.
நாடகம் அரங்கேறுவதற்கான
மணி ஒலித்துவிட்டது
நெறியாளரோ
வல்லமை படைத்த அமரிக்கா
நாடகத்தின் கருப்பொருள்
பழகிப்போன பாசிசம்
வல்லரசென்ற பெயரை
தக்கவைக்கும்; மேலாதிக்கம்
தாளம் தப்பி ஆடுகின்ற
அதன் கூட்டாளிகளும்
நடிகர்களாய் அணிவகுப்பு
திரைவிலகி காட்சி விரிகிறது
ஈரானின் முகத்தில் கறுப்புத்துணியும்
மண்டையோட்டில் இரண்டு கொம்புகளும்
சாத்தானை விரட்டியடித்து
மக்களைக் காக்க புறப்படுவதாய்
வளைகுடா எங்கும் வளையவரும்
விமானம் தாங்கி கப்பல்கள்
ஜனநாயக மீட்சியின் பெயரால்
பொழிகின்ற குண்டுகளில்
மக்கள் கொல்லப் படுவார்கள்
திரும்பும் இடமெல்லாம்
இளவும் பிணக்காடும்
தீநாக்கின் தீண்டலினால்
அழகிய நாடொன்று கருகிக் கிடக்கும்
அக்கிரம ஆட்சி அகற்றப்பட்டதாய்
அச்சிலும் காற்றிலும் செய்திவரும்
பொம்மையொன்று தலையாட்ட
புதிதாய் அமர்த்தப்படும்
பிறகென்ன
குழுக்கள் பிரியும்
குண்டுகள் வெடிக்கும்
ஆயுத விற்பனை அழகாய் நடக்கும்
மீட்பர்கள் மீண்டுமொரு நாட்டில்
உறிஞ்சும் அட்டைகளாய்
ஒட்டிக்கொள்வார்கள்
திரையில் மீண்டுமொரு நாடு
புள்ளியாய் தோன்றும்
மக்கள் கைதட்டி கலைந்து செல்வார்கள்.
5 comments:
அருமை கவிஞரே! உலக பொலிஸ்காரன் அமெரிக்காவை வடிவாய் சரியாய் படம் பிடித்திருக்கிறீர்கள்.
பிறகென்ன என்ற இடத்திலிருந்து இன்னொரு பந்தி ஆரம்பித்திருக்கலாமோ?
சக்தி.
உலக பொலிஸ்காரனை தட்டி கேட்க யார் உலகில் இருக்கிறார்கள் கவிஞரே?அதையும் சொல்லியிருக்கலாமே...சோசலிச ரஸ்ஷா வருமா அல்லது சீனாதான் வருமா
கவிஞரே திரையில் புள்ளியாய் தெரியும் நாடு சீனாவா இலங்கையா? சீனா புள்ளியாய் தெரிவதற்கு சாத்தியமில்லை இலங்கை என்பது சரியான விடையா? சொல்லித் தொலையும் ஜயா மண்டை வெடித்துவிடும் போல் உள்ளது. சஸ்பென்ஸ் என்ன சஸ்பென்ஸ் வேண்டிக் கிடக்கு இதுதான் என்று அடித்து சொல்லி விடலாம் அல்லவோ.
நல்ல கவிதை நண்பரே
நன்றி சக்தி உங்கள் கருத்துப்போல் பந்தி பிரித்திருக்கலாம்தான். வருகைக்கும் கருத்திற்கும் நன்றி
வணக்கம் கிறுக்கன் ரஸ்சியா கேட்குமோ சீனா கேட்குமோ தெரியாது நிட்சயமா நம்மாக்கள் கேட்கமாட்டினம். தட்டிக்கேட்டு பழக்கமில்லை. வருகைக்கும் பதிவுக்கும் நன்றி
பதிவுக்கு நன்றி ரமேஸ் இப்ப நமக்கெல்லாம் சிந்திக்கவே பஞ்சியாக இருக்கிறது. நமக்காக யாரோ சிந்தித்து சொல்லியதால் ஏற்பட்டதாய் இருக்கும்.
உங்கள் ஊகம் சரியாகவும் இருக்கலாம் இல்லாமலும் இருக்கலாம்
Post a Comment