நினைவுகளின் சிதறல்களே வாழ்வின் நம்பிக்கைகளாக.....கவிதை

.
                                                                                                               செ.பாஸ்கரன்


மூடாத விழிகள்
உயிரற்ர ஓவியம்
பழுப்பிலையின் மஞ்சள்
தூரத்தே தெரியும் வானம்
இவையில் என் மனம் லயிக்கும்

அதிகாலை பறவைகளின் ஆரவாரம்
போர்வையின் விலகல்
மெல்லிய குளிரின் உரசல்
ஒலிக்கும் மனைவியின் பாதக்கொலுசு
சுகமான நெஞ்சின் பதிவுகள்




கொட்டும் மழையின் சந்தம்
ஊதல் காற்றின் உளறல்
சிறகுலர்த்த சிலிர்க்கும் பறவை
ஒற்றை மரத்தின் கருக்குருவி
உன்னோடு ஒட்டி நடந்த மாலைப்பொழுது
நெஞ்சைக் கிளறும் நினைவுகள்

நிலா ஒழுகும் இரவு
முற்றத்துக் கயிற்றுக் கட்டில்
அப்பாவின் சந்திரமதி புராணக் கதை
சுற்றியிருந்த உடன் பிறப்புகள்
மற்க்கமுடியாது மனதில் பதிந்தவை

வாழ்வின் பயணத்தில் மாறிமாறி
வந்து போகும் நினைவுகளோடு
என் வாழ்க்கையும் பயணிக்கிறது
நினைவுகளின் சிதறல்களே 
வாழ்வின் நம்பிக்கைகளாக
நாளாந்தம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.

3 comments:

kirrukan said...

நினைவுகளின் சிதறல்கள் நல்லாய் இருக்கின்றது,கவிதை தந்தமைக்கு நன்றிகள்.


[quote]ஒலிக்கும் மனைவியின் பாதக்கொலுசு
சுகமான நெஞ்சின் பதிவுகள்[/quote]


எனக்கு சந்திரமுகி திரைப்படம் வந்த பிறகு மனைவியின் கொழுசு சத்தம் கேட்டால் உடனே....ரா..ரா..மனசுக்குள் ரா..லக்க ..லக்க...நினைவுதான் வருகின்றது

Ramesh said...

"நினைவுகளின் சிதறல்களே
வாழ்வின் நம்பிக்கைகளாக
நாளாந்தம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்."


நல்ல வரிகள் கவிஞர் பாஸ்கரன். வாழ்க்கை என்பது வந்து போன சுகங்களை மீட்டிப்பார்த்து மகிழ்வதும் வரப்போகும் நல்லவைகளுக்கு ஏங்குவதும்தானே. தீதும் நன்றும் பிறர்தர வாரா என்ற வரிகள் நினைவில் வருகிறது.

SIVA said...

"சிறகுலர்த்த சிலிர்க்கும் பறவை
ஒற்றை மரத்தின் கருக்குருவி
உன்னோடு ஒட்டி நடந்த மாலைப்பொழுது
நெஞ்சைக் கிளறும் நினைவுகள்"

ஒட்டி நடக்க எனக்கும் விருப்பம்தான் மனைவியின் கிட்டப்போனாலே தள்ளி நடவுங்கோ என்று தானே ஓரம் போய் விடுவாள்.

நல்ல கவிதை ஒவ்வொருவர் மனங்களிலும் நிழலாடும் விடயங்களை நயத்துடன் கூறியுள்ளீர்கள்.