தமிழ் சினிமா

மெரினா

 உலகின் மிகப்பெரிய கடற்கரைகளில் ஒன்றான சென்னை மெரினா கடற்கரையில் சுண்டல் விற்று பிழைப்பு நடத்தும் சிறுவர்களைப் பற்றிய கதையே மெரினா திரைக்கதை.

கொலிவுட்டில் பசங்க திரைப்படத்தின் மூலம் சிறுவர்களின் வாழ்க்கையில் ஏற்படும் சின்ன சின்ன சந்தோசங்கள், அவர்களின் மூலமாக குடும்பங்களில் ஏற்படும் உறவுகள் போன்ற விடயங்களை திரையின் மூலமாக எடுத்துக்காட்டிய இயக்குனர் பாண்டிராஜ், மீண்டும் சிறுவர்களை வைத்து இயக்கியுள்ள திரைப்படம் மெரினா.

உலகின் மிகப்பெரிய கடற்கரைகளில் ஒன்றான சென்னை மெரினா கடற்கரையில் சுண்டல் விற்று பிழைப்பு நடத்தும் சிறுவர்களைப் பற்றிய கதையே மெரினாவின் திரைக்கதை.

மெரினா கடற்கரையோடு தொடர்புள்ள காதலர்கள், பிச்சைக்காரர்கள், மனநலம் குன்றியவர்கள் என்று ஒவ்வொரு பாத்திரத்தையும் ஒன்றாக சேர்த்து இயக்குனர் பாண்டிராஜ் மெரினா திரைப்படத்தில் காட்டியுள்ளார்.

விஜய் தொலைக்காட்சியின் நிகழ்ச்சி தொகுப்பாளராக பணியாற்றிய சிவகார்த்திகேயன் மெரினா திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகியுள்ளார்.

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ஓவியா நடித்துள்ளார். நாயகி ஓவியாவுக்கு மெரினாவின் மூலம் தன்னுடைய நடிப்பை வெளிப்படுத்துவதற்கு ஒரு நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது.

பட்டுக்கோட்டையிலிருந்து தப்பி அமரர் ஊர்தியில் சென்னைக்கு வந்து சேரும் அம்பிகாபதி (பக்கடா பாண்டி) மெரினாவில் தங்குகிறான். அங்கு அவனைப் போலவே பல சிறுவர்கள் சுண்டல், சங்கு என்று பலவற்றை விற்று வயிற்றை கழுவிக்கொண்டிருக்கிறார்கள்.

அவனுக்கு முதலில் கைலாசம் நண்பனாக, பிறகு மற்ற சிறுவர்களும் சண்டையை விடுத்து சமாதானமாகி அவனுடன் நண்பர்களாகிறார்கள்.

இவர்களை தவிர மெரினாவிலேயே வாழ்க்கை நடத்தும் பிச்சைக்கார தாத்தா, குதிரை ஓட்டுபவன், பாட்டு பாடுபவர், ஆங்கிலம் பேசும் பைத்தியக்காரன், சிறுவர்களுக்கு ஆதரவு அளிக்கும் தபால்காரர், மெரினாவிற்கு வரும் காதல் ஜோடிகளான நாதன் (சிவகார்த்திகேயன்)-சொப்பன சுந்தரி(ஓவியா) இவர்களை சுற்றி கதை நகர்கிறது.

படத்தின் நாயகன் பக்கடா பாண்டி தான். மிரள மிரள சென்னையை பார்க்கும் போதும், பிச்சைக்கார தாத்தாவிடம் உறவு கொண்டாடும் போதும், நண்பனை இழந்து வாடும் போதும் நல்ல நடிப்பை வெளிப்படுத்துகிறான்.சிறுவர்களை வைத்து படமெடுப்பது பாண்டிராஜுக்கு கை வந்த கலையாகிவிட்டது என்று உறுதியா சொல்லலாம். எல்லா சிறுவர்களும் இயல்பாக நடித்திருக்கிறார்கள்.பல பாத்திரங்கள் மெரினாவில் இருந்தாலும் மருமகள் தொல்லையால் வீட்டிலிருந்து வெளியே வந்து பிச்சை எடுக்கும் தாத்தா மட்டுமே மனதில் நிற்கிறார். பைத்தியக்காரனாக வருபவர் ஆங்காங்கே சிரிக்க வைத்தாலும் அவர் பாத்திரத்தில் கொஞ்சம் செயற்கைத்தனமே மேலோங்கி நிற்கிறது.

மெரினாவில் குடியிருக்காவிட்டாலும் படத்தை தொய்வில்லாமல் கொண்டு போவதற்கு அங்கு வரும் காதல் ஜோடிகளான சிவகார்த்திகேயனும், ஓவியாவும் பெரிதும் உதவியிருக்கிறார்கள். இவர்களுடைய காதலை நேரம் போவது தெரியாமல் சுவையாக இயக்குனர் பாண்டிராஜ் சொல்லியிருக்கிறார்.

நாயகன் சிவகார்த்திகேயன் தன்னுடைய இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். இனி இவருக்கு திரைத்துறையில் வாய்ப்புகள் குவியும் என்று கொலிவுட்டில் தகவல் வந்துகொண்டேயிருக்கின்றன.

களவாணி திரைப்படத்திற்கு பிறகு காணாமல் போன நாயகி ஓவியா மெரினாவில் தன்னுடைய நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். சிவகார்த்திகேயனின் நண்பனாக வருபவரும் நன்றாக நடித்திருக்கிறார்.

பல நடிகர்களோடு சேர்த்து இசையமைப்பாளர், திரைப்பட தொகுப்பாளர், ஒளிப்பதிவாளர் என்று பலரை மெரினாவில் இயக்குனர் பாண்டிராஜ் அறிமுகப்படுத்தியிருக்கிறார். " வாழ வைக்கும் சென்னை " பாடலும் நண்பன் " பாடலும் முனுமுணுக்க வைக்கின்றன.

5 டி கமெராவில் படம்பிடித்து தன் ஒளிப்பதிவால் மெரீனாவையே சுத்தமாக காட்டியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் விஜய்க்கு பாராட்டுக்கள்.

மெரினாவை மட்டுமே வைத்துக்கொண்டு முழு படத்தையும் நகர்த்திய விதம், நகைச்சுவை ததும்பும் வசனங்கள், சிறுவர்களுக்கு கல்வியின் அவசியத்தை உணர்த்தும் கதை, ஆதரவற்ற சிறுவர்களின் வாழ்க்கை முறையை கண்முன் நிறுத்திய பாங்கு, தாத்தா, தபால்காரர், குதிரைக்காரன் இவர்களுக்கும் சிறுவர்களுக்கும் இடையேயான நட்பு, காதல் என்ற பெயரில் சமுத்திரத்தை அசுத்தம் செய்யும்(கள்ள) காதல் ஜோடிகள் பற்றி சொன்ன விதம் இவையெல்லாம் மெரினாவின் அழகை ரசிக்க வைக்கின்றன.

ஆதரவின்றி கடலோரம் வாழும் சிறார்களை பற்றிய பிரச்சினைகள் கடல் அளவு இருக்க அதை முழுவதும் இறங்கி அலசாமல் பள்ளி சுற்றுலா போல சிலவற்றை மட்டும் மேம்போக்காக சொல்லியிருப்பதால் கடற்கரை சென்றும் காலை நனைக்காமல் திரும்ப வந்தது போல ஒரு குறை.

இருப்பினும் திரைப்படம் போன்ற எந்தவொரு நினைவுகளும் இல்லாமல் இயல்பான முறையில் திரைப்படத்தை இயக்கியுள்ள இயக்குனர் பாண்டிராஜை எவ்வளவு பாராட்டினாலும் தவறில்லை.

நடிகர்கள்: சிவகார்த்திகேயன், ஓவியா, சிறுவன் அம்பிகாபதி, ஜெயப்பிரகாஷ், பாண்டியன், கௌதம் புருஷோத், செந்திகுமாரி, ஜித்தன் மோகன்.

சிறப்பு நடிகர்கள்: சீயான் விக்ரம், சினேகா, விமல், அமீர், சசிகுமார், பிரகாஷ்ராஜ்.

இசை: ஜி.கிரிஷ்

ஒளிப்பதிவு: விஜய்

தயாரிப்பு, இயக்கம்: பாண்டிராஜ்

நன்றி விடுப்பு


முப்பொழுதும் உன் கற்பனைகள்
தமிழ் சினிமாவில் அவ்வப்போது எட்டிப்பார்க்கும் ஒரு வித சைக்கோத்தன காதல் கான்சப்ட்டை மையமாக வைத்துகொண்டு திரைக்கதை அமைத்திருக்கிறார் இயக்குநர் எல்ரெட் குமார்.

கான்சப்ட் பழசாக இருந்தாலும், படம் எடுத்திருக்கும் விதத்தில் ஏதாவது புதுசாகவும், தரமாகவும் செய்ய வேண்டும் என்று முயற்சித்திருக்கிறார். அந்த முயற்சிக்கு வெற்றியும் கிடைத்திருக்கிறது.

சாப்ட்வேர் கம்பெனி ஒன்றில் வேலை பார்க்கும் அதர்வா, வேலை காரணமாக பெங்களூருக்கு செல்கிறார். அவருடைய சக ஊழியரான அமலா பாலின் நட்பு கிடைக்கிறது. இதற்கிடையில் அதர்வாவின் ஒரே ஆதரவாக கிராமத்தில் இருக்கும் அவருடைய அம்மா மரணமடைகிறார். இதனால் மனம் உடைந்துப்போகும் அதர்வாவுக்கு அமலா பாலின் நட்பு ஆருதலாக இருக்கிறது. பிறகு அமலா பாலிடம் அதர்வாவுக்கு இருக்கும் நட்பு காதலாக மாறுகிறது.

இந்த நிலையில் அமலா பால் அமெரிக்கா சென்று விடுகிறார். அமலா பாலை யாரோ கடத்திச் சென்றுவிட்டனர் என்று தவறுதலாக புரிந்துகொள்ளும் அதர்வா, அவர் நினைவாக இருக்க, திடீர் என்று அமலா பால் திரும்பி வருகிறார். வாரத்தில் ஐந்து நாட்கள் சென்னையிலும், இரண்டு நாட்கள் பெங்களூரில் அமலா பாலுடனும் என்று தனது காலத்தை ஓட்டுகிறார் அதர்வா. இதற்கிடையில் அதர்வா சென்னையில் பணிபுரியும் நிறுவனத்தின் மேலதிகாரியாக அமலா பால் வருகிறார்.

அமலா பாலை பார்த்தும் எந்த வித உணர்வை வெளிப்படுத்திகொள்ளாத அதர்வா, பெங்களூரில் உள்ள ஒரு பெண்ணை காதலிப்பதகாவும், வாரத்தில் இரண்டு நாட்கள் அங்குதான் இருப்பார் என்ற விஷயத்தையும் அறிந்துகொள்கிறார் அமலா பால். பெங்களூரில் அதர்வாவுடன் இருந்த பெண் தான் தான். அப்படியிருக்க தனது பெயரில் அங்கு அதர்வாவுடன் இருப்பது யார்? என்பதை அறிந்துகொள்ள அதர்வாவுக்கு தெரியாமல் அவருடைய பெங்களூர் வீட்டில் பதுங்கியிருக்கும் அமலா பால், அங்கு பார்க்கும் காட்சி அவரை அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது.

அப்படி அவர் என்ன பார்த்தார்? அமலா பாலை காதலிக்கும் அதர்வா, அவரை தனது அலுவலகத்தில் பார்த்தும் கூட எந்தவிதமான உணர்வையும் ஏன் வெளிப்படுத்தி கொள்ளவில்லை. அவர் எதற்காக கொலை செய்கிறார் போன்ற கேள்விகளுக்கு விடை சொல்வதுதான் 'முப்பொழுதும் உன் கற்பனைகள்'.

சில படங்களின் கதைக்கும், அதன் தலைப்புக்கும் சம்மந்தமே இருக்காது. அந்த வகையில் இந்த படத்தை பொறுத்தவரையில் தலைப்புக்கு ஏற்றவாறு திரைக்கதை மிகப்பொருத்தமாக இருக்கிறது. ஏற்கனவே இதுபோன்ற கருவை சுமந்துகொண்டு தமிழ் சினிமாவில் சில படங்கள் வெளிவந்திருக்கிறது என்றாலும், சில காட்சிகளின் மூலம் படத்தை கவனிக்க வைத்திருக்கிறார் இயக்குநர். ஆனால், அடுத்த நொடியிலேயே படத்தின் கதை என்னவாக இருக்கும் என்பதை ரசிகர்கள் சுலபமாக யூகிக்கவும் முடிகிறது.

பானா காத்தாடியில் பார்த்த பள்ளி பருவ அதர்வாவை இந்த படத்திலும் சில இடங்களில் பார்க்க முடிகிறது. பாடல் காட்சிகள், சண்டைகாட்சிகள், காதல் காட்சிகள், செண்டிமென்ட் காட்சிகள் என அனைத்திலும் பாஸ் மார்க் வாங்கும் அதர்வா, வசனம் உச்சரிப்பதில் மட்டும் ஏன் தான் வட இந்தியர் போல் பேசுகிறாரோ.

அமலா பாலை சுற்றி கதை நடப்பதாக இருந்தாலும் அவருக்கு பெரிதாக நடிக்க வாய்ப்பு இல்லை. அதர்வாவுடன் காதல் செய்யும் காட்சிகள்தான் அதிகம். அதை நன்றாகவே செய்திருக்கிறார்.

சந்தானத்தின் வரும் சில காட்சிகளில் நம்மை சிரிக்க வைக்கிறது. ஜெயப்பிரகாஷ்க்கு டைலர் மேட் ரோல் என்று சொல்லலாம். அதர்வாவின் அம்மாவாக நடித்திருக்கும் நடிகை சில காட்சிகளில் வந்தாலும் பாராட்டு பெறும் அளவுக்கு தனது பணியை செய்திருக்கிறார். சிறு வயது அதர்வாவாக நடித்திருக்கும் சிறுவன் ரொம்பவே கியூட்.

ஜி.வி.பிரகாஷின் இசையில் பாடல்கள் துல்லள் ரகம். தாமரையின் வரிகளில் பாடல்களும் புரியும் விதத்தில் இருக்கிறது. சக்தியின் ஒளிப்பதிவில் காட்சிகள் பிரமாண்டமாக இருக்கிறது. ஒளிப்பதிவாளரும், இசையமைப்பாளரும் படத்திற்கு பெரிதும் பலம் சேர்த்திருக்கிறார்கள். இவர்களைப் போலவே காஸ்ட்யூம் டிசைனர் தீபாலி மற்றும் சண்டைபயிற்சியாளர் ராஜசேகரும் தங்களது பணியை கவனிக்க வைத்திருக்கிறார்கள்.

ஏற்கனவே தமிழ் சினிமாவில் வந்த ரகம் தான் என்றாலும், தனது திரைக்கதையின் மூலம் அதை வேறுபடுத்தி காட்டியிருக்கிறார் இயக்குநர். வெவ்வேறு கதைகளங்களை ஒன்றாக இணைப்பது போன்ற முயற்சியை செய்திருக்கும் இயக்குநர் அந்த இடங்களில் ரசிகர்களை சிறிது குழப்பமடைய செய்திருக்கிறார்.

படத்தில் சில குறைபாடுகள் இருந்தாலும், திரைக்கதை அமைத்த விதம், லொக்கேஷன், சண்டைக்காட்சிகள் அமைத்திருக்கும் விதம், பாடல்கள், ஹீரோ-ஹீரோயின் கெமிஸ்ட்ரி என ஒட்டு மொத்த படமும் ஒரு தரமான படமாக உள்ளது.


நன்றி விடுப்பு
No comments: