அச்சம் என்பது மடமையடா...



தொலைநோக்குப் பார்வையுடன் கவியரசர் இலங்கைத் தமிழர் பிரச்சினையைப் பற்றிச் சிந்தித்துப் பார்த்திருக்கிறார் என்பதை இப்பொழுது நினைத்துப் பார்த்தாலும் வியப்பாக இருக்கிறது. தென்றல் இதழில் இது குறித்து பின்வருமாறு எழுதினார்:

குன்றத்தில் உச்சி யேறிக்
கொடும்புலி பாம்பு கொன்று
அன்றந்த இலங்கை நாட்டை
ஆக்கினான் உனது பாட்டன்
இன்றந்த நாட்டில் நீயும்
என் தமிழ்த் தோழர் தாமும்
நன்றிகொள் நாடாள்வோ ராலே
நலிவுற நேர்ந்த தென்றால்
என்னயான் சொல்வேன்? வாழும்
இருபது இலட்சம் பேரும்
என்னவர்! எனது மூச்சு!
இழைபிரித் தெடுத்த பாகம்!
அன்னமே வருந்த வேண்டாம்
அழிவது தமிழே என்று
சொன்னவர் அழியுமாறு
துவக்குக போரை! வெல்வோம்!
குருதியே ஓடி னாலும்
கடல்நிலம் சிதைந்த போதும்
பரிதியில் மாலை வண்ணம்
படைத்தது மண்ணென் றாலும்
வருதுயர் தமிழர்க் கென்றே
'வாழிய' பாடல் பாடி
உறுதியில் இறங்கு! வெற்றி
உனக்கிது! இயற்கை வேதம்!
மொழியின்றி விழிகளில்லை
மூச்சில்லை பேச்சு மில்லை!
கழிசடை உடைமை யாளர்
கருவிலே கயமை தோய்ந்தோர்
இழிமொழி வீசினாலும்
எடுபிடி வேலை செய்து
அழிவுனக் கீந்த போதும்
அஞ்சிடேல் பண்பு குன்றேல்!


நாமெல்லாம் தமிழ் மக்கள்
நமக்குநாம் பாதுகாப்பு!
நாமெல்லாம் அழிவ தால்ஓர்
நாட்டினர் வாழ்வாரென்றால்
நாமெல்லாம் வாழ்வதற்கந்
நாட்டினர் அழிதல் நீதி!
நாமெல்லாம் அழிந்து எந்த
நாடிங்கு வாழும்! பார்ப்போம்!
தமிழர்கள் கெடுவ தொன்றே
தரணியில் முறையா? தூய
அமிழ்தொழித் தரக்கர் கூட்டம்
ஆள்வது சரியா? இல்லை!
தமிழுக்கும் தமிழருக்கும்
தடைபோடும் வெறியர் தம்மை
இமைவேறு கண்கள் வேறாய்
இருநூறு துண்டங் காண்போம்!

 பழ.நெடுமாறன் "கவியரசர் என் காவலர்" நூல்
நன்றி கவியரசு மின்னஞ்சல் 1347

No comments: