இடப்பெயர்வு - உருவகக்கதை -முருகபூபதி



.

அந்தக்கிராமத்தில் மக்கள் நடமாட்டம் குறைந்த ஒதுக்குப்புறமான நிலப்பரப்பில் வீட்டுக்கழிவுகளும் குப்பைகளும் குவியத்தொடங்கியதும் எங்கிருந்தோ வந்த கோழிக்கு மிகுந்த கொண்டாட்டமாகிவிட்டது.
அந்தக்கோழிக்கு தாராளமாகவே தீனி கிடைத்தது. குப்பைமேட்டுக்கு தானே ராஜா என்ற இறுமாப்புடன் அன்றாட உணவுதேடி வரும் காகங்கள் பட்சிகளை களைத்துவிடும். குப்பைமேட்டில் கொட்டப்படும் சமையலறைக்கழிவுகள்  யாவும் தனக்கே சொந்தமானது என்ற மனப்பாங்கில் பறவைகளை அந்தப்பக்கம் அந்தக்கோழி அண்டவிடுவதில்லை.



நாளொரு வண்ணம் பொழுதொரு மேனியுமாக கோழி வளர்ந்தது. கோழி வளர்த்தி என்பார்களே. மக்கள் காரணத்தோடுதான் சொல்வார்களாக்கும்.
ஒரு காகம் கோழியை எதிர்க்கத்துணிந்தது.
“ ஏய் கோழியாரே இந்தக்குப்பைமேடு உனக்கு மாத்திரமா சொந்தம்? எனது இனத்தவர்கள் இங்கே தமது பசிபோக்கிக்கொள்ள முடியாதா?” என்று கேட்டது.
“ ஏய்...காகமே... உயரப்பறந்து செல்லும் ஆற்றல் உனது இனத்துக்குண்டு. நான் அப்படியல்ல. நீயும் உனது இனத்தவர்களும் வேறிடங்களுக்கு பறந்துசென்றும் உண்பதற்கு ஏதும் தேடிக்கொள்ளலாம். ஆனால் எனக்கிருப்பதோ இந்த குப்பை மேடு மாத்திரம்தான். இந்தக்கிராமத்து மக்கள் தங்கள் வீட்டுக்கழிவுகளையும் குப்பைகளையும் இங்கே எனக்காக மாத்திரமே கொட்டுகின்றார்கள். எனது கணவனான சேவலும் நானும் சேர்ந்து எமது இனத்தை பெருக்குவோம். நான் இடும் முட்டைகளிலிருந்து பிறக்;கும் எனது குஞ்சுகளை அள்ளிச்சென்று கொன்றவர்கள் உங்கள் இனத்தவர்கள். அதனால் எனது எதிரியான உன்னையும் உனது இனத்தவர்களையும் நான் இங்கே அண்டவிடமாட்டேன்.” என்றது கோழி.
“ இங்கே குப்பையும் கழிவுகளும் கொட்டும் இந்த மக்கள் மட்டும் என்ன செய்கிறார்களாம். உனது முட்டை எப்போது கிடைக்கும் என்றுதானே பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். உனக்காக குப்பையும் கழிவுகளும் கொட்டும் இந்த மக்களே உனது முட்டையையும் அபகரித்துச்சென்றுவிடுகிறார்களே. என்றாவது ஒருநாள் உன்னையும் கொன்று கறிசமைத்து உண்பார்கள்  மறந்துவிடாதே.” என்றது அந்தக்காகம்.
 கோழி அதன் பிறகு உஷாரடைந்தது. தனது முட்டைகளை இனிவரும் காலங்களில் பாதுகாப்பதற்கும் அதிலிருந்து பிறக்கவிருக்கும் தனது சந்ததிகளான குஞ்சுகளை போஷிப்பதற்கும் உகந்த வழியை அது தேட முயன்றது. பலவாறு அது யோசித்தது. எனினும் எந்தவொரு நல்லயோசனையும் அதன் பிடிமானத்தில் சிக்கவில்லை.
 அயலூரில் நிலநடுக்கம் ஏற்பட்டதானல் இடம்பெயர்ந்து வந்த ஒரு பாம்பு அந்தக்குப்பைமேட்டுப்பகுதியில் ஊர்ந்துகொண்டிருந்தது. கோழியைக்கண்டதும் சருகுகளுக்குள் பதுங்கியது. தனக்கு இந்தக்குப்பைமேட்டில் உண்பதற்கு போதியளவு சிறு ஜந்துகள் கிடைக்காதுவிட்டாலும் இந்தக்கோழி இடும் முட்டைகளை ஒரு கைபார்த்துவிடலாம் என்று நம்பியது. அதற்காக காத்திருந்தது.
 கோழியின் குணம் தெரிந்ததுதானே. ஒரு முட்டையை இட்டவுடன் மௌனமாகவா அது இருக்கும். பல முட்டைகளை ஈன்றாலும் கடல் ஆமை அமைதி காக்கும். ஆனால் ஒரு முட்டையை இட்டவுடன் கொக்கரித்து ஆர்ப்பாட்டமாக “நான் ஒரு முட்டையை இட்டுவிட்டேன்” என்று ஊருக்கே பறை சாற்றிவிடும் இனம் அல்லவா.
அதனால் அந்தக்கோழி முட்டையிடும் தருணத்தை அதன் கொக்கரிப்பிலிருந்து தெரிந்துகொண்டது அந்த விஷப்பாம்பு.
கோழியின் கொக்கரிப்பே அதன் சந்ததிக்கு எமனாகியது. கோழி முட்டை இட்டபின்னர் உணவுக்காக குப்பைமேட்டில் அலையும்வேளையில் அந்தப்பாம்பு மெதுவாக ஊர்ந்து வந்து முட்டையை கொத்தி உள்ளிருக்கும் கருவை உறிஞ்சிவிடும்.
கோழிக்கு தனது முட்டைகள்  எப்படி மாயமாக மறைகின்றன என்பது முதலில் தெரியாது. காகங்கள்தான் அவற்றை கொத்திச்செல்கின்றன என்றே நினைத்துக்கொண்டிருந்தது. ஒரு நாள் தான் இட்ட முட்டையை அந்தப்பாம்பு உறிஞ்சிக்கொண்டிருப்பதைக்கண்டு நெஞ்சம் பதைபதைக்க கொக்கரித்தது.
“ ஏய் பாம்பே எனது இனத்தை அழிக்க வந்தாயா? நான் உனக்கு என்ன பாவம் செய்தேன். நீ எங்கிருந்து வந்தாயோ அந்த இடத்துக்கே திரும்பிப்போய்விடு. இந்தக்குப்பை மேடு எனக்குச்சொந்தமானது. நான் இங்கே காகங்களைக்கூட அண்ட விடுவதில்லை. நீ எப்படி இங்கே வரலாம். வந்தாலும் பரவாயில்லை. எனது சந்ததியையும் அல்லவா அழித்துக்கொண்டிருக்கிறாய். போய்விடு,” என்றது கோழி.
 “ முட்டாள் கோழியே இந்த மனிதர்கள் எனது சந்ததியையும்தான் அழிக்கிறார்கள். நாம் அதற்கு எதிராக அவர்களை கொத்திப்போராடிக்கொண்டிருக்கிறோம். இந்த மனிதர்கள் உனது இனத்தை அழித்து சாப்பிடுகிறார்கள். ஆனால் எமது இனத்தவரை கொன்று எரித்துவிடுகிறார்கள். அல்லது புதைத்துவிடுகிறார்கள். எல்லோருடைய வாழ்க்கையுமே போராட்டம்தான். தம்மைத்தாமே காப்பாற்றிக்கொள்வதற்கான போராட்டம். ஆனால் இயற்கையை எதிர்த்து அவர்களால் போராட முடியவில்லை. நிலநடுக்கம் ஏற்படப்போகிறது என்பதை உணர்ந்தமையால்தான் அதற்கான விசேட சக்தி என்னிடமிருந்தமையால்தான் நான் பாதுகாப்பாக இங்கே இடம்பெயர்ந்து வந்துவிட்டேன். எனக்கு தேவையான உணவை நான் எப்படியும் பெற்றுக்கொள்வேன். உன்னைப்போல் இந்தக்குப்பை மேடே தஞ்சம் என்று கிடக்கமாட்டேன்.”
“ அதற்காக எனது முட்டைகளையா நீ உண்ணவேண்டும். ?”
“ இந்த மனிதர்களும்தானே எவ்வளவோ உணவு வகைகள் நாட்டில் இருக்கும்போது உனது இனத்தையும் உனது முட்டைகளையும் உண்டுகொண்டிருக்கிறார்கள். நான் உயிர்வாழ உனது முட்டையை உறிஞ்சுகிறேன். முடிந்தால் எனது முட்டைகளை நீ உறிஞ்சிப்பார்.” என்றது நச்சுப்பாம்பு.
“ சீ... என்ன கேவலம். போயும் போயும் உனது முட்டையை நான் உறிஞ்சுவேனா? நீ விஷப்பாம்பு. உனது விஷம்தான் உனது முட்டையிலும் இருக்கும். நீ மக்களின் எதிரி;.” என்று கோழி சொன்னதும் பாம்பு சீறிச்சினந்தது.
 தனது சீற்றத்தை தணிப்பதற்காக அந்த இடத்தைவிட்டு நகர்ந்து சென்றது.
 கோழிக்கு கவலை அதிகரித்தது. குப்பை மேட்டுக்கு வரும் காங்களை களைக்கின்றேன். எனது முட்டைகளை அபகரிக்கும் மனிதர்களையும் இந்த நசு;சுப்பாம்பையும் எதிர்த்து போராடத்தெரியாமாலிருக்கின்றேனே.  கணவன் சேவல் வந்ததும் தனது கவலையை சொன்னது.
 “ நாம் இந்த கிராமத்தை விட்டுச்செல்வோம். இங்கிருந்தால் உனக்கு காகங்களுடனும் இந்த மனிதர்களுடனும் அந்தப்பாம்புடனும் போராடிக்கொண்டிருப்பதற்கே காலம் சரியாகிவிடும்.  வா வேறு ஊருக்குச்செல்வோம்.” என்றது சேவல்.
 “ இந்த குப்பை மேட்டை விட்டு என்னால் நகர முடியாது. இது எனக்கே சொந்தம். நானே இங்கே ராணி.” என்று சொல்லி மறுத்தது கோழி.
 “ இந்த ராணியை ஒருநாள்  ஊர்மக்கள் கறிசமைத்துவிடுவார்கள். நான் சொன்னால் கேள். இனி இந்த இடம் எங்களுக்கு சரிப்பட்டுவராது. மனிதர்கள் வாழும் இடம் எங்கும் ஏதாவது ஒரு குப்பை மேடு இருக்கும்தானே. வேறு ஒரு குப்பை மேட்டை நோக்கி நாங்கள் நகருவோம்.” என்றது சேவல்.
“ அங்கேயும் காகங்களும் நச்சுப்பாம்புகளும் வராலாம் இல்லையா?”
“ எல்லோருக்கும் எங்கும் வாழும் உரிமையுண்டு. அதனை எம்மால் தடுக்கமுடீயாது. போராட மட்டும்தான் எம்மால் முடியும். வாழ்க்கையே போராட்டம்தானே.” சேவல் தனது துணையை அழைத்துச்சென்றது.

                             ----0---    

1 comment:

kirrukan said...

கோழி தமிழன்,
குப்பை மேடு சிறிலங்கா
காகம் சிங்களவன்
பாம்பு இந்தியா

என்று எண்ணலாம் போலகிடக்குது