புரிந்துணர்வையும் தேடலையும் உருவாக்கும் இணைய இதழ் அவுஸ்திரேலியா தமிழ்முரசு - முருகபூபதி

.
கணினி யுகம் வந்தபின்னர் மனிதவாழ்வு மின்னல் வேகத்தில் மாறிக்கொண்டிருக்கிறது. மக்களின் அன்றாட வாழ்வில் குறிப்பாக இணைய இதழ்கள், வலைப்பூக்கள், ஸ்கைப் எனப்படும் நேரடி தொடர்பாடல் சாதனம் என்பன தவிர்க்கமுடியாத அம்சங்களாகிவிட்டன.
இந்தப்பின்னணியுடன்தான் இன்று தனது அயராத தொடர்ச்சியான பணியில் மூன்று ஆண்டுகளைப்பூர்த்திசெய்துள்ள அவுஸ்திரேலியா சிட்னியிலிருந்து இயங்கும் இணைய இதழ் தமிழ்முரசுவைப்பார்க்கின்றோம்.

வாரம்தோறும் திங்கட்கிழமை அதிகாலை எழுந்ததுமே நான் முதலில் பார்ப்பது அவுஸ்திரேலியா தமிழ் முரசு இணைய இதழைத்தான். அதன் பிறகு ஏனைய இணையங்களை தரிசிப்பேன்.
நான் பிறந்த நாடு இலங்கையில் செய்திகளை எழுதியவர்களே செய்திகளாகிப்போகும் துர்ப்பாக்கியம் தொடருகிறது. உலகில் தொடர்பூடகம் வலிமையான சாதனம். பல உலகநாடுகளில் ஆட்சிமாற்றங்களை ஏற்படுத்திய பெருமையும் ஊடகங்களை சாரும். உதாரணத்திற்கு பதச்சோறாக ஒன்றை குறிப்பிடலாம்.


அமெரிக்காவில் நிக்ஸன் அதிபராக பதவியிலிருந்த காலத்தில் பெரிதும் பேசப்பட்ட வோட்டர்கேட் விவகாரம். பின்னர் திரைப்படமாகவும் வெளியானது.
ஊடகசுதந்திரம் கேள்விக்குறியாகியுள்ள தமிழ் சமூக அமைப்பில் இணையத்தளங்களை நடத்துபவர்களும் பல்வேறு அழுத்தங்களுக்கும் நெருக்கடிகளுக்கும் ஆளாகிவருகின்றனர்.  பத்திரிகை, இலக்கிய சிற்றிதழ்கள் வெளியிடும் நிறுவனங்களில் ஆசிரியர்கள், துணை ஆசிரியர்கள்;, நிருபர்கள், நிறுவன பணியாளர்கள் மட்டுமன்றி மற்றும் ஒரு அசையும் சொத்தும் நிச்சயம் இருக்கும். அதன் பெயர் குப்பைக்கூடை.
அங்கு பணியாற்றும் ஆசிரியர்கள் பத்திரிகை, இதழ்களுக்குத்தேவைப்படுவனவற்றை மாத்திரம் ஏற்றுக்கொண்டு அவசியமற்றவற்றை குறிப்பிட்ட குப்பைக்கூடைக்குள் எறிந்துவிடுவார்கள். மறுநாள் சிற்றூழியர் குப்பைகளை, கழிவுகளை அப்புறப்படுத்தி குப்பைக்கூடையை சத்தம்செய்துவிட்டு உரிய இடங்களில் வைப்பார்.
கணினி யுகம் வந்தபின்னர், மின்னஞ்சல் வந்தது. அங்கும் ஒரு கூடை பின் (டீin) என்ற பெயரில் இருக்கிறது. தேவையற்றவற்றை அங்கே அனுப்பிவிடலாம். தினமும் இந்த வேலையை நானும் செய்கின்றேன். அல்லது மீண்டும் வராதிருக்க தடுக்கின்றேன்.
கணினியும் மின்னஞ்சலும் வைத்திருப்பவர்களின் அன்றாடப்பணிகளில் இதுவும் ஒன்றாகிவிட்டது.
தமிழ்முரசு, அவுஸ்திரேலியா வாழ் தமிழ் வாசகர்களுக்கு நல்ல பலனைத்தருகிறது. ஏற்கனவே அச்சு ஊடகத்தில் இந்த நாட்டில் பல பத்திரிகைகள், இதழ்கள் வெளியானபோதிலும் காலப்போக்கில் அவற்றின் ஆயுள் குறுகிவிட்டது. அந்த வெற்றிடத்தை தமிழ்முரசு இணைய இதழ் நிரப்பியிருப்பதாகவே கருதமுடிகிறது.
சமூகத்தின் தேவைகருதி வாராந்தம் தங்கு தடையின்றி சுமார் மூன்று வருடகாலம் ஒரு இணைய இதழை நடத்துவது என்பது சாதனைதான். அதற்குப்பின்னால் இருக்கும் மனித உழைப்பு மரியாதைக்குரியது. தமிழ்முரசு, அவுஸ்திரேலியா தமிழ்சமூகத்தில் இடம்பெறும் முக்கிய நிகழ்வுகள், நிகழ்வுகளின் விமர்சனம் அல்லது கண்ணோட்டம் முதலானவற்றை பதிவுசெய்துவருகிறது.
அத்துடன் அரசியல் செய்திகள், இலக்கியப்பதினங்கள். சமூகம், சமயம், அமைப்புகள் சார்ந்த அறிவித்தல்களை உடனுக்குடன் வெளியிடுகின்றது.
சில தொடர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறது. அத்துடன் வாசகர்களின் கருத்துக்கும் களம் தருகிறது. ஆயிரக்கணக்கான வாசகர்கள் தமிழ்முரசுவை வாரம்தோறும் பார்த்துவருகின்றனர்.
திங்கட்கிழமைகளில் காலையில் தமிழ்முரசு இணையத்தளத்தை பார்த்தவுடன் அடுத்து நான் சில நிமிடங்கள் பொறுமையாக அமர்ந்து, உலகெங்கும் வாழும் எனக்குத்தெரிந்த அன்பர்கள் நண்பர்கள் மற்றும் இதழ் ஆசிரியர்களுக்கு அதனை அனுப்பிவைக்கின்றேன்.
இணைய இதழ்களை நடத்துபவர்களுக்கு சில சமூகப்பொறுப்புணர்வும் அவசியமானது. ஏதிர்வினைகளை ஏற்படுத்தக்கூடிய அல்லது வில்லங்கமான செய்திகள் கிடைக்கும் பட்சத்தில் குறிப்பிட்ட செய்தியின் மறுபக்கத்தையும் தொடர்புகொண்டு உண்மைத்தன்மையை ஊர்ஜிதம் செய்துகொள்ளவேண்டும். இல்லையேல் வாதிப்பிரதிவாதங்கள் பெருகி இறுதியில் குழாயடிச்சண்டையாகத்தான் முடியும். இந்நிலைமை இணையத்திற்கு ஆரோக்கியமானதல்ல.
  கணினி யுகம் வந்தபின்னர் பெரும்பாலான பத்திரிகையாளர்கள் மடிக்கணினியுடன்தான்; (Lap top) பவனி வருகின்றனர்.  அவர்களுக்கு சுலபமாக அதனைக் கையாளவும் முடிகிறது. சிங்கப்பூரில் என்னைச்சந்தித்த ஒரு பெண் ஊடகவியலாளர் பேட்டி காணும்போது மடிக்கணினியில்தான் எழுதினார்.
 யாழ்ப்பாணத்தில் நல்லூர் நாவலர் மண்டபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசிக்கொண்டிருந்தேன். நான் பேசி முடிப்பதற்கு முன்பே,  ஒரு பத்திரிகையாளர் படமும் எடுத்து செய்தியுடன் தமது மடிக்கணினி ஊடாக கொழும்புக்கு மின்னல் வேகத்தில் செய்தி அனுப்பியிருக்கிறார். மறுநாள் பத்திரிகையை பார்த்தபின்பே அவரது வேகம் புரிந்தது. உலகம் சுருங்கிக்கொண்டிருக்கிறது என்பதற்கு இதுபோன்று பல உதாரணங்களைக்கூறமுடியும். மின்னல்  வேகத்தில் இயங்கவேண்டியுள்ள இக்காலப்பகுதியில் ஊடகத்துறைக்கு கணினி வரப்பிரசாதமாகியிருக்கிறது. இயந்திரவேகத்தினால் நிகழ்ச்சிகளை அவசர அவசரமாக தயாரிக்கவேண்டிய நிலைக்கு ஆளாகின்றவர்களையும் அவதானிக்கமுடிகிறது.
 இவ்வாறு இலங்கையில் வெளியாகும் தினக்குரலின் பதினைந்தாவது நிறைவை முன்னிட்டு வெளியிடப்பட்ட சிறப்புமலரில் எழுதிய கட்டுரையில் குறிப்பிட்டிருக்கிறேன். அதனையே இங்கும் மீண்டும் நினைவுபடுத்துகின்றேன்.
நாம் வாழ்வது அவசரயுகத்தில். பத்திரிகை விலைகொடுத்து வாங்கி படிப்பதற்கும் நேரமில்லாமல் எம்மவர்கள் ஓடிக்கொண்டிருக்கிறார்கள். கிடைக்கும் சொற்பநேரத்தில்தான் கணினியை முடுக்கிவிட்டு இணைய இதழ்களை பார்த்து உலகநடப்புகளை தெரிந்துகொள்கிறார்கள். படைப்பிலக்கியங்கள் (கவிதை, கட்டுரை, சிறுகதை)  உட்பட விமர்சனங்களை படிப்பதற்கு விரும்பும் தீவிர இலக்கிய வாசகர்கள் காலம் ஒதுக்கி ஆறுதலாகப்படிக்கிறார்கள்.முன்னர்  தவறவிட்டவற்றையும் காலம்கடந்தும் பார்ப்பதற்கு ஏற்ற வசதிகள் இணையத்தில் இருப்பதனால் வாசகர்கள் பயனடைகிறார்கள்.
இணைய ஊடகங்கள் அதில் எழுதுபவர்களின் இருப்பை மட்டுமல்ல வாசகரிடத்தில் புரிந்துணர்வையும் தேடலையும் உருவாக்கவேண்டும்.
அவுஸ்திரேலியா தமிழ்முரசு இணைய இதழ் பலதரப்பட்ட அனுபங்களை கடந்தவாறு நான்காவது ஆண்டில் அடியெடுத்துவைக்கிறது. எம்போன்ற படைப்பாளிகளுக்கும் பத்திரிகையாளர்களுக்கும் சிறந்த களம் தருகின்றது. இச்சந்தர்ப்பத்தில் தமிழ்முரசுவுக்கு எமது வாழ்த்துக்களை தெரிவித்து அதன் பிறந்த நாளை நெஞ்சில் நிறுத்துகின்றோம்.
                                   ---0---







No comments: