உலகச் செய்திகள்


பதவி விலகுகிறார் பாப்பரசர் 16ம் ஆசிர்வாதப்பர்!

பாப்பரசரின் வெளியேற்றம்

நஷீட்டுக்கு எதிராக பிடியாணை இந்திய தூதரகத்தில் தஞ்சம்

பஸ்ஸில் குண்டு வெடிப்பு; பங்களாதேஷில் 16 பேர் பலி

காதலர் தினத்தில் தனது காதலியை சுட்டுக் கொன்ற பராலிம்பிக் வீரர் கைது


பதவி விலகுகிறார் பாப்பரசர் 16ம் ஆசிர்வாதப்பர்!



2013-02-11

பாப்பரசர் 16ம் ஆசிர்வாதப்பர் எதிர்வரும் 28 ஆம் திகதி பதவி விலகவுள்ளதாக வத்திக்கான் அறிவித்துள்ளது.
அவரின் தற்போதைய வயது 85. இந்நிலையில் உடல்நிலையைக் கருத்தில் கொண்டே இம்முடிவை அவர் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதற்கு முன்னர்  1415 ஆம் ஆண்டு 12 ஆவது பாப்பரசர் கிரிகெறி பதவிவிலகியுள்ளார். இதன்படி பதவி விலகும் இரண்டாவது பாப்பரசராக 16ம் ஆசிர்வாதப்பர் பதிவாகியுள்ளார்.             நன்றி வீரகேசரி 



பாப்பரசரின் வெளியேற்றம்

காலச் சக்கரத்தின் துரித சுழற்சியில் 600 வருடங்களின் பின்னர் வத்திக்கானில் மாற்றம் ஒன்று ஏற்பட்டுள்ளது. உலக கத்தோலிக்க மக்களின் தலைவரான பரிசுத்த பாப்பரசர் 16 ஆம் ஆசீர்வாதப்பர் (பெனடிக்ட்) வயது மூப்பு, உடல் நலக்குறைவு காரணமாக  பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்திருக்கிறார். எதிர்வரும் 28 ஆம் திகதி பாப்பரசர் உத்தியோகபூர்வமாகப் பதவி விலகுவதை வத்திக்கானும் உறுதிப்படுத்தியிருக்கிறது. இற்றைக்கு சுமார் 600 வருடங்களுக்கு முன்பு பாப்பரசர் 12 ஆவது கிரெகரி பதவியை இராஜிநாமா செய்திருந்தார். மத ரீதியான அபிப்பிராய பேதத்தாலேயே அவர் இராஜிநாமா செய்ய நேரிட்டது. ஆனால், தற்போதைய பாப்பரசர் 16 ஆம் ஆசீர்வாதப்பர் தனது சுய பிரக்ஞையின் பேரில் அதாவது, இறைவனுக்கு ஊழியம் செய்வதற்குத் தேவையான ஆரோக்கியம் இன்மை மற்றும் முதுமை காரணமாக பதவி  விலகுவதாக அறிவித்திருக்கிறார். 

2005  இல் பாப்பரசராகப் பதவியேற்ற ஆசீர்வாதப்பர், 8 ஆண்டுகளின் பின்னர் தனது 85  ஆவது வயதில் இந்தத் தீர்மானத்தை எடுத்திருக்கிறார். உலகளாவிய ரீதியில் பாப்பரசர் மீது சுமத்தப்பட்டிருக்கும் பாரிய சுமைகள், சவால்களை எதிர்கொள்வது தொடர்பான நலிந்த தன்மை என்பவையே அவரை இராஜிநாமா செய்வதற்கான தீர்மானத்திற்குக் கொண்டு சென்றிருக்கின்றன. ஆயினும் பாப்பரசரின் இந்தத் தீர்மானம் மேன்மையானதும் சுயநலமற்றதாகவுமே பரவலாக நோக்கப்படுகிறது.

பாப்பரசரின் சமயப் பணியானது ஞானம், இறைவனுக்கான அர்ப்பணம், அடிப்படைக் கோட்பாடுகளை நடைமுறைப்படுத்துதல் என்பனவற்றை ஒன்று சேர்த்ததாக உள்ளது. ஆயினும், இந்த விடயங்கள் தொடர்பான ஆற்றலை  சோதிக்கும் மலையளவு சோதனைகளை எதிர்கொண்டு, திருச்சபையை சமூகத்திற்கும் வாழ்வுக்கும் இடையில் தொடர்புத்தன்மையைப் பேணி முன்னெடுத்துச் செல்ல வேண்டியிருக்கிறது. இத்தகைய சூழ்நிலையிலேயே பாப்பரசர் பதவி விலகுகிறார். அவருக்குப் பின் அடுத்த பாப்பரசராக பதவியேற்பவருக்குப் பாரிய பொறுப்புகள் காத்திருக்கின்றன. முதல் தடவையாக அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளைச் சேர்ந்த ஒருவரையே  அடுத்த பாப்பரசராகத் தேர்ந்தெடுக்க வேண்டும். என்ற கருத்துகள் மேலெழுந்து வந்துகொண்டிருக்கின்றன. ஐரோப்பாக் கண்டமானது தற்போது அதிகளவுக்கு மதச் சார்பற்ற தன்மையை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கும் நிலையில், விவிலிய வேதப் பிரசாரத்தை  மீள ஆரம்க்க வேண்டும் என்று ஆசீர்வாதப்பர் கூறியிருந்தார். அவரின் இலக்கு இதுவாக  இருந்தால் திருச்சபையானது அதிகளவுக்கு உலகளாவிய ரீதியில் வியாபகமெடுக்க வேண்டிய தேவை இருப்பதாக  வத்திக்கான் அதிகாரிகள் கூறுகின்றனர். அதேசமயம், அடுத்த பாப்பரசர்  ஐரோப்பாவைச் சாராதவராக இருக்க வேண்டும் என்று அண்மையில்  வத்திக்கானைச் சேர்ந்த இரு சிரேஷ்ட அதிகாரிகள் கருத்துத் தெரிவித்திருந்தனர்.

மறைநூல் பேராசிரியரான ஆசீர்வாதப்பர் பாப்பரசருக்குரிய கடமை, பொறுப்புகளின் கனதியை நன்கு உணர்ந்திருப்பதாலேயே வெளியேறத் தீர்மானித்திருப்பதாகவும் இதனாலேயே தனது வெளியேற்றமானது திருச்சபையின் நலன்களுக்கு சிறப்பானது என்ற கருத்தை அவர் வெளிப்படுத்தக் காரணமாக அமைந்தது என்றும் கூறப்படுகிறது. ஜேர்மனியரான ஆசீர்வாதப்பர் குறிப்பிட்ட சுமையை காவிச் செல்வது தொடர்பான பிரக்ஞை கொண்டவராகவே எப்போதும் இருந்துள்ளார். இந்த உணர்வே அவரின் பிந்திய வாழ்வில்  கலாசாரத்துடன் தொடர்புபட்ட நலன்கள் பற்றி அவர் அதிகளவுக்கு கவனத்தைச் செலுத்தக் காரணமாக இருந்திருக்கக்கூடும். 2010 இல் அவர் எதிர்பாராத விதமாக பிரிட்டனுக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். இங்கிலாந்தின் திருச்சபையுடன் அவர் தொடர்பாடல்களை மேற்கொள்ள விரும்பியிருந்ததை இது வெளிப்படுத்தியிருந்ததுடன், அவரின் மிதவாதத் தன்மையையும் அறிவு ஞானத்தையும் சிறப்பாக வெளிப்படுத்தியிருந்தது.

ஆனால், கல்விமானாகவும் கெடுபிடி யுத்த காலத்தில் மேற்கு ஜேர்மனியின் மதகுருவாகவுமிருந்த ஆசீர்வாதப்பர், கோட்பாட்டு ரீதியான பழமைபேணும் வாதம் என்ற அடிப்படைத் தன்மையை அதிகளவுக்கு உள்ளீர்த்துக் கொண்டிருந்தார். இந்த விடயத்தில் இவருக்கு முன்னர் பாப்பரசராக விளங்கிய இரண்டாம் அருளப்பர் சின்னப்பரை விட அதிகளவுக்கு ஆசீர்வாதப்பர் முன்னோடியாகத் திகழ்ந்துள்ளார். திருமணம் செய்தவர்கள் மதகுருவாகத் வருவதற்கான கடும் எதிர்ப்பு, பெண்கள் மதகுருவாக திருநிலைப்படுத்தப்படுதல்  ஒரே பால் திருமணம், செயற்கை குடும்பக் கட்டுப்பாடு போன்ற விடயங்களில் திருச்சபை தொடர்ந்தும் உறுதியான கொள்கையுடனேயே இருந்து வருகிறது. ஆசீர்வாதப்பருக்குப் பின்னர் புதிய பாப்பரசராகப் பதவியேற்பவர் பல்வேறு சவால்களை  எதிர்நோக்க வேண்டியுள்ளது. புதிய நூற்றாண்டுக்கு  ஏற்புடையதாகக் கத்தோலிக்கத்தைக் கொண்டுவருவதற்கான தலைமைத்துவ ஆற்றலும் தொலை நோக்கும் புதிய பாப்பரசருக்கு சவாலாகக் காணப்படுகின்றன. இதேவேளை, தனக்குப் பின்னர் புதிய பாப்பரசராக வருபவர் தொடர்பாக ஆசீர்வாதப்பர் பல்வேறு  முரண்பட்ட சமிக்ஞைகளை வெளியிட்டிருந்தார்.

ஒரு வருடத்திற்கு முன்பாக இத்தாலியைச் சேர்ந்த பல கர்தினால்களை நியமித்திருந்தார். அதன் பின்னர் நவம்பரில் இத்தாலியைச் சாராதவர்களைக் கர்தினால்களாக நியமித்து குறைபாடுகளை நீக்கியிருந்தார். புதிய பாப்பரசரை தெரிவு செய்யும்  அசாதாரணமான சூழ்நிலை ஆசீர்வாதப்பர் உயிருடன் இருக்கும் போதே உருவாகியுள்ளது. வாக்கெடுப்பு தொடர்பாக கர்தினால்களுடன் ஆசீர்வாதப்பர் ஆராயப் போவதில்லையாயினும் இந்த விடயத்தில் ஆசீர்வாதப்பரின் பிரசன்னத்தை அதிகளவுக்குக் கொண்டதாகவே இருக்கும். உயிர்வாழும்போதே பதவியைத் துறப்பதற்கான ஆசீர்வாதப்பரின் தீர்மானம் வரலாற்று ஏட்டில் அழியாத இடத்தைப் பிடித்துக் கொள்ளும் என்பதில் சந்தேகம்  இல்லை. ஆனாலும், அவரின் 8 வருட பதவிக் காலத்தில் கத்தோலிக்க திருச்சபையானது கோட்பாட்டு ரீதியில்  கேள்விகளை ஏற்படுத்தும் பாரியதொரு மாற்றம் எதனையுமே உள்வாங்கியிருக்கவில்லை. எவ்வாறாயினும் 266 ஆவது பரிசுத்த பாப்பரசராகத் தெரிவு செய்யப்படுபவர் 21 ஆம் நூற்றாண்டின் யதார்த்தத்திற்குப் பொருத்தப்பாடானவராக இருப்பதற்கு ஆசீர்வாதப்பர் வழியமைத்துக் கொடுத்திருக்கிறார் என்பதில் சந்தேகம் இல்லை.
நன்றி தினக்குரல்



நஷீட்டுக்கு எதிராக பிடியாணை இந்திய தூதரகத்தில் தஞ்சம்

மாலே : மாலைதீவு  நீதிமன்றத்தினால் முன்னாள் ஜனாதிபதி மொஹமட் நஷீட்டுக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருக்கும் நிலையில் அவர் மாலேயிலுள்ள இந்திய தூதரகத்தில் புகலிடம் கோரியுள்ளார்.
நஷீட் இந்திய தூதரகத்தில் தஞ்சமடைந்ததை அடுத்து அத்தூதரகம் மலேசிய கலகத்தடுப்பு பொலிஸாரால் சுற்றி வளைக்கப்பட்டுள்ளது.

2012 ஜனவரியில்  குற்றவியல் நீதிமன்றின் நீதிபதி  அப்துல்லா மொஹமட்டை தடுப்புக் காவலில் வைத்தமை தொடர்பான விசாரணைகளில் கலந்து கொள்ளாத  நஷீட்டை கைது செய்யுமாறு நேற்று புதன்கிழமை பகல் 1 மணியளவில் மற்றொரு நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்த நிலையில் அவர்  இந்திய தூதரகத்தினுள் தஞ்சமடைந்துள்ளார்.

இந்திய தூதரகத்தின் ஆலோசனை பெறுவதற்காக நஷீட் அங்கு   சென்றதாக மினிவான் செய்திச் சேவை கூறியுள்ளது.

இந்திய  தூதரகத்துக்கு வெளியில் நாலாபுறமும் தடைகள் தடுப்பு வேலிகள் போட்டு பொலிஸார் பாதுகாப்பினை பலப்படுத்தியுள்ளனர். பெப்ரவரி 10 இல் மாவட்ட நீதிமன்றின்  விசாரணையில் கலந்து கொள்ள நஷீட் தவறியமையை அடுத்தே பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.  நன்றி தினக்குரல்



  பஸ்ஸில் குண்டு வெடிப்பு; பங்களாதேஷில் 16 பேர் பலி

டாக்கா: பங்களாதேஷில் முஸ்லிம் யாத்திரிகர்கள் பயணித்த பஸ்ஸில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் 16 பேர் பலியாகியுள்ளதாக பங்களாதேஷ் பொலிஸார் தெரிவித்தனர். தலைநகர் டாக்காவின் தென் பகுதியிலிருந்து 296 கிலோ மீற்றர் தெலைவிலுள்ள பகுதியிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. பஸ்ஸிலிருந்து சிறுவர்கள் உட்பட 16 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.

மேலும் 15 பேர் இச்சம்பவத்தில் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டில் ஒவ்வொரு வருடமும் 10, 000 பேர் வீதி விபத்துகளினால் உயிரிழப்பதாக பங்களாதேஷ் அரசு தெரிவித்துள்ளது.     நன்றி தினக்குரல்





காதலர் தினத்தில் தனது காதலியை சுட்டுக் கொன்ற பராலிம்பிக் வீரர் கைது




By V.Priyatharshan
2013-02-14 01:54:02

காதலியை சுட்டுக் கொன்றதாக தென்னாபிரிக்காவின் மாற்றுத் திறனாளியான தடகள வீரர் ஒஸ்கர் பிஸ்டோரிஸ் கைது செய்யப்பட்டுள்ளார்.

தென்னாபிரிக்காவைச் சேர்ந்த தடகள வீரர் ஒஸ்கர் பிஸ்டோரிஸ். பீஜிங் பாராலிம்பிக் போட்டியில் 200, 400 மீற்றர் ஓட்டங்களில் தங்கம் வென்றவர். லண்டனில் நடந்த பாராலிம்பிக்கில் 400 மற்றும் 400ழx100 மீற்றர் தொடர் ஓட்டத்தில் தங்கப்பதக்கங்களை கைப்பற்றியவர்.

இவர் தனது காதலியை தலையில் சுட்டுக் கொன்றதாக, பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.                   நன்றி வீரகேசரி

 



No comments: