தமிழ் சினிமா

.
பிள்ளையார் தெரு கடைசி வீடு

பிள்ளையார் தெரு கடைசி வீட்டில் வசிக்கும் ஒரு இளைஞனை பற்றிய கதை இது.

எண்பதுகளில் வந்த குடும்பக் கதை பார்முலா தான் இந்த படத்தின் ஆரம்பமாகும் ஒரு மணி நேர கதை. வேலை வெட்டி இல்லாமல் நான்கு நண்பர்களுடன் சுற்றும் ஹீரோ, நகரத்தில் கல்லூரியில் படிக்கும் அவனது தங்கை அகிலா, மகன் செய்யும் தவறுகளை எப்போதும் மன்னிக்கும் அன்பு மிகுந்த தாய் கண்டிப்பான ஆனால் மகன் மீது மிகுந்த பாசம் கொண்ட அப்பா வெகுளியான மாமா என்று ஒரு அக்மார்க் தமிழ் கிராம குடும்பம்.

இவர்கள் வசிப்பது பிள்ளையார் தெருவின் கடைசி வீட்டில். இதை தவிர ஜெயப்பிரகாஷின் தங்கையை மணந்து கொண்ட பொறுப்பில்லாத குடிகார தந்தையாக இளவரசு, அவரது மகளாகிய சுஹாசினி என்று தனி கதை.இப்படி அமைதியாக செல்லும் கதையில் கல்லூரி விடுமுறைக்காக தங்கையின் தோழி (சஞ்சிதா படுகோனே) ஊரில் வந்து தங்க, அப்போதில் இருந்து கதை ஆரம்பிக்கிறது. தமிழ் சினிமா இலக்கணப்படி அவரிடம் காதல்கொள்கிறார் ஹீரோ. அதே சமயம் இளவரசு தன்னுடைய கடன்களை கட்டிய போஸ் வெங்கட்டுக்கு தன்னுடைய மகளை திருமணம் செய்ய முடிவெடுக்க, (ஜித்தன் ரமேஷை கேட்காமலேயே) தன்னுடைய தங்கை மகளை மருமகளாக்க முடிவெடுக்கிறார் ஜெயப்பிரகாஷ். தந்தை சொல்லை தட்டவும் இயலாமல், தன்னுடைய காதலை சொல்லவும் இயலாமல் தவிக்கும் ரமேஷ், திடீரென்று சஞ்சிதாவை திருமணம் செய்துகொண்டு வந்து அனைவரையும் திகைக்க வைக்கிறார். ஆனால் அவர் திருமணம் செய்துகொண்டது வெறும் காதலுக்காக மட்டும் அல்ல என்பதே கதையை தூக்கி நிறுத்தும் ட்விஸ்ட். அது என்ன ட்விஸ்ட் என்பது சஸ்பென்ஸ்.

கதையின் தலைப்புக்கும் படத்திற்கும் முக்கியமான தொடர்பு இல்லையென்றாலும், கடந்த இரண்டு ஆண்டுகளில் வந்த படங்களிலேயே வித்தியாசமான தலைப்பை கொண்டது இந்த படமே என்பதை மறுக்கவியலாது. முதல் ஒரு மணி நேரம் வழக்கமான தமிழ் படம் தான். ஹீரோ எதற்காக டி.ராஜேந்தரின் விசிறி ஆக வருகிறார் என்பது கதைக்கு சம்பந்தம் இல்லையென்றாலும் ஓரிரு காட்சிகளை நகர்த்த உதவுகிறது. நண்பர்கள் காமெடி, படத்தின் ஆரம்ப காட்சி, ஹீரோ வருகை, நாயகியை சந்திப்பது, காதலை சொல்ல முயலும் காட்சிகள் என்று தொடர்ந்து பல காட்சிகள் மொக்கை என்றாலும் விறுவிறுப்பான இரண்டாம் பகுதி காரணமாக இவற்றை மன்னிக்கலாம். 'ஜித்தன்' ரமேஷுக்கு இந்த படம் ஒரு நீண்ட இடைவேளைக்கு பிறகு ஒரு மறு அவதாரம் என்றே கூற வேண்டும். அவர் ஒவ்வொரு காட்சியிலும் தனது நடிப்பை அற்புதமாக வெளிப்படுத்தியுள்ளார். இந்தப் படம் மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வதாக அமைந்துள்ளது.

கதாநாயகி - சஞ்சிதா படுகோனே 'வேட்டைக்காரன்' படத்தில் விஜய்யின் தங்கையாக வருவாரே, அவர்தான் இவர். இந்த படத்தில் இவர் ஆரம்பத்தில் மொக்கையாக தெரிந்தாலும் படம் முன்னேற முன்னேற, தன்னுடைய நடிப்பிலும் முன்னேற்றத்தை காண்பித்துள்ளார், குறிப்பாக ரமேஷிடம் தன்னுடைய காதலை ஒப்புக் கொள்ளும்போதும்,இறுதி காட்சிகளில் இவரது நடிப்பு அற்புதம். இந்த படம் இவருக்கு ஒரு முக்கியமான மைல்கல். ஆனால் அநேகமாக தமிழ் சினிமா இலக்கணப்படி இனிமேல் இவர் ஹீரோவின் தங்கையாகவோ, மாமனை கட்டிக்கொள்ள ஆசைப்படும் இரண்டாவது முறைப்பெண் ஆகவோ கூட மாறக்கூடும்.

'அத்தை மகனை எனக்கு கட்டி வச்சிடாத தாயி' என்று சாமியை வேண்டுவதாக சுஹாசினி கேரக்டர் உற்சாகமாக தொடங்கி, பிறகு ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் கேரக்டராக கரைகிறது.ஜெயப்பிரகாஷ் தன்னுடைய டிரேட் மார்க் நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். மாமாவாக வரும் இளவரசு, தனது இயல்பான நகைச்சுவை கலந்த வில்லத்தனத்தை வெளிப்படுத்தியுள்ளார். போஸ் வெங்கட் வில்லன் போஸ் கொடுத்து விட்டு கடைசியில் ரமேஷின் இரண்டு குத்தில் குப்புற படுத்துவிடுகிறார். சூரியின் காமெடி அவ்வப்போது சிரிக்க வைக்கிறது.

ரமேஷின் தங்கையாக வரும் அகிலாவும், அம்மாவாக வரும் துளசியும் ஆரம்ப காட்சிகளில் வழக்கமாக தெரிந்தாலும் படத்தின் க்ளைமேக்சில் அட்டகாசமாக ஸ்கோர் செய்கிறார்கள். அந்த நாற்பது நிமிடமும் படத்தின் உச்சகட்டம். பிரகாஷ்ராஜ் ஒரே ஒரு நாள் மட்டும் கால்ஷீட் கொடுத்தாரா என்ன என்பது தெரியவில்லை. ஆனால் அவர் வரும் அந்த இரண்டு காட்சிகளும் படத்தின் திருப்புமுனை.

பன்னீர்செல்வத்தின் ஒளிப்பதிவு ஒரு கிராமத்தின் வனப்பையும், செழுமையையும் மிக சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளது. ஏ.ஆர். மோகனின் கலைத்தன்மையின் அமைந்த வீடே படத்தின் தலைப்பாக கிடைத்தது பெருமை. கலகலப்பாக கதை சொல்லி, கடைசியில் அழ வைத்து அனுப்ப வேண்டும் என்கிற முடிவோடு திரைக்கதை அமைத்திருக்கிறார் இயக்குநர் திருமலை கிஷோர். ஆனால் அதை திரையில் கொண்டு வர தடுமாறியிருக்கிறார். படத்தின் முக்கிய திருப்பங்களில் அதிர்ச்சி, ஆச்சர்யம் இருப்பது உண்மைதான், ஆனால் லாஜிக் இல்லையே. கதைக்கு ஜீவநாடியாக இருக்கும் அந்த உண்மைகளை அவர்கள் மறைத்து வைக்க வேண்டிய எந்த அவசியமும் இருப்பதாக தெரியவில்லை.

ஆரண்ய காண்டம்

ராமாயணத்தின் ஏழு காண்டத்தில் மூன்றாவது காண்டம்தான் ஆரண்ய காண்டம்.

இது ராமன், சீதா, லஷ்மணன் காட்டில் வசித்த காலத்தை கூறுவது. ஆனால் இந்த ஆரண்ய காண்டம், ஒரு நாள் பொழுதில் நடக்கும் போர்க்களக் காட்சிகளை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது.

நமக்கு எது தேவையோ அதுவே தர்மம் என்ற சாணக்யரின் கூற்றுதான் படத்தின் ஒன்லைன். இருட்டில் வாழும் மனித மிருகங்களின் இருண்ட பகுதிதான் ஆரண்ய காண்டம்..! நல்ல பொருத்தமான தலைப்புதான். சிங்கப்பெருமாள் ஒரு அண்டர்கிரவுண்ட் தாதா. அவரது வலது கையாக பசுபதி, இதேபோல கஜேந்திரன் மற்றொரு தாதா, அவரது வலது கையாக கஜபதி, இவர்களுக்கு மத்தியில் கஜேந்திரனுக்கு சேர வேண்டிய ஒரு போதைப்பொருள் சரக்கை பசுபதி கைப்பற்ற நினைக்கிறார். ஒரு கட்டத்தில் சிங்கப்பெருமாள், கஜேந்திரன் இருவருமே பசுபதியை பழி தீர்த்தார்களா இல்லையா என்பதே மீதிக்கதை. சிறந்த படம், மிகச் சிறந்த படம், உள்ளூர் தரம், இந்தியத் தரம், உலகத் தரம் என்று எத்தனை வகைகளில் பிரித்துப் பார்த்தாலும் இத்திரைப்படம் தமிழ்ச் சினிமாவுலகில் சினிமா விமர்சகர்களால் மட்டுமே கொண்டாடப்படக் கூடிய ஒரு யதார்த்தவாத திரைப்படம்தான்.. அதில் சந்தேகமில்லை.

வெற்றி, தோல்வி என்கிற இரண்டு அம்சத்தை மையமாக வைத்து பார்த்தீர்களேயானால் இது நிச்சயமாக வணிக ரீதியாக தோல்வியடைந்த படம். ஆனால் படம் பார்த்தவர்களை சிறிதளவேனும் பிரமிக்க வைத்திருக்கிறது. அதே சமயம் கோடிக்கணக்கான தமிழர்களை பார்க்க வைத்திருக்க வேண்டிய இத்திரைப்படத்தைத் தயாரித்தவர்களே, சில ஆயிரம் பேர் இந்தப் படத்தைப் பார்த்தாலே போதும் என்று நினைத்து செயல்பட்டதினால் தங்களுக்குக் கிடைக்க வேண்டிய கிரீடத்தை தாங்களே இழந்துவிட்டிருக்கிறார்கள். படத்தின் ஆரம்பக் காட்சியில் வயதான தாதா, சினிமாவில் நடிக்க வைக்கிறேன் என்று ஆசை வார்த்தைக்காட்டி ஏமாற்றும் காட்சியும், தன் இயலாமையை மறைப்பதற்கு அவளை அடிக்கவும், சுப்பு 'உன்னால முடியலைன்னா ஏன் என்னை அடிக்கிறே' என்று அழும் காட்சியில் ஆரம்பிக்கும் ஆச்சர்யங்கள் படம் நெடுக தொடர்கிறது.

பசுபதியாய் சம்பத், மனிதர் வரவர கலக்கிக் கொண்டிருக்கிறார். மிக இயல்பான பாடிலேங்வேஜ். பல இடங்களில் கண்களில் தெரியும் சிறு சிறு மாற்றங்களில் பல உணர்வுகளை கொண்டு வருகிறார். சுப்புவாக யாஸ்மின் பொன்னப்பா, ஆரம்பத்தில் பார்க்கும் போது பரிதாபப்பட வைக்கிறார். சுப்புவுக்கும் சப்பைக்குமான திடீர் காதலும் அதிர்ச்சியென்றால் பின்னால் நடக்கும் காட்சிகள் அடி போட வைக்கின்றன. சப்பையாக ரவிகிருஷ்ணா, மிகச் சரியான கேரக்டர் அவருக்கு. இவரின் கேரக்டரை பற்றிச் சொன்னால், சுவாரஸ்யம் போய்விடும். கிராமத்திலிருந்து கடனுக்கு பயந்து சேவல் சண்டையில் ஜெயிக்க வரும் வாழ்ந்து கெட்ட ஜமீந்தாரும், அவரது ஸ்மார்ட் பையனும் சரியான கேரக்டர்கள். எதிர்பார்ட்டியான கஜேந்திரன், அவனின் தம்பி, அய்யா டீமில் வரும் இளைஞன், என்று பார்த்து பார்த்து ஆட்களை பொறுக்கியிருக்கிறார்கள்.

சிங்கப்பெருமாளாக வரும் ஜாக்கி ஷெராஃப், அலற வைத்திருக்கிறார். இவரது கதாபாத்திரத்தின் தன்மை, இதை இவர் மட்டுமே செய்திருக்க முடியும் என்ற பிரமையை ஏற்படுத்துகிறது. படு அலட்சியமான நடிப்பு. கிட்டத்தட்ட சைத்தான் தமிழில் நடித்தால் அது இப்படித்தான் இருக்கும். அதை எழுதிப் புரியவைப்பது அசாத்தியம். படத்தைப் பார்த்தால் மட்டுமே அது புரியும். அவருக்கு அடுத்து கொடுக்காப்புளியின் தந்தை. அது, கூத்துப்பட்டறை சோமசுந்தரம். இந்த இருவரும், கூடவே கொடுக்காப்புளியாக நடித்த சிறுவனும்,(மாஸ்டர் வசந்த்) மனதில் நிற்கின்றனர். கஜேந்திரனாக ஸ்டன்ட் மாஸ்டர் ராம்போ ராஜ்குமார். இவரது நடிப்பை பார்த்தால் சில சமயங்களில் சிரிப்பு தான் வருகிறது.( பாவம், மனிதர் இப்போது படத்தை பார்க்க உயிருடன் இல்லை என்பது வருத்தம்தான்!) இன்னும் சில கதாப்பாத்திரங்கள்.

அப்புறம் அஜய்ராஜ், இவர்தான் படத்தில் ஆன்ட்டி-ஹீரோ. இவர் பேசும் வசனங்களை கேட்கும்போது சுவாமி சரக்கானந்தா பளிச்சென்று நினைவுக்கு வந்தார். முதல் படம் போலவே தெரியவில்லை.. நிச்சயம் இயக்குநர் தியாகராஜா குமாரராஜாவை வெகுவாகப் பாராட்ட வேண்டும். அதிலும் காளையன், கொடுக்காப்புளியின் கேரக்டர்களை வடிவமைத்திருப்பதற்கு ஸ்பெஷல் பாராட்டு. காளையனுக்கும், அவனது மகனுக்குமான நட்பை எந்த வகையிலும் தந்தை, மகனாக பார்க்க முடியாத அளவுக்கு கொண்டு சென்றிருக்கிறார். அப்பாவைத் திட்டாதப்பா என்று காளையன் சொல்கின்ற வார்த்தையில் இருக்கும் ஏக்கத்தை அவர் முகமும் காட்டுவிடுகிறது. 'அப்பா மேல அவ்ளோ பாசமா?' என்ற சம்பத்தின் கேள்விக்கு, 'அப்படியில்லை. ஆனா அவர் என் அப்பா..' என்று கொடுக்காப்புளி சொல்லும்போது தியேட்டரே அதிர்ந்தது. இது ஒன்று போதும் இயக்குநருக்கு!

திரைக்கதையுடன் பல்லாங்குழி ஆடியிருக்கிறார் ஒளிப்பதிவாளர். அந்த பாவா லாட்ஜை அக்குவேறு, ஆணி வேறாக அத்தனை கோணத்திலும் படம் பிடித்திருக்கும் அந்த ஷாட்டுகள் கண்ணுக்கு அழகு. விறுவிறுவென்ற காட்சியமைப்புக்கு ஒளிப்பதிவாளர் வினோத் பெரும் உதவி செய்திருக்கிறார். கேமிரா கோணம் வைப்பதில் வித்தியாசம் இருந்தாலும் அதற்குப் பெரிதும் துணையாய் இருக்க வேண்டியது லொகேஷன்கள்தான். பசுபதியின் வீடு, பசுபதி கஜேந்திரனின் ஆட்களிடம் இருந்து தப்பித்து போகும் வழிகள், பாவா லாட்ஜ், காளையன் காத்திருக்கும் தெரு, கஜேந்திரனின் வீடு, சிங்கப்பெருமாளின் வீடு, சேவல் சண்டை நடக்கும் இடம், க்ளைமாக்ஸ் சண்டை நடைபெறும் இடம் என்று அத்தனையும் விதவிதமான ரகங்கள்..! ஒளிப்பதிவாளரின் ஜெயிப்புக்கு இதுவும் ஒரு முக்கியக் காரணம். சென்சார் கத்திரிக்கு தப்பியதை பிரவீனும் ஸ்ரீகாந்த்தும் கத்தரித்த விதம் அருமை.

சுப்புவும், சப்பையும் வெளியில் ஊர் சுற்றும்போது விமானத்தை வாயில் முழுங்குவதைப் போல செய்து காட்டி சுப்புவை சிரிக்க வைக்கும் காட்சியைத் தொடர்ந்து ஒரு காதல் பாடல் இருந்தது. அதேபோல் இடைவேளைக்கு பின்பு அத்தனை பேருக்குமான காட்சிகளையும் ஒருங்கிணைத்தும் ஒரு பாடல் இருந்ததாம். காட்சியின் தீவிரம் கெடுகிறதே என்று பலரும் சொன்னதால் பாடல்கள் கட் செய்யப்பட்டதாகச் சொல்கிறார்கள். ஆனால் இதற்குப் பதிலாக பின்னணி இசையில் கலக்கியிருக்கிறார் இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா. பாவா லாட்ஜ் துரத்தல். காளையனும், கொடுக்காப்புளியும் ஓடுவது. சம்பத்தின் ஓட்டம், சரக்கை எடுத்துக் கொண்டு கொடுக்காப்புளி சம்பத்தை காண வரும்போது பின்னாடியே வரும் இசை, காளையன்-கொடுக்காப்புளியின் வாய்ச்சண்டை முடிந்து போய் நிற்கும் அந்தத் தருணத்தில் ஒலிக்கும் ரிதம் மெல்ல மெல்ல நம்மை அவர்களிடத்தில் கொண்டு போய்விட்டது.

இறுதி சண்டைக் காட்சி மட்டுமே சொதப்பல் என்றாலும் பசுபதி ஜெயித்தாக வேண்டும் என்ற இக்கதையின் முடிவின்படி அவர் ஜெயிக்க வைக்கப்பட்டிருக்கிறார். இது மட்டுமல்ல காளையன் வைத்திருந்த பேப்பர், அடுத்தக் காட்சியில் கொடுக்காப்புளியின் கையில் இருப்பது யாரும் சொல்லாமலேயே லாட்ஜ் ஆள் காளையனை கை காட்டுவது சிங்கப்பெருமாள் செத்தவுடன் எந்தப் பேச்சும் கேட்காமல் பசுபதியை தலைவனாக ஏற்கும் அடியாள் படை என்று சில கேள்விகள் எழத்தான் செய்கிறது இதையெல்லாம் அதுவரையிலும் நம்மை ரசிக்க வைத்ததற்காக மன்னித்து விட்டுவிடலாம்.


ஆண்மை தவறேல்
தனி மனித ஒழுக்கம்தான் மனித இனத்தின் உயர்வு என்பதை சொல்லும் கதை.

கால்சென்டரில் வேலைப் பார்க்கும் துருவாவிற்கும், ஸ்ருதிக்கும் காதல். இருவரும் ஒரே வீட்டில் மேலும் கீழுமாய் வசிக்கிறார்கள்.

இவர்கள் காதலிக்கும் நேரம் அதிகாலை நாலு மணி முதல் ஆறு மணி வரை. ஏனென்றால் அப்போதுதான் ஸ்ருதி நைட் ஷிப்ட் பிபிஓ வேலை முடித்து வருவாள். துருவாவுக்கு டே ஷிப்ட். இந்நிலையில் ஒரு நாள் துருவா, ஸ்ருதியின் பிறந்தநாளுக்காக விஷ் பண்ண காத்திருக்க, அவனுடன் விளையாடும் நோக்கில் ஒளிந்து கொண்டு போன் செய்கிறாள். இடைப்பட்ட நேரத்தில் அவள் கடத்தப்படுகிறாள். அவளை கடத்தியவர்கள் யார் எதற்கு கடத்தினார்கள் என்ன செய்யப் போகிறார்கள் ஸ்ருதியை துருவா கண்டுபிடித்தானா என்பது மீதிக்கதை. கதாநாயகன் துருவா, சில சமயம் வில்லன் போலிருக்கிறார். ஒரு சில காட்சிகளில் நடிக்கவும் முயற்சித்திருக்கிறார். கதாநாயகி ஸ்ருதி, பக்கத்து தெரு ஃபிகர் ரேஞ்ச். ஒருவேளை பார்க்க பார்க்கத்தான் பிடிக்கும் போல ஆனால் அவரை அறிமுகப்படுத்தும் போது பின்னணியில் வரும் 'பெண் என்பேன்.. பூ வெண்பேன்' என்கிற பி.பி.ஸ்ரீனிவாஸின் பழைய பாடலை ரீமிக்ஸி வரும் ஹம்மிங் அட்டகாசம். ஆனால் அதன் பிறகு பெரும்பாலான நேரங்களில் அழுது கொண்டே படம் நகர்கிறது.

சம்பத்தின் கதாபாத்திரமும் அவர் காட்சிகளும் படத்தை ஜெட் வேகத்தில் நகர்த்திச் செல்கிறது. மற்ற கதாபாத்திரங்களான நந்தா சரவணன், சுப்பு பஞ்சு, லட்சுமி போன்றவர்களின் கதாபாத்திரம் வரும் காட்சிகள் குறைவு என்றாலும் நிறைவாக இருக்கிறது. எழுதி இயக்கிய குழந்தை வேலப்பன் இளவயதுக்காரர். இதுவரை யாரிடமும் உதவியாளராய் இல்லாமல் இந்த அளவிற்கு இயக்கியிருப்பது பாராட்டுக்குரியது. முக்கியமாய் போலீஸ் ஸ்டேஷன் காட்சிகளில், ஒவ்வொரு டிபார்ட்மெண்டாய் அலைக்கழிக்கும் காட்சிகள் இண்ட்ரஸ்டிங். ஆனால் போலீஸ்காரர்களுடன் விபச்சார விடுதிக்குள் போய் தேடும் காட்சிகளில் முகத்தில் அறையப் படவேண்டிய அதிர்ச்சி. ஏனென்றால் அம்மாதிரியான இடங்களின் களத்தைப் பற்றி தெரியாததே காரணம். ஆனால் திடீரென விபச்சார தடுப்பு கான்ஸ்டபிள் அவர் ஒருத்தராலத்தான் முடியும் என்று ஒருவரைப் பற்றி சொல்வது, பின்பு அவரை பற்றிய காட்சிகள் வரும் போது அவர் குடித்துக் கொண்டு இருப்பது, போன்ற திணிக்கப்பட்டிருக்கின்றன.

பெண்களை கடத்தும் அந்த வில்லன், கடைசிவரை அலட்டிக்கொள்ளாத அந்த பார்வை, சூழ்நிலையின் குரூரத்தை மேலும் கூர்மையாக்குகிறது. ஒருவனுக்காக வலுக்கட்டாயமாக அனுப்பி வைக்கப்படும் அந்த இளம்பெண் ஓடும் காரிலிருந்து குதித்து மரணமடைவதெல்லாம் பேரதிர்ச்சியான காட்சி. படத்தில் நடித்திருக்கும் எல்லா கேரக்டர்களுமே மீண்டும் ஒருமுறை கண் முன் வந்து போகிற அளவுக்கு இயல்பாக நடித்திருக்கிறார்கள். இன்டர்வெல் பிளாக்கில் ஜீப்போடு வெடிக்கும் சம்பத் பின்பு கோவாவில் ஜம்மென்று என்ட்ரி கொடுக்கிற காட்சி ப்ளஸ். துருவாவுக்கும், ஸ்ருதிக்குமான காதல். இருவரது காதல் பற்றி துருவா சொல்லும் கதை என்று ஆங்காங்கே சுவாரஸ்ய தீற்றல்கள். சில இடங்களில் வசனம் நச். போலீஸ் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டர் உள்ளே வந்ததும் சாமி படத்துக்கு முன்னால் நின்று கும்பிட்டுவிட்டு, திருநீறு பூசிக் கொண்டு நிற்பது. பெண்ணைப் பற்றி ஏதுவும் தெரியாமல் இருக்கும் அம்மாக்களை சாடுவது, என்பது போன்ற விஷயங்களை பாராட்டத்தான் வேண்டும். க்ளைமாக்ஸில் யமுனா எப்பவும் நீ லேட்டாத்தான் வருவியா என்று அழுதபடி அணைப்பது போன்ற காட்சிகள் சுவாரஸ்யம்.

மாதவிலக்கில் அவதியுறும் கடத்தப்பட்ட நான்கு பெண்களில் ஒருத்திக்கு கடத்தல்காரன் நாப்கின் கொடுக்கும் ஒரு காட்சி போதும், பெண்களை கடத்தி எத்தனை சிரத்தையுடன் சர்வதேச மாபியாக்களிடம் விற்கிறார்கள் என்பதற்கு. இதுபோன்ற கொடூர கடத்தல்களின் நெட்வொர்க் எப்படி செயல்படுகிறது என்பதைக் காட்ட இயக்குநர் செய்திருக்கும் ஹோம் ஒர்க், நம்மை மூக்கில் விரல் வைக்கத் தூண்டுகிறது. நமக்கு அருகாமையில் சம்பங்கள் நிகழ்வது போன்று காட்சிகளை யதார்த்தமாக அமைத்து காட்டுவதில் மொத்தப் படக்குழுவும் வெற்றிபெற்றிருக்கிறது. முக்கியமாக உண்மைக் குற்றங்களின் அடிப்படையிலான இந்தக்கதையில் கமர்ஷியல் அம்சங்களை அதிகம் நுழைக்காமல் யதார்த்தவகைப் படத்துக்கான கதைக்களத்தை கண்முன் நிறுத்தும் லொக்கேஷன்கள், பாத்திரங்களுக்கு பொருத்தமான நடிகர்கள் தேர்வு என்று எல்லா அம்சங்களும் அபாரமான கலவையில் படத்தை தூக்கி நிறுத்தியிருக்கின்றன.

ஒளிப்பதிவாளர் அர்பிந்து சாரா, படத்தொகுப்பாளர் வி.ஜெ.பாபு ஆகியோர் திரைக்கதைக்கு ஏற்ப தங்களது திறமையை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். மரியா மனோகரின் இசையில் 'சட்ட சட...' பாடல் நம்மை சிலிர்க்க வைக்கிறது. பின்னணி இசையிலும் நம்மை கவனிக்க வைத்திருக்கிறார். பெண் கடத்தலை பொறுப்புணர்வோடு அணுகாத தமிழ்சினிமாவில், இந்த சீரியஸ் பிரச்சினையை மிக கவனமாக, ஒரு காட்சியில் கூட முகம் சுளித்து விடாதபடி ஒரு விறுவிறு வெகுஜன சினிமாவாக தந்திருக்கும் அறிமுக இயக்குநர் குழந்தை வேலப்பனை எவ்வளவு பாராட்டினாலும் தகும்

nantri viduppu

No comments: