ஜெனீவாவில் தீர்மானமும் உளவியல் யுத்தமும் : சபா நாவலன்


.

ஐக்கிய நாடுகள் சபையின் “மனித உரிமை” ஆணையகம் 27ஆம் திகதி ஆரம்பமாகவுள அதன் கூட்ட அமர்வுகளில் இலங்கை அரசிற்கு எதிரான தீர்மானம் ஒன்றை நிறைவேற்றலாம் என எதிர்வுகூறப்படுகிறது. சில மேற்கு நாட்டு அரசுகளால் இலங்கை அரசிற்கு எதிரான பரிந்துரை முன்மொழியப்படும் எனவும் எதிர்வு கூறப்படுகின்றது. இது வரை எந்த மேற்கு நாடுகளும் இலங்கை அரசிற்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்படும் என்று உத்தியோகபூர்வமாக அறிவிக்கவில்லை.
உலகமக்களை அதிர்ச்சியில் உறையவைத்த, குறுகிய நாட்களில் திட்டமிட்டு நிகழ்த்தப்பட்ட மனிதப்படுகொலைகள் நிறைவேற்றப்பட்ட மூன்றாவது ஆண்டை அண்மித்துக்கொண்டிருக்கிறோம். சாரி சாரியாக மக்கள் கொல்லப்பட்ட வேளைகளில் செய்மதிகளில் அவற்றைப் பார்த்துக் கொண்டு வாழாவிருந்த அமரிக்காவையும் யுத்தத்திற்கான அழிவு ஆயுதங்களை வழங்கிய மேற்கு நாடுகளையும் மீண்டும் ஒரு முறை நம்புங்கள் எனக் கோரிக்கை முன்வைக்கப்படுகின்றது. மேற்கு நாடுகள் ராஜபக்ச அதிகாரத்திற்குத் தண்டனை வழங்கும் என மக்களின் உணர்வுகளில் அறைந்து சொல்லப்படுகின்றது.


1986 ஆம் ஆண்டு இலங்கை மனித் உரிமைகள் ஆணயகத்தில் அரசிற்கு எதிராக மனித உரிமை மீறல் பரிந்துரைகள் முன்வைக்கப்படன. அதனை முன்வைத்தது இந்தியா. அதற்கு எதிர்ப்புத் தெரிவித்ததோ அமரிக்காவும் ஏனைய மேற்கு நாடுகளும். இந்திய அரசு இந்த முன்மொழிவை முன்வைத்த போது அன்று இந்தியாவை நோக்கி அண்ணார்ந்து பார்த்து ரசித்துக்கொண்டிருந்த அதே மனோநிலை கொண்ட ஒரு கூட்டம் இன்று அமரிக்காவை ஆண்டவனாகப் போற்றுகின்றது.
இந்தியா இந்தத் ஐக்கிய நாடுகள் ஆணையகத்தில் இலங்கைக்கு எதிராக தீர்மான நிறைவேற்ற முற்பட்டது தமிழ்ப் பேசும் மக்களின் நலன்களின் அடிப்படையில் அல்ல, மாறாக தனது அதிகாரத்தை இலங்கையில் நிறுவிக் கொள்வதற்கான ஆயுதமாகவே அதனைப் பயன்படுத்திக்கொண்டது.
இறுதியில் மக்கள் மத்தியில் போராட்டங்கள் மீதான வெறுப்பை உருவாக்கி, மக்களைப் போராட்டத்திலிருந்து அன்னியப்படுத்தி, முழுப் போராட்டத்தையும் முள்ளிவாய்க்காலில் ஆயிரக்கணக்கான அப்பாவிகளோடு சேர்த்து மனித குலம் வெட்கித் தலைகுனியும் வகையில் ராஜபக்ச பாசிசத்தோடு இணைந்து அழித்துப் போட்டது இந்திய அரசே.
இந்தியா எவ்வாறு தனது சொந்த ஆதிக்க நலனுக்காக இலங்கை அரசிற்கு எதிரான தீர்மானத்தை நிறைவேற்ற முற்பட்டதோ அதற்குச் சற்றும் குறைவற்ற கொடிய நோக்கத்துடனேயே அமரிக்காவும் அதன் நேச அணிகளும் இன்று செயலாற்றுகின்றன.
இந்திய அரசு மீது நம்பிக்கை கொண்டு அழிந்து போன அதே அரசியல் அதிகார சக்திகள் இன்று அமரிக்க அரசிசை நம்பக் கோருகின்றனர்.
இந்திய அரசு தெற்காசியப் பிராந்தியத்தின் பேட்டை ரவுடி என்றால் அமரிக்கா உலகின் மிகப்பெரும் அரசியல் தாதா. அமரிக்க அரசும் இந்திய அரசும் தமது சொந்த நலனுக்காக நாடுகளைப் பிளைவுபடுத்தி ஆயிரமாயிரமாய் அப்பாவிமக்களை அழித்துப்போட்டிருக்கின்றன. 80 களின் ஆரம்த்தில் பாகிஸ்தானிலிருந்து பங்களாதேஷைப் இந்தியா பிரித்துக்கொடுத்த நிகழ்வை முன்னுதாரணமாகக் காட்டி தமிழீழம் பெற்றுவிடலாம் எனக் கனவுகண்டு அழிந்து போன வரலாற்றை இன்று அமரிக்காவின் காலடியில் மீளமைக்க முற்படுகிறார்கள்.
இந்தியா அன்று பங்களாதேஷ் என்ற நாட்டை உருவாக்கிய அந்த நாட்டில் பட்டினியால் செத்துப்போகும் மக்கள் கூட்டம் ஒன்றை உருவாக்கியது போன்றே இன்று அமரிக்கா இனக்குழுக்களை மோதவிட்டு வேடிக்கை பார்க்கும் தென் சூடானை உருவாக்கியிருக்கிறது. இந்தியா தனது அதிகாரவர்க்கம் சார்ந்த பிராந்திய நலனுக்காக உருவாக்கிக் கொண்ட பங்களாதேஷ் போன்றே தென் சூடானும் அமரிக்க நலனுக்காக உருவக்கப்பட்டு அழிக்கப்படுகிறது.
இந்த இரண்டு நாடுகளுமே உரிமைக்கான போராட்டங்களையும், தேசிய விடுதலைப் போராட்டங்களையும் அழித்துச் சிதைத்துச் சின்னாபின்னமாக்கிய குருதிக் கறைகளை வரலாறு முழுவதும் கண்டுகொள்ளலாம்.
விடுதலை பெற்றுக்கொள்வதற்காக அதிகார வர்க்கத்தை நம்பக் கோரும் தலமைகளின் வியாபார-வர்க்க நலன்கள் மக்கள் நலன் போலப் பிரச்சாரப்படுத்தப்படுகின்றன.
இவை அனைத்துக்கும் மத்தியில் 1986 ஆம் ஆண்டில் இலங்கை அரசிற்கு எதிராக அமரிக்காவின் அனுசரணையோடு முறியடிக்கப்பட்ட தீர்மானம் இன்று 2012 இல் நிறைவேற்றப்படுமானால் அதனை மக்கள் பற்றுள்ள யாரும் நிராகரிக்க முடியாது.
அதே வேளை இந்தத் தீர்மானத்தைப் பயன்படுத்திக்கொள்ளும் அரசியல் தலைமை அற்ற நிலையில் அமரிக்கா இதனைப் பயன்படுத்திக்கொள்ளும் என்பதையும் மக்கள் மத்தியில் தெளிவுபடுத்த வேண்டும். இந்தியாவிற்கு எதிராக உருவாக்கத்தவறிய விழிப்புணர்வு அமரிக்க ஏகாதிபத்தியத்திற்கு எதிராக உருவாக்கப்பட வேண்டும். லொபி அரசிய என்ற பெயரோடு அலையும் அரசியல் போலிகளுக்கு எதிரான கருத்தியலும் இதனோடு இணைந்தே உருவாக்கப்பட வேண்டும்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையகத்தில் ராஜபக்ச அரசு தண்டிக்கப்படலாம் என்ற தவறான அபிப்பிராயம் குறுக்கு வழி அரசியல் வியாபாரிகளால் திட்டமிட்டே உருவாக்கப்படுகின்றது. மனித உரிமை ஆணையகத்திற்குத் தீர்மானங்களை நிறைவேற்றும் அதிகாரம் மட்டுமே உண்டு. இவ்வாறான தவறான நம்பிக்கைகளை மக்கள் மத்தியில் தொடர்ச்சியாக விதைக்கப்படுகின்றன. இதனூடாக, ஒரு புறத்தில் மக்கள் மத்தியில் வெறுப்புணர்வை ஏற்படுத்தும் இந்த அரசியல் வியாபாரிகள் மறுபுறத்தில் ஒடுக்குமுறைக்கு எதிரான மக்கள் போராட்டங்களைத் தடுக்கின்றனர். தமிழ்ப் பேசும் மக்களை ஒடுக்கும் அதிகாரவர்க்கத்தின் திட்டமிட்ட உளவியல் யுத்ததின் ஒரு பகுதியா இதுவென ஐயம் கொள்வதில் எந்தத் தவறும் இருக்க முடியாது.
அமரிக்காவைப் பொறுத்த வரையில் இலங்கை அரசிற்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றுவதை விட அவ்வாறான ஒரு விம்பத்தை உருவாக்குவதே போதுமானது. இதனூடாக இலங்கை அரசை மிரட்டி தனது நலனை உறுதிப்படுத்திக்கொள்ள அமரிக்காவிற்குப் போதிய வலு உண்டு. புலம் பெயர் நாடுகளில் வாழுகின்ற அரசியல் வியாபாரிகளோ அமரிக்கா முயற்சித்துத் தோற்றுப் போய்விட்டது என தமது கைக்கூலி அரசியலை மீண்டும் ஆரம்பிக்கச் சந்தர்ப்பத்தை உருவாக்கிக் கொள்வார்கள். அமரிக்க அணி புலம் பெயர் தமிழர்களையும் இலங்கை அரசையும் ஒரே நேரத்தில் திருப்திப்படுத்த இலகுவான வழிமுறையாவும் இது காணப்படும்.
இலங்கைக்கு வெளிப்படையாக ஆதரவளிக்க சீனா, ரஷ்யா போன்ற நாடுகள் முன்வரும் நிலை காணப்படுவதால் பாதுகாப்புச் சபை வரை இந்தத் தீர்மானம் கொண்டு செல்லப்பட்டு இலனக்கொலையாளிகள் தண்டிக்கப்படுவார்கள் என்பதெல்லாம் வெற்றுக் கற்பனைகள்.
சீனா, ரஷ்யா போன்ற நாடுகள் ஆரம்பத்தில் சோசலிச நாடுகளாக வெற்றிபெற்றிருந்தன. சோசலிச நாடுகளில் காணப்பட்ட பரந்த, ஆழமான மக்கள் ஜனநாயகம் மேற்கின் ஆசியுடன் அழிக்கப்பட்டு கட்சிகள் அதிகாரத்தைக் கப்பற்றிக்கொண்டு இப்போது பல தசாப்தங்கள் ஓடி மறைந்துவிட்டன. அங்கெல்லாம் காணப்பட்ட ஆழமான ஜனநாயகம் அழிக்கப்பட்ட பின்னர், முதலாளித்துவ நாடுகளில் காணப்படும் குறைந்தபட்ச ஜனநாயகம் கூட
மீளமைக்கப்படவில்லை. அப்பட்டமான கொடிய சர்வாதிகாரிகளும் மக்கள் விரோதிகளும் ஆட்சியைக் கைப்பற்றிக்கொண்டனர்.
இவைகள் எல்லாம் இப்போது சோசலிச நாடுகள் இல்லை என்பதை அமரிக்கா போன்ற நாடுகளே ஒத்துக்கொள்ளும் நிலையில், இந்த நாடுகளை முன்வைத்து இடதுசாரிகளின் மீதான தாக்குதல்களையும் மேற்குறித்த தமிழ் அரசியல் வாதிகள் போகிற போக்கில் நிகழ்த்திச் செல்கிறார்கள்.
இந்தியா 80 களில் திட்டமிட்டுப் போராட்ட சக்திகளை அழித்தது போன்று, இன்று புலம்பெயர் அரசியல் வியாபாரிகளைப் பயன்படுத்தி ஏகாதிபத்தியங்கள் இனிமேல் உருவாகவல்ல போராட்ட சூழலை அழித்து வருகின்றது.
தமது சொந்த அரசியல் நலன்களுக்காக மொத்த மக்களின் எதிர்காலத்தைமே அழிக்க முனைகின்ற “தேசிய அரசியல் வியாபாரிகள்” அமரிக்கா, ஐக்கிய நாடுகள் சபை என்ற போலி நம்பிக்கைகள் ஊடாக நடத்தும் உளவியல் யுத்தம் எதிர்கொள்ளப்பட வேண்டும்.

1 comment:

BATSHABALU BATSHA said...

Win for jeneva masotha