தமிழ் சினிமா

உதயன்

ஒரு கொலைக்கு காரணமானவனை தேடும் தேடுதல் வேட்டை தான் கதை.

மதுரையில் பெரிய தாதாவாக விளங்கும் ஆசிஷ் வித்யார்த்தின் வீட்டில் ஒரு கொலை நடந்து விடுகிறது. அந்த கொலைக்கு காரணமானவர்களை கண்டுபிடிக்க ஆசிஷ் வித்யார்த்தின் கும்பலை சேர்ந்தவர்கள் ஊர் ஊராக தேடுதல் வேட்டை நடத்துகிறார்கள்.

ஆசிஷ் வித்யார்த்தின் கும்பலானது ஒவ்வொரு ஊரிலிருக்கும் முக்கிய ரவுடிகளிடமும், தன் வீட்டில் நடந்த கொலைக்கு யார் காரணம் என்று மிரட்டுகிறார்கள். அனைவரும் பயத்தில் தான் இல்லை என்று கூறிவிடுகிறார்கள். இறுதியாக அப்பு என்ற ரவுடி தான் அதற்கு காரணம் என்று கண்டு பிடித்து சென்னையை வந்தடைகிறார் ஆசிஷ் வித்யார்த்தி. சென்னையில் ஒரு தனியார் வங்கியில் பணிபுரியும் வசந்தாக அருள்நிதி, அறிமுக நாயகியாக பிரணிதா (பிரியா) என்ற கதாபாத்திரத்தில் இணைய தள அலுவலகத்தில் பணிபுரிந்து வருகிறார்.


எதேச்சையாக இந்த இரண்டு பேருக்கும் இடையேயான முதல் சந்திப்பு சிறு விபத்தில் நிகழ்கிறது. அதாவது, அருள்நிதி சென்று கொண்டிருக்கும் பைக் எதிர்பாராத விதமாக பிரணிதாவின் பைக்கின் மீது மோதுகிறது. அதிர்ச்சியில் திரும்பி பார்க்கும் பிரணிதாவின் முதல் பார்வையிலே, தன் மனதை பறிகொடுத்துவிடுகிறார். ஒருநாள் பிரணிதாவை சந்தித்து உடனடியாக திருமணம் பற்றி பேசி, அவரை காதலிக்க ஆரம்பிக்கிறார்.

பின்னர் தோழியின் வங்கி கடனுக்காக பிரணிதாவும் அருள்நிதியிடம் வந்து உதவி கேட்க, மோதலில் ஆரம்பித்தது சிறிய ஊடல்களுக்கிடையே காதலாக மாறுகிறது. பிரணிதாவின் தந்தை ஒரு பெரிய தாதாவிடம் ஆடிட்டராக பணிபுரிபவர். இந்த காதலை இவர் எதிர்க்க, வசந்த்தை மிரட்ட வரும் அந்த பெரிய தாதாவின் தம்பி அருள்நிதியை கண்டவுடன் மிரண்டு போய், கத்தியால் குத்திவிட, அப்போது அங்கே வந்து அவனை கொன்றுவிடுகிறார் ஆசிஷ் வித்யார்த்தி.

அவரை பார்த்தவுடன் வசந்த், அப்பா என்று கூறியபடி சரிய, இடைவேளை ஆரம்பிக்கிறது. அருள்நிதி யார்? அவனுக்கும் அந்த பெரிய சக்திக்கும் என்ன பிரச்சினை? எதற்காக அருள்நிதியின் அப்பா அவர்களை தேடி வருகிறார்? இந்த காதல் ஜோடிகள் சேர்ந்தார்களா? இப்படி பல கேள்விகளுக்கு வள வளன்னு விடையளிக்கிறது க்ளைமாக்ஸ்.

சிங்கிள் ஆக்ட்டுக்கே பீலிங்க்ஸ் காட்டத் தடுமாறும் நாயகனுக்கு இதில் டபுள் ஆக்ஷன். தானும் சிரமப்பட்டு நம்மையும் சிரமப்படுத்துகிறார் அருள்நிதி. இரண்டு கதாபாத்திரத்திற்கும் என்ன வித்தியாசம்னா தாதா நாயகன் பான்பராக்கோ வெற்றிலையோ போட்டிருப்பார். சாதா நாயகன் டிரஸ் மட்டும் போட்டிருப்பார். சில பேர் நேரில் பார்க்க அழகாக இருப்பார்கள் ஆனால் புகைப்படத்தில் அவர்களை காண சகிக்காது. அதே சமயம் சிலர் புகைப்படத்தில் நன்றாக இருப்பார்கள், ஆனால் நேரில் பார்த்தால் அவரா இவர்? என்று வினவும்படி இருப்பார்கள். நம்ம நாயகன் அருள்நிதி புகைப்படங்களில் பார்க்கையில் ஹான்ட்சமாகவே இருக்கிறார். நல்ல உயரம். சண்டை காட்சிகளில் திமிறியிருக்கிறார். ஆனால் நடிப்பென்று வரும் போது படு செயற்கை.

கதாநாயகி பிரணிதாவின் முகத்தை பார்த்துக்கொண்டே இருக்கலாம். நேர்த்தியான முகம், நல்ல முகபாவங்கள், ஒல்லியான உடல்வாகு. டபுள் ஹீரோ இருந்தும் அவர்களை ஓவர்டேக் செய்து சிங்கிள்மேன் ஆர்மியாக அசத்துவது சந்தானம் தான். இரட்டை அர்த்தத்தில் பேசினால் மட்டுமே கொமெடி என்று சந்தானத்திடம் யாரோ சொல்லி இருப்பார்கள் போல. இந்த வட்டத்தை விட்டு சந்தானம் வெளியே வந்தா இன்னும் நல்ல கொமெடிகளை தரமுடியும்.

படத்தின் கதை மற்றும் திரைக்கதை எண்பதுகளில் வந்த ரஜினி, கமல் படங்களை நினைவுப்படுத்துகிறது. இயக்குனர் சாப்ளின் பழைய படங்களை உல்டா பண்ணி எடுத்திருப்பார் போல. பழைய படத்தின் கதையை புது விதமாய் யோசிக்காமல் பழசாகவே எடுத்திருக்கிறார். ஆனால் சில இடங்களில் டச் நன்றாகவே ஒர்க் அவுட் ஆகிறது.

நாயகன் சின்னப்பையன்கிட்ட ஐஸ்க்ரீம் குடுத்துவிட்டு அதை நாயகியிடம் தரச்சொல்ல அவன் அவனோட ஆள் சிறுமிக்கு அதை தருவது அழகு. விஜய் மில்டனின் ஒளிப்பதிவு படத்துக்கு ப்ளஸ். ”இத்தனை நாளாய் எங்கே இருந்தாய்” பாடல் காட்சிகளில் கமெரா கோணங்களும், நாயகியின் முக அழகை 100 சதவீதம் மெருகேற்றி காட்டுகிறது. கிஷோரின் கத்திரி ஆங்காங்கே மழுங்கிப்போச்சு. படம் பூரா கண்ணியமாக பாடல்களை நுழைத்த இசையமைப்பாளர் மணிகாந்த் கத்ரி திடீர் என ”யக்கா யக்கா லக்கா லக்கா மேல இல்ல கீழே இல்ல ஆதரிப்பார் யாரும் இல்ல” என்ற மோசமாக டப்பாங் குத்துப்பாடல்களை நுழைத்து படத்தின் தரத்தை குறைத்துள்ளார்.

அடுக்குமாடி குடியிருப்பில் நாயகன் - நாயகி, சிறுவர் - சிறுமிகள் கண்ணாமூச்சி ஆட்டம் ஆடும்போது வரும் பின்னணி இசை அருமை. ஒரு தனியார் வங்கியில் அசிஸ்டெண்ட் மேனேஜராக இருக்கும் நாயகன் இப்படித்தான் கலர் போன ஜீன்ஸ் பேண்ட்டும், டக் இன் செய்யாத சட்டையுமாக படம் பூரா வருவாரா? டிராபிக்கில் மாட்டும் நாயகி நடுரோட்டில் சாவதானமாக மேக்கப் போடறாரே அதெப்படி?. இப்படியே சின்னச் சின்ன கேள்விகள் இயக்குனரை கேட்க தான் தோணுது. இருந்தாலும் சற்றே புத்திசாலித்தனமான வசனங்களால் ஒருவழியா தம் பிடிச்சு ஒக்கார வச்சிட்டாரு.

நடிகர்கள்: அருள்நிதி, சந்தானம், ஆசிஷ் வித்யார்த்தி, சாய்ரவி, மனோபாலா, கிருஷ்ணமூர்த்தி.
நடிகைகள்: பிரணிதா, ஸ்ரீரஞ்சனி, பானு.
இசை: மணிகாந்த்
இயக்கம்: சாப்ளின்
தயாரிப்பு: பிரபாகரன்

நன்றி விடுப்பு

No comments: