ஆளுமையும் ஆற்றலும் மிக்க மக்கள் பணியாளன்; பேராசிரியர் சிவத்தம்பி

.
                                                                                                                  முருகபூபதி

நவீன தமிழ் இலக்கிய விமர்சனத்தை நெறிப்படுத்தியவர்களின் வரிசையில் இடம்பெற்ற பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி அவர்கள் கடந்த 6 ஆம் திகதி புதன் கிழமை இரவு இலங்கையில் கொழும்பில் காலமானார் என்ற தகவல் தமிழ் இலக்கிய உலகிற்கு மிகுந்த கவலையை தருகிறது.
சிவத்தம்பி கரவெட்டியில் 1932 ஆம் ஆண்டு பிறந்தார். நீண்டகாலமாக பல்வேறு உடல் உபாதைகளுடன் போராடினாலும் அவரது சிந்தனைகள் மிகவும் கூர்மையுடன் பதிவாகிக்கொண்டிருந்தன. அந்திம காலத்தில் கண்பார்வை குறைந்தபோதிலும் எதுவித தடுமாற்றங்களும் இன்றி தனது கருத்துக்களை தெளிவாகச்சொல்லி மற்றவர்களைக்கொண்டு எழுத்தில் பதியவைத்தார். அந்தவகையில் அவரது சுறுசுறுப்பான இயக்கம் அனைவருக்கும் முன்னுதாரணமானது.
இறுதியாக அவரை  கடந்த ஜனவரி மாதம் நாம் நடத்திய சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாட்டில் சந்தித்தேன். அவர்  தமது உடல்நிலையையும் பொருட்படுத்தாமல் வந்து கலந்துகொண்;டு வாழ்த்துரை வழங்கினார்.
ஈழத்து இலக்கிய வளர்ச்சியை குறிப்பாகவும் தமிழ் இலக்கியத்தை பொதுவாகவும் நோக்குமிடத்து பேராசிரியர் சிவத்தம்பியின் பங்கும் பணியும் விரிவானது ஆழமானது. அவரது வாழ்வும் பணிகளும் தமிழர் நலன் சார்ந்தே விளங்கின. அதனால் அவர் விமர்சனங்களுக்கும் ஆளானார். அதற்காக அவர் தமிழ் ஆய்வுத்துறைக்காக மேற்கொண்ட கடின உழைப்பை குறைத்து மதிப்பிட முடியாது.
அவர் தனது விசேட ஆய்வுத்துறைகளை நான்காக வகைபிரித்து இயங்கியிருப்பதாக இலங்கையில் நீண்டகாலம் வெளியாகும் ஞானம் இதழில் வழங்கிய நேர்கணலில் தெரிவித்துள்ளார். தமிழரின் சமூக இலக்கிய வரலாறு, தமிழரிடையே பண்பாடும் தொடர்பாடலும், தமிழ் நாடகம், இலக்கிய விமர்சனம்.
 அவரது வாழ்வு இலங்கையில் வடமராட்சியில் கரவெட்டியில் தொடங்கி சர்வதேச ரீதியாக வியாபித்து வளர்ந்து படர்ந்திருந்தது.
தனது வாழ்வையும் பணியையும் அவர் இவ்வாறு சொல்லியிருக்கிறார்:-
“ எனக்குத்தமிழ் இலக்கியத்திலும் தமிழ் சமூகத்திலும் தமிழ் சமூக வரலாற்றிலும் அதனால் அதனுடைய பண்பாட்டிலும் உள்ள ஈடுபாடுதான். ஒரு சமூகத்தைப்பார்க்கும்போது அதனுடைய பண்பாட்டினை எவ்வாறு புரிந்துகொள்ளவேண்டுமென்பது என்னுடைய மார்க்ஸிய சிந்தனை காரணமாக மார்க்ஸியத்திலிருந்த ஆர்வம் காரணமாக அவ்வாறு பார்க்கின்ற ஒரு தன்மை ஏற்பட்டது. சமூக நிலைகொண்டு அதனுடைய அடித்தள நிலையிலிருந்து பார்க்கின்ற தன்மை வளர்ந்தது என்று கருதுகின்றேன். இதனால் உண்மையில் என்னுடைய ஆய்வு ஈடுபாடு என்று சொல்கிறவற்றில் இந்த நான்கையும் உள்ளடக்குவேன்”
சிவத்தம்பி அவர்களின் கல்விப்புலமை, இலக்கியத்திறனாய்வு, அவர் பங்குபற்றிய மாநாடுகள், பெற்ற விருதுகள், பேராசிரியராகவும் வருகைதரு பேராசிரியராகவும் பணியாற்றிய பல்கலைக்கழகங்கள் பற்றியெல்லாம் தற்போது பலரும் அவரைப்பற்றி நினைவு கூர்வதினால் நானும் அதனையே இங்கு மீள்பதிவு செய்யவில்லை.
அவரது பல்கலைக்கழக மட்ட கல்விப்பணி மற்றும் இலக்கிய விமர்சனத்துறை சார்ந்த அயராத எழுத்துப்பணிகளுக்கு அப்பால், தனது உடல் உபாதைகளையும் பொருட்படுத்தாமல் வல்வெட்டித்துறை பிரஜைகள் குழு மற்றும் வடபிரதேச பிரஜைகள் குழு, யுத்தநிறுத்த கண்காணிப்புக்குழு முதலானவற்றில் அவர் மிகுந்த அர்ப்பணிப்புடன் இயங்கியதை 1980 களில் அவதானித்திருக்கின்றேன்.
 ஒரு புறம் ஆயுதம் ஏந்திய தமிழ் இளைஞர்களின் இயக்கங்கள் மறுபுறம் அரசாங்கத்தின் ஆயுதப்படைகள். இவை இரண்டுக்கும் இடையே சிக்கித்துன்பங்களை அனுபவித்த- எதிர் நோக்கிய அப்பாவித்தமிழ் பொதுமக்கள்.
 பேராசிரியர் பாதிக்கப்பட்ட மக்களின் பக்கமே நின்றார். அதனால் இரண்டு தரப்பினதும் கண்காணிப்புக்கும் ஆளானார்.
ஓவ்வொறு செயலுக்கும் எதிரொலி இருப்பது போன்று தமிழ் மக்கள் மீதான தாக்குதலின்போது அதன் எதிரொலியாக இயக்கங்களின் செயல்களும் அமைந்த காலத்தில் பொறுப்பான  மக்கள் நலன் சார்ந்த பிரஜைகள் குழு பதவியிலிருந்துகொண்டு சாதுரியமாக இயங்கினார். அவரது சாதுரியங்கள் கடும் விமர்சனங்களுக்கும் உட்பட்டது.
குமுதினி படகில் நடந்த மனிதப்பேரவலம் பொலிகண்டி நூலகத்துக்குள் பல அப்பாவிமக்கள் தடுத்துவைக்கப்பட்டு குண்டுவைத்து கொல்லப்பட்ட சம்பவம், முல்லைத்தீவு ஓதிய மலை சம்பவம் உட்பட பல கொடுமைகளை பேராசிரியர் ஆவணப்படுத்தி ஊடகங்களுக்குத்தந்தார். மக்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளை அரசுக்கும்  ஆயுதப்படை அதிகாரிகளுக்கும் உடனுக்குடன் எடுத்துரைத்தார்.
சிவத்தம்பி அவர்கள் பேராசிரியராக இருந்தமையால் அவருக்கு இரண்டு தரப்பிலும் ஒரு கனவானுக்குரிய மதிப்பும் மரியாதையும் இருந்தது. பேராசிரியர் கூரிய கத்தியின் மேல் நடக்கும் நிலைக்கு ஆளானார்.
 அக்காலப்பகுதியில் வீரகேசரியில் நான் ஆசிரிய பீடத்தில் பிரதம ஆசிரியர் செய்தி ஆசிரியரின் பணிப்பின்பேரில் போர் சம்பந்தப்பட்ட செய்திகளை சேகரித்து எழுதிக்கொண்டிருந்தபோது யாழ். மாவட்ட நிருபர்கள் ஊடாக கிடைத்த பல செய்தி ஆவணங்களுக்குப்பின்னால்  சிவத்தம்பி அவர்களே இயங்கியிருந்தார்கள்.
 அநுராதபரத்தில் தமிழ் ஈழ  விடுதலைப்புலிகளின் தாக்குதல் நடந்தபோது அதனை பெரிதுபடுத்தி பாராளுமன்றத்தில் விவாதம் நடந்தபோது தமிழ்ப்பிரதேசங்களில் அரச படைகளினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் கவனத்தில் எடுக்கப்படவில்லை. எதிர்க்கட்சியும் பலவீனமாக இருந்தது. சிவத்தம்பி அவர்களின் ஆதாரங்களுடனான ஆவணங்களே வாசுதேவ நாணயக்கார போன்ற இடதுசாரிகளினால் தமிழரின் துயரங்களை பாரளுமன்றத்தில் சொல்வதற்கு உதவின.
தாக்குதலுக்கு பதில் தாக்குதல் என்ற ரீதியில்  பரிணாம வளர்ச்சிகண்ட போராட்டத்துக்குள் எங்கள் பேராசிரியர் விரக்தியோ சோர்வோ அடையாமல் இயங்கியதும் அவரது ஆளுமையின் ஒரு பரிமாணம்தான்.
அடுப்பில் கொதித்து நெருப்பில் தவறி விழுந்ததுபோன்று எமது தமிழ் மக்கள் இந்திய அமைதி காக்கும் படைக்கு முகம்கொடுத்தவேளையில் மக்களின் பிரச்சினைகளை இந்திய அதிகாரிகள ;கவனத்துக்கு சிவத்தம்பி கொண்டுவந்தார். அவரது  கருத்துக்களை அதிகாரிகள் செவிமடுத்தமைக்கும் அவரது பேராசிரியர் என்ற கனவான் பாத்திரம் வழிகோலியது.
தனது கல்விப்புலமையையும்  மற்றும் தமிழ் அறிவுலக ஆற்றலையும் தமிழர் நலன் சார்ந்தே அவர் தனது வாழ்நாள் பூராவும் விமர்சனங்களை தாங்கிக்கொண்டே இயங்கினார்.
இதுகுறித்தும் அவர்,  ஞானம் ஆசிரியருக்கு வழங்கிய நீண்ட நேர்கணலின் இறுதியில் இவ்வாறு சொல்கிறார்:-
“ வாழ்க்கையில் நான் பெற்ற அனுபவங்கள் எல்லாவற்றையும் பார்க்கும்பொழுது, இவையெல்லாம் ஏற்படுத்திய ஒட்டுமொத்தமான தாக்கம்தான் நான். ஏன் நான் மாறினேன். அல்லது ஏன் மாறவில்லை என்றால் எனக்கு ஏற்பட்ட அனுபவங்கள்தான் இதற்குக்காரணம். சில நண்பர்கள் கடுமையாக விமர்சிப்பார்கள்.  சில நண்பர்கள் நான் முன்பு இருந்த நிலையிலிருந்து விடுபட்டதாக சிலாகித்துச்சொல்வார்கள். நான் சொல்வது என்னவென்றால் மனிதனைப்புரிந்துகொள்ளப்பாருங்கள். அது இலக்கியக்காரனுக்கு, கலைஞனுக்கு அடிப்படைத்தேவை. நான் மீண்டும் சொல்லுகிறேன். படைப்பாளியாகச்சொல்லுகிறேன். ஒரு சமூகப்பொது மனிதனாகச்சொல்லுகிறேன். நாங்கள் சமூகத்துக்கு எவ்வளவை கொடுக்கின்றோமோ அவ்வளவைத்தான் நாங்கள் பெற்றுக்கொள்ள முடியும்”
 அந்திமகாலத்தில் கண்பார்வை மங்கி எழுதவோ வாசிக்கவோ முடியாத நிலை தோன்றியபோதிலும் மனம்தளராமல் மற்றவர்களைக்கொண்டு வாசிக்கச்சொல்லி கிரகித்தும் அத்துடன் மற்றவர்களுக்கு வாய்மூலமாகச்சொல்லி தனது கட்டுரைகளை எழுதியும் இயங்கிக்கொண்டிருந்த அவரது ஆளுமை அனைவருக்கும் முன்மாதிரியானது.
 அவருக்கு 1992 ஆம் ஆண்டு மணிவிழா நடந்தபோது பிரான்ஸில் வெளியான பாரிஸ் ஈழநாடு இதழில் அவரைப்பற்றி விரிவாக எழுதி அதன் பிரதியை பிறந்தநாள் வாழ்த்து மடலுடன் அவருக்கு அனுப்பியிருந்தேன். அதனைப்பார்த்து உள்ளம் பூரிக்க தனது நன்றியைச்சொன்னார். அவுஸ்திரேலிய தேசிய வானொலி SBS தமிழ் ஒலிபரப்பில் அவரது விரிவான நேர்காணல் இடம்பெறவேண்டும் என்று குறிப்பிட்ட வானொலி ஊடகவியலாளர் நண்பர் ரெய்சலிடம் நான் கேட்டுக்கொண்டபோது அவர் அதற்கு விரும்பி ஏற்பாடு செய்து தந்தார். மெல்பன் ஒலிப்பதிவு கூடத்திலிருந்து அவரை தொலைபேசி ஊடாக பேட்டிகண்டேன். இரண்டு வாரங்கள் அந்த நேர்காணல் SBS தமிழ் ஒலிபரப்பில் ஒலித்தது.
அவுஸ்திரேலியாவிலும் நியூசிலாந்திலும் அதனை செவிமடுத்த பேராசிரியரின் பல மாணவர்கள் அவருக்கு தொலைபேசி ஊடாக வாழ்த்துத்தெரிவித்தனர் என்ற தகவலை எனக்குச்சொல்லி அகம் மகிழ்ந்தார்.
நாம் எமது முதலாவது சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாட்டின் நோக்கங்களை அவரிடம் 2010 ஜனவரியில் சொன்னபோது அதனை வரவேற்று முதலாவது ஆலோசனைக்கூட்டத்தில் பயனுள்ள யோசனைகளை வழங்கினார். பின்னர் பேரலையென எழுந்த எதிர்வினைகளையடுத்து தமது கருத்தை மாற்றிக்கொண்டு அறிக்கை விட்டார். SBSவானொலியிலும் கருத்துச்சொன்னார். ரெய்சல் எனது கருத்தையும் ஒலிபரப்பி ஊடக தர்மத்தை காப்பாற்றினார்.
தொலைபேசி ஊடாகவும் பின்னர் கொழும்பில் அவரது இல்லத்தில் நேரிலும் மாநாட்டின் நோக்கங்களையும் முன்னெடுக்கவுள்ள பணிகளையும் எமது அமைப்புக்குழுவினர் தெளிவுபடுத்தியதையடுத்து அவர் மாநாட்டுக்கு வாழ்த்துச்செய்தி வழங்கியதுடன் தனது உடல்நலனையும் கருதாது நேரில் வந்து வருகைதந்த பேராளர்களுடன் அகமும் முகமும் மலர உரையாடியதுடன் மாநாட்டின் தொடக்கவிழாவிலும் உரையாற்றினார்.
அதுவே அவர் தேன்றிய இறுதிப்  பொது நிகழ்வு என்பது தற்செயலானது. மாநாடு நிறைவுற்று சரியாக ஆறுமாதங்களில் அவர் எங்களிடமிருந்து நிரந்தரமாக விடைபெற்றுக்கொண்டார் என்பதை மிகுந்த வேதனையுடன் தெரிவிக்கின்றேன்.
அவரது மரணம் பேராசிரியர் நுஃமான் தெரிவித்திருப்பது போன்று பெரிய வெற்றிடத்தை தோற்றுவித்துள்ளது. அதனால் பேராசிரியரின் இழப்பை ஈடு செய்யவேண்டிய இழப்பு என்று பதிவுசெய்கின்றேன்.
அவர் மரணித்திருக்கலாம். ஆனால் அவரைப்பற்றிய நினைவுகளுக்கு மரணம் இல்லை.

No comments: