உலகச் செய்திகள்

.
அமெரிக்காவில் பேரழிவு: சுழல் காற்றினால் 91 பேர் பலி!

சவுதியில் உளவு பார்த்த ஈரானியர்கள் கைது!

லண்டன் வீதியில் பட்டப் பகலில் துணிகரம்: ராணுவ வீரர் தலை துண்டித்து படுகொலை

ஸ்வீடனில் கலவரம்!

ஈரானில் இருவருக்கு தூக்கு!

பயங்கரவாதத்தை ஒருபோதும் அனுமதிக்க முடியாது: டேவிட் கேமரூன்

லண்டனில் பயங்கரவாத தாக்குதல் ; பிரிட்டன் ராணுவ வீரரை கழுத்தறுத்து கொன்ற தீவிரவாதிகள்
==============================================================
அமெரிக்காவில் பேரழிவு: சுழல் காற்றினால் 91 பேர் பலி!
21/05/2013 அமெரிக்க மாநிலமான ஒக்லஹொமாவை நேற்று தாக்கிய சுழல் காற்று காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 91 ஆக உயர்ந்துள்ளது.


ஒக்லஹொமா நகரின் மூர் பகுதியில் சிறுவர் பள்ளியொன்றை சுழல் காற்று தாக்கியதில் 24 குழந்தைகள் பலியாகியுள்ளதாக அஞ்சப்படுவதுடன் இடிபாடுகளுக்குள் இருந்து இதுவரை 7 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.


இதேவேளை இவ் அனர்த்தத்தில் காயமடைந்த 150 இற்கும் அதிகமானோர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதனை ஒபாமா மிகப்பெரிய இயற்கை அனர்த்தமாக அறிவித்துள்ளார்.

ஒக்லஹொமா நகர் சுழல் காற்றினால் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது.
நூற்றுக்கணக்கான வீடுகள் காற்றினானால் தரைமட்டமாகியுள்ளதுடன், மின்சார துண்டிப்பால் பல்லாயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு 200 மீற்றருக்கும் அதிகமாக இருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ளதுடன் வாகனங்களும் தூக்கி வீசப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
மாநில தலைநகரிலிருந்து 55 கிலோமீற்றர் தொலைவிலுள்ள ஷவ்னீ நகருக்கு அண்மையில் ஞாயிற்றுக்கிழமை சுழல் காற்றால் கடும் சேதம் ஏற்பட்டுள்ளது.

அம் மாநிலத்திலுள்ள 16 நகரங்களில் சுழல் காற்றையொட்டி அவசரகால நிலைமை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
குறிப்பாக மூர் நகரம் பெரும் சேதங்களுக்கு உள்ளாகியுள்ளது. அங்கிருந்து 51 மரணங்களும் பதிவாகியுள்ளன.

இந்நிலையில் அங்குள்ள வைத்தியசாலையொன்றில் கொள்ளைச் சம்பவமொன்றும் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அங்கு தொடர்ந்தும் மீட்புப் பணிகள் இடம்பெற்று வருவதால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகின்றது.
இதேவேளை உயிரிழந்தோர் மற்றும் சேத விபரங்கள் தொடர்பாக வேறுபட்ட தகவல்கள் அந்நாட்டு ஊடகங்களில் இருந்து வெளியாகிய வண்ணமுள்ளன.
இதுவரை 91 பேர்வரை இவ் அனர்த்தத்தினால் உயிரிழந்துள்ளதாக வேறு சில தகவல்கள் தெரிவிக்கின்றன.    நன்றி வீரகேசரி   சவுதியில் உளவு பார்த்த ஈரானியர்கள் கைது!


22/05/2013  சவுதியில், ஈரானுக்காக உளவு பார்த்ததாக கூறி 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு உள்நாட்டலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் 8 பேர் சவுதியைச் சேர்ந்தவர்கள் எனவும் மற்றைய இருவரில் ஒருவர் லெபனானையும், துருக்கியையும் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
இவர்களுடன் சேர்த்து கடந்த 2 மாதங்களில் மாத்திரம் மொத்தம் 28 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த மார்ச் மாதம் 19 ஆம் திகதி சவுதியைச் சேர்ந்த 16 பேர், ஈரானைச் சேர்ந்த ஒருவர் மற்றும் லெபனானைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டனர்.
இதுவரை நடத்தப்பட்ட விசாரணைகளிலிருந்து இவர்கள் அனைவரும் ஈரானின் புலனாய்வு அமைப்பினருடன் தொடர்புபட்டவர்கள் எனத் தெரியவந்துள்ளதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.

சவுதி மட்டும் ஈரான் இடையேயான உறவுகள் நீண்ட நாட்களாக சுமூகமான நிலையில் இல்லையென்பதும் குறிப்பிடத்தக்கது.      நன்றி வீரகேசரி  


லண்டன் வீதியில் பட்டப் பகலில் துணிகரம்: ராணுவ வீரர் தலை துண்டித்து படுகொலை
Londonmurder22/05/2013 லண்டன் நகரின் உல்விச் வீதியில் ராணுவ வீரர்களின் பாசறை பகுதி ஒன்றுள்ளது. இப்பகுதியின் சாலை வழியே வந்துக்கொண்ருந்த ராணுவ வீரரை வழிமறித்த இருவர் அரிவாளால் அவரது தலையை துண்டித்து வெட்டிக் கொன்றனர். ரத்த வெள்ளத்தில் துடிதுடித்த ராணுவ வீரர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த படுகொலையை செய்துவிட்டு தப்பியோட முயன்ற 2 பேரை போலீசார் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனர். குண்டு காயங்களுடன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ள அவர்களின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது. இந்த படுகொலை இஸ்லாமிய தீவிரவாத தாக்குதலாக இருக்கலாம் என போலீசார் கூறுகின்றனர். இச்சம்பவம் பற்றிய தகவல் அறிந்த இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன், போலீஸ் உயர் அதிகாரிகளின் அவசர ஆலோசனை கூட்டத்தை கூட்டியுள்ளார். இந்த படுகொலையின் தொடர்ச்சியாக லண்டனில் வசிக்கும் சிறுபான்மை இனத்தவருக்கான பாதுகாப்பை பலப்படுத்த போலீசாருக்கு உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
நன்றி தேனீ ஸ்வீடனில் கலவரம்!


23/05/2013 ஸ்வீடன் நாட்டில் வரலாறு காணாத அளவிற்கு வன்முறைக் கலவரங்கள் நடைபெற்றுள்ளன.
தலைநகர் ஸ்டாக்ஹோமின் அருகில் உள்ள ஏழ்மையான குடியேற்ற மக்கள் வசிக்கும் புறநகர் பகுதிகளில் நூற்றுக்கணக்கான இளைஞர்கள்ப்கார்களைத் தீயிட்டுக் கொளுத்தியும், காவல்துறையினரையும், மீட்புப் பணிக்கு வந்தவர்களைத் தாக்கியும் மூன்று இரவுகளாக வன்முறைக் கலவரங்களில் ஈடுபட்டனர்.
செவ்வாய் அன்று இரவு ஜாகொப்ஸ்பர்கில் உள்ள காவல்நிலையம் இளைஞர்களால் தாக்கப்பட்டது. இரண்டு பள்ளிகள் சேதப்படுத்தப்பட்டன.

பிரதமர் பிரெட்ரிக் ரெயின்பெல்ட் அமைதி காக்குமாறு கோரிக்கை விடுத்தும்கூட, கலைப்பொருட்கள் விற்பனை மையம் ஒன்று எரிக்கப்பட்டது. 30 கார்களுக்கு மேல் தீயிட்டுக் கொளுத்தப்பட்டன.
இத்தகைய வன்முறைகள் உலகின் பணக்கார நகரங்களுள் ஒன்றாகக் கருதப்படும் ஸ்டாக்ஹோமில் நடைபெற்றமை நாட்டையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.   நன்றி வீரகேசரி  

 


ஈரானில் இருவருக்கு தூக்கு!

20/05/2013 இஸ்ரேலின் மொஷாட் மற்றும் அமெரிக்காவின் சி.ஐ.ஏ.  புலனாய்வு அமைப்புகளுக்கு உளவு பார்த்த குற்றச்சாட்டின் பேரில் இரண்டு பேருக்கு ஈரானில் மரணதண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
பணத்திற்காக ஈரானிய இரகசியங்களை இஸ்ரேலின் மொஷாட் அமைப்புக்கு வழங்கியதாகக் கூறி மொஹமட் ஹேதாரி என்பவரும் அமெரிக்க சி.ஐ.ஏ. விற்கு தகவல்களை வழங்கியதாக சந்தேகிக்கப்படும் குரோஷ் அஹமடி என்பவருமே தூக்கிலிடப்பட்டுள்ளனர்.
இத்தகவலை ஈரானின் தேசிய வானொலிச் சேவையே வெளியிட்டுள்ளது.
எனினும் இவர்கள் எப்போது கைதுசெய்யப்பட்டனர் என்ற தகவல் இதுவரை வெளியாகவில்லை.
தமது அணுச்செறிவாக்கல் மற்றும் இராணுவ இரகசியங்களை அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் பல வருடங்களாக உளவுபார்க்க முயன்று வருவதாக ஈரான் தொடர்ச்சியாக குற்றஞ்சாட்டி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.  நன்றி வீரகேசரி 
பயங்கரவாதத்தை ஒருபோதும் அனுமதிக்க முடியாது: டேவிட் கேமரூன்
பயங்கரவாதத்தை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன் வியாழக்கிழமை தெரிவித்துள்ளார். பிரிட்டன் தலைநகர் லண்டனில் புதன்கிழமை நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் ராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்தார். இதில், ஈடுபட்ட பயங்கரவாதிகள் இருவரும் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் பாதுகாப்பு நிலை குறித்து ஆராய அவசர கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்துக்குப்பின் செய்தியாளர்களைச் சந்தித்த டேவிட் கேமரூன் கூறியதாவது: பயங்கரவாதம் எந்த வடிவில் வந்தாலும் அதனை அனுமதிக்க முடியாது. புதன்கிழமை நடைபெற்ற தாக்குதல் பிரிட்டன் மீது நடத்தப்பட்ட தாக்குதல்;  இஸ்லாம் மதத்துக்கு இழைக்கப்பட்ட துரோகம். இத்தாக்குதல் பிரிட்டன் மக்களை மிகவும் பாதித்துள்ளது என்று தெரிவித்தார். இது குறித்து பயங்கரவாதத்துக்கு எதிரான போலீஸார் பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர். தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளில் ஒருவர் மைக்கேல் எடிபோலஜா (28) என்று தெரிய வந்துள்ளது. "பிரிட்டன் ராணுவத்தினரால் முஸ்லிம் மக்கள் ஒவ்வொரு நாளும் கொல்லப்பட்டு வருகின்றனர். அதற்குப் பழிவாங்கவே இத்தாக்குதலை நடத்தினேன்' என்று தாக்குதலுக்குப்பின் எடிபோலஜா தெரிவித்துள்ளார். தாக்குதலின்போது பயங்கரவாதிகளிடம் பேசிய லயாவ் கென்னட் என்ற பெண்ணை, தைரியமானவர் என்று டேவிட் கேமரூன் பாராட்டியுள்ளார். "பயங்கரவாதிகளில் ஒருவர், மீண்டும் போர் வெடிக்க வேண்டும் என்று கூறியபோது, அவ்வாறு தொடங்கினால் நீங்கள்தான் தோல்வியடைவீர் என்று கென்னட் தைரியமாகக் கூறியுள்ளார். அவர் பிரிட்டன் மக்களுக்காகப் பேசியுள்ளார்' என்றும் அவர் தெரிவித்தார். நன்றி தேனீ


லண்டனில் பயங்கரவாத தாக்குதல் ; பிரிட்டன் ராணுவ வீரரை கழுத்தறுத்து கொன்ற தீவிரவாதிகள்
woolwichலண்டன்: 24/05/2013 ஆப்கனில் முஸ்லிம்கள் கொல்லப்படுவதற்கு கண்டனம் தெரிவித்து, லண்டன் நகரில், அப்பாவி ராணுவ வீரர் ஒருவரை, பயங்கரவாதிகள் இருவர், கழுத்தறுத்து கொன்ற கொடூரம் நிகழ்ந்துள்ளது. அந்த கொலைகாரர்களுடன் பேச்சு கொடுத்து, அவர்களை தடுத்து நிறுத்திய வீரப்பெண்ணுக்கு, பலரும் பாராட்டு தெரிவித்தனர். பிரிட்டனின் தென் கிழக்கு பகுதியில், ஊல்விச் என்ற இடத்தில், ராணுவ முகாம் உள்ளது. ராணுவத்தில் பணியாற்றும் வீரர் ஒருவர், நேற்று முன்தினம், முழு சீருடையில், முகாம் அருகே, காரில் சென்று கொண்டிருந்தார்.

அந்த காரை, இரு இளைஞர்கள் தடுத்து நிறுத்தினர். சாலையில் பலர் சென்று கொண்டிருந்த நிலையில், காரில் இருந்த ராணுவ வீரர், என்ன, ஏது என கேட்கும் போதே, அவரை கீழே இழுத்து போட்ட அந்த நபர்கள், ஆட்டின் கழுத்தை நறுக்குவது போல, வீரரின் கழுத்தை அறுத்துக் கொன்றனர். நடப்பது சினிமா படப்பிடிப்பாக இருக்கலாம் என, அந்த சாலையில் சென்று கொண்டிருந்தவர்கள் கருதினர். ஆனால், கழுத்தறுக்கப்பட்ட ராணுவ வீரர், ரத்த வெள்ளத்தில் மிதந்ததைப் பார்த்ததும், அலறினர். முதலுதவி ; இங்கிரிட் லோயா - கென்னட் என்ற பெண், ஓடிச் சென்று, கழுத்தறுபட்ட ராணுவ வீரரை தூக்கி, மடியில் கிடத்தி, உயிரைக் காப்பாற்ற, முதலுதவி சிகிச்சை அளிக்க முற்பட்டார்.

இதனால், கோபம் கொண்ட அந்த இரு இளைஞர்களும், அவளை தாக்க முற்பட்டனர். ரத்தம் சொட்டும் கத்திகளுடன், அவர்கள், அந்தப் பெண்ணை அணுகினர். அவர்களைக் கண்ட, இங்கிரிட் லோயா, ""நீங்கள் செய்தது படுகொலை; எதற்காக இப்படிச் செய்தீர்கள்?'' என, கோபமாக கேட்டார். ""இவன், ஆப்கன் சென்று, அப்பாவி முஸ்லிம்களைக் கொன்று குவித்தவன். அவனை பழிவாங்கவே இவ்வாறு செய்தோம். பல்லுக்குப் பல்; கண்ணுக்குக் கண்,'' என, கத்தினர். இவ்வாறு, லோயாவுக்கும், பயங்கரவாதிகள் இருவருக்கும், கோபாவேசமாக பேச்சு நடந்து கொண்டிருந்தபோது, தைரியம் அடைந்த சிலர், அந்த இளைஞர்களை சுற்றி வளைத்தனர். அதே நேரத்தில், சிலர், போலீசுக்கும் தகவல் கொடுத்தனர்.

சுற்றி வளைத்தவர்களை நோக்கி, ரிவால்வரை நீட்டிய இளைஞர்கள், சுட்டு விடுவதாக மிரட்டினர். தகவல் அறிந்து, அங்கு வந்த போலீசார், நிலைமையை சட்டென புரிந்து, ரத்தம் சொட்டும் கத்தியுடன் நின்றிருந்த இரு இளைஞர்களையும், காலில் சுட்டு, கீழே வீழ்த்தினர். உடனடியாக பாய்ந்து, கை விலங்கிட்டு, அவர்களை வேனில் ஏற்றிச் சென்றனர்.

ஏராளமான ரத்தம் வெளியேறியதால், கழுத்தறுபட்ட ராணுவ வீரர், அந்த இடத்திலேயே இறந்தார். துப்பாக்கி குண்டுகள் பாய்ந்ததால், படுகாயமடைந்த பயங்கரவாதிகள் இருவரும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

பிரதமர் திரும்பினார் ; சம்பவம் பற்றி அறிந்ததும், பிரான்ஸ் தலைநகர் பாரீசில் இருந்த, பிரிட்டன் பிரதமர், டேவிட் கேமரூன், தன் நிகழ்ச்சிகளை ஒத்திவைத்துவிட்டு, லண்டன் திரும்பினார். "கோப்ரா' என்ற பெயரிலான, உயர் மட்ட அவசர நிலை கூட்டத்தைக் கூட்டி, நிலைமை குறித்து விவாதித்தார். இதையடுத்து, பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டன. ராணுவ முகாம்களுக்கும், ராணுவ கட்டடங்களுக்கும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது; மசூதிகள் மற்றும் முஸ்லிம்கள் கூடும் இடங்களுக்கும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது.

"ராணுவ வீரர் படுகொலை செய்யப்பட்டது, பயங்கரவாத தாக்குதல் சம்பவம்' என, பிரதமர், டேவிட் கேமரூன் அறிவித்ததும், லண்டனில் சில இடங்களில், முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்கள் நடந்தன. மசூதிக்குள் கத்தியுடன் நுழைந்தவர் மற்றும், பதிலுக்குப் பதில், வன்முறையில் ஈடுபட திட்டமிட்ட மற்றொருவர் என, இருவர் கைது செய்யப்பட்டனர்.

லோயாவுக்கு நன்றி ; பயங்கரவாதிகளிடம் பேச்சு கொடுத்து, அவர்கள் தப்பாமல் தடுத்து நிறுத்திய, இங்கிரிட் லோயாவுக்கு, பலரும் பாராட்டு தெரிவித்தனர். அவரால் தான், மேலும் சில வீரர்கள் படுகொலையில் இருந்து தப்பினர் எனக் கூறி, நன்றி கூறினர்.

இது குறித்து லோயா கூறும் போது, ""நான் முன்னர், நர்சாக பணியாற்றியுள்ளேன் என்பதால், முதலுதவி சிகிச்சை அளிக்க முற்பட்டேன். என்னை அவர்கள் தடுக்க முற்பட்ட போது, அவர்களுடன் கோபமாக பேசி, அவர்கள் கவனத்தை திசை திருப்பினேன். அவர்கள் வசம், ரிவால்வர் போன்ற ஆயுதங்கள் இருந்ததை பார்த்த நான், அவர்கள் கவனத்தை திசை திருப்புவதற்காக, தொடர்ந்து பேச்சு கொடுத்தேன்.

இல்லையேல், அவர்கள் பலரை சுட்டுக் கொன்றிருப்பர்,'' என்றார். அமெரிக்காவுடன் இணைந்து, பிரிட்டன் ராணுவம், ஆப்கன் மற்றும் ஈராக்கில் தீவிரவாதிகள் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபடுவதை கண்டித்து, 2005ம் ஆண்டு, பிரிட்டனில், தற்கொலைப் படை தாக்குதல் நடத்தப்பட்டது. அதற்குப் பிறகு, எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு, இப்போது தான், மீண்டும் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
நன்றி தேனீ