கொண்டாட்டங்கள் எஸ். கிருஷ்ணமூர்த்தி




அண்மையில் முகப்பு புத்தகத்தில், அது தான் பேஸ் புக்கில்  எனது பேஸ் புக் நண்பர் ஒருவர், தைப் பொங்கலும் எங்கடை கொண்டாட்டம் இல்லையாம், அது ஆபிரிக்கர்களின் விழாவாம் என்று  என்று அழுது கொண்டிருந்தார். சித்திரை வருசப் பிறப்பு இப்ப ஆரியர் வருசம் என்று எங்கடை தமிழ் அபிமானிகள் ஓலமிட,  அப்போதைய தமிழக முதல்வர் கருணாநிதியும் என்னை விட வேறு தமிழ் அபிமானிகள் உண்டா எனப் பொங்கியெழுந்து  தைப் பிறப்புத்தான்  தமிழரின் புது வருடம் எனப் பிரகடப்படுத்தினர். இதற்கென்ன காசா செலவழிக்க வேணும், வெறும் பிரகடனம்தானே செய்து விட்டுப் போகட்டும் என்று நினைத்தேன். தீபாவளியும் ஆரியருடையது என்று எம்மில் சிலர் அவர்களுக்கே திருப்பிக் கொடுத்துவிட்டார்கள். இதுகள் எல்லாம் சின்ன வகுப்பிற் படிக்கும் போது சினேகிதன் தந்த மயில் இறகை அவனுடன் ஏற்பட்ட சண்டையின் பின் கோபத்தில் திருப்பிக் கொடுப்பது போல இருக்கிறது.

இதைப்பற்றி உரக்கக் கத்துவோர் எல்லாம் யார் என்று பார்த்தால், ஐம்பதைத்தாண்டியவர்கள். அனுபவிப்பதை யெல்லாம் அனுபவித்துவிட்டு இப்ப இளம் சந்ததியினரின் கொண்டாட்டங்களுக்குக் குறுக்கே நிற்கும் இவர்கள் வைக்கல் பட்டடை நாய்களைப் போன்றவர்கள். வாழ்கை கொண்டாடுவதற்கே. இதை மதத்தின் பேரால், மொழியின் பேரால், கலாச்சாரத்தின் பேரால் தூய்மைப்படுத்துவதாக சிலர் சொல்கிறார்கள். மதத்தில் நம்பிக்கை குறைந்த நான் பல காரணங்களுக்காக கோவிலுக்குப் போகிறேன். ஓவ்வொரு கால கட்டத்திலும் வௌ;வேறு நோக்கங்களுக்காக போயிருக்கிறேன்.

தந்தையின் தோழில் என்னைச் சுமந்த காலகட்டத்தில் கோயில் திருவிழா என்றால் குதூகலம். காரணம் ஊதுகுழல,; விசில், காற்றாடி, மிட்டாய் வகைகள் வாங்கலாம். பின்னர் தாயின் சேலைத் தலைப்பை பிடித்துத் திரிந்த காலத்தில் ஐஸ்கிறீம், கச்சான்கடலை, சோளம்பொரி சாப்பிடலாம் என்ற நினைவுகளுடன் போனேன். சிறிது வளர்ந்ததும் சினேகிதர்களுடன் சேர்ந்து உள்ளுர் கோயில், திருவிழக்களுக்குப் போக ஆரம்பித்தேன். அங்கே நண்பர்கள் குழுக்களாகச் சேர்ந்து கும்மாளமடிப்பதும், பள்ளியில் நண்பர்களுக்குள்ளே ஏற்பட்ட சர்ச்சையை சண்டித்தனத்தின் மூலம் தீர்க்கும் இடமாகவும் கோயில் திருவிழாகள் இடம் பெற்றன. ஊர் பிரமுகர்களும், பெரியவர்களும் தட்சணாமூர்த்தியின் தவிலில் லயித்து, அடுத்து வரும் முல்லைச் சகோதரிகளின் சின்னமேளத்தில் மயங்கிக் கொண்டிருக்க நாங்களோ   தென்னையில் ஏறிக் களவாக இளநீர் பிடுங்கிக் குடித்துக் கொண்டும், கள்ளக் கோழி  சமைத்து சாப்பிட்டுக் கொண்டும் இருப்போம்.  நாட்கள் செல்லச் செல்ல எங்களிடம் முன்னேற்றம் ஏற்பட்டது. களவாக இளநீர் பிடுங்குவதிலிருந்து பெற்றோருக்குத் தெரியாமல் உள்ளுர் படமாளிகையில் படம் பார்க்கத்தொடங்கினோம். கொஞ்சநாட்;கள்தான் பொடிநடையாகத் தியேட்டருக்குச் சென்று படம் பார்த்தோம். பின்னர் நாங்களும் வளர அறிவும் வளர எமது நடைப் பயணம், சைக்கிள் பயணமாகி பிறகு  கார்ப் பயணமானது.  யாழ்நகர் திரையரங்குகள் அப்போதுதான் எங்களுக்கு அறிமுகமானது. அங்கேதான் சிக்கலும் ஆரம்பமானது. எமக்கு அருகிலிருந்தது ஒரே ஒரு திரையரங்கு என்ற படியால் அதில் காட்டும்  எம்.ஜி.ஆரினோ, சிவாஜினதோ எந்தப்பட மென்றாலும்; எந்தவித வேறுபாடுமில்லாது போய்ப் பார்ப்போம். ஆனால் யாழ் நகரில் ஏழு எட்டுத் தியேட்டர்கள். அங்கே ஒரே நேரத்தில் எம்.ஜி.ஆர் சிவாஜி படங்கள் காண்பிக்கப்பட்டன. எம்.ஜி.ஆர் ரசிகர்களுக்கும் சிவாஜி ரசிகர்களுக்கும் இடையில் அப்போதெல்லாம் மோதல் உச்சக்கட்டநேரம். இரண்டு குழுக்களும் எந்த நேரமும் தாக்கலாம் என்ற பதட்டமான சூழல். வெட்டுக் கொத்து என்று தாரளமாக இடம் பெறும். எங்களுக்குள்ளேயும்  இரண்டு குழுக்கள் இருந்தன. உள்ளுக்குள்ளே மோதுவோம். வெளியே சென்றால் மௌனம். வெளியே நாங்கள் யார் என்றுகாட்டினால்  ஏதாவது ஒரு குழுவிடமிருந்து கிடைப்பது தர்ம அடிதான்.

கனக்க யோசிக்கிறமாதிரி இருக்கு. இது எழுபத்தாறு, எழுபத்தெழு ஆண்டுக் கதை. நான் குறிப்பிடும் இரண்டு குழுக்கள், எம்ஜிஆர், சிவாஜி ஆதரவு ஆட்கள். இவர்களின் மோதல்கள் பிறகு வந்த இயக்க மோதல்களுக்கு முன்னோடி எனலாம். ராஜா தியேட்டரில் எம்.ஜி.ஆர் படம் போட்டால் எதிரே வின்சர் தியேட்டரில் சிவாஜி படம் ஓடும். மற்றத் தியேட்டர்களில்  முத்துராமன், ஜெயசங்கர், ரவிச்சந்திரன், ஜெமினி கணேசன் இவர்களது படங்களை ஓட்டுவார்கள். எம்ஜிஆர், சிவாஜி படங்களுக்கு ரிக்கற் எடுக்க வல்லமையில்லாதவர்கள் வேறுவழியில்லாததால் மற்றவர்களின் படங்களைப் பார்ப்பார்கள்.  மற்றவர்களது படம் ஓடும்  தியேட்டர்கள் அழுது வடிந்து கொண்டிருக்கும். பாவம்  அங்குள்ள மூட்டைப்பூச்சிகள் பட்டினிதான்.

எங்களுக்கும்  குரல் கரகரத்து மீசை அரும்ப ஆரம்பிக்க எம்ஜீஆர், சிவாஜி மீது இருந்த பார்வைகள் பிறகு அவர்களுடன் ஓடிப்பிடித்து விளையாடின ஜெயலலிதா, மஞ்சுளா, லதா, வாணிஸ்ரீ பக்கம் திரும்பியது. எப்படித்தான் இரண்டு திலகங்களினது ரசிகர்கள்  சண்டைபிடித்து உருள் பட்டாளும், அவர்களது நாயகிகளுக்;கு உந்த வேற்றுப் பிரிவு எல்லாம் கிடையாது. யாருடனும் கட்டிப்பிடித்து உருள்படுவினம். இதனால் எம்.ஜி.ஆர் ரசிகர்களும் அண்ணியைப் பார்க்க சிவாஜி படத்திற்கு வருவார்கள். சிவாஜி ரசிகர்களும் அண்ணியைப் பார்க்க எம்.ஜீ.ஆர் படத்திற்கு வருவார்கள். அதனால் எங்களில் சிலர் எம்.ஜீ.ஆர் படம் பார்க்கமாட்டம், சிவாஜி படம் பார்க்கமாட்டம் என்ற பிடிவாதத்தை விட்டுவிட்டபடியால், எந்தச் சச்சரவும் இல்லாமல் இருவரது படங்களையும் பார்த்தோம். ஆனால் அண்ணிமாரை ரசித்ததாலை காலப்போக்கில் அண்ணன்மாரைத்தான் மறந்திட்டம்.  சிறிதுகாலம் அவர்களுக்காகத் தியேட்டரில் தவம் கிடந்தோம். எத்தனை நாட்கள்தான்  கறுப்புத்தோலுக்கு வெள்ளைப் பூச்சுப் பூசிய எங்கடை நாயகிகளைப் பார்ப்பது. அலுப்புத்தட்ட  வெள்ளைத் தோலைத் திரையில் பார்க்கக் கிளம்பினோம்.

அப்போது. யாழ்மாநகரசபை மண்டபத்தில் றியோ என்ற தியேட்டரும் முற்ற வெளிக்கு எதிரில் றீகல் என்ற தியேட்டரும் இருந்தன. இந்த இரண்டும் சுத்த அசைவம். ஒருநாள் கூட இவற்றில் தமிழ்ப்; படம் ஓடியதாக நான் அறியேன். இப்போது பார்த்தால் இவை துவேசிகள் எனச் சொல்லி போராட்டம் நடத்தியிருக்கலாம். யுத்தம் முந்திக் கொண்டு அந்த தியேட்டர்களை இடிச்சுதள்ளி விட்டது. சரி விட்ட இடத்தைத் தொடருவோம். அந்த இரண்டு தியேட்டர்களின் விளம்பரப் பலகையிலும் ஆங்கிலத்தில் படத்தின் பெயர் இருக்கும். அது எங்களுக்குப் புரியாது. அது முக்கியமில்லை. அதுக்கு கீழே ஆங்கிலத்தில் ‘அடல்ஸ் ஓன்லி’ என்று போட்டிருக்கும். அதுபுரியும். அதுவும் புரியாத ஆட்களுக்கு, ‘வயது வந்தவர்களுக்கு மட்டும்’ என்று தமிழில் எழுதியிருக்கும். அந்த தியேட்டர் விளம்பரப் பலகையில் பாவிக்கப்படும் தமிழ் வார்த்தைகள் இவை மட்டும்தான். வயது வந்தவர்களுக்கு மட்டும் என்று போட்டிருப்பதால்  எங்களுக்கு வயது வந்திட்டுதா? வரவில்லையோ எனச் சந்தேகம். ஆனால் தியேட்டர்காரருக்கு ஒரு சந்தேகமும் வராது. அவர்கள் ரிக்கற்றை கிழித்து உள்ளே அனுப்புவர். இருந்தும் படம் தெடங்கிய பின்னர் இருட்டில் தட்டுத்தடுமாறி உட்காருவோம். இடைவேளைவரை பிரச்சினையில்லை. இடைவேளையின்போது வெளிச்சத்தைப் போடுவார்கள். மெதுவாக பம்மிக் கொண்டு திரும்பிப் பார்த்தால், எங்களுக்குத் தெரிந்த பலமுகங்கள் தென்படும். அவர்கள் எனது நண்பர்களின் அண்ணனோ, தம்பியோ, மச்சன் மாமனோ என்று சிலர் இருப்பார்கள். முதலில் திடுக்கிட்டாலும் பிறகு பேச்சு வார்த்தையில்லாமல் கண்களாலேயே சமரசமாகி விடுவார்கள்.

இப்படி உள்ளுர் திருவிழாக் காலங்களில் நாங்கள் ‘கற்றுக்கொண்ட பாடங்ளை’ உள்ளுரில் பிரயோகிக்க முடியாது. நல்ல கரைவேட்டி புதுச்சட்டை என  போட்டுக் கொண்டு ஊர் திருவிழாக்கு போனாலும், அவையும் பட்டு பாவாடை சட்டை அணிந்து கொண்டு ஒரு சிலுப்பு சிலுத்து விட்டு ஒரு பார்வை பாத்து விட்டுப் போவார்கள். அந்தப் பார்வை காலையில் கணக்கு வாத்தியிடம் வாங்கிக் கட்டிய அடியை சொல்லிக் காட்டும். இப்படி எங்களுடைய பல வண்டவாழங்களை தெரிந்து கொண்டதால், எங்களை ஊரில் எந்தப் பெண்ணும் கண்டுகொள்வதேயில்லை. நாங்களும் செல்வச்சந்நிதி கோவில் வல்லிபுரக் கோயில் என தேவி தரிசனம் காணப் போய் விடுவோம். எங்கை சுற்றினாலும் விதி வலியதோ கொடியதோ தெரியாது. எனக்கும்  எனது நண்பர்கள் பலருக்கும் உள்ளுர் பெண்களே மனைவியாக அமைந்து விட்டது பெரும் சோகம்.  

வெளிநாடு வந்த பின்னர் எனக்கோ எனது குடும்பத்துக்கோ தெரியாமல் பொங்கல் வருசப்பிறப்பு, தீபாவளி என வந்து போகும். சிலவேளை எனது வேலையிடத்து பிஜிநாட்டவரோ மொறிசியர் நாட்டவர்களோ வந்து வாழ்த்துச் சொல்லும் போதே தெரிய வரும். இப்போது பறுவாயில்லை. பேஸ்புக் நண்பர்கள் வாழ்த்துச் சொல்லி எழுப்பி விட்டு விடுவினம். ஆனால் கொண்டாடத்தான் முடியாது. அந்த நேரத்தில் மட்டும் வேலை கடுமையாக இருக்கும். எல்லாத்தையும் சேர்த்துவைத்து நத்தார் ஆங்கிலப் புத்தாண்டு எனக் கொண்டாடவேண்டியது தான். அதாலை தான் சொல்கிறேன். வாழ்க்கை வாழ்வதற்குத்தான். சந்தர்ப்பம் கிடைக்கும் போது இன, மத,மொழி வேறு பாடுபாக்காமல் எதையும் கொண்டாடுவோம்.

அதனால்தான், இப்போதும் கோயிலுக்குப் போகிறேன். ஆன்மீகத்தில் நாட்டம் வந்ததால் அல்ல. மனைவிக்காக. நேற்றும் தொலைபேசியில் எனது மனைவி தனது தோழியிடம் என்னைப் பற்றி குறை சொன்னபடியிருந்தார். இந்த மனுசனைக் கோயிலுக்கு கிளப்பிக்கொண்டு போறதே பெரும்பாடு. 

இஞ்சை என்ன கலியாணவீடு, சாமத்தியச்சடங்குகள் அடிக்கடியா வருகிறது. புதிசா வாங்கிவைத்திருக்கிற சாறியைக் கட்டுவதற்கு. கோயிலுக்குப் போகைக்கைதானே உடுக்கலாம்.





No comments: