இலங்கைச் செய்திகள்

உணவு நஞ்சானதில் 20ற்கும் மேற்பட்ட மில்லத் மகளிர் வித்தியாலய மாணவிகள் வைத்திசாலையில்

 கொள்வனவு செய்யப்பட்ட பானம் காலாவதியானவை என கண்டுபிடிப்பு

 தூதுவரை திருப்பி அழைத்தது சவூதி

பலாலி விமானத்தளம், காங்கேசன்துறை துறைமுக விரிவாக்கத்திற்கு காணிகள் சுவீகரிக்கப்படும் 

 யாழ்.நகரில் ரூ.500 மில்லியன் செலவில் கார்கில்ஸ் கட்டிடத் தொகுதி 

யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் விடுவிக்கப்படுவர்: ஜனாதிபதி

கையை இழந்த மாணவி தொடர்பான விசாரணை அறிக்கை சுகாதார அமைச்சிடம் கையளிப்பு

 இரு பல்கலைக்கழக மாணவர்களையும் உடன் விடுவிக்க ஜனாதிபதி உத்தரவு 

உடலின் பின்புறத்தில் புத்தர் வெளிநாட்டுப் பெண்ணுக்கு தண்டம்

மட்டக்களப்பில் தொடர்ந்து அடை மழை - சில பாடசாலைகளுக்கு பூட்டு 

பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ். அலுவலகத்திற்கு திடீர் விஜயம்

உணவு நஞ்சானதில் 20ற்கும் மேற்பட்ட மில்லத் மகளிர் வித்தியாலய மாணவிகள் வைத்திசாலையில்

By Farhan
2013-02-11

காத்தான்குடி மில்லத் மகளிர் வித்தியாலய மாணவிகள் உட்கொண்ட காலை உணவு நஞ்சானதில் சுமார் 20ற்கும் மேற்பட்ட மாணவிகள் காத்தான்குடி தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று காலை உட்கொண்ட உணவு நஞ்சானதில் மயக்கமுற்றும் வாந்தி எடுத்த நிலையிலும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் தற்போது காத்தான்குடி தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் இது தொடர்பான பரிசோதனைகளை காத்தான்குடி தள வைத்தியசாலை வைத்தியர்கள் மேற்கொண்டு வருவதாகவும் காத்தான்குடி தள வைத்தியசாலை பதில் வைத்திய அத்தியட்சகர் டாக்டர்.எம்.ஆதில் தெரிவித்தார்.

இதேவேளை இது சம்பந்தமாக பரிசீலிப்பதற்காக காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி யூ.எல்.நசிர்தீன் தலைமையிலான குழுவும் காத்தான்குடி வைத்தியசாலைக்கு விஜயம் செய்திருந்தனர்.


குறித்த மாணவிகளில் அதிகமானவர்கள் காத்தான்குடி சித்தீக்கிய்யா பெண்கள் அரபுக் கல்லூரி விடுதியைச் சேர்ந்த மாணவிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை காத்தான்குடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி அஜித் பிரசன்ன தலைமையிலான குழுவினரும் காத்தான்குடி தள வைத்தியசாலைக்கு விஜயம் செய்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.   நன்றி வீரகேசரி 


கொள்வனவு செய்யப்பட்ட பானம் காலாவதியானவை என கண்டுபிடிப்பு

By Farhan
2013-02-11

காத்தான்குடி தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மில்லத் மகளிர் வித்தியாலய மாணவிகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அங்கு வைத்து அருந்துவதற்கென கொள்வனவு செய்யப்பட்டு கொண்டு வரப்பட்ட (Mango Juice) மெங்கோ பானம் காலாவதியானவை என கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி யூ.எல்.எம்.நசிர்தீன் தெரிவித்தார்.

கொள்வனவு செய்யப்பட்டு கொண்டு வரப்பட்ட போதே காலாவதியானவை என கண்டுபிடிக்கப்பட்டதாக காத்தான்குடி பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்தார்.

காத்தான்குடி கடற்கரை வீதியிலுள்ள கடையொன்றில் கொள்வனவு செய்யப்பட்ட குறித்த பானம் தொடர்பில் கடை உரிமையாளரிடம் கேட்ட போது சம்பவம் நடந்தது போது அவரது தம்பி கடையில் இருந்ததாகவும் காலாவதியான பொருட்களை திருப்பி அனுப்புவதற்காக வைக்கப்பட்ட பானத்தை தவறுதலாக வழங்கியுள்ளதாகவும் கடை உரிமையாளர் தெரிவித்ததாக காத்தான்குடி பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி யூ.எல்.எம்.நசிர்தீன் மேலும் தெரிவித்தார்.

இது தொடர்பான மேலதிக நடவடிக்கைகளை காத்தான்குடி பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பணிமணை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.





தூதுவரை திருப்பி அழைத்தது சவூதி

By V.Priyatharshan
2013-02-11 04:15:19

இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவராக பதவி வகித்துவரும் அப்துல் அஸீஸ் அல் ஜம்மாஸை சவூதி அரேபிய அரசு மீள அழைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சவூதி அரேபியாவில் பணிப்பெண்ணாக கடமையாற்றிய மூதூரை சேர்ந்த ரிசான நபீகிற்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து சவூதி அரேபியாவிற்கான இலங்கை தூதுவராக கடமையாற்றிய அஹமட் ஜவாத் இலங்கை அரசாங்கத்தினால் திருப்பி அழைக்கப்பட்டார். எனினும் பதவிக்காலம் முடிவடைந்ததனாலேயே தான் திருப்பி அழைக்கப்பட்டதாக ஜவாத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையிலேயே ஜவாத் திருப்பி அழைக்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தே இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் அப்துல் அஸீஸ் அல் ஜம்மாஸ் திருப்பியழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எனினும் மேற்படி சம்பவத்திற்கான காரணம் என்ன என்பதை தூதுவராலயமோ அந் நாட்டு அரசோ இதுவரை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது              
நன்றி வீரகேசரி 

 

 

 

 

 

பலாலி விமானத்தளம், காங்கேசன்துறை துறைமுக விரிவாக்கத்திற்கு காணிகள் சுவீகரிக்கப்படும்

பலாலி விமானத்தளம், காங்கேசன்துறைத் துறைமுக விரிவாக்கத்திற்காக வலிகாமம் வடக்கில் உள்ள பொதுமக்களின் காணிகள் சுவீகரிக்கப்படுமெனத் தெரிவித்த யாழ். மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மகிந்த ஹத்துருசிங்க, இக்காணிகளுக்கான நஷ்டஈடுவழங்கப்படுமெனவும் கூறினார்.

யாழ்.சிவில் ஒருங்கிணைப்பு அலுவலகத்தில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே உயர்பாதுகாப்பு வலயப் பகுதியில் பொது மக்களின் வீடுகள் இடிக்கப்படுவது தொடர்பில் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே   இவ்வாறு தெரிவித்தார்
நன்றி தினக்குரல்





 யாழ்.நகரில் ரூ.500 மில்லியன் செலவில் கார்கில்ஸ் கட்டிடத் தொகுதி

யாழ்ப்பாண நகரில் அமைக்கப்பட்டு வரும் கார்கில்ஸ் நிறுவனத்தின் பல்பொருள் அங்காடி மற்றும் கேளிக்கை கட்டிடத் தொகுதியின் நிர்மாணப்பணிகள் இவ்வருட நடுப்பகுதியில் நிறைவு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
80 பேர்ச் நிலத்தில் 4 மாடிக் கட்டிடமாக இந்தக் கட்டிடத் தொகுதி நிர்மாணிக்கப்பட்டு வருகிறது. இக்கட்டிடத் தொகுதியில் வங்கி, உணவுச்சாலை,  3 திரை அரங்குகளுடன் கூடிய சினிபிளெக்ஸ் மற்றும் கார் நிறுத்துமிடம் என்பன அமையவுள்ளன.

இந்த 500 மில்லியன் ரூபா முதலீட்டுடன் கார்கில்ஸானது பாரிய தனியார் பிரிவு முதலீட்டாளர்களில் ஒன்றாக இலங்கையின் வட மாகாணத்தில் திகழவுள்ளதாக கார்கில்ஸ் நிறுவனத்தின் நிர்வாகப் பணிப்பாளரான இம்தியாஸ் வஹீட் தெரிவித்துள்ளார்.   
நன்றி தினக்குரல்



யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் விடுவிக்கப்படுவர்: ஜனாதிபதி
By General
2013-02-12

படையினரால் கைது செய்யப்பட்டு வெலிகந்தை புனர்வாழ்வூ நிலையத்தில் புனர்வாழ்வூக்கு உட்படுத்தப்பட்டு வரும் யாழ் பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் விரைவில் விடுதலை செய்யப்படுவரென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உறுதியளித்துள்ளார்.

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டு ஜனாதிபதி இன்று காலை 10.00 மணியளவில் யாழ் ரில்கோ விருந்தினர் விடுதியில் நடைபெற்ற யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்திலும் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இதனை தெரிவித்துள்ளார்.        நன்றி வீரகேசரி





கையை இழந்த மாணவி தொடர்பான விசாரணை அறிக்கை சுகாதார அமைச்சிடம் கையளிப்பு
By General
2013-02-12 14:02:48

வீட்டு படிக்கட்டில் தடுக்கி விழுந்து கை முறிவு ஏற்பட்டு சிகிச்சை மூலம் கைக அகற்றப்பட்ட கொழும்பு சட்டக்கல்லூரி மாணவி அச்சலா பிரியதர்ஷினி தொடர்பான விசாரணை அறிக்கை சுகாதார அமைச்சின் செயலாளரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு பல்கலைக்கழகத்தின் சட்ட பீட இறுதி ஆண்டில் கல்வி பயிலும் அஞ்சலா பிரியதர்ஷினி என்ற குறித்த மாணவி தடுக்கி விழுந்து கை முறிவு ஏற்பட்ட நிலையில் மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் அவரது கை வெட்டி அகற்றப்பட்டது.


இதனையடுத்து, வைத்தியர்கள் உரிய சிகிச்சை அளிக்காத காரணத்தினாலேயே மாணவிக்கு கை அகற்றப்பட்டுள்ளதாகவும் உரிய விசாரணை நடத்தப்படவேண்டும் எனவும் மாணவியின் பெற்றோர்கள் வலியுறுத்தியிருந்தனர்.

இந்நிலையில், இது குறித்து விசாரணைகளை நடத்துவதற்கு மூவர் அடங்கிய விசேட குழு ஒன்றை சுகாதார அமைச்சு அமைத்தது.

மூவர் அடங்கிய விசேட குழு 22 பேரிடம் விசாரணைகளை மேற்கொண்டு சம்பவம் தொடர்பிலான அறிக்கையை சுகாதார அமைச்சின் செயலாளர் நிஹால் ஜயத்திலகவிடம் கையளித்துள்ளது.    நன்றி வீரகேசரி


இரு பல்கலைக்கழக மாணவர்களையும் உடன் விடுவிக்க ஜனாதிபதி உத்தரவு
mahinda In Jaffnaதடுத்து வைக்கப்பட்டுள்ள யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவரையும் நாளை (13/02/2012) விடுதலை செய்யுமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவிட்டார்.

தமது பிள்ளைகளை விடுவிக்குமாறு நேற்று மாணவர்கள் இருவரதும் தாய்மார் நேரில் ஜனாதிபதியைக் கேட்டுக் கொண்டதற்கிணங்க உடனடியாக அவர் அந்த உத்தரவைப் பிறப்பித்தார்.

புதுக்குடியிருப்பைச் சேர்ந்த ஜனமேஜயன், தர்ஹானந்தன் ஆகிய பல்கலை மாணவர்களின் தாய்மார்களே நேற்று இந்த வேண்டுகோளை ஜனாதிபதியிடம் நேரடியாக விடுத் தனர்.

இதன்போது மேற்படி மாணவர்களை விடுதலை செய்தால் அவர்கள் நற்பிரஜைகளாக உருவாக பராமரிக்க உங்களால் முடியுமா என ஜனாதிபதி அவர்கள் தாய்மாரைக் கேட்டுக் கொண்டார். முடியும் என அவர்கள் பதிலளித்ததையடுத்து நாளையே (
13/02/2012) விடுதலை செய்யுமாறு ஜனாதிபதி அவர்கள் பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவிட்டார்.

தாம் மிகவும் கஷ்டப்பட்டு படித்தவர்கள் என தெரிவித்த அந்த தாய்மார் தாம் ஒருபோதும் அரசாங்கத்துக்கு எதிராக செயற்படப் போவதில்லை எனத் தெரிவித்தனர். யாழ். மாவட்ட விசேட அபிவிருத்திக் கூட்டம் நேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் யாழ்ப்பாணம் டில்கோ சிட்டி ஹோட்டல் மண்டபத்தில் நடைபெற்றது.

இதன் போது புதுக்குடியிருப்பைச் சேர்ந்த தாய்மார் இருவர் (ஒருவர் ஆசிரியை) ஜனாதிபதியைச் சந்திப்பதற்காக மேற்படி கூட்டத்திற்கு வருகை தந்திருந்தனர். அவர்களில் ஒரு தாய் ஒலி வாங்கியைக் கையிலெடுத்துக் கொண்டு கூட்டத்தில் நடுவில் நின்று கொண்டு “மேன்மை தங்கிய ஜனாதிபதி அவர்களே, தடுத்து வைக்கப்பட்டுள்ள எமது பிள்ளைகளை விடுதலை செய்ய உதவ வேண்டும் எனத் தெரிவித்தார்.

அப்போது விடயத்தை விபரமாகக் கூறுமாறு ஜனாதிபதி அவர்கள் கேட்டுக் கொண்டார்.

“ஜனாதிபதி அவர்களே! யாழ். பல்கலைக்கழக மாணவர்களான எமது பிள்ளைகள் கடந்த இரண்டை மாதமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள். தயவு செய்து அவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று தாழ்மையாகக் கேட்டுக் கொள்கிறேன் என்றார்.

நான் புதுக்குடியிருப்பு தமிழ் பாடசாலையில் கற்பிக்கும் ஆசிரியை. என்னோடு எனது ஊரைச் சேர்ந்த இன்னுமொரு தாயும் வந்துள்ளார். எமது பிள்ளைகள் இருவரையும் மீட்டுத்தர வேண்டியே நாம் இங்கு வந்துள்ளோம் என்றனர்.

அதனை செவிமடுத்த ஜனாதிபதி, மேற்படி மாணவர்கள் இருவரையும் நாளையே விடுவிக்குமாறு பொலிஸ் மா அதிபருக்கு ஜனாதிபதி உத்தரவிட்டார்.

நிகழ்வின் இறுதியில் தாய்மார் இருவரும் ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்தனர். ஜனாதிபதி அவர்களை நெருங்கி நலம் விசாரித்து அளவளாவினார்      நன்றி தேனீ 



  உடலின் பின்புறத்தில் புத்தர் வெளிநாட்டுப் பெண்ணுக்கு தண்டம்

உடலின் பின்புறத்தில் புத்தரின் உருவத்தை பச்சை குத்தியிருந்த நெதர்லாந்து பெண்ணொருவருக்கு கண்டி நீதவான் 100 ரூபாய் அபராதம் விதித்தார். கண்டியிலுள்ள பிரபல நட்சத்திர ஹோட்டலொன்றில் தங்கியிருந்த நெதர்லாந்து பெண்ணொருவர் நேற்று புதன்கிழமை தனது ஆண் நண்பருடன் கவர்ச்சியான ஆடையில் ஹோட்டலை விட்டு வெளியில் வரும்பொழுது ஹோட்டலை அண்மித்திருந்த இளைஞரொருவர் அப்பெண்ணின் பின்புறத்தில் பொறிக்கப்பட்டிருந்த புத்தர் உருவத்தைக் கண்டு ஆத்திரம் கொண்டு அப்பெண்ணுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

வாக்குவாதம் முற்ற அப்பெண் அவ்விளைஞரிடம் மன்னிப்புக் கோரியுள்ளார்.
இவ்விடயம் தொடர்பில் கண்டி பொலிஸ் நிலையத்தின் சுற்றுலாப் பிரிவுக்கு அந்த இளஞைர் தகவல் கொடுத்ததையடுத்து அப்பகுதிக்கு விரைந்த பொலிஸார் அப்பெண்ணைக் கைது செய்து கண்டி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர்.

பெட்ரினா எரைன் ட்ரொனொசோ (26 வயது) என்ற நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த பெண்ணொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

கண்டி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட இப்பெண்ணுக்கு நீதவான் 1000 ரூபாய் அபராதம் விதித்துத் தீர்ப்பளித்ததுடன்  அப்பெண்ணைக் கண்டித்து விடுதலை செய்தார்.      நன்றி தினக்குரல்





 மட்டக்களப்பில் தொடர்ந்து அடை மழை - சில பாடசாலைகளுக்கு பூட்டு
By Farhan
2013-02-14 13:56:11

கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையினால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் வெள்ள நீர் உட்புகுந்து மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இப்பகுதிகளில் கடந்த மூன்று தினங்களாக பெய்துவரும் இந்த தொடர் மழையினால் மாணவர்கள் பாடசாலைகளுக்குச் செல்ல முடியாத நிலை, அன்றாடம் கூலித் தொழில் செய்ய முடியாமை, அரசாங்க மற்றும் அரச சார்பற்ற காரியாலயங்களுக்குச் செல்ல முடியாமை போன்ற பல்வேறு அசௌகரியங்களை பொது மக்கள் எதிர்நோக்கி வருகின்றனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவில் புதிய காத்தான்குடி தாறுஸ்ஸலாம் வீதி, ஏத்துக்கால் வீதி, புதிய காத்தான்குடி பிர்தௌஸ் நகர், பதுறியா வீதி உள்ளிட்ட வீதிகள் போக்குவரத்துச் செய்ய முடியாதவாறு வெள்ளத்தில் மூழ்கியிருப்பதுடன் அப்பகுதிகளிலுள்ள வீடுகளிலும் வெள்ள நீர் உட்புகுந்துள்ளது.

மழை காரணமாக காத்தான்குடிப் பிரதேசத்தில் காத்தான்குடி பஸ் டிப்போ வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன் புதிய காத்தான்குடி பிர்தௌஸ் வித்தியாலயம் இன்று முழுமையாக இயங்காமல் பூட்டப்பட்டுள்ளது.


மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டக்களப்பு, காத்தான்குடி, ஒல்லிக்குளம், பாலமுனை, ஏறாவூர், வெல்லாவெளி, புலிபாய்ந்த கல், கரடியனாறு, கல்லாறு, பெரிய கல்லாறு, களுவாஞ்சிகுடி, சித்தாண்டி, வந்தாறுமூலை உள்ளிட்ட பகுதிகள் வெள்ளத்தினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 நன்றி வீரகேசரி 





பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ். அலுவலகத்திற்கு திடீர் விஜயம்
By General
2013-02-13 17:41:11

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ். அலுவலகத்திற்கு பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ் இன்று பிற்பகல் 1.30 மணியளவில் திடீர் விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.
பாதுகாப்புச் செயலாளருடன் யாழ்.மாவட்டக் கட்டளைத் தளபதி ஹதுரு சிங்ஹவும் விஜயம் செய்திருந்தார்.
அங்கு ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் யாழ். மாவட்ட பிரதான அமைப்பாளர் அங்கஜனுடன் அவர் உரையாடியுள்ளார்.
http://www.virakesari.lk/image_article/agfeh%20nd.jpg
பின்னர் பாதுகாப்புச் செயலாளர் கடந்த வருடம் உயர்தரப் பரீட்சையில் தோற்றிய மாணவர்களுடன் அங்கு கலந்துரையாடியுள்ளார்.
இதன்போது Z புள்ளி அடிப்படையில் சிறிய புள்ளி வித்தியாசத்தில் பல்கலைக்கழக வாய்ப்பைத் தவற விட்ட மாணவர்கள் தொடர்பில் உயர் கல்வி அமைச்சர் எஸ்.பி.திசநாயக்க உடன் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசிய பாசுகாப்புச் செயலாளர், அவர்களுக்கு ஜோன் கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழக மருத்துவ பீட அனுமதியைப் பெற்றுத் தருவதாக உறுதியளித்துள்ளார். 
இச்சந்திப்பின்போது வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி அதிபர், அவுஸ்ரேலிய குடியிருமை பெற்ற புலம்பெயர்ந்தவர் உட்பட பலர் பாதுகாப்புச் செயலாளரைச் சந்தித்துள்ளனர்.            நன்றி வீரகேசரி

No comments: