உலகச் செய்திகள்

.
தாய்லாந்து பொதுத் தேர்தல் : தக்ஷின் ஷினவட்ராவின் சகோதரி மகத்தான வெற்றி! _


4/7/2011

கடந்த ஞாயிற்றுக்கிழமை தாய்லாந்தில் இடம்பெற்ற தேர்தலில் அதன் எதிர்க்கட்சி வெற்றியீட்டியது. நாடு கடத்தப்பட்ட முன்னாள் பிரதமர் தக்ஷின் ஷினவட்ராவின் சகோதரி கடும் போட்டிக்கு மத்தியில், நாட்டின் முதலாவது பெண் பிரதமராக பதவியேற்றார்.

யிங்லக் ஷினவட்ரா (44), பியூ தாய் கட்சியின் தலைவராகப் பொறுப்பேற்பதன் மூலம், அவரது அண்ணனுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட சதியில் அதிர்ச்சி மாற்றம் ஏற்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

எதிர்த்துப் போட்டியிட்ட பிரதமர் அபிசிட் விஜ்ஜாஜிவா, முதலாவது பெண் பிரதமராக பதவியேற்ற யிங்லக்கிற்கு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார். மேலும் அவர், “தேர்தல் முடிவுகள் அனைத்தும் வெளியாகிய நிலையில் பியூ தாய் கட்சி தேர்தலில் வெற்றி பெற்றுள்ளது. ஒரு சிறந்த அரசாங்கத்தை உருவாக்க வேண்டும் எனக்கூறி, பியூ தாய் கட்சிக்கு எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்" எனக் கூறியுள்ளார்.

கிளர்ச்சிமிக்க பெருந்திரளான ஆதரவாளர்களைத் தாம் கொண்டிருந்ததோடு, பெரும்பான்மையை உறுதி செய்து கொள்வதற்காக சிறு கட்சிகளுடனான ஒப்பந்தங்களையும் மேற்கொண்டிருந்ததாக யிங்லக் தெரிவித்துள்ளார்.

மேலும், தமது வெற்றிக்கு வாக்காளர்கள் மாத்திரமே காரணமல்ல எனவும், ஷினவட்ரா பரம்பரையின் அங்கத்தவராகத் தாம் விளங்கியமையும் ஒரு காரணம் எனவும் அவர் தெரிவித்திருக்கின்றார்.

வீரகேசரி இணையம்


இரு குண்டு வெடிப்புக்களில் ஈராக்கில் 27 பேர் பலி; 50 பேர் காயம் Wednesday, 06 July 2011
bomb_blastஈராக்கில் தஜியோன் நகரிலுள்ள அரச கட்டிடமொன்றில் இடம்பெற்ற இரு குண்டு வெடிப்புக்களில் 27 பேர் கொல்லப்பட்டதுடன் 50 இற்கும் அதிகமானோர் காயமடைந்திருப்பதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

தலைநகர் பாக்தாத்திற்கு வடக்கே 20 கி.மீ.தூரத்திலுள்ள தஜியோன் நகரில் அரச கட்டிடமொன்றின் வாகனத் தரிப்பிடத்தில் இத் தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக பாதுகாப்பு வட்டாராங்கள் தெரிவிக்கின்றன.

முதலாவது நடத்தப்பட்டது கார்க்குண்டுத் தாக்குதலெனவும் மற்றையது தற்கொலைக் குண்டுத் தாக்குதலா அல்லது வீதியோரக் குண்டு வெடிப்பா என்பது தெளிவாகவில்லையெனவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

சம்பவ நேரம் இப் பகுதியில் ஜனநடமாட்டம் அதிகமிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

இத்தாக்குதல்களில் 35 பேர் பலியானதாக முதலில் தெரிவிக்கப்பட்ட போதும் பின்னர் 27 பேர் பலியானதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த இரு நாட்களாக ஈராக்கில் தொடர்ச்சியாக தாக்குதல்கள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

ராய்ட்டர்ஸ்

நன்றி தினக்குரல்

நியூசிலாந்தில் பாரிய நிலநடுக்கம்


6/7/2011
நியூசிலாந்தின் மத்திய பகுதியில் நேற்றுக் காலை, 6.5 ரிச்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. தாபோ நகரத்தின் அருகே 30 கிலோ மீட்டர் தொலைவிலேயே நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தததாகத் தெரிவிக்கப்படுகிறது.

நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விபரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. வீடுகள், கட்டிடங்கள் சேதமடைந்திருப்பதாகவும், சாலைகளில் விரிசல் ஏற்பட்டிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. உயிரிழப்பு பற்றிய எவ்வித தகவல்களும் இதுவரை வெளியாகவில்லை.

நன்றி வீரகேசரி



சவூதி அரேபியாவை நோக்கி பயணித்த படகொன்று மூழ்கியதில் 197 குடியேற்றவாசிகள் பலி


6/7/2011
சூடானிலிருந்து சுமார் 200 குடியேற்றவாசிகளுடன் சவூதி அரேபியாவை நோக்கி பயணித்த படகொன்று செங்கடல் பகுதியில் மூழ்கியுள்ளதுடன் அதில் பயணித்தவர்களில் சுமார் 197 பேர் வரை உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் படகிலிருந்தவர்களில் மூவரை மட்டுமே காப்பாற்ற முடிந்துள்ளதாகவும் சூடானிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குறித்த பயணத்தின் போது படகில் தீப்பற்றிக்கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

படகில் பயணித்தவர்களில் அதிகமானோர் சாட்,நைஜீரியா, சோமாலியா மற்றும் எரித்ரியா நாடுகளைச் சேர்ந்தவர்கள் என சூடானிய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

சட்டவிரோதமாக ஆட்களைக்கடத்தும் யேமன் நாட்டைச் சேர்ந்த மேற்படி படகின் உரிமையாளர்கள் நால்வர் சூடானில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை மீட்புப்பணிகள் தொடர்ந்து இடம்பெற்றுவருவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நன்றி விரகேசர்


உலக வரைபடத்தில் 193 ஆவது நாடாக மலர்ந்தது தென் சூடான் பான் கீ மூன் உட்பட சர்வதேச தலைவர்கள் வைபவத்தில் பங்கேற்பு .


Sunday, 10 July 2011
தென் சூடான் உலகின் புதிய நாடாக நேற்று சனிக்கிழமை மலர்ந்துள்ளது. கார்ட்டோம் நிர்வாகத்தின் கீழிலிருந்த தென் சூடான் 20 இலட்சம் உயிர்களை காவுகொண்ட கொடூர குற்றம் தசாப்தங்களாக தொடர்ந்த நிலையில் இப்போது புதிய தேசமாக உலக வரைபடத்தில் இடம்பெற்றிருக்கிறது. தென்சூடானின் தலைநகரான கியூபாவில் வெள்ளி நள்ளிரவில் சுதந்திரக் கொண்டாட்டங்கள் கோலாகலமாக ஆரம்பமாகின. வீதிகள் ஓரம் மக்கள் குழுமியிருந்து ஆடல், பாடலுடன் வாத்தியங்களை இசைத்துக்கொண்டும் கொடிகளை உயர்த்தியவாறும் புதிய தேசத்தின் ஜனாதிபதியான சைவா கிர் மாயாடிட்டின் நாமத்தை உச்சாடனம் செய்துகொண்டும் மகிழ்ச்சி ஆரவாரத்தில் ஈடுபட்டனர்.

நள்ளிரவு முடிவடைந்து புதிய உதயம் ஆரம்பமானபோது தெற்கு சூடானின் புதிய தேசிய கீதம் இசைக்கப்பட்டது. உலகில் 193 நாடாகவும் ஐ.நா.வில் ஆபிரிக்காவைச் சேர்ந்த 54 ஆவது உறுப்பினராகவும் தென்சூடான் பரிணமித்துள்ளது.

சூடான் ஜனாதிபதி (வட சூடான்) ஒமர் அல் பசீர் ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் இந்திய துணை ஜனாதிபதி ஹமீட் அன்சாரி உட்பட உலகின் முன்னணித் தலைவர்கள் பலர் வைபவத்தில் கலந்துகொண்டனர். வெள்ளிக்கிழமை மாலை தெற்கு சூடானை சுதந்திர தேசமாக சூடான் அங்கீகரித்துள்ளது.

சூடான் குடியரசு தெற்கு சூடான் குடியரசை சுதந்திர நாடாக அங்கீகரிப்பதாகவும் 1956 ஜனவரி 1 இல் வகுக்கப்பட்ட எல்லைகளின் பிரகாரம் அந்த நாட்டை சுதந்திர தேசமாக ஏற்றுக்கொள்வதாகவும் சூடானின் ஜனாதிபதி விவகார அமைச்சர் பத்க்கிரி ஹசன் சலிக் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். சர்வஜன வாக்கெடுப்புக்கும் பின்னரான சகல விவகாரங்களுக்கும் தீர்வு காணப்படுமெனவும் விரிவான சமாதான உடன்படிக்கையை சூடான் அரசாங்கம் அமுல்படுத்துவதில் உறுதியாக இருப்பதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார்.

முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் புஷ்ஷின் கீழ் வெளிவிவகார அமைச்சராக இருந்த ஹொலின் பவலின் அனுசரணையுடன் 2005 இல் வடக்கு சூடானும் தென் சூடானும் விரிவான சமாதான உடன்படிக்கையை எட்டியிருந்தனர். இதன் மூலம் உள்நாட்டு யுத்தம் நிறுத்தப்பட்டு கடந்த ஜனவரியில் சர்வஜன வாக்கெடுப்பு இடம்பெற்றது. 99 சதவீதமான தென் சூடான் மக்கள் சுதந்திர நாட்டுடுக்கு சர்வஜன வாக்கெடுப்பில் ஆதரவளித்திருந்தனர். ஆனால், 2005 சமாதான உடன்படிக்கையில் உள்ளடங்கியிருக்கும் பிரதான விடயங்கள் பலவற்றிற்கு இன்னரும் தீர்வு காணப்படவில்லை. எண்ணெய் வள பிராந்தியமான அபேயை எந்த சூடானின் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது என்ற பிரச்சினைக்கு இன்னமும் தீர்வு காணப்படவில்லை. அத்துடன், எல்லைகளில் உள்ள சிறுபான்மை இனங்களின் பிரஜாவுரிமைப் பாதுகாப்பு எண்ணெய் மூலமான சம்பாத்தியங்களை எவ்வாறு பகிர்ந்துகொள்வது என்பது தொடர்பான பிரச்சினைகளுக்கும் இன்னமும் தீர்வு எட்டப்படவில்லை. தென்சூடானே 70 சதவீதமான எண்ணெய் வளத்தைக் கொண்டிருக்கின்றது.



nantri Thinakkural


No comments: