அனைத்துலக தமிழ் ஆய்வு மன்றம்-அவுஸ்திரேலியா அஞ்சலி

.
அனைத்துலகும் போற்றிய அறிஞர் பெருமகன்
பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி அவர்கள்

பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி அவர்கள் இயற்கை எய்திய செய்தி உலகத்தமிழர்களைச் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. தமிழ்நாட்டு அறிஞர்களும் தலைவணங்கி மதித்த தமிழ் அறிஞர், ஆய்வாளர், பன்மொழிப் புலவர் பேராசிரியர் சிவத்தம்பி அவர்கள்.

பதினேழு வருடங்கள் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றிய அவர், இந்தியா, இங்கிலாந்து, ஜேர்மனி ஆகிய நாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்களில் வருகைதரு பேராசிரியராகவும் கடமையாற்றியுள்ளார்.

டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம், சென்னைப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர் தமிழ்ப்பல்கலைக்கழகம், கேம்பிறிஜ் பல்கலைக்கழகம், அமெரிக்க பேக்லி பல்கலைக்கழகம், ஹோவாட் பல்கலைக்கழகம், ஒக்ஸ்போட் பல்கலைக்கழகம் முதலிய உலகின் புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களில் விரிவுரைகளை ஆற்றியுள்ளார். எழுபதிற்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ள அவர் இருநூற்றுக்கும் அதிகமான ஆய்வுக் கட்டுரைகளை அனைத்துலக மாநாடுகளில் சமர்ப்பித்துள்ளார்.
அடிப்படையில் மார்க்ஸிசச் சிந்தனையாளரான பேராசிரியர் தமிழ்ச் சமூகத்தின் சீர்திருத்தத்திற்கான கருத்துக்களையும், தமிழ்த் தேசியத்திற்கான சிந்தனைகளையும் விமர்சனக் கண்ணோட்டத்துடன் எழுதியும் பேசியும் வந்தவர்.



தமிழ் மொழி, தமிழ் இலக்கியம், தமிழர் வரலாறு என்பனபற்றி துறைபோக ஆய்ந்தறிந்த தனித்துவம்மிக்க அறிஞராகவும், அனைத்துலகும் அங்கீகரித்த ஆசானாகவும் வாழ்ந்த பேராசிரியர் அவர்களது மறைவு உலகத்தமிழ் இனத்திற்கு ஈடுசெய்யமுடியாத பேரிழப்பாகும். அவருக்குப்பின்னர் அவரின் அளவுக்கு வேறுயாரையும் நினைத்துப்பார்க்க முடியாத அளவிற்கு இலங்கைத்தமிழ் அறிவுலகம் இன்று வெற்றிடமாக உள்ளது.

பேராசிரியர் அவர்களது பிரிவினால் துயரத்தில் ஆழ்ந்துள்ள அவரின் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், கவலையில் அமிழ்ந்துள்ள தமிழ் அறிஞர் பெருமக்கள், உலகத்தமிழர்கள் அனைவருக்கும் அனைத்துலகத் தமிழ் ஆய்வுமன்றம் - அவுஸ்திரேலியா தனது அஞ்சலிகளை நெஞ்சுருகத் தெரிவித்துக்கொள்கின்றது.
சட்டத்தரணி பாடும்மீன் சு.ஸ்ரீகந்தராசா,
பொதுச்செயலாளர்
அனைத்துலக தமிழ் ஆய்வு மன்றம்-அவுஸ்திரேலியா

No comments: