தமிழ் சினிமா




சந்தமாமா 

வித்தியாசமான கதையும், நல்ல கவிதை வரிகளுடன் பாடல்களும், சிறந்த தொழில்நுட்ப கலைஞர்கள் இருந்தாலும் நானே நாயகன் என்கிற கருணாஸின் பிடிவாதத்தால் சந்தமாமா சாறு வீணாகிப் போன "சக்கை மாமா" வாக மாறிவிட்டது.
கருணாஸ் ஒரு எழுத்தாளனாக பலராலும் அறியப்படவேண்டும் என்ற பெரும் ஆசையுடன் கிராமத்திலிருந்து சென்னைக்கு வருகிறார்.
சந்தமாமா என்ற பெயரில் எழுதி, அதனை அவரே அச்சிட்டு, வெளியிட்டு, தனது செலவிலேயே விளம்பரம் செய்து விற்பனை செய்து வருகிறார்.
ஆனால், இவரது எழுத்துக்களை படிக்க யாரும் முன்வரவில்லை. ஒரு சந்தர்ப்பத்தில் நாயகி ஸ்வேதாபாசுவை சந்திக்கும் கருணாஸ் அவர் மூலமாக தன்னுடைய புத்தகங்களை விற்க முயற்சி செய்கிறார். ஆனால் அதுவும் கைகொடுக்கவில்லை.
இந்நிலையில், தனக்கு உதவியாக இருந்த ஸ்வேதாபாசுவுக்கு திருமண ஏற்பாடுகள் நடைபெறுகிறது. மணமகன் திருமணத்திற்கு முன்பே ஓடிவிட திருமணம் நடைபெறாமல் பாதியிலேயே நின்றுவிடுகிறது.
இதனால் மனமுடைந்த ஸ்வேதா பாசுவுக்கு வாழ்க்கை கொடுக்க கருணாஸ் முன்வருகிறார். அதன்படி திருமணமும் செய்து கொள்கிறார்.
கருணாஸ் சந்தமாமா என்ற பெயரில் எழுதிய கதைகளை எல்லாம் இவர் பெரிதும் மதிக்கும் ஜெ.காந்தன் என்னும் எழுத்தாளர் குப்பை என ஒதுக்கித் தள்ளுகிறார்.
ஒரு சிறந்த எழுத்தாளராக வரவேண்டும் என்றால் அனுபவித்து எழுத வேண்டும், அது படிப்பவர்களின் மனசை தொட வேண்டும் என்ற அறிவுரையின் பேரில் அனுபவ ரீதியாக ஒரு காதல் கதையை எழுதி பெயரெடுக்க நினைக்கிறார்.
ஆனால் காதலித்த அனுபவம் தனக்கு இல்லை என தவித்துக் கொண்டிருக்கிற நிலையில், தனது மனைவியை அவள் திருமணம் ஆனவள் என்பது கூடத் தெரியாமலேயே காதலிக்கும் இளைஞனான ஹரீஸ் கல்யாண் வருகிறார்.
அவனை காதலிப்பது போல தனது மனைவியை நடிக்கச் சொல்கிறார் கருணாஸ். ஆனால் ஸ்வேதாபாசு இதற்கு மறுக்கிறார்.
உடனே, கருணாஸ் எனக்கு காதலில் முன் அனுபவமில்லை. அதனால் நீ அவனை காதலிப்பது போல நடித்தால் அந்த அனுபவத்தை நேரில் பார்த்து நான் ஒரு கதையை வார இதழில் தொடராக எழுதி நல்ல பெயரும், புகழும் அடைவேன் என்கிறார்.
தனது கணவனின் ஆசைக்காகவும்,நீண்ட நாள் லட்சியத்துக்காகவும் ஹரீஸ் கல்யாணை காதலிப்பது போல நடிக்க ஆரம்பிக்கிறார் ஸ்வேதா பாசு.
ஆனால், ஸ்வேதாபாசுவை உண்மையாக காதலிக்கும் ஹரீஸ் கல்யாண் அவரை திருமணம் செய்துகொள்ள தயாராக, அதன் பின் பிரச்சினைகள் தொடங்குகிறது.
இந்த பிரச்சினைகளிலிருந்து ஸ்வேதா பாசு மீண்டு வந்தாரா? கருணாஸின் எழுத்தாளனாக பேரெடுக்கவேண்டும் என்ற ஆசை நிறைவேறியதா என்பதே மீதிக்கதை.
படம் தொடங்கியது முதல், ஜெ.காந்தன் பொலிஸ் நிலையத்தில் கருணாஸின் புத்தகத்தை படித்துவிட்டு கோபப்படும் காட்சி வரை நகைச்சுவையாக கொண்டு சென்றிருக்கிறார்கள்.
அதன்பின், வரும் காட்சிகளால் கதையை எப்படி முடிக்கப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறார் இயக்குனர்.
சந்தமாமாவாக கருணாஸ். வழக்கம்போலவே அப்பாவியான எழுத்தாளர், கணவர், நண்பன் என கதாபாத்திரத்திற்கு தகுந்த நடிப்பை நேர்த்தியாக வெளிப்படுத்தியுள்ளார்.
ஃபேன் விற்க வந்த ஸ்வேதாபாசுவை தன்னுடைய ரசிகை என்று எண்ணி, அதன்பின்னர் அவர் சேல்ஸ் கேர்ள் என்று தெரிந்தபின் அவர்மீது கோபப்படுவதும், தான் ஒரு எழுத்தாளானாக ஆகவேண்டும் என்பதற்காக ஹரீஸ் கல்யாணை காதலிக்க மனைவியிடம் கெஞ்சுவதும் என ஒரு மொக்கை எழுத்தாளனை நம் கண்முன்னே நிறுத்துகிறார்.
கதாநாயகியாக ஸ்வேதா பாசு கொள்ளை அழகு. குழந்தைத்தனமான முகம். இவர் படத்தில் அவ்வப்போது காட்டும் முகபாவனைகள் நம்மை கவர்ந்திழுக்கிறது.
தனது கணவன் கருப்பாக இருந்தாலும் அவனது நல்ல மனதை அறிந்து அவனுக்காகவே வாழ்வது, அவன் மீது அளவு கடந்த அன்பு வைத்திருப்பது என தனது கதாபாத்திரத்தில் அக்மார்க் மனைவியின் நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். கொலிவுட்டில் ஒரு ரவுண்டு வருவார் என்று எதிர்பார்க்கலாம்.
ஸ்வேதாபாசுவை காதலிக்கும் இளைஞனாக ஹரீஷ் கல்யாண். படத்தின் துணை கதாபாத்திரத்திற்கு தூணாய் நின்றிருக்கிறார். மேலும், இந்த கதாபாத்திரத்துக்கு சரியாக பொருந்தியிருக்கிறார் என்று சொல்லலாம்.
கருணாஸின் அப்பாவாக வருகிறார் இளவரசு. மகன் எவ்வளவு பணம் கேட்டாலும் காரணம் கேட்காமல் கொடுக்கிறார். அதற்கு இரண்டாம் பாதியில் தரும் பிளாஸ்பேக் மிகச் சாதாரணமாக இருக்கிறது.
எம்.எஸ்.பாஸ்கர், பாவா லட்சுமணன், கொட்டாச்சி என்று சக கொமெடி நடிகர்களும் படத்தில் உண்டு, ஆனால் கொமெடிதான் இல்லை.
ஸ்ரீகாந்த் தேவாவின் இசையில் ‘கோயம்பேடு சில்க்கக்கா’ என்ற குத்துப் பாடலும் ‘யாரோ நீ’ என்ற மெலோடி பாடல் மட்டும் மனதில் நிற்கிறது. மற்ற பாடல்கள் இது ஸ்ரீகாந்த் தேவாவின் இசை என்பதற்கு அடையாளமாக இருக்கிறதே தவிர புதிதாக வேறொன்றும் இல்லை.
ஆனந்தக்குட்டனின் ஒளிப்பதிவில் கேரளாவில் ‘யாரோ நீ’ பாடல் காட்சியை படமாக்கியிருக்கும் விதம் அருமை. நடுத்தர பட்ஜெட்டுக்கு ஏற்றாற்போல காட்சியமைப்புகளை எளிமையாக கையாண்டிருக்கிறார்.
குழந்தைகளை கவரக்கூடிய எந்த சமாச்சாரங்களும் இல்லாத இந்தப்படத்தை ஏன் குழந்தைகளுக்கான படம்போல காட்ட முயற்சி செய்கிறார்கள் என்ற கேள்வியை இயக்குனர் ராதாகிருஷ்ணனிடம் கேட்கத் தோன்றுகிறது.
இப்படியெல்லாம் செஞ்சுதான் ஒரு மனுஷன் எழுத்தாளன்னு பேரெடுக்கணுமா என்ற கேள்விக்கு படத்தின் இடையிடையே பலமுறை கருணாஸ் பற்றிய வசனத்தில் பதில் சொல்லிவிடுவதால் படத்தின் ஓட்டத்தில் அது தவறாகவே தெரியவில்லை. அதற்காக இயக்குனருக்கு பாராட்டுக்கள்.
மொத்தத்தில் ‘சந்தமாமா’ கொமெடி மாமா.

நன்றி விடுப்பு

No comments: