ஓர் அகதியில் பாடல் - வ.ஐ.ச. ஜெயபாலன்

.


Posted Image

வ.ஐ.ச. ஜெயபாலன் ஈழத்தின் குறிப்பிடத்தக்க எழுத்தாளர்களுள் ஒருவராவார். இவர் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் பொருளியல் துறையில் பட்டம் பெற்றுள்ளார். யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவராக 1974-ஆம் ஆண்டில் பொறுப்பு வகித்து பல முக்கியமான பணிகளைச் செய்திருக்கிறார். எழுபதாம் ஆண்டுகளில் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவராக இருந்த காலத்தில் ஈழத்தில் ஏற்பட்ட புரட்சியில் இலக்கியத்திலும் செயற்பாடுகளிலும் இவர் பங்கு வகித்திருந்தார்.

Posted Image



வன்னி மண்ணின் வாசனையையும் வரலாற்றுச் செய்திகளும் அடங்கிய “பாலி ஆறு நகர்கிறது” கவிதைத் தொகுப்பு ஜெயபாலனின் முதல் கவிதைத் தொகுப்பாக அறியப்படுகிறது. அன்று தொடங்கிய இன்று வரை இவர் கவிதைத்துறையில் தொடர்ச்சியாக இயங்கி வருகிறார். சூரியனோடு பேசுதல், நமக்கென்றொரு புல்வெளி, ஈழத்து மண்ணும் எங்கள் முகங்களும், ஒரு அகதியில் பாடல், வ.ஐ.ச. ஜெயபாலன் கவிதைகள் முதலிய நூல்களை இவர் எழுதியிருக்கிறார்.

பெருமளவிலான கவிதைகளையும் ஒரு சில சிறுகதைகளையும் எழுதியுள்ள இவர் சமூகவியல் ஆய்வுகளிலும் ஈடுபட்டு வருகின்றார். 2011ஆம் ஆண்டு வெளிவந்த ஆடுகளம் தமிழ்த்திரைப்படத்திலும் ஒரு கனமானதொரு பாத்திரத்தில் இவர் நடித்திருந்தார்.

கொழும்பில் என் பெண்டாட்டி
வன்னியில் என் தந்தை
தள்ளாத வயதினிலே
தமிழ்நாட்டில் என் அம்மா
சுற்றம் பிராங்பேட்டில்
ஒரு சகோதரியோ பிரான்ஸ் நாட்டில்
நானோ
வழி தவறி அலாஸ்கா வந்துவிட்ட ஒட்டகம் போல்
ஓஸ்லோவில்
என்ன நம் குடும்பங்கள்
காற்றில்
விதிக்குரங்கு கிழித்தெறியும்
பஞ்சுத் தலையணையா?

ஒரு மனிதனுக்கு குடும்பத்துடன் ஓரிடத்தில் ஒரு வீட்டில் வாழ்தல் என்பது ஒரு சலுகையல்ல. அது அவனது பிறப்புரிமை. இதற்கு அப்பால் ஒருவன் எங்கு இரவில் தலைவைத்து படுக்கிறானோ அங்குதான் அவனது சமூகமும் அவனது உறவுகளும் கட்டமைக்கப்படுகின்றன. இந்த கட்டமைப்புகள் சீர்குலைக்கப்படுவதிலிருந்து தவிர்க்கவே அவன் சண்டையிடுகிறான்.

இடப்பெயர்வுகள் ஒரு மனிதனை நம் கற்பனைக்கெட்டாத வகையில் மிகப்பெரும் பேரழிவுக்குள்ளாக்குகின்றன. வேரோடு பிடுங்கி எடுக்கப்பட்டு துயர்களுக்குள் நட்டு வைக்கப்பட்ட மரமாய் மாறிப் போகிறான் மனிதன் இடம்பெயரும் ஒவ்வொரு முறையும். அந்த மரத்திற்கு வேர் இல்லை - எப்போதும் அந்த மரம் பூப்பூக்கவும் போவதில்லை. இடப்பெயர்வு என்பது வெறும் இடம்மாறிப் போதல் என்பதோடு மட்டும் நின்று விடுவதில்லை. அதில் மறந்துபோன எத்தனையோ உறவுகளின் பிறந்தநாள்கள், திருமணநாள்கள், படிப்பினைகள், மறக்கவியலாத தருணங்கள், நினைவலைகள், வாய்ப்புகள் என எண்ணற்ற பதிவுகள் சிக்கிக் கொண்டிருக்கின்றன.

நான் சிறுசாய் இருக்கையில்
உலகம் தட்டையாய் இருந்தது.
எங்கள் பாட்டிக்குத் தெரிந்த ஒரு அரக்கன்
ஒருமுறை உலகைப் பாயாய்ச் சுருட்டி
ஒளித்து விட்டானாம்
அப்போதெல்லாம்
பகல்தொறும் பகல்தொறும்
ஏழு வண்ணக் குதிரைத் தேரில்
சூரியன் வருகிற வழி பார்த்திருந்து
பாட்டி தொழுவாள் நானும் தொழுவேன்

நம்பிக்கை என்பது ஒரு தனிமனிதனின் மனநிலை தொடர்புடைய, அந்த தனிமனிதனுக்கு உண்மையாகப் படுகிற சில விடயங்களைத் தாங்கிய ஒரு கூறாகும். ஒவ்வொருவருக்கும் நம்பிக்கைகள் மாறுபடுகின்றன. வாழ்தலின் தளம் மாறுபடுகிற பொழுது நம்பிக்கைகளும் மாற்றம் காண்கின்றன. சார்ந்திருக்கும் சமயம், மதம், குடும்பம், வாழும் சமூகம் ஆகியவற்றை தழுவிதான் பெரும்பாலான நம்பிக்கைகள் உருபெறுகின்றன.

சிறுவயதில் நம்மால் நம்பப்பட்ட சில விடயங்கள் இப்போது நமக்கு வேடிக்கையாக இருக்கலாம். இதையெல்லாம் போய் நம்பிக் கொண்டிருந்தோமே என்ற எண்ணம் கூட சிலவேளை எழக்கூடும். பாட்டிகளும் அம்மாக்களும் நமது நம்பிக்கைகளுக்கு விதை தூவிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் நம்மோடு இருந்த காலத்தின் அடிப்படையில் நம்பிக்கை வேரின் ஆழம் அடங்கியிருக்கும். என்ன இருந்தாலும் நம்பிக்கையின் முனை பிடித்துதான் தொங்கி கொண்டிருக்கிறது மனித வாழ்வு. சூரியன் மறைகிற பொழுதெல்லாம் நாளை வரவிருக்கும் சூரியன் குறித்து நாம் யோசிக்கிறோம். யோசித்துக் கொண்டே இருக்கிறோம்.

மோசமான கவிதைகள் எழுதியுள்ளேன்
ஆனால் எப்போதும் வாழ்ந்தேன்
நல்ல கவிதையாய்.

மோசமான என்ற விளக்கம், ஏற்றுக் கொள்ளப்படாத நிலையில் உள்ளவர்களை உள்ளே ஈர்க்க தன்னிலையைத் தாழ்த்திக் கொள்வதாகவே இருக்கும் கவிஞனின் நிலை என நான் நினைக்கிறேன். தான் எழுதியவற்றையும் தனது வாழ்வையும் இவர் கவிதை என்கிற ஒற்றைச் சொல் கொண்டுதான் அடையாளப் படுத்துகிறார். இரண்டிற்கும் அவர் தருகிற விளக்கமும் மிக நியாயமாகவே படுகிறது. சிலருக்கு அவர்கள் வாழ்வின் பிரதிபலிப்பாகத்தான் கவிதை திகழ்கிறது. கவிதையே வாழ்வாகிறது. வாழ்வே கவிதையாகிறது.

எரிக்கப்பட்ட காடு நாம்.
ஆனாலும் எங்கள் பாடல் தொடர்கிறது
எஞ்சிய வேர்களில் இருந்து
இறந்தவர்களுக்கான ஒப்பாரியாய்
தொலைந்தவர்களுக்கான அழைப்பாய்
இல்லம் மீழ்தலாய்
மீண்டும் மீண்டும் வாழும் ஆசையாய்
சுதந்திர விருப்பாய்
தொடருமெம் பாடல்.

எங்கு போய் வாழ்ந்தாலும் தன் தாய் மண் மீது பற்று கொண்ட ஓர் ஈழத் தமிழனின் ஏக்கம் இந்த கவிதை எங்கும் விரவிக் கிடக்கின்றது. மீண்டும் உயிர்த்தெழுவதற்கான தேவையை மிக எளிய வரியில் பதிவு செய்யும் கவிதை இது. எல்லாம் முடிந்து விட்டது என தண்ணீர் ஊற்றி கழுவி விட்டு போய்விடலாம். அது குறித்து யார் கேள்ளி எழுப்பினாலும் கவலைக் கொள்ள வேண்டிய தேவையும் இல்லை. ஆனாலும் அதற்காக அந்த மண்ணின் விடுதலைக்காக உயிர் நீத்த போராளிகளினதும், மக்களினதும் கட்டியெழுப்பட்டு கண்முன்னே சிதைக்கப்பட்ட நகரங்களினதும் குரல்களை நசுக்கி ஓசையின்றி புதைத்துவிட்டு வாழ்ந்துவிடத்தான் முடியுமா? எந்த மண்ணில் வாழ்ந்தாலும் தாய்மண் பற்றி நினைவு தொண்டையில் சிக்கிக் கொண்ட சிக்கிக் கொண்ட முள்ளாய் எப்போதும் உறுத்திக் கொண்டே இருக்கும்.

எங்கள் கிராமங்கள்
மண்வளம் நிறைந்தவை
எதைப் புதைத்தாலும்
தோப்பாய் நிறையும்.

இந்த கவிதையைப் மீட்டிப் பார்க்கிற பொழுது பரந்து விரிந்திருந்த விசுவமடு துயிலும் இல்லத்தில் கால்பதித்த நினைவு மட்டுமே எட்டிப் பார்க்கின்றன. அதுவும் ஒரு தோப்புதான். விதைக்கப்பட்ட வித்துடல்களின் தோப்பு. கவிஞரும் இதைத்தான் பதிவு செய்ய நினைத்திருக்கிறார் போலும். தோப்பாய் நிறைந்திருக்கும் வீர உடல்கள் சுமந்த தோப்புகள் தமிழர் வரலாற்றில் நடுகல் மரபை நமக்கு நினைவுறுத்தும். இப்போது எல்லாம் வெறும் நினைவுகளிலும் புகைப்படல்களிலும் மட்டும். தெய்வம் இருக்கிற இடத்திற்கு நிகராய் வைத்து வணங்கப்பட்ட மாவீரர் துயிலுமில்லங்கள் விளையாட்டு மைதானங்களாக்கப்பட்ட நிகழ்வுகள் நடந்தேறிக் கொண்டிருக்கும் காலம் இது.

விரும்பாத ஒன்றை ஏற்றுக் கொண்டு வாழ காலம் மனிதனை எப்போதும் நிர்பந்தித்துக் கொண்டே இருக்கிறது. ஏதோ ஒரு லாவகத்தோடு மனிதன் அதைக் கடந்து போகிறான் ஒவ்வொரு முறையும். மனிதன் எப்போதும் எதையோ துரத்தியபடியே இருக்கிறான். துரத்தியதை பிடித்து விடாதவரை வாழ்ந்து கொண்டும் இருக்கிறான். இதை மிகத் தெளிவான உணர வைக்கின்றன வ.ஐ.ச. ஜெயபாலனின் கவிதைகள்.

இன்றுவரை தன் சுயம் இழக்காமல் தன் தாய்மண் குறித்த நம்பிக்கை தளராமல் நடக்கும் வ.ஐ.ச. ஜெயபாலன் ஆடிக்கொண்டிருக்கும் அனைத்து களங்களும் இளைய தலைமுறையைச் சென்றடைய வேண்டும். அதுவே அவரது படைப்புகளுக்குக் கிடைக்கும் அங்கீகாரமாகவும் இருக்க முடியும்

Nantri
http://www.vallinam....e45/kulali.html