இலங்கை , இந்திய செய்திகள்

.
 இந்தியாவில் திரையிடப்படவிருக்கும் சனல்4 ஒளிப் பதிவுக் காட்சி

4/7/2011
இந்திய தஞ்சை மாவட்ட திலகா திடலில் இலங்கை தமிழர் ஒருமைப்பாட்டு நாளையொட்டி சுடரேந்தி உறுதியேற்கும் நிகழ்ச்சி எதிர்வரும் 8ஆம் திகதி நடைபெறவுள்ளது என இந்திய ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

தஞ்சை மாவட்டத்தில் எதிர்வரும் 8ஆம் திகதி இலங்கை தமிழர் தேசிய ஒருமைப்பாட்டு தினத்தை சிறப்பாக நடத்துவது தொடர்பான கலந்தாய்வுக் கூட்டம் தஞ்சை தெற்கு வீதியில் உள்ள இந்திய கம்யூனிஸ் கட்சி அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு இந்திய கம்யூனியஸ் கட்சியின் மாவட்ட செயலாளர் திருஞானம் தலைமை தாங்கினார்.

தமிழர் தேசிய இயக்கத்தின் பொதுச் செயலாளர் அய்யனாபுரம் முருகேசன், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் நல்லதுரை, தமிழ்த் தேச பொதுவுடைமை கட்சியின் மாவட்ட செயலாளர் பழ. ராசேந்திரன், தமிழர் தேசிய பேரவை தலைவர் துரை குபேந்திரன், அறிவியல் பேரவை தலைவர் பேராசிரியர் பாரி, ஏ.ஐ.டி.யூ.சி. மாவட்ட செயலாளர் சந்திரகுமார், இந்திய கம்யூனிஸ் கட்சி மாவட்ட துணைச் செயலாளர் முத்து உத்திராபதி, உடல் உழைப்பு சங்க பொதுச் செயலாளர் வெ. சேவையா, கும்பகோணம் அரசு போக்குவரத்து தொழிலாளர் சங்க பொதுச் செயலாளர் துரை மதிவாணன், இந்திய கம்யூனியஸ் கட்சி நகர செயலாளர் ராசேந்திரன், மக்கள் விடுதலை கட்சி மாநிலக்குழு உறுப்பினர் அருணாசலம் உட்பட பலர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


எதிர்வரும் 8ஆம் திகதி இந்தியா முழுவதும் இலங்கை தமிழர் ஒருமைப்பாட்டு நாளாக நடைபெறுவதையொட்டி தஞ்சை திலகர் திடலில் பல்லாயிரக்கணக்கான மக்கள் சுடரேற்றி உறுதியேற்கும் நிகழ்ச்சியை சிறப்பாக நடத்த வேண்டும்.

கட்சி, சாதி, மத பேதங்களை கடந்து தமிழின உணர்வாளர்கள் ஜனநாயக முற்போக்கு சக்திகள் அனைவரும் எதிர்வரும் 8ஆம் திகதி அணி திரள வேண்டும் என இலங்கை தமிழர் ஒருமைப்பாட்டு தின கூட்டமைப்பு வேண்டுகோள் விடுக்கிறது. அன்றைய தினம் ஈழத் தமிழர்கள் கொடுமைக்குள்ளாக்கப்பட்ட துயரங்கள் ஆவணப்படமாக திரையிடப்படுகிறது. மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
நன்றி வீரகேசரி இணையம்


சாய் பாபா அறையில் அதிகாரிகள் எதுவித சோதனையும் நடத்தவில்லை

04/07/2011
புட்டபர்த்தியில் பகவான் சாய்பாபா அறையில் அரச அதிகாரிகள் சோதனை ஏதும் நடத்தவில்லையென சத்தியசாய் மத்திய அறக்கட்டளை தெரிவித்துள்ளது.

பகவான் சத்திய சாய்பாபா மறைவுக்குப் பின் அவர் தங்கியிருந்த யஜுர் மந்திரில் ஏராளமான பணம் மற்றும் நகைகள்,அரசு அதிகாரிகள் முன்னிலையில் சேகரிக்கப்பட்டு மதிப்பீடு செய்யப்பட்டு வங்கியில் வைப்புச் செய்யப்படவுள்ளது. இந்நிலையில், கடந்த வார இறுதியில் யஜுர் மந்திரில் அரசு அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தி பல இலட்ச ரூபா மதிப்புள்ள தங்கம் மற்றும் வைர நகைகள் பறிமுதல் செய்யப்பட்டதாக சில பத்திரிகைகள் மற்றும் ரி.வி. சனல்களில் தவறான செய்தி வெளியிட்டுள்ளதாக சத்திய சாய் மத்திய அறக்கட்டளை மறுப்புத் தெரிவித்துள்ளது.

அறக்கட்டளை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

யஜுர் அறையில் மீதமுள்ள பொருட்களை எடுப்பதற்காக அறக்கட்டளை நிர்வாகிகள் தான் அரசு பிரதிநிதிகளை அழைத்திருந்தனர். அறக்கட்டளை நிர்வாகிகள் கிரி மற்றும் ரத்னாகரிடமிருந்த சீலிடப்பட்ட உறையில் வைக்கப்பட்ட சாவிகள், அனந்தபூர் இணை ஆட்சியர் மற்றும் கூடுதல் ஆட்சியர் ஆகியோர் முன்னிலையில் எடுக்கப்பட்ட யஜுர் அறை திறக்கப்பட்டு மீதமுள்ள பொருட்கள் எடுக்கப்பட்டன. இந்த அறையை அதிகாரிகள் சோதனை செய்யவில்லை.பிரச்சினைக்குரிய வேறெந்தப் பொருளும் அங்கிருந்து கண்டெடுக்கப்படவில்லை.புட்டபர்த்தியில் மகா சமாதி மற்றும் யஜுர் அறை அருகே 24 மணிநேர பொலிஸ் பாதுகாப்புப் போடப்பட்டு அங்கு நடக்கும் சம்பவங்கள் பதிவு செய்யப்படுகின்றன.

யஜுர் மந்திர் அருகே உள்ள பாதாள அறைகளிலும் சுரங்கங்களிலும் ஏராளமான பொருட்கள் கண்டெடுக்கப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. மேலும் யஜுர் அறை அருகே சுரங்க அறையோ, பாதாள அறையோ கிடையாது. யஜுர் அறையில் பகவான் மறைவுக்குப் பிறகு சேகரிக்கப்பட்ட பொருட்கள் அனைத்தும் பாரத ஸ்டேட் வங்கியில் வைப்புச் செய்யப்படவுள்ளது. அறக்கட்டளையின் செயற்பாடுகள் அனைத்தும் ஒளிவுமறைவில்லாமல் நடக்கின்றன.

தினமலர்

நன்றி தினக்குரல்


பொன்சேகாவின் கருத்தால் தமிழ் மக்கள் அதிர்ச்சி "தேவையற்ற அதிகாரங்களை தமிழர்கள் கோரக்கூடாது'
Sunday, 03 July 2011

முன்னாள் இராணுவத்தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா அண்மையில் நீதிமன்றத்துக்கு முன்பாக ஊடகவியலாளர் முன்பு கருத்துத் தெரிவிக்கும் போது தேவையற்ற அதிகாரங்களைத் தமிழர்கள் கோரக்கூடாது என்றும் இந்தியாவில் உள்ளது போன்ற மாநில சுயாட்சியைக் கோராமல் சிங்கள மக்களுடன் சேர்ந்து வாழ வேண்டும் என்றும் கூறியிருப்பதால் தமிழ் மக்கள் மீண்டும் அதிர்ச்சியடைந்துள்ளனர் என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் அரசியல் தலைவர் எம்.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

முன்னாள் இராணுவத் தளபதி தெரிவித்துள்ள இக்கருத்து தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்றால் இனப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பார் என்று பிரசாரம் செய்யப்பட்டதை நிராகரித்து தான் ஒரு இனவாதி என்பதை மீண்டும் நிலை நாட்டியுள்ளார்.

இலங்கை சிங்களவர்களுடைய நாடு, விரும்பினால் தமிழர்கள் இங்கு வாழலாம் என்று கூறியதையும் மன்னித்து ஜனாதிபதி தேர்தலில் இலட்சக்கணக்கான வாக்குகளை வழங்கி ஆதரவு அளித்தது தேவையற்ற செயல் எனத் தமிழ் மக்களில் பெரும்பாலானோர் கவலையடைந்துள்ளனர்.

சரத் பொன்சேகா கைது செய்யப்பட்டதைக் கண்டித்து வடக்கு, கிழக்கில் இருந்து நான் ஒருவன் மட்டுமே அந்தக் கண்டனத்தைத் தேவையில்லாமல் வெளியிட்டு விட்டேன் என்று இப்பொழுது வருத்தமடைகின்றேன்.

அழுத்தம் திருத்தமாக சரத் பொன்சேகா கூறும் கூற்றை நாங்கள் புரிந்துகொள்ளாமல் இல்லை.

சர்வதேச சமூகத்தின் பங்களிப்புடனும் அங்கீகாரத்துடனும் சுயநிர்ணய உரிமையுடன் தேவையற்ற விதத்தில் தலையிட முடியாத அதிகாரங்களின் அடிப்படையில் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் இணைந்த சுயாட்சித் தமிழ் அரசை நிறுவுவதை சரத் பொன்சேகா உட்பட அத்தனை பேரும் பார்க்கும் காலம் வெகு தொலைவில் இல்லை.

போர் தீவிரமாக நடைபெற்ற பொழுதும் அதன் பின்னரும் இந்தியாவைப் போல அதிகாரத்தைக் கொடுப்போம் என்று கூறியதெல்லாம் வெறும் ஏமாற்று வார்த்தைகள் என்பது நிரூபணமாகியுள்ளது.

சரத் பொன்சேகா சார்பில் ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரம சிங்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தனுக்கு வழங்கிய தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றான பருத்தித்துறைமுல்லைத்தீவு கரையோர ரயில் சேவை என்பதன் மர்மம் இப்பொழுது புரிகிறது.

பருத்தித்துறை தொடக்கம் முல்லைத்தீவு வரைக்கும் முல்லைத்தீவு தொடக்கம் கொக்குளாய் வரைக்கும் சிங்கள மீனவர்களின் குடியேற்றம் தீவிரம் அடைந்துள்ளது. அந்த ரயில் சேவைக்கு முள்ளிவாய்க்கால் கடுகதி ரயில் என்று பெயர் வைப்பார்களா என நான் கேள்வி எழுப்பியிருந்தேன்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் ஐக்கிய தேசியக் கட்சியும் மாறி மாறி இனவாதக் கருத்துகளை முன்வைத்து ஆட்சி செய்து வருகின்றார்கள்.

ஒன்று விரியன் பாம்பு என்றால் மற்றது புடையன் பாம்பு. ஒன்று கொழுக்கட்டை என்றால் மற்றையது மோதகம் உள்ளுடன் ஒன்றுதான்.

நன்றி தினக்குரல்

சரவணபவன் எம்.பி.யின் வாகனம் மதவாச்சியில் மரத்தில் மோதி விபத்து


4/7/2011
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சரவணபவனின் வாகனம் நேற்று அதிகாலை வேளையில் விபத்துக்குள்ளானதில் அவரது மெய்ப்பாதுகாவலர் மற்றும் சாரதி ஆகியோர் படுகாயமடைந்துள்ளனர். சரவணபவன் எம். பி.க்கு சிறு சிறு காயம் ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்துச் சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4 மணியளவில் மதவாச்சிப் பகுதியில் இடம்பெற்றுள்ளது. வீதியில் நடுவே எதிரே வேகமாக வந்த வாகனமொன்றுக்கு இடம் கொடுக்க முயன்ற போதே எம்.பி.யின் வாகனம் மரத்தில் மோதி விபத்துக்கு உள்ளாகியுள்ளது.

காயத்துக்குள்ளான இருவரும் அநுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக சரவணபவன் எம். பி. தெரிவித்தார். வாகனம் பாரிய சேதத்துக்குள்ளானதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கிளிநொச்சியில் நடைபெறும் தேர்தல் பிரசாரக் கூட்டம் ஒன்றில் கலந்து கொள்வதற்கென அதிகாலை நான்கு மணியளவில் மதவாச்சியூடாக பயணித்துக் கொண்டிருந்த போதே இந்த விபத்து சம்பவித்துள்ளது.

சாரதிக்கு தலையிலும் மெய்ப்பாதுகாவலருக்கு நெஞ்சுப் பகுதியிலும் காயங்கள் ஏற்பட்டுள்ளன. மெய்பாதுகாவலருக்கு சற்று அதிகமாகவே காயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்த சரவணபவன் எம். பி. தனக்கு சிறுகாயங்களே ஏற்பட்டுள்ளதாகவும் கூறினார்.

நன்றி வீரகேசரி


ஒலிம்பிக் சாதனையாளன் துஷ்யந்தனுக்கு யாழ். நகரில் நேற்று அமோக வரவேற்பு

[ வியாழக்கிழமை, 07 யூலை 2011]

கிறீஸின் தலைநகர் ஏதென்ஸில் நடைபெற்ற மாற்று வலுவுள்ளோருக்கான ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற கோண்டாவில் சிவபூமி பாடசாலை மாணவன் செல்வன் சிவராசா துஷ்யந்தனுக்கு நேற்று யாழ். நகரில் மகத்தான வரவேற்பளிக்கப்பட்டது.ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று இலங்கைக்கும் தமிழினத்துக்கும் பெருமை சேர்த்த துஷ்யந்தனைப் பெரும் எண்ணிக்கையானோர் திரண்டு வரவேற்றனர். இவர் 4*100 மீற்றர் அஞ்சல் ஓட்டப் போட்டியில் இலங்கை அணி சார்பாகப் பங்குகொண்டு இரண்டாம் இடத்தைப் பெற்றிருந்தார்.

கொழும்பில் இருந்து யாழ்பாணம் திரும்பிய துஷ்யந்தன் நேற்று நல்லூரில் இருந்து சிறப்பு ஊர்தியில் "பாண்ட்'' வாத்திய அணி வகுப்புடன் வரவேற்கப்பட்டார். மக்கள் வீதியில் இருபுறமும் திரண்டு நின்று சாதனை வீரனை வரவேற்றனர்.


இந்த வரவேற்பு நிகழ்வில் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன், செஞ்சொற்செல்வர் ஆறு.திருமுருகன், வடமாகாண விளையாட்டுத்துறைப் பணிப்பாளர் சி. அண்ணாத்துரை, யாழ். பல்கலைக்கழகப் பேராசிரியர்களான எஸ். சிவலிங்கராசா, அ. சண்முகதாஸ் ஆகியோர் உட்படப் பலர் கலந்து கொண்டனர்.

பின் கௌரவிப்பு நிகழ்வு சிவபூமி பாடசாலையில் இடம் பெற்றது. இங்கு மாணவனுக்கு செங்கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.


வாழ்த்துரைகளை யாழ்ப்பாணத்தில் உள்ள இந்தியத் துணைத்தூதரக அதிகாரி வி.மகாலிங்கம், யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஈ. சரவணபவன், பேராசிரியர் அ. சண்முகதாஸ், பேராசிரியர் எஸ். சிவ லிங்கராஜா, வடமாகாண விளையாட்டுத் திணைக்கள பணிப்பாளர் சி. அண்ணாத்துரை ஆகியோர் உட்பட பலர் விருது வழங்கினர். இந்த வைபவத்தில் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஈ. சரவணபவன் துஷ்யந்தனுக்கு வெற்றிக் கேடயம் வழங்கி கௌரவித்தார்.

nantri tamilwin

இலங்கை மீது நடவடிக்கையா? வேண்டாமா? அவுஸ்திரேலிய வானொலி கருத்துக் கணிப்பு


[ வியாழக்கிழமை, 07 யூலை 2011 ]

இலங்கையின் கொலைக்களம் வீடியோ காட்டிய உண்மைகளை ஆதாரமாகக் கொண்டு இலங்கை மீது அவுஸ்திரேலிய அரசு மனித உரிமை மீறலுக்காக நடவடிக்கை எடுக்க வேண்டுமா? இல்லையா? என்று அவுஸ்திரேலிய வானொலிச் சேவை ஒன்று கருத்துக் கணிப்பு ஒன்றை மேற்கொண்டுள்ளது.அவுஸ்திரேலிய அரச தொலைக்காட்சியான ஏ.பி.சி. நேற்று முன்தினம் இரவு 8.30 மணிக்கு 4 கோர்னர் என்ற நிகழ்ச்சியில் இலங்கையின் கொலைக்களம் என்ற விவரணத் திரைப்படத்தை ஒளிபரப்பியது.

இதையடுத்து அவுஸ்திரேலிய 3 ஏ.டபிள்யூ என்ற வானொலிச் சேவை அவுஸ்திரேலியா முழுவதும் இந்தக் கருத்துக் கணிப்பை மேற்கொண்டுள்ளது.

இலங்கையின் கொலைக்களம் என்ற விவரணத் திரைப்படம் இலங்கை தொடர்பான அவுஸ்திரேலிய கொள்கையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர்.

அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் கேவின் ரூட் இதுவரை இலங்கையின் யுத்தக் குற்றங்கள் தொடர்பாக மௌனம் காத்து வந்தார். ஆனால், இலங்கையின் கொலைக்களம் விவரணத் திரைப்படத்தைப் பார்த்த பின்னர் இலங்கையின் யுத்தக் குற்றங்கள் தொடர்பாக சர்வதேச விசாரணை தேவை என கருத்துத் தெரிவித்துள்ளார் எனவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

nantri tamilwin


No comments: