தொடரட்டும் தமிழ்முரசு ஒலிக்கட்டும் அதன் ஒலி உலகெங்கும்.


.மாத்தளை  சோமு 
                                    

வானெலி அடங்கிய ஒலிஊடகம் இருந்த போது அச்சு ஊடகமே நாடெங்கும் பரவலாக இருந்தது. தலைப்புச்செய்திகளை மட்டுமே வானொலி ஒலிபரப்பியது. ஆனால் அச்சு ஊடகங்கள் விரிவான செய்திகளோடும் படங்களோடும் மக்களை நெருங்கி ஆளுமை கொண்டிருந்தன.

விஞ்ஞான முன்னேற்றத்தில் ஒலியோடு ஒளியும் சேர்ந்து தொலைக்காட்சி உருவாகி அது பரவலானபோது ஒலி ஊடகம் தனது ஆளுமையில் சற்றுத்தேய்வினைக் கண்டது.
கால ஓட்டத்தில் ஒலி ஒளி எழுத்து என்பன கைகோர்த்து கணனிக்குள் வந்தபோது அதன் வளர்ச்சி அதன் விரிவு உலக நாடுகளின் எல்லைகளைத்தாண்டி செய்திகளை மின்னல் வேகத்தில் பரப்பின.
கணனியின் மாயக்குழந்தைதான் இணையத்தளம். ஆனால் அதன் மாயம் மாயாஜாலம் மட்டுமானதாக இல்லை நம்பகத்தன்மை கொண்டதாகவும் இருந்தது. இணையத்தளத்தின் வேகம் அதன் விரிவு செறிவு மனிதர்களால் தவிர்க்கமுடியாததாகி விட்டன. இன்று இணையத்தளங்களில் பல்வேறு மின்இதழ்கள் மலர்கின்றன. அவ்வாறு அவுஸ்ரேலியாவில் மலர்ந்ததுதான் தமிழ்முரசுஒஸ்ரேலியா.

தமிழ்முரசு திங்கள்கிழமை தோறும் மலர்ந்தபோதும் அச்சு ஊடகங்களுக்கு முன்பாகவே செய்திகளை நிகழ்ச்சிகளை சமூகநிகழ்வுகளை கொண்டுவந்து விடுகின்றது. அந்த பரம்பலில் அச்சு ஊடக இதழ்கள் போட்டியிட முடியாது போய்விடுகின்றது. இந்த உண்மை உலகில் வரும் எல்லா அச்சு இதழ்களுக்கும் பொருந்தும். ஆகவேதான் தழிழக சஞ்சிகைகள் இணையத்தளத்திலும் தமது இதழ்களைப் பதிகின்றன.

தமிழ்முரசுஒஸ்ரேலியாவில் திங்கள்தோறும் பதிவாகும் மின்இதழை அதன் அமைப்பு அதன் செறிவு ஆகியவற்றிற்காக பாராட்டலாம். அவுஸ்ரேலியாவில் புலம் பெயர்ந்த தமிழர்கள் பங்கேற்கும் நடாத்தும் கலை இலக்கிய நிகழ்வுகளை உலக அரங்கில் வேகமாக தமிழ்முரசு கொண்டு சென்று விடுகின்றது. இவற்றை மின் இதழால் மட்டுமே சாத்தியமாக்கமுடியும். ஆகவே நான்காம் ஆண்டில் காலடிவைக்கும் தமிழ்முரசுஒஸ்ரேலியா தொடர்ந்து ஒலிக்க வாழ்த்துகிறேன். தொடரட்டும் தமிழ்முரசு ஒலிக்கட்டும் அதன் ஒலி உலகெங்கும்.

No comments: