வானொலி மாமா நா. மகேசனின் குறளில் குறும்பு 54 – ஒன்றில் ஒன்பது

   
ஞானா:   
    அப்பா…அப்பா…எப்பிடி இருக்கப்பா இந்தக் கதை?

அப்பா:        என்ன ஞானா….திடு திப்பெண்டு வந்து கேள்வி கேக்கிறாய்?  என்ன கதை? சொன்னால் எல்லோ            தெரியும்.


ஞானா:         என்னோடை அப்பா ஒரு மனிசி வேலை செய்யிறா. தமிழ் மனிசிதான். அளவு கணக்கில்லாத பணக்காரி. பெரிய விலை உயர்ந்த உடுப்புகள்தான் போட்டுக்கொண்டு வருவா. வேலைக்கு வாறதும்             பென்ஸ் காரிலைதான்.

அப்பா:   
    ஏன் ஞானா? உனக்கு அவவைப் பாக்க எரிச்சலாய் இருக்கே?

ஞானா:         உங்களுக்குப் பயித்தியமே அப்பா? திருக்குறள் படிக்கிற நான் எரிச்சல் படுவனே. அவ சொன்ன ஒரு        விஷயந்தான் எனக்குக் குழப்பமாய் இருக்கு.       
             
அப்பா:        ஞானா என்ன குழப்பம் எண்டு சொல்லு. தீர்த்து வைக்கலாமோ எண்டு நான் பாக்கிறன்.


ஞானா:        அது வந்தப்பா….. நான் நேற்று அவவை சும்மா ஒரு பேச்சுக்காகக் கேட்டன் “ இஞ்சை பாருக்கோ,        அண்டவன் உங்களுக்கு நல்ல பொருள், பண்டத்தை எல்லாம் தந்திருக்கிறார், இதெல்லாம் உங்ளுக்கு        எப்பிடிக் கிடைக்குது எண்டு சொல்லுவியளே” எண்டு கேட்டன்.

அப்பா:        அதுக்கு அவ என்ன பதில் சொன்னா ஞானா?

ஞானா:        “இதுவந்து ஞானா….நாங்கள் முற்பிறப்பிலை செய்ய தவத்தாலைதான் வருகுது. என்ரை பரம்பரையே        தவம் செய்த குடும்பம்.” எண்டு சொன்னா. நான் பின்னை “உலகத்திலை உள்ள பணக்காரர் எல்லா        ரும் தவம் செய்த ஆக்களோ” எண்டு கேட்டன். அதுக்கு அவ “திருக்குறள் படிக்கிற உனக்குத்             தெரியாதோ திருவள்ளுவரே அப்பிடித்தான் சொல்லியிருக்கிறார். போய்ப் பார்” எண்டு சொன்னா.   

சுந்தரி:        நல்ல கெட்டிக்கார மனிசி போலை கிடக்குது ஞானா.

ஞானா:  
      ஓம் அம்மா……நீங்கள்… நாங்கள் கதைச்சதைக் கேட்டுக்கொண்டு நிண்டனியளே?

சுந்தரி:        ஓம் ஞானா. ஏதோ கனநேரம் கதைச்சியள். அதுதான் என்னெண்டு பாப்பாம் எண்டு வந்தனான்.   

அப்பா:    ஞானா….அம்மாவைத் தெரியுந்தானே. அது கிடக்கட்டும் நீ அந்த மனுசி சொன்ன குறளைப் பாத்தனியே

ஞானா:        பாத்தனான் அப்பா… அனால் எந்த அதிகாரத்திலை எண்டு பிடிபடேல்லை. பலதையும் தட்டிப்             பாத்தனான் ஆனால் கிடைக்கேல்லை.

சுந்தரி:        என்ன பிள்ளை. ஆனைக்கும் அடி சறுக்கும் எண்ட மாதிரியெல்லோ கிடக்கு. ஏனப்பா உங்களுக்கும்        தெரியாதே?   
                          
அப்பா:        சுந்தரி…அந்த மனுசி தவத்தைப் பற்றியெல்லே சொல்லியிருக்கு. அப்பிடியெண்டால் தவம் எண்ட            27 வது அதிகாரத்தைத் தட்டிப் பாக்கிறதுதானே.

ஞானா:        அதையும் பாத்தனான் அப்பா… அதிலை அவசொல்லிறமாதிரி ஒரு குறளு ம் இல்லையே!

சுந்தரி:        வடிவாய்ப் பாத்தனியே ஞானா?

ஞானா:        ஓம் அம்மா….பத்துக் குறளையும் பாத்தனான்.

அப்பா:        ஞானா. நீ பத்துக் குறயையும் பாத்திருப்பாய் ஆனால் பத்தாவது குறளைக கவனமாய் பாக்கேல்லை        போலை கிடக்கு.

ஞானா:        என்னப்பா நீங்கள் சொல்லிற கதை. இதுதான் அந்த 270வது குறள்:
                இலர்பல ராகிய காரண நோற்பார்                                        
                சிலர்பலர் நோலா தவர்.        
அப்பா….இந்தக் குறளிலை செல்வத்தைப் பற்றி ஒண்டும் சொல்லப்பட இல்லையே.

அப்பா:        ஞானா…அப்பிடி எண்டு நீ சொல்லிறாய். ஆனால் பரிமேலழகர் அப்பிடியான ஒரு கருத்தைத்தான்            சொல்லியிருக்கிறார். அதாவது  இலர் பலராகிய காரணம் - உலகத்துச் செல்வர் சிலராக, நல்கூர்வார்        பலராதற்குக் காரணம் யாதெனின்- நோற்பார் சிலர் நோலாதார் பலர்- அது தவஞ்செய்வார் சிலராக            அது செய்யாதார் பலராதல்.

சுந்தரி:        அப்ப ஞானாவின்ரை office மனுசி உதைத்தான் படிச்சிருக்குது. என்ன அப்பா?

அப்பா:        சரியாய்ச் சொன்னீர் சுந்தரி,  உந்தக் குறளுக்கும் செல்வரைப் பற்றிய பேச்சுக்கும் இடமே இல்லை            எண்டுதான் சொல்ல வேணும். முதலிலை ஒரு குறளுக்குக் கருத்துச் செலலேக்கை அந்தக் குறள்            எந்த அததிகாரத்திலை சொல்லப்பட்டிருக்கு எண்டு கவனிக்க வேணும்.

ஞானா:        என்னப்பா நீங்கள் சொல்லிற கதை. பரிமேலழகருக்குத் தெரியாத அதிகாரமும் குறளுமே அப்பா?            எந்தப் பெரிய மேதை. அவர் பிழைபடச் சொல்லுவார் எண்டு நினைப்பது தப்பல்லவா அப்பா?

அப்பா:        பிள்ளை ஞானா உதுக்குத்தான் திருவள்ளுவரே சொல்லி வைச்சிருக்கிறார் அறிவுடைமை எண்ட            43 வது அதிகாரத்திலை.
                
                “எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்    
                  மெய்ப்பொருள் கண்ப தறிவு”        

எண்டு. பரிமேலழகர் மேதை எண்டதிலை ஒரு ஐயமும் இல்லை. அவர் பழைய ஓலைச் சுவடியகளை        எல்லாம் எடுத்து, அதிகாரங்களை வகுத்து, ஒழுங்கு பண்ணவே எவ்வளவோ சிரமப்பட்டிருக்கிறார்.             அப்பிடியான ஒரு பெருமுயற்சியிலை சில வேளைகளிலை கொஞ்சம் அப்பிடி இப்பிடிப் போயிருக்கலாம்.

சுந்தரி:        அப்பா நான் சொல்லிறன் நீங்கள் சொல்லிறது உண்மைதான்.

அப்பா:        சுந்தரி! அதுபோக பரிமேலழகர் என்ன உட்கருத்து வைச்சு உரை செய்தாரோ எண்டதும் எங்களுக்குத்        தெரியாது.
ஞானா:         அது சரிதான் அப்பா, இப்ப இந்த
               
                     “இலர்பல ராகிய காரணம் நோற்பார்
                      சிலர்பலர்    நோலா தவர்”

        எண்ட குறளுக்கு திருவள்ளுவர் நினைச்சிருக்கக் கூடிய கருத்து என்ன?

அப்பா:        உதுக்கு வந்து ஞானா உந்தக் குறளுக்கு முந்தியிருக்கிற குறளைப் பாக்க வேணும். அது        வந்து:
           
                      “கூற்றங் குதித்தலுங் கைகூடும் நோற்றலின்
                      ஆற்றல் தலைப்பட் டவர்க்கு” 

        அதாவது, தவ வலிமையில் தலை சிறந்தவர்களுக்கு எமனை வெல்லுவதும் சித்திக்கும்             எண்டதுதான் இந்தக் குறளுக்குக் கருத்து.

சுந்தரி:        அப்பா உதிலை கூற்றங் குதித்தல் எண்டது சாவுக்குப் பயப்பிடாமல் இருக்கிறதும், மற்றது        மரணவேதனை இல்லாமல் சாகிறதும் எண்டதுதானே கருத்து.   

அப்பா:        விட்டடிடாதையும் சுந்தரி. பெரிய தவ வலிமை உள்ள மகான்கள் தாங்கள் நினைச்சபடியே        தாங்கள் நினைச்ச நேரத்திலை தங்களுடைய உயிரை ஒரு வேதனையும் இல்லாமல் சமாதி        ஆவார்கள் எண்டு நீர் கேள்விப்பட இல்லையே.           

சுந்தரி:        கேள்விப்பட்டிருக்கிறம் தானே அப்பா. ரமண ரிஷ, இராமலிங்க வள்ளளார், இப்பிடிக் கொஞ்சப்        பேர் இருக்கினம்தானே.

ஞானா:        சரியாய் சொல்லிறியள் அம்மா. உப்பிடிக் கொஞ்சப்போர் தான் இருக்கினம். கனபேர்             இல்லையே. என்ன அப்பா நீங்கள் சொல்லிறியள்.?

அப்பா:        உந்தக் கேள்விக்குத்தான் ஞானா திருவள்ளுவர் நீ கேட்ட
               
                                “இலர் பலராகிய காரணம் நோர்ப்பார்                                         
                                  சிலர்பலர் நோலா தவர்”

        எண்ட குறளிலை பதில் சொல்லியிருக்கிறார். எமபயத்தையும், எமவாதனையையும் வென்று            தாங்கள் நினைச்சபடி சமாதியாகக் கூடியவர்கள் பலபேர் இல்லை எண்டதுக்குக் காரணம்            சரியான முறையிலை, சரியானபடி தவம் செய்கிறவர்கள் ஒரு சிலர்தான். அப்படிச் செய்யாத        ஆக்கள்தான் பலபேர் எண்டு.

ஞானா:     அருமையான கருத்தாயெல்லோ இருக்கு அப்பா.

அப்பா:        ஞானா நீ வைச்சிருக்கிற நாமக்கல் இராமலிங்கம் பிள்ளை அவர்கள் எழுதின புத்தகத்திலை        இருக்கிற கருத்துத்தான் உது. வேணுமெண்டால் எடுத்துப்பார்.

சுந்தரி:        அப்பா எனக்கு உதிலை இன்னுமொரு கருத்துத் தெரியுது.           

அப்பா:        என்ன கருத்துச் சுந்தரி. சொல்லும் கேட்பம்.

சுந்தரி:        உதிலை வந்து இல்லறத்தாருக்கும் சேர்த்துச் சொல்லப்பட இல்லை. துறவறத்தை                மேற்கொண்ட துறவிகளுக்கு மட்டுந்தான்  சொல்லப்பட்டிருக்கு. அதோடை துறவறத்தை            மேற்கொண்டவர்களுக்கு ஒரு எச்சரிக்கையாயும் எடுக்கலாம் தானே அப்பா.           

அப்பா:        ஓமோம் துறவிகளே! சரியான முறையிலை தவம் செய்யுங்கோ. சுரியான முறையிலை            தவம் செய்தால் கூற்ங் குதித்தலும் கைகூடும் எண்டு சொல்லி வைச்சிருக்கிறார்.

ஞானா:        அப்பா நீங்கள் அடிக்கடி சொல்லிறது சரிதான். திருவள்ளுவர் ஒரு குறள் சொன்னால்            அதிலை ஒன்பது கருத்துத் தொங்கி நிக்கும் எண்டு.
                            (இசை)
                   

No comments: