.
சிட்னி நைடா கலை அரங்கில் செல்வி நிவேதா சரவணனின் அரங்கேற்றம் நடந்தது. நிவேதா சிட்னி பிரபல நாட்டிய குருவும் வேம்படி மகளிர் கல்லூரி முன்னாள் நடன ஆசிரியையுமான கலை வித்தகர் சுகந்தி தயாசீலனின் மாணவி ஆவர்.
விழாவிற்கு பிரதம விருந்தினராக பிரபல நாட்டிய குரு பத்மஸ்ரீ அடையார் லக்ஷ்மண் கலந்து கொண்டார்.அவரது நடன அமைபிலேயே பல அம்சங்கள் அமைந்தது குறிப்பிடத்தக்கது.சிறப்பு விருந்தினராக தஞ்சைப் பல்கலைக் கழக முன்னாள் பேராசிரியையும் , கவின் கலை ஆய்வு வல்லுனருமான ஞானா குலேந்திரன் சிறப்பித்தார்.
புஷ்பாஞ்சலியுடன் நிகழ்ச்சி இனிதே தொடங்கியது. ஐந்து கரத்தனை தேவாரத்தை நாட்டை ராகத்தில் ரூபக தாளத்தில் தொடங்கி வினாயகருக்கு வணக்கம் செலுத்தித் தொடர்ந்து அதே தாளத்தில் அமைந்த கண்ட அலாரிப்பு, கண்ட சாப்பு தாளத்தில் பாத வேலைப்பாடுகளையும் அங்க அபிநயங்களையும் மிக அழகுற வெளிப்படுத்தியது.
அடுத்து வந்த ஜதீஸ்வரம் சரஸ்வதி ராகத்தில் ரூபக தாளத்தில் சுத்த நிருத்தமும் , ஜதியும் சேர்ந்து நல்ல இசைக்கூட்டலுடன் ஜதிக் கோர்வைகள் சிறப்பாக அமைந்து வெளிப்பட்டது குருவுக்கும் நர்த்தகிக்கும் சிறப்பு சேர்ப்பதாக அமைந்தது.
காளி கவுத்துவம் கௌள ராகத்தில் ஆதி தாளத்தில் அமைந்து நர்த்தகி முகத்தில் நவரஸத்தையும் வெளிப்படுத்தியது.
நாட்டக்குறிஞ்சி ராகத்தில் வந்த தில்லை கூத்தனைக் குறித்த பாப நாசம் சிவனின், 9 ஜதி கூடிய பத வர்ணம் சுத்த நிருத்தம், நிருத்தியம், அபிநயம் ஆகியவை செவ்வனே அமையப் பெற்று நிகழ்ச்சியின் உச்சமாக அமைந்தது. முன் பகுதி பாடல் சிவனை நினைந்து உருகித் தலைவியும் பின் பகுதியில் தோழியும் பாடுகிறார்கள். நடனம் முழுதும் ஆசிரியையின் பயிற்சியும், மாணவியின் உழைப்பும் காணக் கூடியதாக இருந்தது.
கடினமான ஜதிகளைக் கொண்ட வர்ணத்தை நீண்ட நேரம் ஆடிய பின் முருகன் மீது அமைந்த ஹிந்தோள ராக கீர்த்தனத்தை தொடர்ந்து வந்த கண்ணன் மீதான பேகாஹ் ராக, ‘தொட்டு தொட்டு’ பதம் சஞ்சார பாவத்தில் சிறந்து மயிலிறகால் தடவியதைப் போல அமைந்தது.பாடலைப் பாடிய வெண்கலக் குரலோன் அகிலன் சிவானந்தன் என்றால் மிகையாகாது.
தொடர்ந்து ராக மாலிகாவில் அமைந்த நாச்சியார் திருமொழி , ‘வாரணம் ஆயிரம்’பாடலில் ஆண்டாள் கண்முன் தோன்றினாள்.நிகழ்ச்சியை நிறைவு செய்ய வந்த காளிங்க நர்த்தன , நாட்டை ராக தில்லானா வேகத்துடன் , விறுவிறுப்பும் நிறைந்து மகிழ்வித்தது.
நர்த்தகியைப் பாராட்டி பேசும் போது பத்மஸ்ரீ அடையார் லக்ஷ்மண் நிவேதாவின் பயிற்சியையும் முயற்சியையும் பாராட்டி பேசினார். ஞானா குலேந்திரன் அவர்கள் ஆடலரசி நிவேதா என்று சிறப்பித்தார்.நிகழ்ச்சிக்கு இசை கூட்டியவர்கள் அடையார் கோபிநாத் (மிருதங்கம்) , ரமணி தியாகராஜன் (புல்லாங்குழல்) , கிராந்தி கிரண் முடிகொண்டா (வயலின்) ஆகியோர். குறிப்பாக அகிலன் சிவானந்தனுக்கு தனிக் கச்சேரி செய்யுமளவுக்கு திறமை இருப்பது கண்கூடு. குரு சுகந்தி தயாசீலன் மிகச் சிறப்பாகவும் நேர்த்தியாகவும் நடனம் அமைத்திருந்தது அவரது தனித்தன்மையைக் காட்டியது. நேர்த்தியாக செய்யப் பயிற்சி அளித்த குரு சுகந்தி தயாசீலன் பாராட்டுதற்கு உரியவர்
2 comments:
The Naatakuringi Varnam was a treat. The spontanous applause from the audience after each Jathi korvai was a measure of GREAT appreciation of the Dance tteachers NATTUVANGAM & the synchronising movements of the Dancer
RASIKAI
WE will have to wait for many more years to see such a fantastic programme..
Post a Comment