ஊருக்குப்புதுசு சென்னையிலிருந்து முருகபூபதி
இயற்கைக்கு இரக்கமே இல்லையா என்று நினைக்கத்தோன்றுகிறது. நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் என்பன பஞ்சபூதங்கள் என்கிறார்கள். சர்வதேசப்புகழ்பெற்ற இந்திய திரைப்பட இயக்குநர் தீபா மேத்தா
Earth, Fire, Water ஆகிய படங்களை எடுத்தார். அதனால் பல வேதனைகளையும் சோதனைகளையும் சந்தித்தார்; அதனால்தானோ என்னவோ, அவர் காற்று, ஆகாயம் தொடர்பாக இன்னமும் படம் எடுக்கவில்லையோ என்று யோசிக்கவைக்கிறது.
இயற்கையை தெய்வமாக வழிபடும் மக்கள் அன்றும் இருந்தார்கள். இப்பொழுதும் இருக்கிறார்கள். ஆனால் இயற்கையும் அதனைப்படைத்த கடவுளைப்போன்று மக்களை சோதனைக்கும் வேதனைக்கும் தள்ளிக்கொண்டுதான் இருக்கிறது.
இயற்கையை வழிபட்ட இலட்சக்கணக்கான ருஷ்ய மக்களை ஜார் மன்னன் நடுகடத்த முற்பட்டபோது அவர்கள் கனடாவில் கியூபெக் மாநிலத்துக்கு கப்பலில் சென்றார்கள். அவர்களின் போக்குவரத்து செலவுக்காக லியோ டோல்ஸ்ரோய் புத்துயிர்ப்பு நாவலை எழுதி வெளியிட்டு அதில் கிடைத்த பணத்தைக்கொடுத்தாராம்.


இயற்கையை வணங்கினாலும் தண்டனை. இயற்கையும் தண்டனைதான்.

எதிர்பாரதவிதமாக கடந்த மாதம் (மே 2013) மீண்டும் சென்னைக்கு வரநேர்ந்தது. கடந்த பெப்ரவரி மாதம்தான் இங்கு வந்து திரும்பியிருந்தேன். அந்தக்களைப்பு நீங்குமுன்பே இந்த எதிர்பாராத பயணம். தமிழகத்தை சூரியபகவான் இரக்கமின்றி சுட்டெரிக்கின்றார். ஆனால் மதுரையை எரித்த கண்ணகிபோன்று சென்னையை அவர் எரிக்கவில்லை என்பது மாத்திரமே ஆறுதல்.
கத்திரி வெய்யில் என்று வர்ணிக்கப்படும் இந்த கோடைகாலத்தில் பாடசாலைகளுக்கு விடுமுறை. அவுஸ்திரேலியாவில் குளிர்காலம் தொடங்கிவிட்டது. அந்தக்குளிரின் கொடுமையிலிருந்து தப்பிவந்து வெய்யிலின் கொடுமைக்குள் சிக்கியவாறு இதனை பதிவுசெய்கின்றேன்.
இங்கு  மின்வெட்டும் வந்து மக்களை சோதனைக்குள்ளாக்குகிறது. இயற்கையை மனிதன் வஞ்சித்து சூழலை கெடுத்தான். இயற்கை பழிக்குப்பழி வாங்குகிறது. பருவகால மழைபொய்த்துவிட்டால் விவசாயிகள் வாழ்வும் பொய்த்துவிடுகிறது. வரட்சியினால் நிவராண உதவி வழங்கப்படுவதிலும் அரசுகளுக்கும் எதிர்க்கட்சிகளுக்கும் இடையே ஒத்த கருத்து இல்லை. பாதிக்கப்பட்ட ஏழை விவசாயி தற்கொலை செய்துகொள்ளும் சம்பவங்களும் தொடர்கின்றன.
எனது அக்கா மகனின் திருமணத்திற்காக வந்த இந்தப்பயணத்தில் கத்தரிவெய்யிலின் சோதனைக்குள்ளாகியிருந்தபோது குடும்பத்தினரும் உறவினர்களும் மற்றுமொரு சோதனைக்கும் உள்ளாக்கினார்கள்.
சென்னையில் இடம், வலம் தெரியாத அவர்கள் தங்கள் அனைவரையும் பாண்டிபஜாருக்கு மணமக்களுக்கும் தமக்கும் தேவைப்பட்ட உடுபுடவைகள் வாங்குவதற்கு அழைத்துச்செல்லுமாறு கேட்டுக்கொண்டார்கள்.
திருமணவைபவங்கள், பிறந்தநாள் மற்றும் விருந்தினர் ஒன்றுகூடல்கள், மரணச்சடங்குகள். குடும்ப நண்பர்களின் வீடுகளுக்கான விஜயம், ஆலயதரிசனங்கள். இலக்கிய நிகழ்வுகள் முதலானவற்றுக்கு மாத்திரமே மனைவியுடன் இணைந்துகொள்வேன். முடிந்தவரையில் தவிர்ப்பது மனைவியுடனான ஷொப்பிங். அதற்கு மாத்திரம் எனக்கு பொறுமை இல்லை. இந்தத்துன்பத்தை ஒருநாள் கனடாவில் வதியும் இலக்கிய நண்பர் அ. முத்துலிங்கத்திடம் அழாக்குறையாகச்சொன்னேன்.
அவரும் இத்தகைய துன்பங்களுக்கு ஆளாகியிருக்கவேண்டும். அவர் தனது அனுபவத்தைப்பகிர்ந்தார்.
மனைவியுடன் ஷொப்பிங் புறப்படும்பொழுது, குறிப்பிட்ட ஷொப்பிங்சென்டருக்குள் நுழைந்த மறுகணம் அவர் அந்தக்கட்டிடத்தொகுதியில் அமைந்துள்ள ஏதாவது ஒரு தியேட்டருக்குள் நுழைந்துவிடுவாராம். திரைப்படம் சுமார் இரண்டரை மணிநேரம் ஓடும். அந்த நேரம் மனைவிக்கு ஷொப்பிங் செய்வதற்கு போதுமானது என்பது அவரது நம்பிக்கையாம்.
நானும் அதனை பின்பற்றத்தொடங்கினேன். அடிக்கடி மனைவி ஷொப்பிங் புறப்பட்டால் தியேட்டர்காரனும் அடிக்கடி படங்களை எனக்காக மாற்றவா முடியும். அதனால் கையோடு ஒரு நூலையும் எடுத்துச்செல்வேன். சுமார் நூறு பக்கங்கள் முடிவடைதற்குள் மனைவி வந்துவிட்டால் எனக்கு வாசிப்பு அனுபவத்தில் சிறு நட்டம் ஏற்பட்டாலும் பொருளாதாரத்தில் ஏற்படும் நட்டம் குறைவாகத்தான் இருக்கும்.
இப்படி சிந்திக்கும் எனக்கு, அன்று சென்னை பாண்டிபஜாருக்குள் நுழைந்தபோது தனுஷ் -நயன்தாரா நடித்த யாரடி நீ மோகினி படம்தான் நினைவுக்கு வந்தது. அதில் தனுஷ், நயன்தாரா குடும்பத்தினர் அனைவரையும் கிராமத்திலிருந்து ஒரு வாகனத்தில் அழைத்துக்கொண்டு பட்டினத்துக்கு உடுபுடவைகள் எடுப்பதற்கு செல்லுவார். 
அங்கே அவருக்கு முன்பே மனைவி மக்களுடன் புடவைகள் வாங்க வந்தவர்கள் பாய்தலையணைகளுடன் காட்சிதருவார்கள். ஒருவர் பல்துலக்கிக்கொண்டு நேற்றிலிருந்து இங்குதானய்யா நிக்கிறேன் என்று மூக்கால் அழுவார். நான் மிகவும் ரசித்த காட்சி.
அந்த நிலைமை இங்கு எனக்கும் ஆகிவிடக்கூடாது என்று நிபந்தனை விதித்துவிட்டு அவர்கள் அனைவரையும் இங்கு பிரபலமான குமரன் சில்க்ஸ் புடவைக்கடைக்குள் அனுப்பிவிட்டு வெளியே அவர்களது உடமைகளுக்கு காவல் இருந்தேன்.
 அவர்கள் வெளியே வருவதற்கு பல மணிநேரங்கள் ஆகும் என்பது எனக்கு நிச்சயமாகத்தெரியும். வெளிவிறாந்தாவில் ஆசனங்கள் இருந்தன. கொளுத்தும் வெய்யிலின் தாகம் தணிக்க கைவசம் ஒரு போத்தலில் தண்ணீரும் வைத்துக்கொண்டேன். அது தீர்வதற்குள் உள்ளே சென்றவர்கள் திரும்பிவிடவேண்டும் என்பதும் எனது பிரார்த்தனை.
அங்கு பல காட்சிகள் அரங்கேறிக்கொண்டிருந்தன. தினமும் அரங்கேறும் காட்சிகள்தான். ஊருக்குப்புதியவனான எனக்கு அக்காட்சிகள் புதுமையானவை. புதிரானவை.
சுட்டெரிக்கும் வெய்யிலையும் பொருட்படுத்தாமல் மக்கள் அலைமோதிக்கொண்டிருக்கிறார்கள். வாகனங்கள் நெடுஞ்சாலையில் எதிரும் புதிருமாக வேகமாக ஓடிக்கொண்டிருக்கின்றன.
அந்த பிரமாண்டமான, வண்ணவண்ண சாரிகளின் புகழ்பெற்ற மாளிகையின் வாசலில் திருஷ்டிப்பூசணிக்காய்கள் சிதறிய அடையாளம் தெரிந்தது. நடைபாதை வியாபாரிகளும் சுருசுருப்பாக இயங்குகிறார்கள்.தெருவுக்கு எதிர்முனையில் வண்ணக்குடைகளுக்குள் அமர்ந்தவாறு சிலர், ஆண்களுக்கும் பெண்களுக்கும் அவரரவர் கைகளில் வண்ணஓவியங்கள் வரைகிறார்கள். பச்சை குத்திய காலம் கிராமங்களில் தொடருகிறது. பெருநகரங்களில் நாகரீகம் மாறுகின்றமையால் கைகளில் படம் வரைகிறார்கள். இப்படி பல முழுநேரத்தொழில்கள்; நடைபதையோரங்களில் வௌ;வேறு வடிவங்களில் தினம் தினம் அரங்கேருகின்றன.
குமரன் சில்க்ஸ் வாசலுக்கு உள்ளிருந்து ஒருவர் காலில் பாதணிகள் இன்றி வருகிறார். அவர் கரத்தில் விகாரமான முகம் வரையப்பட்ட ஒரு திருஷ்டிப்பூசனிக்காய். அதன் மீது ஒரு சூடம் கொளுத்தப்பட்டிருக்கிறது. அந்த நபரின் மற்றக்கரத்தில் ஒரு எலுமிச்சம்பழம்.
அவருடன் மற்றும் ஒருவர் கையிலே ஒரு எவர்சில்வர் செம்பில் தண்ணீருடன் வருகிறார். வாசலில் தெளிக்கிறார். பூசணிக்காய் நிலத்தில் அடித்து சிதறப்படுகிறது. எலுமிச்சம்பழத்தை காலின் கீழேவைத்து நசுக்கி எடுத்து சிதறிய பூசணிக்காயின் மீது ரசத்தை தெளிக்கிறார்கள். பின்னர் அனைத்தையும் எடுத்து ஒரு உரப்பையில் போட்டு திணிக்கிறார்கள். அந்தப்பொதியை வாசல் ஓரமாக வைக்கிறார்கள். அந்தக்கடையில் அதற்காகவே நியமிக்கப்பட்ட பணியாளர்களோ என்றும் யோசிக்கவைத்தன அவர்களது கடமைகள்.
“என்ன நடக்கிறது?” அருகிலிருந்த ஒருவரிடம் கேட்டேன்.
“  திருஷ்டி கழிக்கிறார்கள்” என்றார்.
“  அது என்ன திருஷ்டி?”
“ இந்தக்கடையில் ஒருநாளைக்கு ஆயிரக்கணக்கான மக்கள் வருகிறார்கள். இலட்சக்கணக்கில் பணம் புரளும் இடம். யாரும் பார்த்து கண்பட்டுவிட்டால் வியாபாரத்துக்கு திருஷ்டி வந்து, நட்டம் வரும் என்பது நம்பிக்கை. அதனால் பூசிணிக்காயை சிதற அடித்து திருஷ்டி கழிக்கிறார்கள். காலம் காலமாக இந்த நம்பிக்கை இங்கே தொடருகிறது.” என்று சொல்லிவிட்டு என்னை ஏற இறங்கப்பார்த்தார்.
அந்தப்பார்வை ‘என்ன ஊருக்குப்புதுசா?’ என்று கேட்பதுபோலிருந்தது.
உணவுக்குத்தேவைப்படும் பூசணிக்காயும் எலுமிச்சம் பழமும் இப்படி தெருவிலே எவருக்கும் பிரயோசனமின்றி வீணடிக்கப்படும் அதேவேளையில், அந்த சுட்டெரிக்கும் வெய்யிலில் கந்தல் சேலையுடன் ஏழைப்பெண்கள் கைகளில் குழந்தைகளை ஏந்தியவாறு பிச்சை எடுத்துக்கொண்டிருந்தார்கள். ஒரு குழந்தை வெய்யிலில் வாடிவதங்கி தாயின் கரத்தில் தலைகவிழ்;ந்திருந்தது பார்க்கக்கொடுமையாக இருந்தது.
அருகே அழைத்து பணம் கொடுத்து “குழந்தைக்கு ஒரு தொப்பியாவது வாங்கிக்கொடம்மா” என்றேன். அவள் கையெடுத்துக்கும்பிட்டு பெற்றுக்கொண்டாள்.
அடுத்த கணம் இன்னுமொரு பெண் அதே கோலத்துடன் என்முன்னே தோன்றினாள். அவள் கரத்திலும் ஒரு குழந்தை. அந்தக்குழந்தையும் வெய்யிலில் வாடி வதங்கியிருந்தது. அவளுக்கும் பணம் கொடுத்தேன்.
அவளும் என்னை ஏறிட்டுப்பார்த்தாள்.
அந்த முகமும் “ என்ன…ஊருக்குப்புதுசா…?” என்று கேட்பதுபோலிருந்தது.
சுமார் ஒரு மணிநேரமாக நான் அங்கிருந்து பல காட்சிகளை தரிசித்தேன்.  அந்த நேர இடைவெளிக்குள் இரண்டு பூசணிக்காய்கள் தரையில் சிதறிவிட்டன. ஒரு விலையுயர்ந்த காரில் எவர்சில்வர் கெரியர்கள் பலவற்றில் மதிய உணவு வந்திறங்கியது. அவை அந்த புடவை மாளிகையின் உரிமையாளர்களுக்கும் நிருவாகிகளுக்கும்தான் என்பது புரிந்தது.
அப்போது நண்பர் ஜெயமோகனின் கதை வசனத்தில் வெளியான அங்காடித்தெரு திரைப்படம் நினைவுக்கு வந்தது.
நடைபாதை வியாபாரி ஒருவரிடம் சென்று, “ நிங்கள் எல்லாம் திருஷ்டிபூசனிக்காய் உடைப்பதில்லையா?” எனக்கேட்டேன்.
“ என்ன சார் சொல்றீங்க…எங்களுக்கு அந்தக்கடைமாதிரி இலட்சக்கணக்கிலா பணம் புரளுது. அஞ்சுக்கும் பத்துக்கும் இந்த வெய்யில்ல வெந்து ஓட்டிக்கொண்டிருக்கிறோம். அங்கே குளிர்சாதன வசதி இருக்குது. இங்கே வானமே கூரை. வெய்யிலே வாழ்க்கை.” என்று சொல்லிவிட்டு என்னை ஏறிட்டுப்பார்த்தார்.
அந்தப்பார்வையும் “ என்ன…ஊருக்குப்புதுசா…?” என்று கேட்பது போலிருந்தது.
குமரன் சில்க்ஸில் புடவைகள் வாங்கச்சென்ற உறவினர்களிடம் நான் அந்த ஒரு மணிநேரமாக கண்ட காட்சிகளைச்சொன்னேன்.
அதில் ஒருவர் சொன்ன தகவல் என்னை பெரிய அதிர்;ச்சிக்குள்ளாக்கியது.
“அந்த ஏழைத்தாய்மாரின்  கரத்தில் இருந்த குழந்தைகள் பெரும்பாலும் வாடகைக்கு எடுக்கப்பட்ட குழந்தைகளாகத்தான் இருக்கும்”
“எப்படியோ குழந்தைகள் குழந்தைகள்தான்.  உலகத்தில் நல்லவைகள் யாவும் குழந்தைகளுக்குத்தான் என்று மேதை லெனின் சொல்லியிருக்கிறார். ஆனால் குழந்தைகளை வெய்யிலில் வாட்டி வருவாய்தேடுபவர்களை இங்கு பார்க்கின்றேன். ஒரு அம்மா முதலமைச்சராக இருக்கும் ஒரு மாநிலத்தில் அம்மாமார் இப்படி குழந்தைகளை வெய்யிலில் வாட்டிக்கொண்டிருப்பது கொடுமையானது.” என்றேன்.
“ நீங்க ஊருக்குப்புதுசு…அதனால்தான் இப்படி பேசுகிறீர்கள்.” என்றார் அந்த உறவினர்.
இதனை எழுதிக்கொண்டிருக்கும்பொழுது, தமிழகத்தில் தமிழக முதல்வர் தமிழ் அன்னைக்கு சிலைவைக்கப்போவதாக ஒரு செய்தி வருகிறது.
வீதியில் வெய்யிலில் வாடிக்கொண்டு கையேந்தும் அன்னையர்களுக்கு முதலில் நல்வழி காட்டினால் நல்லது. தமிழ் அன்னை சிலையும் வெய்யிலில் காயத்தான் போகிறது.