இலங்கைச் செய்திகள்


மத்தல சர்வதேச விமான நிலையத்தை திறந்து வைத்தார் ஜனாதிபதி

பிக்குகள் தாக்கப்பட்டமையை கண்டித்து கொழும்பில் ஆர்ப்பாட்டம்

அமெரிக்காவுக்கு எதிராக யாழில் ஆர்ப்பாட்டம்: நவநீதம்பிள்ளையின் உருவப் பொம்மை எரிப்பு

இந்தியத் தூதரகத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டம்

பௌத்த ஆதிக்கத்திற்கு எதிராக பொத்துவிலில் ஹர்த்தால்

அனைத்து பல்கலைக்கழக பௌத்த மாணவர்களின் ஒன்றியம் ஆர்ப்பாட்டம்

 ஜெனீவாத் தீர்மானம் மாற்றத்தை ஏற்படுத்தாது

  நீர்த்துப்போகும் நீதி

======================================================================
மத்தல சர்வதேச விமான நிலையத்தை திறந்து வைத்தார் ஜனாதிபதி

இலங்கையின் இரண்டாவது சர்வதேச விமான நிலையமான மத்தல ராஜபக்ஷ விமான நிலையத்தை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சற்றுமுன் திறந்து வைத்துள்ளார்.

சுற்றுலாத்துறையை அபிவிருத்தி செய்யும் நோக்கில் 27 கோடி அமெரிக்க டொலர்கள் செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த விமான நிலையத்தின் ஊடாக வருடாந்தம், 10 இலட்சம் பயணிகளை கையாள முடியும் என்று தெரிவிக்கப்படுகிறது.

ஹம்பாந்தொட்டை - மத்தள பகுதியில் அமைந்துள்ள இந்த விமான நிலையத்தின் நிர்மாணப்பணிகள் கடந்த 2009ஆம்ஆண்டு நவம்பர் மாதம் ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்கதக்து.


நன்றி வீரகேசரி



பிக்குகள் தாக்கப்பட்டமையை கண்டித்து கொழும்பில் ஆர்ப்பாட்டம்

19/03/2013   தமிழகத்தில் இலங்கை பௌத்த பிக்குகள் தாக்கப்பட்டமையை கண்டித்து கொழும்பு கொள்ளுபிட்டி பகுதியில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

சிங்கள ராவய அமைப்பு ஏற்பாடு செய்திருந்த இவ்வார்ப்பாட்ட பேரணியானது கொள்ளுபிட்டி இந்திய உயர்ஸ்தானிகராலயத்தை நோக்கி சென்றதால் இப்பகுதியூடான போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
(படம் :ஜே.சுஜீவகுமார்)

நன்றி வீரகேசரி






அமெரிக்காவுக்கு எதிராக யாழில் ஆர்ப்பாட்டம்: நவநீதம்பிள்ளையின் உருவப் பொம்மை எரிப்பு
20/03/2013


யாழ்ப்பாணத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஏற்பாட்டில் அமெரிக்காவிற்கு எதிராக ஆர்ப்பாட்டப் பேரணி ஒன்று இன்று காலை 10 மணிக்கு முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த பேரணியில் யாழ். ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டதோடு அமெரிக்கா, இந்திய மேற்கு நாடுகளுக்கு எதிராக கோசங்களையும் எழுப்பியிருந்தனர்.

2 மணி நேரம் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்ட பேரணியால், யாழில் முக்கிய போக்குவரத்துக்கள் பாதிக்கப்பட்டிருந்தது. ஆர்ப்பாட்டத்தின் நிறைவில், மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் உருவப் பொம்மையும் எரிக்கப்பட்டுள்ளது.



நன்றி வீரகேசரி





இந்தியத் தூதரகத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டம்


20/03/2013 இந்தியாவில் பௌத்த பிக்கு மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை கண்டித்து கொழும்பிலுள்ள இந்தியத் தூதரகத்திற்கு முன்னால் இன்று புதன்கிழமை காலை ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது.
ராவணா சக்தி அமைப்பு ஏற்பாடு செய்த இவ் ஆர்ப்பாட்டத்தில் நுற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர்.
(படம் : ஜே.சுஜீவகுமார்)

நன்றி வீரகேசரி




பௌத்த ஆதிக்கத்திற்கு எதிராக பொத்துவிலில் ஹர்த்தால்

20/03/2013 கிழக்கு மாகாணத்தில் அண்மைக்காலமாக பொத்துவில் பிரதேசத்தை 
ஆக்கிரமிப்புச்செய்து கொண்டுவரும் பௌத்த ஆதிக்கத்திற்கு எதிராகவும், மண்மலையில் நிறுவப்பட இருக்கும் சுமார் 350 அடி உயரமான சிலை நிர்மாணத்திற்கு எதிர்ப்பினை வெளிப்படுத்தும் முகமாகவும் நாளை 21ஆம், திகதி முதல் எதிர்வரும் 24ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை வரை பொத்துவில் பிரதேசத்தில் பூரண ஹர்த்தால் மேற்கொள்வதற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த நான்கு நாட்களிலும் தங்களின் வியாபார தளங்கள், அரச காரியாலயங்கள், பாடசாலைகளை மூடிவிட்டு பொத்துவில் மண்ணை காப்பாற்றுவதற்காக மேற்கொள்ளப்படும் சாத்வீக எதிர்ப்பு நடவடிக்கையில் கலந்து கொள்ளுமாறும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.


குறித்த பௌத்த ஆதிக்கத்தையும், சிலை நிர்ணயிப்பையும் நிறுத்துவதற்கு வெளிநாட்டு வாழ் பொத்துவில் மக்கள் தங்களால் முடிந்த பங்களிப்பினை மேற்கொள்ளுமாறு வேண்டப்படுகின்றனர்
.நன்றி வீரகேசரி





அனைத்து பல்கலைக்கழக பௌத்த மாணவர்களின் ஒன்றியம் ஆர்ப்பாட்டம்

20/03/2013 இந்தியாவின் தமிழ் நாட்டில் பட்டப்படிப்புக்கு சென்றிருந்த பௌத்த மாணவன் தாக்கப்பட்டமை,மற்றும் அண்மையில் சுற்றுலா சென்றிருந்த சிங்களவர்கள் தாக்கப்பட்டமை என்பவற்றுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் இன்று புதன்கிழமை கொழும்பில் அமைந்துள்ள இந்திய உயர் ஸ்தானிகரகத்துக்கு முன்பாக கண்டனப் பேரணியொன்று இடம்பெற்றது.
இப் பேரணியை அனைத்து பல்கலைக்கழக பௌத்த மாணவர்களின் ஒன்றியம் ஏற்பாடு செய்திருந்த்து. பேரணி அமைதியாக இடம்பெற்றதுடன், பேரணியில் கலந்து கொண்டவர்கள் சிங்களம், தமிழ், ஆங்கிலம் ஆகிய மும்மொழிகளிலும் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தி நின்றனர்.
அதேவேளை தங்களது கோரிக்கைகளை இந்திய உயர் ஸ்தானிகரிடத்தில் சமரப்பிக்கவும்,அவருடன் கலந்துரையாடவும் நேரம் ஒதுக்கித் தருமாறு கடமையில் இருந்த பொலிஸ் அதிகாரி ஊடக வேண்டுகோள் முன் வைக்கப்பட்டது.
அதற்கமைய இந்திய உயர் ஸ்தானிகரை தாங்கள் சந்தித்ததாக பேரணியின் எற்பாட்டளரான தம்புல்லாவே சந்தனந்த ரத்ன தெரிவித்தார். இந்த சந்திப்பில் இரு அரசாங்கங்களினதும் அரசியல் செயற்பாடுகளுக்காக அப்பாவிகள் மீது அடக்கு முறைகள் கட்டவிழ்த்து விடப்படுவது அங்கீகரிக்க முடியாது என்றும் இலங்கையில் இருந்து செல்லும் மக்களையும், யாத்திரிகர்கள் மற்றும் மாணவர்களையும் பாதுகாக்க இந்திய அரசு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் விளக்கியதாக அவர் கூறினார்.
தங்களது கோரிக்கையினை ஏற்றுக் கொண்ட இந்திய உயர் ஸ்தானிகர் உரிய நடவடிக்கையெடுப்பதாக உறுதியளித்ததாகவும் அவர் கூறியதாக எற்பாட்டளர் மேலும் தெரிவித்தார்.





நன்றி வீரகேசரி




ஜெனீவாத் தீர்மானம் மாற்றத்தை ஏற்படுத்தாது

22/03/2013 போர்க்கால மனித  உரிமைகள் மீறல் குற்றச் சாட்டுகளுக்குத் தீர்வு காண்பதற்கு இலங்கை அரசாங்கம் அதிகளவுக்கு செய்ய வேண்டியிருப்பதாகவும் அதனைத் துரிதப்படுத்துமாறும் கேட்டுக் கொள்ளும் இரண்டாவது தீர்மானத்தை ஜெனீவாவிலுள்ள ஐ.நா. மனித உரிமைகள் பேரவை 2013 மார்ச் 21 இல் நிறைவேற்றியுள்ளது. கடந்த வருடம்  மார்ச்  மாதத்திலும் இதேபோன்றதொரு தீர்மானம் அமெரிக்க அனுசரணையுடன் சமர்ப்பிக்கப்பட்ட போது பேரவையில் 25 உறுப்பு நாடுகள் ஆதரவாகவும் 14 நாடுகள் எதிராகவும் வாக்களித்திருந்ததுடன், 7 நாடுகள் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை.  இந்த வருடமும் 25 நாடுகள் ஆதரித்துள்ளன. ஆனால் 13 நாடுகள் எதிர்த்திருக்கின்றன. 8 நாடுகள் வாக்களிப்பில் பங்கேற்கவில்லை. ஆனால், இந்த மாதிரியான தீர்மானங்களால் அர்த்தபுஷ்டியான மாற்றங்களை ஏற்படுத்த முடியுமா? என்பதே இங்கு கேள்வி.

  இந்தத் தீர்மானம் தேவையற்றதொன்று எனவும் ஐ.நா. வின் முறைமையுடன் இலங்கை செயற்படுவதை அபாயத்திற்குள்ளாக்கும் தன்மை கொண்டதுடன், தெற்காசிய பிராந்திய உறவுகளையும் பாதிக்கச் செய்வதாக அமைந்திருப்பதாகவும் மனித உரிமைகள் பேரவையின் கோட்பாடுகளுக்கு அமைய செயற்படுவதிலும் பார்க்க அதிகளவுக்கு அரசியல் சாயம் பூசப்பட்டதாக அமைந்திருப்பதாகவும் இலங்கை அரசாங்கம்  கடும் எதிர்ப்பையும் விசனத்தையும் தெரிவித்திருக்கிறது.

யுத்தம் முடிவுக்கு வந்து 3 வருடங்கள் 10 மாதங்களில் சிறப்பான முன்னேற்றத்தை வெளிப்படுத்திக் காண்பிக்கும் நாட்டின்மீது ஏன் இந்தத் தீர்மானம் என்பது இலங்கை எழுப்பும் கேள்வி. போர்க் குற்றச்சாட்டுகள் தொடர்பாக சர்வதேச , சுயாதீன விசாரணை அவசியமென ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகர் நவநீதம்பிள்ளை தனது அறிக்கையில் வலியுறுத்தியிருந்தார். இந்தியாவும் தீர்மான நகல் வரைபில்  இது தொடர்பான  திருத்தங்களைக் கொண்டு வரவேண்டும்  என்று தமிழக அரசியல் கட்சிகள் வலியுறுத்திய போதும் இந்தியா அதனைச் செய்திருக்கவில்லை.

சர்வதேச விசாரணைக்காக ஐ.நா. வின் விசேட  அறிக்கையாளர்கள் தங்குதடையின்றி வருவதற்கு  வழியேற்படுத்திக் கொடுக்கும் ஏற்பாட்டை தீர்மானத்தின் நகல்வரைபு கொண்டிருந்த போதும் நம்பகரமான உள்மட்ட விசாரணையையே இறுதித் தீர்மானம் கொண்டிருக்கிறது. இந்திய அரசின் முக்கிய பங்காளியான தி.மு.க. இந்த விடயங்களை நிபந்தனையாக முன்வைத்து வெளியேறியிருந்த போதும் அதனை  இந்தியா செய்திருக்கவில்லை. தமிழகத்தில் தொடர்ந்து இடம்பெற்று வரும் மாணவர்கள் போராட்டங்கள் உட்பட மக்கள் மத்தியில் எழுந்திருக்கும் உணர்வலைகளால் இறுதி நேரத்தில் திருத்தங்களைக் கொண்டுவரப் போவதாகத் தெரிவித்திருந்த இந்தியா அதனைச் செய்திருக்கவில்லை.

உரிமை மீறல் குற்றச்சாட்டுகளுக்கு விசாரணையை இந்தியா கோரியிருந்த போதும் சர்வதேச விசாரணையை வலியுறுத்தவில்லை. ஏனைய நாடுகளுக்கும் இது முன்னுதாரணமாகப் பின்பற்றப்பட்டுவிடும் என்ற காரணத்தால் இந்தியா சர்வதேச விசாரணையென்ற வார்த்தையைப் பயன்படுத்தியிருக்கவில்லை. இலங்கை அரசின் இணக்கப்பாட்டுடனேயே ஐ.நா. விசேட அறிக்கையாளர்கள் வருகை தர முடியுமென்பதை கடந்த முறை போன்றே இம்முறையும் தீர்மானம் கொண்டிருப்பதால் இது தலையிடும் தன்மையைக் கொண்டிருக்கவில்லை .

நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை ஆக்கபூர்வமான முறையில் அமுல்படுத்துமாறு கடந்த வருடத்தில் கேட்டுக் கொண்டமை போன்றே இந்த வருடமும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆணைக் குழுவின் பரிந்துரைகளில் பெரும்பாலானவை நிறைவேற்றப்பட்டு விட்டதாக அறிவித்துள்ள அரசாங்கம், மேற்கொள்ள வேண்டியவை தொடர்பாக கால அவகாசத்தையும் கோரியிருந்தது. பரிந்துரைகளை  நடைமுறைப்படுத்துவதற்கான தேசிய செயற்பாட்டுத் திட்டம் தெரிந்து எடுக்கப்பட்ட விடயங்களையே கொண்டிருப்பதாகவும் போதியளவு தேவையான விடயங்களைக் கொண்டிருக்கவில்லையெனவும்  மனித உரிமைகள் பேரவை உயர்ஸ்தானிகர் சுட்டிக்காட்டியிருந்தார்.

பல்லாயிரக்கணக்கான இழப்புகளுக்கு பதிலளிக்கும் கடப்பாட்டுப் பொறிமுறையொன்றை ஏற்படுத்த சர்வதேசமும் தவறிவிட்டதாக தீர்மானம் தொடர்பாக தமிழ் செயற்பாட்டாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர். அதேசமயம் எந்தச்சவாலையும் எதிர்கொள்வதற்கு தயாரெனவும் புலி ஆதரவாளர்களினதும் புலம்பெயர்ந்த தமிழ் சமூகத்தினதும் அபிலாஷைகளுக்கு அமையச் செயற்பட முடியாது என்றும் அரச தரப்பு கூறியுள்ளது.இந்தத் தீர்மானம் இலங்கைக்கு உடனடியாக தாக்கம் எதனையும் ஏற்படுத்தப்போவதில்லை.

ஆனால், சர்வதேசத்தின் கவலைகளைத் தீர்த்து வைப்பதில் தொடர்ந்தும் அலட்சியம் காட்டப்படுமானால் பதிலளிக்கும் க டப்பாட்டுப் பொறிமுறையாக சர்வதேச விசாரணைக்கு மனித உரிமைகள் பேரவை அங்கீகாரம் வழங்க வேண்டிய நிலைமை ஏற்படலாம் என்று மனித உரிமைகள் கண்காணிப்புக் குழுக்கள் கூறுகின்றன.
எதிர்வரும் நவம்பரில் கொழும்பில் பொதுநலவாய உச்சி மாநாடு  இடம்பெறவுள்ள நிலையில், இலங்கைக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட இந்த சர்வதேச மட்டத்திலான  தீர்மானம்  ஏற்கனவே உச்சி மாநாட்டை நடத்தும் இடத்தை வேறு நாட்டுக்குக் கொண்டு செல்லுமாறு விடுக்கப்பட்டு வரும் வலியுறுத்தல்களுக்கு மேலும் வலுவூட்டுவதாக அமைந்து விடும். இப்போது  சர்வதேச மட்டத்திலான தலையீட்டை இந்தியாவே  தடுத்து நிறுத்தியிருப்பதாக தென்படுகிறது. ஆனால் , 13 ஆவது திருத்தத்தின் பிரகாரமும் அதனை அடிப்படையாகக் கொண்டதுமான அதிகாரப் பகிர்வை மேற்கொண்டும் வட மாகாண சபைத் தேர்தலை அறிவித்திருப்பதன் பிரகாரம் நடத்தியும் அளித்த உறுதி மொழிகளை இலங்கை நிறைவேற்ற வேண்டும் என்று ஜெனீவாக் களத்தில் இந்தியா வலியுறுத்தியுள்ளது. இந்நிலையில் இந்தியாவின் கோரிக்கைகளை ஒப்பாசாரத்துக்காக வேனும் செய்ய வேண்டிய நிலைமையில் கொழும்பு இருக்கின்றது.

சர்வதேசம் சுட்டிக்காட்டியிருக்கும் விடயங்களை நிறைவேற்றாவிடின் அடுத்தடுத்த மனித உரிமைகள் பேரவை அமர்வுகளில் தீர்மானங்கள் கொண்டு வரப்படலாம். சர்வதேச விசாரணையை வலியுறுத்தும் தீர்மானமும் உள்ளீர்க்கப்படலாம். உண்மையிலேயே அரசாங்கம் தனது நிலைப்பாட்டைத் தளர்த்தி சர்வதேச சமூகத்துடன்  ஒத்துழைப்பதற்கான விருப்பத்தை வெளிப்படுத்தும் போது சர்வதேச விசாரணைக்கான அழைப்புகள் பலவீனமடைந்துவிடும். ஆனால் உள்நாட்டில் வாக்கு வங்கியில் சரிவு ஏற்பட்டுவிடும் என்பதால் சர்வதேச மட்டத்திலான எந்தவொரு தீர்மானத்தையும் ஆளும் தரப்பு கடுமையாக எதிர்க்கும் என்பது வெளிப்படையாக அவதானிக்கப்படும் விடயம்.
நன்றி தினக்குரல்






 நீர்த்துப்போகும் நீதி

20/03/2013 ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிரான அமெரிக்காவின் தீர்மானத்தின் மீது நாளை மறுதினம் வாக்கெடுப்பு  நடத்தப்படவிருக்கும் நிலையில், அதற்கு இந்தியா ஆதரவளிக்க வேண்டும் என்று தமிழகத்தில் கடந்த 10 நாட்களாக மாணவர்கள் நடத்திவரும் அறவழிப் போராட்டம் உக்கிரமடைந்திருக்கிறது. ஆரம்பத்தில் தீர்மானத்திற்கு இந்திய அரசு ஆதரவளிக்க வேண்டுமென்று வலியுறுத்தி ஆரம்பமான போராட்டம் இப்போது அமெரிக்க தீர்மானத்தின் கனதியை குறைத்து நீர்த்துப் போக வைத்த பின் இறுதி நகல்வரைபை சமர்ப்பித்திருப்பதாக தென்படும் நிலையில், அதற்கு எதிராக எதிர்ப்புக் குரல்கள்  இப்போது ஓங்கி  ஒலிக்க ஆரம்பித்துள்ளன. நீர்த்துப் போக வைப்பதில் இந்தியாவின் பங்களிப்பு அதிகளவுக்கு இருப்பதாக மன்னிப்பு சபை போன்ற சர்வதேச  மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்புகள் குற்றம்சாட்டியுள்ள நிலையில், தீர்மானத்திற்கு இந்தியா ஆதரவளிப்பதோ எதிர்ப்பதோ அர்த்தமற்றதென்ற விசனங்கள் அதிகளவுக்கு வெளிப்படுத்தப்படுகின்றன.

வாஷிங்டனின் திருத்தப்பட்ட நகல் வரைபுப் பிரதிகள் இணையத்தளங்களில் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டிருந்தன. யுத்தத்தின் இறுதிக் கட்டத்தின் போதான மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரணை செய்வதற்கு சர்வதேச சுயாதீன விசாரணை அவசியமெனவும் களநிலைவரத்தை கண்டறிய விசேட நிபுணர்கள், ஐ.நா. அறிக்கையாளர்கள் தங்கு தடையின்றி நாட்டுக்குள் பிரவேசிப்பதற்கு இடமளிக்கப்பட வேண்டுமெனவும் தீர்மான மூலப்பிரதியில் உள்ளடங்கியிருந்த விடயங்கள் இறுதி நகலில் நீக்கப்பட்டிருக்கின்றமை பாரிய மாற்றமாக மனித உரிமைகள் அமைப்புகளால் சுட்டிக்காட்டப்படுகின்றன. உள்நாட்டில் ஆளும் தரப்போ அல்லது பிரதான எதிர்க்கட்சியான ஐ.தே.க. வோ அல்லது ஜே.வி.பி.போன்ற கட்சிகளோ சர்வதேச விசாரணை நாட்டின் இறைமையை மீறும் விவகாரமென்று கடுமையாக எதிர்த்துவருகின்றன. ஆனால், வட, கிழக்கு தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பெரிய கட்சியான தமிழ்க் கூட்டமைப்பு சுயாதீன சர்வதேச விசாரணையை வலியுறுத்தி வருகிறது. அமெரிக்கா தீர்மானத்தை மென்மைப்படுத்தியுள்ள நிலையில், அதற்கு இந்தியா எந்தவித தயக்கமுமின்றி ஆதரிக்கும் சாத்தியம் காணப்படுகிறது. அத்துடன் இத்தீர்மானம் கொழும்பை அதிகளவுக்கு பாராட்டுவதாகவும் அமைந்திருக்கிறது.

வட மாகாண சபைக்கான தேர்தலை நடத்தவுள்ளமை, உள்சார்கட்டமைப்பு, மீள்நிர்மாணம், இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடியேற்றம் தொடர்பாக இலங்கை முன்னேற்றம் கண்டிருப்பதை வரவேற்று பாராட்டுவதாக இறுதி நகல் வரைபு காணப்படுகிறது. இந்த இறுதி நகலில் குறைந்தது 6 இடங்களில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மூலப்பிரதியிலும் பார்க்க திருத்தப்பட்ட நகலில் மென்மையான மொழிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இலங்கையின் மனித உரிமைப் பதிவுகள் தொடர்பாக சர்வதேச சமூகத்தின் அக்கறை தாழ்ந்த மட்டத்திற்கு சென்றுகொண்டிருப்பதைக் காட்டுவதாகவே அமெரிக்காவின் இந்தத் தீர்மான நகல்வரைபு இருப்பதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் நியாயத்தை பெற்றுக்கொள்வதற்கான போராட்டத்திற்கு பாரிய பின்னடைவு என்றும் சர்வதேச மன்னிப்புச் சபையின் இந்தியாவுக்கான பிரதம  நிறைவேற்று அதிகாரி சுட்டிக்காட்டியிருக்கிறார்.

அமெரிக்காவின் தீர்மானத்தை இந்தியா எதிர்க்க வேண்டும் என்று வலியுறுத்தி வரும் கொழும்பு திருத்தப்பட்ட நகல் வரைபையும் நிராகரித்திருக்கிறது. “இந்தத் தீர்மானமே தேவையற்றதொன்று. இலங்கைக்கு எந்த விதத்திலும் இது உதவப் போவதில்லை. மாறாக இலங்கையிலும் பிராந்தியத்திலும் நிலைவரத்தில் பாதிப்பை ஏற்படுத்துவதற்கு உதவுவதாகவே இது அமையும். இந்தத் தீர்மானத்திற்கு  ஆதரவளிப்போர் அதனை மனித உரிமைகள் விவகாரத்திலும் பார்க்க அரசியலுக்காக செய்ய விருப்பதாகத்  தோன்றுகிற‘ என்று டில்லியிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகர் ஆங்கில ஊடகமொன்றுக்குத் தெரிவித்திருந்தார். இலங்கை தொடர்பாக இந்தியா தற்போது கொண்டிருக்கும் உத்தியோகபூர்வமான நிலைப்பாட்டையே வெளிப்படுத்துவதாக அமெரிக்காவின் இறுதித் தீர்மான நகல்வரைபு தோன்றுகிறது.

ஆனால், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசிலிருந்து முக்கிய பங்காளிக் கட்சியான தி.மு.க. வெளியேறியிருப்பதும் அடுத்த வருடம் பாராளுமன்றத் தேர்தலை எதிர்நோக்குவதும் அரசாங்கத்தை இருதலைக்கொள்ளி எறும்பின் நிலைமைக்கு கொண்டு சென்றுள்ளது. தி.மு.க. விலகியதால் அரசுக்கு உடனடி ஆபத்து இல்லாவிடினும் அறுதிப் பெரும்பான்மை பலமற்ற அரசாங்கத்தால் முக்கியமான முடிவுகளை எடுக்க முடியாத நிலைமை தோன்றும். அமெரிக்காவின் தீர்மானத்தை நீர்த்துப்போக வைத்தமை இந்தியாவின் இராஜதந்திரத்துக்குக் கிடைத்த வெற்றியாக ஒருபுறம் கூறப்படும் நிலையில், தி.மு.க. வின்  ஆதரவை இழப்பதால் அதிகளவு விலையைச் செலுத்த வேண்டிய களநிலைகளும் உருவாகி வருகின்றமை அரசியல் இராஜதந்திரத்திற்கு நிச்சயம் சவாலான விடயமே. இலங்கைத் தமிழர்கள் தொடர்பாக சர்வதேச மட்டத்தில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் உண்மையிலேயே அவர்களுக்கு உதவுவதாக அமைய வேண்டும்.

ஆனால், அவர்களுக்கு உதவுவதென்ற போர்வையில் பிராந்திய சர்வதேச அரசியலே மேலோங்கி நிற்கிறது. அந்த மக்களின் அரசியல் அபிலாஷைகள், நலன்களை பகடைக்காய்களாக வைத்து பூகோள அரசியல் நலன்சார்ந்த விளையாட்டுகளே ஆடப்படுவதாகத் தென்படுகிறது. 32 நாடுகளின் அனுசரணையுடன் ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்கா சமர்ப்பித்திருக்கும் தீர்மான நகல்வரைபில் நான்கு தடவைகள் இடம்பெற்ற திருத்தங்களும் அதற்கான நோக்கங்களும் இதனை மிகத் தெளிவாக வெளிப்படுத்தி நிற்கின்றன.
நன்றி தினக்குரல்  

No comments: