உலகச் செய்திகள்இஸ்ரேலின் உண்மையான பாதுகாப்புக்கு பாலஸ்தீன தனிநாடே சிறந்த வழி

லெபனான் மீது சிரியா தாக்குதல்

மியன்மாரில் மதக் கலவரம் 20 பேர் உயிரிழப்பு; பலர் காயம்

பாப்பரசர் பிரான்சிஸ் உத்தியோகபூர்வமாக பதவியேற்பு
=========================================================================


 இஸ்ரேலின் உண்மையான பாதுகாப்புக்கு பாலஸ்தீன தனிநாடே சிறந்த வழி
22/03/2013
obama_jj
மேற்குக்கரை: அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்றபின் முதற்தடவையாக இஸ்ரேலுக்கும் மேற்கு கரைக்கும் விஜயம் மேற்கொண்டுள்ள ஒபாமா இஸ்ரேலியர்களும் பாலஸ்தீனர்களும்
பேச்சு மேடைக்குத் திரும்ப வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார். இஸ்ரேலின் உண்மையான பாதுகாப்புக்கு இறையாண்மையுள்ள பாலஸ்தீன தனிநாடே சிறந்த வழியாகுமென ஜெருசலேமில் இஸ்ரேல் மாணவர்கள் மத்தியில் உரை நிகழ்த்திய ஒபாமா கூறியுள்ளார். |

அத்துடன், சுதந்திரமானதும் இறையாண்மையுடையதுமான ஒரு நாடாக பாலஸ்தீனத்தை உருவாக்க அமெரிக்கா பாடுபடுமெனவும் அவர் தெரிவித்துள்ளார். ஒபாமா இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். முதலில் இஸ்ரேல் சென்ற ஒபாமா அங்கு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவைச் சந்தித்து உரையாடினார்.

பின்னர் இஸ்ரேல் ஆக்கிரமிப்பில் உள்ள பாலஸ்தீனத்தின் மேற்குக் கரைப் பகுதிக்குச் சென்றார். ஜெருசலேமில் இஸ்ரேல் மக்களிடையே ஒபாமா பேசுகையில் "பாலஸ்தீனர்களின் சுயநிர்ணய உரிமை, நீதி ஆகியவற்றை இஸ்ரேல் மக்கள் அங்கீரிக்க வேண்டும். உண்மையான பாதுகாப்புக்கு அமைதி ஒன்றே வழி. பாலஸ்தீனர்களின் பார்வையில் உலகத்தைப் பாருங்கள்.

அவர்களின் நிலையில் இருந்து எண்ணிப் பாருங்கள். சொந்த நாடில்லாமல் பாலஸ்தீனக் குழந்தைகள் வளர்வது அழகல்ல. ஒவ்வொரு நாளும் தங்களின் பெற்றோரின் நடவடிக்கைகள் வெளிநாட்டு இராணுவத்தால் கட்டுப்படுத்தப்படும் சூழலில் அக்குழந்தைகள் வாழ்வது நல்ல விடயம் அல்ல‘ எனத் தெரிவித்தார். தொடர்ந்து பாலஸ்தீனம் சென்ற ஒபாமா ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸை சந்தித்தார்.பின்னர் ஒபாமா அப்பாஸ் இருவரும் ரமல்லாவில் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

அப்போது ஒபாமா பேசியதாவது "தங்களுக்கென சொந்த நாட்டை அமைத்துக் கொள்ள பாலஸ்தீனர்களுக்கு உரிமை உள்ளது. இஸ்ரேல் பாலஸ்தீன நாடுகள் தடைப்பட்ட அமைதிப் பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்க வேண்டும்' இதில் அமெரிக்கா தனது பங்களிப்பைச் செலுத்தும். சுதந்திரமான இறையாண்மை மிக்க பாலஸ்தீன நாடு உருவாவதைக் காண அமெரிக்கா உறுதி பூண்டுள்ளது. எத்தனை இடையூறுகள் நேர்ந்தாலும் அமைதியைப் பேணுவதில் பாலஸ்தீனர்கள் விட்டுக் கொடுக்கக்கூடாது. ஜனாதிபதி அப்பாஸுடன் இஸ்ரேல் யூதக் குடியிருப்பை அமைத்து வருவது உட்பட பல்வேறு பிரச்சினைகள் குறித்தும் விவாதித்தேன்.

அமைதியைக் குலைக்கும் அத்தகையை குடியிருப்பு அமைவதை அமெரிக்கா விரும்பவில்லை என்பதை இஸ்ரேல் பிரதமர் நெதன்யாஹுவிடமும் தெரிவித்துள்ளேன். இரு தரப்பிலும் விரும்பத்தகாக நிகழ்வுகள் இருப்பினும் சில உடன்பாடுகளை ஏற்க மறுக்கும் காரணிகள் இருப்பினும் தன்னம்பிக்கையைக் குலைக்கும் செயல்கள் இருப்பினும் அவற்றைக் களைய இருதரப்பும் முன்வர வேண்டும்.இதுபோன்ற பிரச்சினைகளை ஒதுக்கிவிட்டால் அக்காரணங்களைக் காட்டிச் சில செயல்களை முன்னெடுத்துச் செல்வதை தடுக்க வேண்டியதில்லை என்று ஒபாமா தெரிவித்தார்.

இஸ்ரேலில் உள்ள கூட்டணி அரசில் உள்ள மக்கள் பிரதிநிதிகள் சர்ச்சைக்குரிய ஜெருசலேமின் மேற்குப் பகுதியில் யூதக் குடியிருப்பு அமைவதற்கு ஆதரவு தெரிவிப்பவர்கள். குடியிருப்பு அமைவதைத் தடுத்து நிறுத்தும் முயற்சிக்கு முட்டுக்கட்டையாக ஆளும் தரப்பு அரசியல்வாதிகள் உள்ளனர். இதையும் தனது பேச்சில் மறைமுகமாக வெளிப்படுத்திய ஒபாமா இஸ்ரேலின் அரசியல் நிலவரம் மிகவும் சிக்கலானது. அதனை ஒரே இரவில் தீர்க்க முடியாது என்பதையும் நான் புரிந்திருக்கின்றேன் என்று தெரிவித்தார்.

நன்றி தினக்குரல் லெபனான் மீது சிரியா தாக்குதல்

19/03/2013   போராளிகளின் தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கும் சிரியா இராணுவத்தின் விமானப் படைகள் நேற்று லெபனான் எல்லை மீது திடீர் விமானத் தாக்குதலை நடத்தியுள்ளன.
சிரியா - லெபனான் எல்லையில் உள்ள அர்சல் நகர் மீது சிரியா விமானப்படையை சேர்ந்த போர் விமானங்கள் குண்டு மழை பொழிந்ததாக லெபனான் அரசுக்கு சொந்தமான நெஷனல் நியூஸ் ஏஜென்சி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இச்சம்பவத்தினால் ஏற்பட்ட உயிரிழப்புகள் மற்றும் சேதம் குறித்த தகவல்கள் ஏதும் வெளியிடப்படவில்லை.
இத்தாக்குதலுக்கு அமெரிக்கா கடும் எதிர்ப்பௌ வெளியிட்டுள்ளது.


நன்றி வீரகேசரி


  மியன்மாரில் மதக் கலவரம் 20 பேர் உயிரிழப்பு; பலர் காயம்

22/03/2013
faiiiiiiiiiiir 
ரங்கூன்: மியன்மாரில் முஸ்லிம் மற்றும் புத்த மத பிரிவினர்களுக்கு இடையே ஏற்பட்ட கலவரத்தில் 20 பேர் உயிரிழந்துள்ளனர். கலவரத்தையொட்டி மியன்மாரின் மத்திய பகுதியில்

இருந்த மசூதிகள் இடிக்கப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

மெய்க்திலா பகுதியில் முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த ஒருவரின் தங்க நகைக் கடை ஒன்றில் புத்த துறவி ஒருவர் தாக்கப்பட்டார். இச்சம்பவம் புதன்கிழமை நடந்தது. இதைத் தொடர்ந்து 200 இற்கும் மேற்பட்டவர்கள் வீதியில் சண்டையிடத் தொடங்கினர். இதுவே கலவரத்துக்கு காரணம் என்று பொலிஸாரின் அதிகாரபூர்வ பேஸ்புக் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்தாக்குதலில் புத்த துறவி உட்பட 20 பேர் உயிரிழந்தனர். இதனால் ஆத்திரமடைந்த புத்த மதத்தினர் அப்பகுதியில் இருந்த 3 மசூதிகளை இடித்தனர். கலவரத்தைக் கட்டுப்படுத்த அப்பகுதியில் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டது.

இதைத் தொடர்ந்து வியாழக்கிழமை நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாகவும் மக்கள் தங்களின் அன்றாட பணிகளை மேற்கொண்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். முஸ்லிம் பிரிவினருக்கும் புத்த மத பிரிவினருக்கும் இடையே கடந்த ஆண்டு ஜூன் மாதம் ஏற்பட்ட கலவரத்தில் 180 பேர் உயிரிழந்தனர்.  நன்றி தினக்குரல்

பாப்பரசர் பிரான்சிஸ் உத்தியோகபூர்வமாக பதவியேற்பு 
19/03/2013
22083ரோம்: ரோமின் சென் பீற்றர்ஸ் சதுக்கத்தில் இடம்பெற்ற புதிய பாப்பரசர் பிரான்சிஸின் உத்தியோகபூர்வ பதவியேற்பு விழா திருப்பலியில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டனர்.

கூரையற்ற வாகனம் ஒன்றில் அப்பகுதிக்கு வருகை தந்த பாப்பரசர் அங்கிருந்த மக்களை ஆசீர்வதித்து தனது பதவியேற்பு விழாவினை ஆரம்பித்திருந்தார்.
உலக அரசியல் மற்றும் மதத் தலைவர்கள் உள்ளிட்ட 10 இலட்சம் பேர் இந்த நிகழ்வுகளில் கலந்துகொண்டுள்ளனர்.

தனது தற்காலிக வதிவிடத்திலிருந்து வெளியேறிய பாப்பரசர் திருப்பலி இடம்பெற்ற புனித பீற்றர்ஸ் சதுக்கத்தை வந்தடையும் வரை வீதி நெடுகலிலும் மக்கள் கூடியிருந்து வரவேற்றனர்.
தொடர்ந்து பாப்பரசருக்குரிய பாரம்பரிய உடையை அணிந்த பிரான்சிஸ் அடுத்ததாக பதவிக்குரிய மோதிரத்தையும் அணிந்து கொண்டார். தூய தங்கமற்ற  வெள்ளி கலந்த தங்கத்தில் இந்த மோதிரம் செய்யப்பட்டிருந்தது.

266 ஆவது பாப்பரசராக பிரான்சிஸ் இந்த புனித பதவியை ஆரம்பித்துள்ளாரென கூறப்பட்டுள்ளது. இதனை அடுத்து இத்தாலிய மொழியில் பாப்பரசர் திருப்பலியினை நடத்தினார்.    நன்றி தினக்குரல் 

No comments: