஏறினையோ? சாந்தி! சாந்தி!!
பல்வைத்திய கலாநிதி இளமுருகனார் பாரதி.
சிட்னி - அவுஸ்திரேலியா.