அறவழியில் அறம் செய்தவர்… அமரர்.ஜீவகதாஸ்!...

.

யாழ் குடாநாட்டில் இயங்கிவரும் அரச சாற்பற்ற பொது தொண்டர் தாபனமான அறவழிப் போராட்ட அமைப்பின் தாபகச் செயலாளர் ஜீவா என்றும் ஜீவன் என்றும் எல்லோராலும் அன்பாய் அழைக்கப்பட்டவரான மட்டுவில் ஊரைப் பிறப்பிடமாகக்கொண்ட ஜீவகதாஸ் அவர்கள் தனது 67வது வயதில் கடந்த
 2-2-2013 அன்று தனது இல்லத்தில் காலமானார்.
1974ம் ஆணடு யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற உலகத்தமிழாராய்சி மகாநாட்டுத் தொண்டர் சேவையுடன் இவரின் பொதுப்பணி வேர்விட்டது. அப்போது ஐக்கிய நாடுகள் சபையில் பணிபுரிந்த மறவன்புலவு சச்சிதானந்தம் ஐயா அவர்களின் முயற்சியால் சாவகச்சேரித் தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் வி.என்.நவரத்தினம், கலாநிதி நேசையா ஆகியோரின் ஒத்துழைப்புடன் 1979 மாசி மாதம் 25ம் திகதி இந்த அறவழி போராட்ட அமைப்பு சாவகச்சேரியில் உதயமாகியது. இதில் தலைவராக திரு.துரைராசா அவர்களும் செயலாளராக திரு. ஜீவகதாசும் தெரிவு செய்யப்பட்டார்கள். திரு ஜீவா அவர்கள் அன்று தொட்டு தான் இறக்கும்வரை சுமார் 34 ஆண்டுகள் செயலாளராகப் பதவி வகித்திருப்பது ஒரு சரித்திரமாகவே கருதலாம்.
1983 நாட்டின் இனக்கலவரத்தால் ஆயிரக்கணக்கான தமிழர்கள் வடபகுதி கைதடி ஆயுள்வேத வைத்தியசாலையில் தஞ்சமடைய இவரின் பணிகளோ மேலும் அதிகரித்தன. பல தொண்டர்களைச் சேர்த்து திட்டமிட்டுச் செயற்படுத்தி அகதிகளாக வந்த மக்களின் சகல தேவைகளையும் நிறைவேற்றி பின்னர் அவர்களை படிப்படியாக வௌ;வேறு இடங்களில் குடியேற்றி அவர்களை வாழ வைத்திருக்கிறார். தனது 40 ஆண்டுகள் பொதுப் பணியில் நூற்றுக்கணக்கான இளவயதினருக்கு வேலை வாய்ப்புக்களை வழங்கியிருப்பதுடன் பல ஆயிரக்கணக்கான சிறார்களுக்கும் இளையோருக்கும் கல்வி, பயிற்சி செயற்பாடுகளை முன்னெடுத்து அவர்களை சமூக சிந்தனையுள்ள பிரசைகளாக உருவாக்கியிருக்கின்றார்.
தமிழ், ஆங்கில மொழிகளில் நன்கு புலமைபெற்ற இவர் பிறப்பிடம் மட்டுவில். படித்த பாடசாலை மட்டுவில் மகாவித்தியாலயம். இளமையில் ஒரு விளையாட்டு வீரனாகவும் திகழ்ந்திருக்கிறார். தனது ஊர் மோகனதாஸ் நூல்நிலையத்தின் வளர்ச்சிக்குப் பெரும்பங்காற்றியிருக்கின்றார். பொதுச் சேவையில் வேர் ஊன்றி தன்னலம் பாராது கடந்த 40 ஆண்டுகளாக தன் உடல் உழைப்பால் பல்லாயிரம் எழை, எளிய, வறிய மக்களின் துயர் துடைத்த செம்மல் என்று கூறலாம். அக்காலத்தில் புரையோடியிருந்த தீண்டாமை, கோவில்களில் உயிர்ப்பலி எனப் பல்வேறு அடக்குமுறைகளுக்குக் குரல்கொடுத்துப் போராடியிருக்கிறார்.
அறவழி அமைப்பின் வரலாற்றில் கடந்த 34 ஆண்டுகள் நாயகனாகத் திகழ்ந்திருக்கிறார். ஒரு கப்பலோட்டியைப் போல் வழிகாட்டியாய் வாழ்ந்து காட்டியுள்ளார். ஆறவழி பாலர் பாடசாலை, பாலர் பூங்கா, பாலர் விளையாட்டுப்போட்டி,சுயதொழில் திட்டம், விவசாயத் திட்டம், வீடமைப்புத் திட்டம், புலமைப்பரிசில் திட்டம், நூலகம், ஆசிரியர் பயிற்சி நெறி, இலக்கியக் கருத்தரங்கு, இடம்பெயர்ந்தோர் பராமரிப்புத்திட்டம், விதவைகள் மறுவாழ்வுத் திட்டம் எனப் பல்வேறு திட்டங்களைத் தானே திட்டமிட்டு உருவாக்கிச் செயற்படுத்தி பலரும் பயன்பட வைத்த செயற்பாட்டலாளர் இவர். இத்திட்டங்களால் பயன் பெற்ற,  பயன் பெற்றுவரும் பலர் அவரின் இறுதிச் சடங்கில் கதறி அழுத சோகக்காட்சி மனதை நெகிழ வைக்கின்றது. இவரின் அரும் பெரும் பணியால் இன்று வடபகுதியில் 67 பாலர் பாடசாலைகள் இயங்கிவருவதுடன் பல இடங்களில் இளையோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான பயிற்சி நிலையங்களும் தொழில் நிறுவனங்களும் இயங்கி வருவதும் குறிப்பிடத்தக்க விடையமாகும்.
இவர் ஒரு பொதுச் சேவையாளர் மட்டுமல்லாமல் ஒரு ஊடகவியலாளராகவும் பணியை மேற்கொண்டிருந்தார். ஈழநாடு, வீரகேசரி, சுடரொளி, வலம்புரி, தினக்குரல், றுநநமநனெ நுஒpசநளளஇ ஆகிய பத்திரிகைகளினதும் ஜேர்மனி “மண்“ சஞ்சிகையின் செய்தியாளராகவும் செயற்பட்டிருக்கிறார். இவை மட்டுமல்லாமல் “அறவழி“  என்ற தமிழ், ஆங்கில பத்திரிகைகளின் பிரதம ஆசிரியராகவும் கடமை புரிந்துள்ளார். யுத்தமும் அழிவுகளும் பெருகப் பெருக நாங்கள் பலர் வெளிநாடுகளுக்கு ஓடித் தப்ப பல அரசியல் நெருக்கடிகள் உயிராபத்துக்கள் நெருங்கி வந்தபோதெல்லாம் அந்த மண்ணில் கலங்காமல் தயங்காமல் தைரியத்துடன் தொடர் பணியாற்றிய இந்த வீரனுக்கு யார்தான்  பட்டங்களை வழங்குவார்கள். உலகில் வெளிவரும்  பல தமிழ் ஊடகங்கள் இவரின் இறப்புச் செய்தியைக்கூட தமது ஊடகங்களில் தெரியப்படுத்தக்கூட முன்வராமை வேதனைக்குரிய விடையமே. .பட்டங்கள் பதவிகள், பொன்னாடைகளை எதிர்பார்க்காமல் தன் உடலுழைப்பைத் தியாகம் செய்துவந்த இவரின் அறவழிப் போராட்ட பணிகளுக்கு உதவுவதற்கு மண் சஞ்சிகையின் வாசகர்களால் சேர்க்கப்பட்ட பணம் 2000-00 யூரோ வரை முன்னர் நான்கு தடவைகள் அனுப்பியிருக்கின்றோம் என்பதையும் இங்கே குறிப்பிடவேண்டும்.
பல நாடுகளுக்கு இவர் சென்று பயிற்சிப் பட்டறைகளில் மேற்கொண்டதுடன் அந்த நாட்டு அரச சார்பற்ற நிறுவனங்களின் உதவிகளையும் பெற்று அறவழி இயக்கத்தை கட்டி வளர்த்திருக்கிறார். சர்வதேச தொண்டராகச் செயற்பட்ட இவர் சமூக அக்கறைகொண்ட ஓர் அர்ப்பணிப்பாளர். பண்பாளர், சேவையாளராகிய இவர் சமூக மாற்றத்திற்கான அச்சாணியாகச் செயற்பட்டிருக்கின்றார். மானிட நேயம் மிக்க இந்த மனிதர் கடந்த 40 ஆண்டுகளாகத் தொடர் பணிபுரிந்த அன்பு ஜீவா அவர்களின் ஆத்ம சாந்திக்காக நாமும் பிரார்த்திக்கும் வேளை அவர் ஆற்றிய பணிகளை நாமும் கருத்திற்கொண்டு வாழ்வோம்.
மரணம் என்பது சிறு நிகழ்வுதான். ஆனால் ஒருவன் மரணத்தின் பின்பு 
மக்களால் பேசப்படுகின்றான் என்றால் அது வரலாறு. வரலாறு ஒருவன்
இறந்த பின்பும் வாழவைக்கின்றது!...

நமது பிறப்பு ஒரு சம்பவமாக இருக்கலாம்
இறப்பு ஒரு சரித்திரமாக இருக்க வேண்டும்!..
                        -நன்றி-     
          வ-சிவராசா – பிரதம ஆசிரியர் – மண் சஞ்சிகை – ஜேர்மனி – 19-03-2013.