நான்காவது ஆண்டில் தமிழ்முரசு.............சௌந்தரி கணேசன்


.

அங்கொன்றும் இங்கொன்றுமாக அவ்வப்போது தோன்றியும் மறைந்தும் போகின்ற இணைய சஞ்சிகைகளுக்கு மத்தியில் தமிழ்முரசு தனது நான்காவது ஆண்டில் காலடி எடுத்து வைப்பதென்பது வரவேற்கப்படவேண்டியது.
தமது அடிப்படை வாழ்வாதாரப் பணியை செய்து கொண்டே தமிழ்முரசின் பணியையும் இடைவிடாது நிறைவேற்றும் தமிழ்முரசின் பொறுப்பாளர்கள் நினைவுகூரப்பட வேண்டியவர்கள்;. அவர்களது பணிகளுக்கு உறுதுணையாக இருந்து அவர்களது முயற்சிகளுக்கு ஆதரவு கொடுக்க வேண்டியது ஒருவகையில் நமது சமூகக் கடமையும்கூட.
சமகால இலக்கிய வடிவங்களில் இணையப் பத்திரிகை என்பது மிகவும் முக்கியமானதும் தனித்துவமானதாகவும் மாறிவருகின்றது. வாசிக்கும் பொறுமை அற்றுப்போன இந்தக் காலகட்டத்தில் இலக்கிய ரீதியான அளவுகோல்களால் வரையறுக்கப்பட்ட இறுக்கநிலை எழுத்துகளுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுக்காது இலகு மொழியில் சிலவற்றை விரிவாகவும் சிலவற்றை சுருக்கமாகவும்  இயல்பாகச் சொல்ல முனைகின்ற தமிழ்முரசை பெரும்பாலான வாசகர்கள் விரும்புகின்றனர்.
சமூக நிகழ்வுகளையும் அவற்றின் மையப் படைப்புகளையும் பலரும் தெரிந்து கொள்ளும் விதமாக செழுமையான செறிவான விமர்சனங்களுடன்கூடிய புகைப்படங்களையும் தாங்கிவருவதன் மூலம் அவுஸ்திரேலியத் தமிழ்சமூகத்தை தமிழ்முரசு தன்பக்கம் கவர்ந்து கொண்டுள்ளது. உள்நாட்டு நிகழ்வுகளின் விம்பங்கள் என்னும் ஒற்றைப் பரிமாணத்துக்குள் சிக்குண்டு போகாமல் பன்முகத் தன்மையையும் தாங்கி பலவிதமான இலக்கியச் சுவையோடு வாராம்தோறும் வலம்வரும் தமிழ்முரசு வரவேற்கப்படவேண்டியதொன்று.



ஆர்ப்பாட்டமில்லாத எளிமையான வடிவமைப்பும் தமிழ்ச் சமூகத்துடன் இணைந்து செல்லும் இசைவும் தனிமனிதர்களின் உணர்வுநிலையை மதிக்கும் தேர்ந்த பண்பாட்டையும் தன்னகத்தே கொண்டு மிளிர்கின்ற தமிழ்முரசு அனைத்துலக இலக்கிய வாசகர்களும் நுகரும் வண்ணம் பரந்துபட்ட படைப்புகளுடன் மிளிரவேண்டும் என்பதே என்போன்ற வாசகர்களின் விரும்பாகும்.
தொடர்ச்சியாக சமூகத்துக்குள் எம்மை அழைத்துச் செல்வதன் மூலம் தமிழ்முரசு தன்மீதுள்ள ஈர்ப்பை தக்கவைத்துக்கொள்ளும் என்பதில் ஐயமில்லை. இனிவரும் காலங்களில் வாசிப்புச் சாத்தியங்களை மேலும் உள்ளடக்கி படைப்பாளனுக்கும் வாசகனுக்கும் புதிய வெளிச்சங்களைக் காட்டி முன் முடிவுகள் ஏதுமின்றி ஆர்வமற்ற வாசகர்களையும் கவரும்; வகையில் எல்லைகளை விரிவுபடுத்தி தொடர்ந்தும் புத்துயிர்ப்போடு முன்னகரவேண்டுமென்று ஆர்வமுள்ள வாசகியாக வாழ்த்துகின்றேன்



3 comments:

திருநந்தகுமார் said...

தமிழ் முரசு பற்றிய சௌந்தரியின் மதிப்பீடு நன்று. நல்ல சொற்தேர்வும், செழுமையான கருத்துகள்.
தமிழ் முரசுக்கு வாழ்த்துகள்.
பொறுப்பாளர்களுக்குப் பாராட்டுகள்.

Anonymous said...

சவுந்தரிக ணேசனேநீ தமிழ்முரசின் நான்காண்டுச்
சாதனையைப் போற்றிநின்ற தமிழ்வளத்தாற் பலரைக்
கவர்ந்திட்டாய்! கன்னித்தமிழ் கவராதெவ ருளரோ?
கருத்துமிகு சொல்லாட்சி கருத்தைமிக ஈர்த்ததே!
உவந்தளித்த கட்டுரையின் உரங்கண்டுவப் புற்றேன்!
ஊடகத்துறை தனிலேநீ உன்னதநிலை அடைவாய்!
மிகுந்தமகிழ் வுடன்விதந்துனைப் பாராட்டு கின்றேன்!
வித்தகியே மேலுந்தமிழ் விருத்திபெற்றுயர்ந்து வாழி!.
இளமுருகனார் பாரதி.

Ramesh said...

நல்ல எழுத்து. இலகுவான நடையில் சொல்லி இருக்கின்றீர்கள் அக்கா .

அக்காவோ தங்கையோ தெரியாது பறுவாயில்ல ஜி ஜி ஜி ஜி ....