மெல்பேர்ன் குன்றத்துக் குமரன் ஆலய மகோற்சவத் திருவிழா


.
மெல்பேர்ன் ரொக்பாங் குன்றத்துக் குமரன் ஆலய மகோற்சவத் திருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பமானதுகடந்த ஆண்டு மகா கும்பாபிஷேகம் வெகுவிமரிசையாக நடைபெற்ற மெல்பேர்ன் ரொக்பாங் குன்றத்துக் குமரன் ஆலயத்தின் வளர்ச்சி அளவிடற்கரியது. குன்றத்தில் அமர்ந்திருந்து அடியார்கள் அனைவருக்கும் அருள்பாலித்துக் கொண்டிருக்கும் குமரனின் திருவிளையாடல்கள் பற்பல. அழகிய தமிழ்க் கடவுள்  அழகன் வேலனவன்  கந்தவேள்  ஸ்ரீ முருகப்பெருமானின் முதலாவது மகோற்சவத் திருவிழா நந்தன வருடம் உத்தராயனகாலம் மாசி மாதம் நாலாம் நாள் சனிக்கிழமை 16.02.2013 அன்று ஆரம்பமாகியுள்ளது. நித்திய பூசைகளில் நிகழும் சகல குறைகளையும் நீக்கி எம்பெருமானின் அனுக்கிரகங்களும் அனைத்து அடியவர்களுக்கும் கிடைக்க வருடந்தோறும் நடைபெறும் மகோற்சவத் திருவிழா  இறைவனின் ஜந்தொழில்களையும் விளக்குவதாக கூறப்படுகின்றது.
குன்றத்துக் குமரனுக்கு பத்து நாட்கள் பகல்  இரவுத் திருவிழாக்கள் நடை பெற்று உற்சவமூர்த்திகள் உள்வீதி  வெள்வீதி வலம் வந்து அருள்பாலிக்கவுள்ளார்கள். கொடியேற்றம்  சப்பறம்  தேர்த்திருவிழா  தீர்த்தோற்சவம்  பூங்காவனம் போன்ற முக்கிய தினங்கள் விசேஷமாக நடைபெறுகின்றது. கொடியேற்றத்தினமான சனிக்கிழமை 16.02.2013 அன்று கோயிலுக்குச் சென்ற பொழுது ஆலயத்தினுள் அடியார்கள் கூட்டம் நிரம்பியிருந்தது. விசேஷ அபிஷேக ஆராதனைகள்  பூசைகள்  நடைபெற்று  விநாயப்பெருமான்  முருகப்பெருமான் வள்ளி  தெய்வயானை  சிவபெருமான்  பார்வதி உற்சவமூர்த்திகள் கொடித்தம்பத்தடியில் எழுந்தருளப் பெற்று  கொடித்தம்ப பூசைகள் ஆரம்பமானது.
சனிக்கிழமை பகல் 12 மணியளவில் சுபலக்கின சுப நேரத்தில் சகல சிவாச்சாரியார்களும் வேதங்கள் ஓத  அடியார்கள் அனைவரும் குன்றத்துக் குமரனின் நாமங்களை உச்சரிக்க மேளதாளங்களில் நாதங்கள் கோயில் மணி ஓசைகள் ஒலிக்க குமரனின் கொடியேற்றம் நடைபெற்றது. அந்த அற்புதக் காட்சி கண்கொள்ளாக் காட்சியாக சகல அடியார்களையும் மெய்சிலிர்க்க வைத்தது எனலாம். கொடித்தம்பத்திற்கு விஷேச அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.
ஆலயத்தின் பிரதம குருக்கள் சிவஸ்ரீ.விஜயன் குருக்கள் காப்புக் கட்டி கொடியேற்றத்தினை நடாத்தி வைத்தார். சிவஸ்ரீ.கௌரீஸ்வரக் குருக்கள்ää சிவஸ்ரீ.இராஜேந்திரக் குருக்கள் சிவஸ்ரீ.பரமசாமிக் குருக்கள் ஆகியோரும் இணைந்து நிகழ்வினை நிறைவேற்றினார்கள். ஆரயத்தினுள் நிற்கும் போது எமது ஊரில் உள்ள கோயிலில் நிற்பது போன்ற ஒரு அகமகிழ்வான உணர்வு ஏற்பட்டது. உற்சவமூர்த்திகள் பல வர்ண பூக்களாலும் பட்டுத் துணிகள்  நகை அலங்காரங்களால் அலங்கரிக்கப் பட்டிருந்தமை அனைவரையும் ஈர்த்திருந்தது என்று தான் கூற வேண்டும்.

   

தொடர்ந்து உற்சவமூர்த்திகள் வெளிவீதி உலாவந்த போது சு10ரிய பகவான் கதிர் வீச்சு கடுமையாக இருந்தது. அந்தக் கொதிக்கும் வெய்யிலிலும் பக்த கோடிகள் புடைசு10ழ  நாதஸ்வர  மேள தாளங்களுடன் உலா வந்தார்கள். மீண்டும் ஆலயத்தினுள் உட்பிரவேசித்ததும் உற்சவமூர்த்திகள் மங்கள வாத்திய இசையில் ஆடிய வண்ணம் வசந்த மண்டபத்தை வந்தடைந்தார்கள். அதுவரை விஷேச நாதஸ்வர  மேளதாள வித்துவான்கள் அற்புதமாக வாசித்துக் கொண்டிருந்தார்கள்.
கொடியேற்றத் திருவிழாவின் முடிவில் அனைவருக்கும் குமரனின் விபூதிப் பிரசாதங்கள் வழங்கப்பட்டது. தொடர்ந்து அடியார்கள் சிவாச்சாரியார்களின் குரு ஆசீர்வாதம் பெற்றனர். கொடியேற்றநாள் பகல் திருவிழா நிறைவாக அன்னதானம் வழங்கப்பட்டது.
மகோற்சவக் காலத்தில் தொடர்ந்து தினமும் நடைபெறும் திருவிழாக்களில்  சகல முருகப் பெருமானின் பூசைகளில் அடியார்கள் அனைவரும் கலந்து  கந்தனின் கிருபையைப் பெற்று  சகல சௌபாக்கியங்களுடனும் வாழ்வோமாக.!!
சைவம் தழைத்தோங்கி வளர்க நம் சமுதாயம்.
நவரத்தினம் அல்லமதேவன்.
மெல்பேர்ன்

No comments: