சங்கர் மகாதேவனின் இசைஇரவு என்பார்வை - செ.பாஸ்கரன்


.

ஞாயிறு மாலை மீண்டுமொரு இனிய மாலையாக மலர்ந்தது. சிம்பொனி என்ரரைனேர்ஸ் வழங்கிய இசைச்சிகரம் சங்கர் மகாதேவனின் இன்னிசை இரவு. சிட்னி மக்களுக்கு மீண்டுமொரு இனிய இரவை   வழங்கியதற்காக கதிர் அவர்களை பாராட்டுகின்றது தமிழ்முரசு. 5 மணிக்கு ஆரம்பமாகும் என்று அறிவித்திருந்தாலும் வழமையாக சரியான நேரத்திற்கு ஆரம்பிக்கும் சிம்பொனி என்ரரைனேர்ஸ் இம்முறை சற்று தாமதமாகவே தொடங்கினார்கள்
காரணம் நேற்றய தினமும் நடந்த நிகழ்ச்சியின் களைப்பாக இருக்கலாம். சங்கர் மகாதேவன் மேடைக்கு வரவும் ரசிகர்கள் மிக ஆரவாரமாகவும் உற்சாகமாகவும் வரவேற்றார்கள். கணபதி துணை என்ற பாடலோடு ஆரம்பித்த சங்கர் மகாதேவன் தொடர்ந்து தனியே தன்னந் தனியே என்ற பாடலை பாடியபோது மண்டபம் அதிர்ந்த கரகோசம் எழுந்தது. ஒன்பது பக்கவாத்திய காரர்கள், ரசிகா, அனுஸ்காமணிஜயர் என்று இரண்டு பெண்பாடகிகள், ரமன் என்று ஒரு பாடகன் என்று ஒரு பெரிய பட்டாளமாக கலைஞர்கள் சிட்னியின் மாபெரும் மண்டபமான கில் சென்ரரில் கூடியிருந்து இசைமழை பொழிந்தார்கள். சங்கர் மகாதேவன் வெகு இயல்பாகவும் ரசிகர்களோடு மிக நெருக்கமாகவும்  பேசி பாடல்களை வழங்கிக் கொண்டிருந்தது.   அவரை   ஒரு   எளிமையான    மனிதராக பார்க்க வைத்தது .கர்நாடக இசை, மெல்லிசை, துள்ளிசை என்று கலந்து தூள்கிளப்பிவிட்டார் மனிதர்.இரண்டு பெண்பாடகிகளும் தமிழ்மக்களிடையே பிரபல்யம் இல்லாதவர்களாக இருந்தாலும் அவர்கள் பாடிய பாடல்களால் அனைவரையும் கொள்ளை கொண்டு விட்டார்கள். அதிலும் ரசிகா பெயருக்கேற்ப அழகாக இருந்ததோடு அற்புதமான குரல்வளத்தோடு பாடினார். அனுஸ்கா மணிஜயர் மட்டும் என்ன சின்மயியை தூக்கி சாப்பிட்டு விடுவார் போலிருந்தது.

சங்கர் மகாதேவன் ஓய்வெடுப்பதற்காக இந்த மூன்று பாடகர்களும் வந்து மெல்லிசையும் பழைய பாடல்களும் பாடியபோது   அரங்கம் அமைதியாக   ரசித்துக்கொண்டிருந்தது.சங்கர் மகாதேவன் வராகநதிக்கரையோரம் பாடியபோது நாமும் வராக நதிக்கரையில் சங்கமமானதுபோல்தான் இருந்தது. தொடர்ந்து ரசிகா ரம்பம்பம் ஆரம்பம் என்று அசத்தினார். தொடர்ந்து ஓ சுகுமாரி என்ற பாடலை வாய்க்குள் வெத்திலையை வைத்துக்கொண்டு பாடுவதுபோல்   எப்படிப்  பாடியது என்ற விளக்கமும் கொடுத்து பாடியது அனைவரையும் உற்சாக எல்லைக்கே கொண்டு சென்று விட்டது. தொடர்ந்து வாடிவாடி நாட்டுக்கட்டை என்ற பாடலை ரசிகாவுடன் பாடும்போது சபையினரை ஆடும்படிகேட்டதும், தொடர்ந்து என்னபாடல் வேண்டும் என்று கேட்க சபையோர்   பெண்ஒன்று கண்டேன் என்றபாடலை கேட்டார்கள் மகாதேவன் தனக்கு பாடல் வரிகள் தெரியாது யாருக்காவது தெரிந்தால் இங்கே வந்து பாடுங்கள் தைரியம் இருந்தால் வாருங்கள் இது எல்லோரும் சேர்ந்து மகிழும் மாலைப்பொழுது என்று கூறினார் அந்த அழைப்பை கேட்டு ஒருவர் எழுந்து சென்றார் சபையோர் கரகோசம்  செய்ய மேடைக்கு வாருங்கள் என்று அழைத்ததும் அவர் மேடையில் தோன்றினார்


உங்கள் பெயர் என்ன என்று கேட்டதும் ஜெகன் என்று கூறினார் பல பாடல்கள் பாடியிருக்கிறீர்களா என்று கேட்டபோது சிரித்தபடியே தலைஅசைத்தார் அது ஓமா இல்லையா என்று விளங்கவில்லை சரிபாடுங்கள் என்றதும் பெண்ஒன்று கண்டேன் என்று அவர் ஆரம்பித்ததும் சபையினர் பலத்த கரகோசம் செய்தனர் உண்மையிலேயே மிக அழகாக குரல் வளத்தோடு ஆரம்பித்தது நம் ஈழத்தமிழரான திரு ஜெகேந்திரன் அவர்கள் தான். மகாதேவன் இசைக்கலைஞர்களுக்கு எவ் நோட்டென்றார் அந்த பிரமாண்டமான இசைக்குழுவின் இசையில் சுருதிபிசகாது மிக அழகாகப்பாடினார் ஜெகேந்திரன் இடையில் மகாதேவன் ஆலாபனைகள் போட அற்புதமாக பாடிமுடித்தார் ஜெகேந்திரன். ஜெகேந்திரனுக்கு கைகொடுத்த  சங்கர்  மகாதேவன்,   பாராட்டும்போது  "நன்றாக பாடியது மட்டுமல்ல மிகத்தைரியமாக இந்த மேடையில் வந்து பாடியதை பாராட்டுகிறேன்' என்றார். இவரைப்போன்ற நல்ல பாடகர்களும் நம்மவரில் இருப்பதை எண்ணி பெருமை அடைகின்றோம் தமிழ்முரசு அவரை வாழ்த்துகின்றது.


தெடர்ந்து பல அருமையான பாடல்கள்  குறிப்பாக சம்போ சிவ சம்போ பாடலும் இடையில் அத்தனை கலைஞர்களின் தாளவாத்திய கச்சேரியும் எம்மை  கொள்ளை கொண்டது.

பல  பாடல்களை  மாறிமாறிப்பாடினார்கள் குறிப்பாக நிலாக் காய்கிறது என்னவளே அடி என்னவளே என்ற பாடலை ரமன் அற்புதமாக பாடினார். என்னசொல்லப் போகிறாய் என்று தொடங்கி மாம்பழமாம் மாம்பழம் என்று மகாதேவன் பாடினார்.  அது மட்டுமல்லாது   ரசிகர்களை மேடையில் ஆடவும் அழைத்தார் பலர் மேடையில் நடனமாடி மகிழ்வித்தார்கள்.
மீண்டும் ஒரு நல்ல நிகழ்ச்சியை பார்த்த திருப்தியோடு 9.15 மணிக்கு நிகழ்ச்சியில் இருந்து வீடு திரும்பினேன். பலரிடம் நிகழ்ச்சி பற்றி தமிழ் முரசிற்காக கேட்டபோது பலரும் ஒரு நல்லமாலைப்பொழுதை தந்திருந்த  சிம்பொனி என்ரரைனேசையும் கதிரையும் அவரோடு சேர்ந்து நிழக்வை நடாத்திய மற்றைய நண்பர்களையும் பாராட்டினார்கள். நிகழ்ச்சிக்கு ஆதரவு வழங்கிய பிரமிட் வீடியோவையும் வெஸ்ரேண் யூனியன் ஸ்தாபனத்தாரையும்  வாழ்தாமல்விட்டால் அது அழகல்ல அவர்களையும்  தமிழ்முரசு வாழ்த்துகிறது.3 comments:

Anonymous said...

Nicely written, withoutout harming anyone and lots of photos. Thanks

Bama said...

நல்ல கட்டுரை நன்றி பாஸ்கரன்

Anonymous said...

Quote "அதிலும் ரசிகா பெயருக்கேற்ப அழகாக இருந்ததோடு அற்புதமான குரல்வளத்தோடு பாடினார்"

கட்டுரையாளர் ரசிகாவின் அழகோடு பார்த்துவிட்டார் போல் தெரிகிறது. எனக்கு அனுஸ்கா பாடியபாடல்கள்தான் பிடித்தது. ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு விதம்தானே.. உண்மையா இதை நான் எழுதவந்தது ஞாயிறு நடந்த நிகழ்ச்சியை திங்கட் கிழமையே பார்க்ககூடியதாக இருந்தது. எப்படித்தான் செய்கின்றீர்களோ தெரியாது. வாழ்த்துக்கள்
அன்புடன்
கௌரி