ஆழ்வார் திவ்விய பிரபந்தம் - பகுதி 2 - மதி

 .


கண்டனும் வில்லியும் சகோதரர்கள். ஒரு நாள் இருவரும் வேட்டையாடச் சென்றனர். அப்பொழுது கண்டன் கொல்லப்பட்டான். வில்லி ஆண்ட இடம் வில்லிபுத்தூர் என அழைக்கப்பட்டது. வில்லி எம்பெருமானை மிகுந்த கவலையுடன் வணங்க எம்பெருமான் காட்சி கொடுத்து கண்டனை உயிர்ப்பித்து தருவதாகவும் பெரும் பொருளும் தருவதாகவும் கூறி மறைந்தார். கண்டனும் உயிர்த்தெழுந்தான். வில்லியும் கண்டனும் அங்குள்ள பெருமாள் கோவிலையும் புதுப்பித்தனர். அங்கு ஒரு எல்லையில் ஒரு சிறிய இடத்தில் அழகிய பூந்தோட்டத்தை அமைத்து ஸ்ரீவிஷ்ணுவை வழிபட்டுக் கொண்டு ஒருவர் இருந்தார். தன்னையே மறந்து வழிபாட்டிலிருந்தவர் விஷ்ணு சித்தர். அக்கிராம மக்களுடன் தொடர்பு வைத்துக் கொள்வதில்லை அவர்.



 ஒரு நாள் வல்லபதேவன் எனும் அரசன் வீதியுலா வரும்பொழுது ஒரு பெரியார் ஒருவர் மக்கள் எவ்வாறு முக்தியடையலாம் என்பது பற்றிக் கூறியதில் ஒரு பகுதி அவன் காதில் விழுந்தது. அது பற்றி அறிய அரசன் ஆவல் கொண்டு தன் அரசசபையைக் கூட்டி தன் மனக்குறிப்பைத் தெரிவித்தான். செல்வநம்பி எனும் மந்திரி சமய வல்லுனர்களை அழைக்கும் படியும் அரசன் விரும்பியதைக் தெரிவிப்பவர்க்குக் கொடுப்பதற்கு பொற்காசுகள் அடங்கிய பை ஒன்றினை கம்பத்தில் கட்டி விடும்படியும் கூறினான். அதன்படியே அறிவிக்கப்பட்டு அறிஞர்கள் பலரும் வந்து கலந்து கொண்டனர். ஆனால் எவரும் வெற்றிபெறவில்லை. விஷ்ணுபகவான், ஊரார் கண்களுக்குப் பேயன் போலத் தோற்றமளித்த விஷ்ணு சித்தர் கனவில் தோன்றி அரச சபைக்குப் போகும்படி கூறியருளினார். தனக்கு இப்படியான சபையில் பேசத்தெரியாதென பெரும் அடக்கத்துடன் மறுத்துக்கூற பகவான் “போ உன்மூலம் நான் பேசுவேன்” என்றதும் அவரும் ஒருவாறு அரசசபைக்குச் சென்றார். அங்கு ஸ்ரீமந் நாராயணனின் பெருமைகளையும் அவரை பக்தியோடு வணங்கி எவ்வாறு முக்தியடையலாம் என்பதையும் கூறக்கூற எல்லோர் மனதிலுமிருந்த ஐயப்பாடுகளெல்லாம் மௌ;ள மௌ;ள விலகின. அரசனும் பெரு மகிழ்ச்சியடைந்தான். கம்பத்தில் கட்டியிருந்த பையும் தன்னிலேயே தாழ்ந்து விஷ்ணுசித்தர் மடியில் பொற்காசுகள் விழுந்தன. எல்லோரும் வியந்தனர். அரசரும் விஷ்ணுசித்தரை வீதிவழியாக யானையிலேற்றி உலாக் கொணர்ந்த பொழுது, தன் பக்தனை மேலும் பெருமைப் படுத்தி உலகறியச் செய்ய பெருமானே


தேவியர் சகிதமும், தேவர்கள் சகிதமும் விண்ணிலே தோன்றி ஆசிர்வதித்தார். அரசனும் மக்களும் இக்காட்சியைக் கண்டு அரிய பேற்றினைப் பெற்றனர். உடனே விஷ்ணுசித்தர்


1.    பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு
பல கோடி நூறாயிரம்
மல்லாண்ட திண்தோள் மணிவண்னா! உன்
செவ்வடி செவ்வி திருக்காப்பு

2.    அடியோ மோடும் நின் னோடும்பிரிவின்றி
ஆயிரம் பல்லாண்டு
வடிவாய் நின்வல மார்பினில் வாழ்கின்ற
மங்கையும் பல்;;;லாண்டு
வடிவார் கோதி வலத்துறை யும்சுட
ராழியும் பல்லாண்டு
படைபோர் புக்கு முழங்கும் அப் பாஞ்ச
சன்னியமும் பல்லாண்டே

3.    வாழாட் பட்டுநின் றீருள்ளீரேல், வந்து
மண்ணும் மணமும் கொண்மின்
கூழாட் பட்டுநின் றீர்களை எங்கள்
குழுவினில் புகுதலொட்டோம்
ஏழாட் காலும் பழிப்பிலோம் நாங்கள்
இராக்கதர் வாழ் இலங்கை
பாழா ளாகப் படைபொரு தானுக்குப்
பல்லாண்டு கூறுதுமே

எனப் பாடிய சித்தர் பெரியாழ்வாராயினார். பெருமாளுக்கு எங்கே கண் திருஷ்டி பட்டுவிடுமோ எனப் பயந்துதான் பல்லாண்டுப் பாசுரம் பாடியருளினார். வாத்சல்ய பாவம் அவருள் மேலோங்கி நின்றது. உலக பந்தங்களில் (உணவு, உறவு) நின்றவர்களைத் தங்கள் குழுவில் சேர்க்க முடியாதென்றும் இறைவனுக்கு ஆட்பட்டு நின்றவர்களை பழம், பூ முதலியவற்றைக் கொணர்ந்து வணங்கும் படியும் அழைக்கின்றார். தாயாகவே தன்னைக் கருதி குழந்தை கண்ணனை அழைத்துப் பாடிய பாடல்கள் பக்திரசம் சொட்டி நிற்கின்றன. கண்ணனை நீராட்ட

வெண்ணெய் அளைந்த குணுங்கும்
விளையாடு புழுதியும் கொண்டு
திண்ணென இவ்விரா வுன்னைத்
தேய்த்துக் கிடக்க நான் ஒட்டேன்
எண்ணெய் புளிப்பழங் கொண்டிங்கு
எத்தனை போதுமிருந்தேன்
நண்ணல் அரிய பிரானே
நாரணா நீராட வாராய். என்று அழைக்கின்றார்.

கண்ணைப் புரட்டி விழித்துக்
கழகண்டு செய்யும் பிரானே, என்றும்
பூணித் தொழுவினிற் புக்கும்
புழுதி யளைந்த பொன் மேனி
காணப் பெரிதும் உகப்பன்
ஆகிலும் கண்டார் பழிப்பர்
நாண் இத் தனையும் இலாதாய்
நப்பின்னை காணிற் சிரிக்கும்
மாணிக்கமே என் மணியே
மஞ்சனம் ஆட நீ வாராய்



தொடரும் ............

No comments: