மெளனம் கலைகிறது 5 - நடராஜா குருபரன்


வெள்ளை வான் கடத்தல்களும் எரிவாயு அறைகளில் சாம்பராகும் மனிதர்களும்:- மெளனம் கலைகிறது 5 -

Bookmark and Share
மெளனம் கலைகிறது 5 - நடராஜா குருபரன்
வெள்ளை வான் கடத்தல்களும் எரிவாயு அறைகளில் சாம்பராகும் மனிதர்களும்:-

மெளனம் கலைகிறது என்னும் எனது தொடரின் ஐந்தாவது பகுதியை எழுத முனைந்த போது நேற்று ( 23.01.12)  ஜனரள என்ற சிங்களப் பத்திரிகையில் வெளியானதொரு செய்தியை வாசிக்க நேர்ந்தது. அதன் தமிழாக்கம்: 
"வெள்ளை வான்களில் கடத்திச் செல்லப்படும் நபர்களைக் கொலை செய்து எரியூட்டும் எரிவாயு அறை வசதிகளை கொண்ட சில வாகனங்கள் நாட்டின் சில பகுதிகளில் காணப்படுகின்றன.  பிணங்களை எரியூட்டப் பயன்படுத்தப்படும் எரிவாயு அறைகள், இந்த வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ளன. கடந்தகாலங்களில் கடத்திச் செல்லப்பட்ட பலர் இவ்வாறு கொலை செய்யப்பட்டு,  எரிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. கொழும்பு, கம்பஹா, கண்டி, காலி, மாத்தறை, அனுராதபுரம், மற்றும் வடக்கு, கிழக்குக்கின் மாவட்டங்களுக்கும் தலா ஒரு வாகனம் என்ற வகையில், இந்த வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. மிகவும் ரகசியமான முறையில் பயன்படுத்தப்பட்டு வரும் இந்த எரிவாயு வசதிகளைக் கொண்ட வாகனங்களில் பிண எரிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள இராணுவத்துடன் நேரடியாகச் சம்பந்தப்படாத துணை ராணுவக் குழுக்களுக்கு விசேடமான பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன.

வெள்ளை வானில் கடத்திச் செல்லப்படுவர்களை நீண்ட காலங்களுக்குத் தடுத்து வைத்திருப்பது ஆபத்தானது என்பதால், அவர்களைக் கடத்தி தமக்கு தேவையான தகவல்களைப் பெற்றபின்னர் அல்லது விசாரணையின் பின்னர் கொலை செய்து அழித்து விடுவதற்கு இந்த வாகனங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இதன்மூலம் சாட்சியங்கள் தடயமின்றி அழிக்கப்பட்டு விடுகின்றன.கடத்திச் செல்லப்பட்ட பலரின் நிலைமை என்ன என்பதை அறிந்து கொள்ள முடியாமைக்கான காரணம் அவர்கள் மேற்குறித்த முறையில் கொலை செய்யப்பட்டு, அழிக்கப்பட்டமையே" 
இந்தச் செய்தியை படித்தவுடன் எனது மனதுள் வருகிற ஒரு சம்பவத்தை பகிர்ந்து கொள்ள என்மனம் விரும்புகிறது. எனது தொடரைக்  கூடுமானவரை கால அடிப்படையில் குழப்பங்கள் தோன்றாமல் தர முயற்சிக்கின்ற போதும் இது போன்ற சில இடைச் செருகல்களையும் தவிர்க்க முடிவதில்லை. ஞாபகத்திற்கு வருகிற விடையங்களை புறந்தள்ளி விட்டால் அவை என்றேன்றைக்குமாக மறைந்து விடும். மேலும் ஒரு சிங்கள மொழிப்பத்திரிகை துணிந்து ஒரு விடையத்தை அம்பலப்படுத்தும் போது நான் அறிந்தவற்றையும் வெளிக்கொண்டு வருவது கடமையாகிறது. அதனால் கடந்த 4 ஆவது தொடரில் எழுதிய கிழக்கின் உடைவும் கருணாவும் தராக்கியும் - என்பதன் தொடர்ச்சியை 6 ஆவது தொடரரில் தொடர்கிறேன்.
இங்கு இந்த தகவலை என்னுடன் பகிர்ந்து கொண்டவர்களின் பாதுகாப்புக்கருதி தற்போதைக்கு  பெயர்களைத் தவிர்த்து விடுகிறேன்
அரசுக்கு ஆதவாகச் செயற்படுகிற அரசியற் கட்சிக்கு ஆதரவளித்து வந்த விடுதலைப் புலிகளால் கொலை செய்யப்பட்ட  பெண் அரசியற் செயற்பாட்டாளரும் மனித உரிமை ஆர்வலருமான ஒருவரை "ஜனரள"வின் செய்தி எனக்கு நினைவூட்டியது. 
2002ல் ஆரம்பிக்கப்பட்ட விடுதலைப் புலிகளுக்கும் அரசாங்கத்திற்கும் இடையிலான சமாதானப் பேச்சுவார்த்தை  2005ன் இறுதிப்பகுதியில் கலைந்தபோது வடக்கில் இலங்கை இராணுவம் பெரும் களை எடுப்பை தனது புலனாய்வுப் பிரிவு மற்றும் தமிழ்த்துணை இராணுவக் குழுக்களின் உதவியுடன் ஆரம்பித்திருந்தது. விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் அவர்களது ஆதரவாளர்கள் ஆகியோரைக் குறிவைத்தே இந்த நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டிருந்தது
சமாதான காலத்தில் பொங்குதமிழ் என்னும் எழுச்சி நிகழ்வு விடுதலைப்புலிகளால் அறிமுகப்படுத்தப்பட்டு வடக்கில் உள்ள சாதாரண மக்கள் தொடங்கி சகல பொது அமைப்புகளும், பொங்கு தமிழ் எழுச்சிகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். முச்சக்கர வாகனச்சாரதிகள் சங்கம், சிகையலங்கரிப்போர் சங்கம், சலவைத் தொழிலாளர் சங்கம், மீனவச் சங்கங்கள், விவசாயச் சங்கங்கள் என அனைத்து அமைப்புக்களும்  பொங்குதமிழ் நிகழ்ச்சிகளில் தமது முகங்களைக் காட்ட வேண்டியிருந்தது. 
வீதியில் நின்ற படையினர்களைத் தமிழ் இளைஞர்கள் துணிவாகக் கேலி செய்தனர், காறித் துப்பிச் சென்றனர். இவ்வாறான சம்பவங்களினால் கொதிப்படைந்திருந்த படையினர் “இப்போதைக்கு சமாதான காலத்தில் எமது கைகள் கட்டப்பட்டுள்ளன ஆனால் கண்கள் கட்டப்படவில்லை” எனக் கூறியிருந்தனர். 
புலிகளுக்கும் மகிந்த ராஜபக்ஸவுக்கும் இடையிலான பேச்சுக்கள் முறிவடைந்து யுத்தம் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்பாகவே புலிகளின் முக்கியஸ்த்தர்கள் தமது அரசியல் அலுவலகங்களை மூடிக்கொண்டு வன்னிக்கு சென்று விட்டனர். ஆனால் புலிகளின் செயற்பாட்டாளர்களாகவும் ஆதரவாளர்களாகவும் இனம் காணப்பட்ட ஆயிரக்கணக்கானவர்கள் குடாநாட்டில் சிக்கியிருந்தனர். இவர்களில் பலரை புலிகள் சமாதான காலத்தில் வன்னிக்கு அனுப்பி பயிற்சியும் அளித்து குடாநாட்டிற்கு அனுப்பி இருந்தனர். 
இவை இலங்கை அரசின் புலனாய்வுப் பிரிவினருக்கும் புலிகளால் சமாதான காலத்தில் குறிவைக்கப்பட்டு பிஸ்டல் குழுவினால் ஆடிப்போயிருந்த தமிழாயுதக் குழுக்களுக்கும் தெரியாததல்ல. அவர்கள் தமக்கான சந்தர்ப்பத்துக்குக் காத்திருந்தனர்.
உண்மையில் 2005 ஆண்டின் பிற்பகுதியில் யுத்தம் ஆரம்பிக்கப்பட்ட போதே அரசாங்கத்திற்கு அல்லது இராணுவத்திற்கு எதிராகச் செயற்படக் கூடியவர்கள் யார் என்ற பட்டியலை பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஸவின் உத்தரவுக்கு அமைய இலங்கைப் புலனாய்வுப் பிரிவினர் தயாரித்திருந்தனர். (இலங்கையில்  அரசாங்கத்தின் சட்ட ரீதியான புலனாய்வுப் பிரிவுகளைத் தவிரவும் பாதுகாப்பு செயலாளர் இராணுவத் தளபதி இராணுவப் புலனாய்வுப் பிரிவின் தளபதி ஆகியோரின் நேரடி கட்டுப்பாட்டிலும் வேறு பல புலனாய்வுப் பிரிவுகள் தொழிற்பட்டன என்பதையும் இங்கு நினைவு கூரலாம்.) 
விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களாக இருந்து கொண்டு இரகசியமாகச் சிவில் சமூகத்துடன்  வேலை செய்பவர்கள், புலிகளின் வெளிப்படையான ஆதரவாளர்கள், புலி அனுதாப ஊடகவியலாளர்கள், புலிகளின் பொருளாதார ஈட்டங்களுக்கு துணைபுரிபவர்கள், புலிகளின் முதலீடுகளின் பின்னால் இருப்பவர்கள், புலி அனுதாப அரசியல்வாதிகள் எனப்பலவகையாகப் பிரிக்கப்பட்டு இந்தப் பட்டியல் தயாரிக்கப்பட்டு இருந்தது. இதனைத் தயாரிப்பதற்கு அப்போது அரசாங்கப் படைகளுடன் இயங்கிய துணை இராணுவக் குழுக்களும் அரச புலனாய்வாளர்களுடன் இணைந்து செயற்பட்ட தமிழ்த் தரப்புகளும் துணைபுரிந்தனர். 
நான் முன்பு சொன்ன படி இலங்கையில் பல்வேறு புலனாய்வுக்குழுக்கள் இருந்தன. ஒரு பிரிவு மேற்கொள்ளும் கடத்தல் மற்றும் கொலை நவடிக்கை மற்றய பிரிவிற்குத் தெரியாது. ஆனால் இவையாவற்றையும் ஒருங்கிணைத்த பாதுகாப்பு செயலர், மற்றும் புலனாய்வுத்துறைத் தலைவர் ஆகியோருக்கு அனைத்து செயற்பாடுகளும் தெரிந்திருக்கும். இவ்வாறு செயற்படும் பிரிவுகளில் குறைந்தது துணை இராணுவக் குழுக்களைச் சேர்ந்த 3 உறுப்பினர்களாவது இருப்பார்கள். இவர்கள்  தமிழர்களாக இருப்பார்கள். இவர்கள் முன்னாள் விடுதலை இயக்கங்களின் உறுப்பினர்களாகவோ அல்லது முன்னாள் விடுதலை இயக்கங்களில் இருந்து கொண்டு அவற்றின் தலைமைகளுக்கு தெரியாமல் இரகசியமாக இந்த ஈனச் செயலைச் செய்பவர்களாகவோ அல்லது தலைமைகளுக்கு தெரிந்தும் அதற்கு அனுமதிக்கப்பட்டவர்களாகவோ இருந்தார்கள்.
கடத்தல் மற்றும் கொலைகளைச் செய்ய முனையும் போது அவை அம்பலப்படுமாயின் அவற்றுக்கு காரண கர்த்தாக்களாக மாற்று இயக்கங்களைச் சுட்டி விட்டு அரசு தப்பித்துக் கொள்வதற்காகவே இந்தத் தமிழ்க் கொலைகாரர்களை அரசு கடத்தல் கொலைக் களங்களில் முன்னரங்கங்களில் வைத்திருந்தது. இதனை அறிந்தும் மாற்று இயக்கங்கள் அரசுடன் இணைந்தே இருந்தன. (இந்த இடத்தில் மாற்று இயக்கங்கள் அரச ராணுவத்தின் கட்டுப்பாடுகளுக்குள் செல்வதற்கு புலிகளின் ஜனநாயக மறுப்பும் பங்களித்துள்ளது.)
தமது முன்னரங்கத்தில் இவர்களை வைத்திருந்த போதும். இவர்களைத் தமது பின்னரங்கத்திற்கோ மூலவிடத்திற்கோ அரச புலனாய்வாளர்கள் அழைத்துச்செல்வதில்லை.
தமது நடவடிக்கைகள் முடிந்தவுடன் அவர்களுக்கான தங்குமிடங்களில் இந்தத் துணை இராணுவப் பிரிவு உறுப்பினர்கள் இறக்கி விடப்பட்டு விடுவார்கள். உதாரணமாக ஒருவர் கடத்தப்பட்டு வாகனத்தில் பாதுகாப்பாக ஏற்றப்பட்ட பின்னர் தமது இரகசிய இடத்திற்கு கொண்டு செல்லும் வழியில் இந்த தமிழ் எடுபிடிகள் கழற்றி விடப்படுவர். கடத்தப்பட்டவருடன் இராணுவப் புலனாய்வாளர்கள் மட்டுமே பிரதான இரகசிய இடத்திற்குச் செல்வர்.
இது இலங்கையில் புலனாய்வுப்பிரிவுகள் எவ்வாறு கடத்தல் செயற்பாடுகளையும் கொலைகளையும் புரிந்தனவென்பதை வெளிப்படுத்துகிறது. வடக்கு கிழக்கிலும் பின்னர் தெற்கிலும் இதே பாணியில்தான் இலங்கைப் புலனாய்வுப் பிரிவுகள் தொழிற்பட்டன.
யுத்தம் ஆரம்பித்தவுடன் குடாநாட்டை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப் புலிகள் முனைவதனை முன்பே அறிந்திருந்த படையினர் புலிகளின் ஆதரவாளர்களையும் புலிகளின் மறைமுகமான உறுப்பினர்கள் எனக்கருதப்பட்ட இளைஞர் யுவதிகளையும் கடத்தத் தொடங்கினர்.  2005ன் பிற்பகுதியில் தொடங்கி 2009ம் ஆண்டு வரையான காலப் பகுதிக்குள் ஏறத்தாள 2000 தமிழ்ர்கள் யாழ் குடாநாட்டில் காணமல் போயும்  கொல்லப்பட்டும் இருந்தனர். இதில் சில ஊடகவியலாளர்களும் உள்ளடங்கியிருந்தனர்.
முன்னாள் ராணுவத் தளபதி சரத் பொன்சேகா யாழ்பாணக் கட்டளைத் தளபதியாக இருந்த போது யாழ்ப்பாணத்தில்  தமிழ்ர்கள் கடத்தப்படுவது அதிகரிக்கத் தொடங்கியது. பொன்சேகாவின் காலத்தில் யாழ்ப்பாணத்தில் ஏறத்தாள 200  பேர் காணாமல் போயிருந்தனர். பின்னர் பொன்சேகாவின் அப்போதைய  வாரிசாகக் கருதப்பட்ட (தற்போதைய ஆளுனர்) சந்திரசிறீயின் காலத்தில் மிகுதித் தமிழர்கள் (1800வரையிலானவர்கள்) காணாமல் போயினர்.
இது குறித்து நான் முன்பு குறிப்பிட்ட பெண்மணி எனக்குத் தெரிந்த பெரும்பான்மையினத்தைச் சேர்ந்த மனித உரிமைச் செயற்பாட்டாளரும் சட்டத்தரணியுமான தனது நண்பர் ஒருவரிடம் சொல்லி உரையாடி வேதனைப்பட்டுள்ளார்.
 "ஐயோ வடக்கில் நடக்கும் அக்கிரமங்களை வெளியில் சொல்ல முடியாது. தினம்தோறும் வகை தொகையின்றி இளைஞர்கள் நடுத்தர வயதினர் முன்னர் புலிகளின் ஆதரவாளர்களாக இருந்தவர்கள், மற்றும் செயற்பாட்டாளர்கள் கடத்தப்பட்டுக் கொல்லப்படுகிறார்கள். இவர்களைக் கடத்துவதற்கு நான் சார்ந்திருக்கும்  அமைப்பின் உறுப்பினர்கள் உட்பட ஏனைய தமிழ் ஆயுதக்குழுக்களின் உறுப்பினர்கள் மற்றும் ஆயுதக் குழுக்களில் இருந்து பிரிந்து படையினருடன் இணைந்து செயற்படும் உதிரித் தமிழ்ர்கள் அனைவரையும் இலங்கை அரசின் புலனாய்வுப் பிரிவினரால் பயன்படுத்தப்படுன்றனர். இது குறித்து எம்மால் எதுவும் செய்ய முடியாது உள்ளது. இவற்றை சகித்துக் கொண்டும் இருக்க முடியவில்லை. தலை வெடித்து விடும் போல் உள்ளது” என தெரிவித்துள்ளார். 
அது மட்டுமல்லாமல் கடத்திச் செல்லப்பட்டவர்களை எந்தவித தடயமுமின்றி அழிப்பதற்காக  எரிவாயு அறைகளையும், பலாலி உயர் பாதுகாப்பு வலையப் பகுதியினுள் அமைந்துள்ள இரகசிய எரிவாயு அறைகளையும் பயன்படுத்தியதாகவும் தெரிவித்துள்ளார். (ஏற்கனவே வசாவிளான் மத்திய மகா வித்தியாலையத்தில் அமைந்திருந்த சித்திரவதைக் கூடத்தின் படத்துடன் குளோபல் தமிழ்ச் செய்திகள் செய்தி வெளியிட்டு இருந்தது)
இந்தத்தகவலை பெரும்பாமையினத்தைச் சேர்ந்த அந்த மனித உரிமையாளர் பிறிதொரு சந்தர்ப்பத்தில் என்னைச் சந்தித்து அப்போதைய அரசியல் நிலை குறித்து உரையாடிக் கொண்டிருந்தபோது எனக்குத் தெரிவித்து கவலைப்பட்டது மட்டுமன்றி அரசாங்கத்துடன் மிக நெருக்கமாக இருக்கும் குறித்த அமைப்பின் தலைவரின் அரசியலை நியாயப்படுத்திய அந்தப் பெண்மணியின் கவலையையும் மனிதாபிமானமும் தனக்கு ஆச்சரியமளித்ததாகவும் கூறியிருந்தார். 
குறித்த பெண்மணியுடன் வெளிநாடு ஒன்றில் சரியாக எனக்கு ஞாபகம் இல்லை ஜேர்மனியாக இருக்கலாம் முதலில் உரையாடுவதற்கான சிறிய நேர அவகாசம் கிடைத்தது.  குறித்த அரசியற் கட்சியின் தலைவரது வெளிநாட்டு விஜியத்தின் போது குறித்த பெண்மணி அரசாங்கப் பிரதிநிதிகளுடன் அங்கு வருகை தந்திருந்தார். பின்னர் கொழும்பு பம்பலப்பிட்டியில் அவரை ஊடகவியலாளராகவும் சந்தித்திருந்தேன். மிகவும் ஆளுமையுள்ள பெண்ணாக பலவிடயங்களில் தெளிவுடன் சரளமாகப் பேசுகின்ற மனிதாபிமானம் கொண்ட சேராத இடம் சேர்ந்த அதிகாரியாக  எனக்கு அவர் தென்பட்டார். 
 வாழ்வில் நான் சந்தித்த சில மனிதர்களின் தனிப்பட்ட குணநலன்களை குறிப்பாக அவர்களின் மனிதாபிமான உணர்வு மற்றும் இன உணர்வுகளைப் பார்த்த போது அவர்கள் சார்ந்திருந்த அரசியலுக்கும் அதற்குக் சம்பந்தமிலாதிருந்ததைக் கண்டேன். தமது குறுகிய நலன்களுக்காக தமது உயர்ந்த மனிதாபிமானத்தையும் இன உணர்வையும் அடகு வைத்தமை ஒரு முரணணி. 
அந்தப்பெண்மணி வடக்கில் கடத்தப்பட்டவர்கள் சித்திரவதை செய்யப்பட்டு யாழ்ப்பாணத்தில் எரிவாயு அறைகளில் இட்டு எரிக்கப்பட்டார்கள் என்பதனை 2007 காலப்பகுதியிலேயே தனது சிங்கள நண்பருக்கு சொல்லி இருக்கிறார். அந்தப் பெண்மணிக்கு மனிதத்தன்மை விழித்திருந்த கணங்கள் அவை.
2005ஆம் ஆண்டின் இறுதியில் போர் ஆரம்பிக்கப்பட்ட போது முன்பு பெற்றுக் கொண்ட  அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டு அரசாங்கமும் அதன் படைகளும் மிகவும் ஒழுங்கமைக்கப்பட்ட வகையில் தமது புலனாய்வு நடவடிக்கைகளை மேற்கொள்ளத்தலைப்பட்டன.
 கடந்த காலங்களில் பல சந்தர்பங்களில்  கடத்தப்பட்டவர்களின் தடயங்கள் அகப்பட்டதன் காரணமாக அதில் சம்பந்தப்பட்டவர்கள் அம்பலப்படுத்தப்பட்டார்கள். 
முன்னரை விட வகை தொகையின்றிப் பெருமளவு கடத்தல்களையும் கொலைகளையும் செய்ய வேண்டியிருந்ததால் சடலங்களை மறைப்பதில் புலனாய்வாளர்களுக்கு கடுமையான சிரமங்கள் ஏற்பட்டன எனவும் இதனாலேயே தடயங்கள் எதுவும் எஞ்சாத வகையில் யாவற்றையும் எரியூட்டக்கூடிய எரிவாயு அறைகளை இலங்கை இராணுவப் புலனாய்வுப் பிரிவு துறை தயார் செய்ததாக கருதப்படுகிறது. 
இந்த விடயத்தையே நாடுபூராகவும் எரிவாயு அறைகள் இருப்பதை ஜனரள என்ற சிங்களப் பத்திரிகை இப்போது  உறுதிப்படுத்தி உள்ளது.

No comments: