ஆஸியை துவம்சம் செய்த இந்திய அணி தொடரை 4-0 என சுவீகரித்தது


இந்தியா - அவுஸ்திரேலியா அணிகளுக்கிடையிலான 4ஆவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்டுக்களினால் வெற்றி பெற்று தொடரை 4-0 என சுவீகரித்தது.

இந்தியாவுக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி நான்கு போட்டிகளை கொண்ட டெஸ்ட் தெடரில் பங்கேற்றது. இந்நிலையில் ஏற்கெனவே நடைபெற்ற மூன்று போட்டிகளிலும் தேல்வியடைந்து தொடரை இந்தியாவிடம் தாரைவார்த்த நிலையில் நான்காவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டி டில்லியில் கடந்த 22ஆம் திகதி ஆரம்பமானது.






இப் போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற அவுஸ்திரேலியா அணி இந்திய அணியை களத்தடுப்பில் ஈடுபடுமாறு பணித்தது. அந்தவகையில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணியின் விக்கெட்டுகளை இந்திய அணியின் அஷ்வின் சுழலில் பதம்பார்க்க தனது முதல் இன்னிங்ஸில் அவுஸ்திரேலிய அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 262 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

அவுஸ்திரேலிய அணி சார்பாக துடுப்பாட்டத்தில் பீட்டர் சிடில் 51 ஒட்டங்களையும் ஸ்மித் 46 ஓட்டங்களையும் ஹியூக்ஸ் 45 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர். பந்து வீச்சில் இந்திய அணி சார்பாக அஷ்வின் 5 விக்கெட்டுக்களையும் ஜடேஜா மற்றும் இஷாந்த் ஷர்மா ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.

இந்நிலையில் தனது முதலாவது இன்னிங்ஸ{க்காக களமிறங்கிய இந்திய அணி ஆஸியின் சுழலில் சிக்கித் தடுமாறி சகல விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து 272 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக்கொண்டது. இந்திய அணிசார்பாக முரளி விஜய் 57 ஓட்டங்களையும் புஜாரா 52 ஓட்டங்களையும் மற்றும் ஜடேஜா 43 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர். ஆஸி சார்பாக பந்து வீச்சில் சுழலில் அசத்திய நதன் லயொன் 7 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.

இதையடுத்து 10 ஓட்டங்களால் பின்னிலை வகிக்க தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த அவுஸ்திரேலிய அணிக்கு இந்திய அணியின் சுழல் பந்து வீச்சாளர்கள் சிம்மசொப்பனமாகத் திகழ்ந்தனர். விக்கெட்டுகள் சீரான இடைவெளியில் சரியத் தொடங்க ஆஸி 169 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்தது. இரண்டாவது இன்னிங்ஸிலும் பந்து வீச்சாளரான பீட்டர் சிடில் (50) மாத்திரம் அரைச்சத்தினைப் பூர்த்தி செய்தார். ஏனைய துடுப்பாட்ட வீரர்கள் ஏமாற்றமளிக்க ஆஸியின் நிலைமை பரிதாபகரமானது.
இந்திய அணி சார்பாக பந்துவீச்சில் ஜடேஜா 5 விக்கெட்டுக்களையும் அஸ்வின் மற்றும் ஓஜா ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.
இந்நிலையில் 155 ஓட்டங்கள் என்ற இலகுவான வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இந்திய அணிக்கு முரளி விஜய் 11 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து அரங்கு திரும்பினார். பின்னர் இணைந்து புஜாரா ஆட்டமிழக்காது (82) ஓட்டங்களையும் கோலி (41) ஓட்டங்களையும் பெற்றுக் கொடுக்க இந்திய அணி 4 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 158 ஓட்டங்களைப் பெற்று 6 விக்கெட்டுக்களினால் வெற்றியீட்டியது.
அவுஸ்திரேலிய அணி சார்பாக பந்து வீச்சில் லயொன் மற்றும் மெக்ஸ்வெல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களை கைப்பற்றினர்.

இதேவேளை, இத் தொடரை 3-0 என தன்வசப்படுத்திய இந்திய அணி, நான்காவதும் இறுதியுமான இப் போட்டியிலும் 6 விக்கெட்டுகளால் வெற்றி பெற்று நான்கு போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரினை 4-0 என்ற ரீதியில் கைப்பற்றியது.

இப் போட்டியின் ஆட்டநாயகனாக ஜடேஜாவும் தொடர் ஆட்டநாயகனாக ஆஸியை சுழலில் மிரட்டிய அஷ்வினும் தெரிவு செய்யப்பட்டனர்.
நன்றி வீரகேசரி 

No comments: