இலங்கையில் அரசியலும் வெள்ளப் பெருக்கும்

.
இலங்கையில் 18 மாவட்டங்களில் ஏற்பட்டிருக்கும் வெள்ளப் பெருக்கினால் 13 இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். ஒரு மாத காலத்திற்குள் இருதடவைகள் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் கடந்த வாரத்தைய அனர்த்தமே மக்களுக்கு மிகவும் கூடுதலான பாதிப்புகளை ஏற்படுத்தியிருப்பதையும் காணக்கூடியதாக இருக்கிறது. உடனடி உறைவிட, உணவு மற்றும் குடிநீர்த் தேவைகளுக்காக சர்வதேச சமூகத்தின் அவசர உதவி தேவைப்படுவதாக ஐக்கிய நாடுகள் வதிவிட அலுவலகம் வேண்டுகோள் விடுத்திருக்கிறது. முதற்தடவை ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் பாதிப்பில் இருந்து விடுபடுவதற்கு முயற்சித்துக்கொண்டிருந்த மக்களை மீண்டும் வந்து வெள்ளம் அவலத்துக்குள்ளாக்கிக் கொண்டிருக்கிறது. தொடர்ந்தும் கனமழை பெய்யக்கூடிய ஆபத்து இருப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் அபாயச் சங்கு ஊதிக்கொண்டேயிருக்கிறது. இத்தனை துன்பங்களுக்கு மத்தியிலும் கூட உள்ளூராட்சித் தேர்தல்களை ஒத்திவைக்க வேண்டுமென்ற நினைப்பு அரசாங்கத்துக்கு வருவதாக இல்லை.


வெள்ளப் பாதிப்பைக் கருத்தில் கொண்டு எதிர்வரும் மார்ச் 17 ஆம் திகதி நடைபெறவிருக்கும் உள்ளூராட்சித் தேர்தல்களை ஒத்திவைக்க வேண்டுமென்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் ஜனநாயக மக்கள் முன்னணி போன்ற கட்சிகள் விடுத்திருக்கும் வேண்டுகோளைத் தேர்தல் திணைக்களம் அலட்சியம் செய்தே அறிக்கைகளை விடுத்துக்கொண்டிருக்கிறது. அரசாங்கத்தின் அமைச்சர்களில் ஒருவரான தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச கூட தேர்தல்களை ஒத்திவைக்க வேண்டுமென்றே வலியுறுத்திக் கேட்டிருக்கிறார். திட்டமிட்டபடி தேர்தல்கள் நடத்தப்படுமென்றும் அவற்றைப் பின்போடுவது தொடர்பில் இதுவரையில் தீர்மானமெதுவும் மேற்கொள்ளப்படவில்லையென்றும் தேர்தல் திணைக்களம் தெரிவித்திருக்கிறது. உள்ளூராட்சித் தேர்தல்களில் போட்டியிடும் வேட்பாளர்கள் வெள்ளப் பாதிப்புக் காரணமாகப் பெரும்பாலான பகுதிகளில் ஏற்பட்டிருக்கும் உணவுத் தட்டுப்பாடு மற்றும் சுகாதாரக் கேடு காரணமாக மக்கள் துன்பப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில் பிரசாரங்களுக்குச் செல்ல முடியாமல் இருக்கிறது என்று தெரிவித்திருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா படுமோசமான சூழ்நிலைகளில் மக்கள் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கின்ற வேளையில் அவர்களிடம் வாக்குக் கேட்பதற்கு எவ்வாறு போக முடியுமென்று கேள்வியெழுப்பியிருப்பதையும் காணக்கூடியதாக இருக்கிறது.

வெள்ளக் கொடுமையினால் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு உடனடி நிவாரணங்களை வழங்கும் அவசரப் பணிகளுக்கு அரச நிருவாக இயந்திரம் முழுமையாகத் திசைதிருப்பப்பட வேண்டிய இன்றைய இக்கட்டான சூழ்நிலையில் தேர்தல்களை ஒத்திவைப்பது குறித்து அரசாங்கம் சிந்திக்க மறுப்பது உண்மையில் பெரும் கவலை தருகின்றது. வெள்ள நிவாரணங்கள் வழங்கும் பணிகளையே தேர்தல் பிரசார நடவடிக்கைகளின் அங்கமாக்கி விட முடியுமென்ற நம்பிக்கையை அரசாங்கம் கொண்டிருக்கிறதோ என்ற சந்தேகம் இயல்பாகவே எழுகிறது. இலங்கை அதன் அண்மைக்காலச் சரித்திரத்தில் முன்னொருபோதுமே அனுபவித்திராத வகையிலான இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டிருக்கும் இடரார்ந்த நிலைவரத்துக்கு மத்தியில் தேர்தல் நடவடிக்கைளை முன்னெடுப்பது மனிதாபிமானத்துக்கு முற்றிலும் முரணான கைங்கரியம் என்பதே எமது அபிப்பிராயமாகும்.

அரசாங்கம்தான் இது விடயத்தில் மெத்தனமான போக்கைக் கடைப்பிடிக்கின்றது என்று பார்த்தால், பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியினரும் மக்களின் துன்பங்களைப் பொருட்படுத்தாமல் அரசியல் செய்வதில் தாங்களும் ஒன்றும் சளைத்தவர்கள் அல்ல என்பதை வெளிக்காட்டிக் கொண்டிருக்கிறார்கள். உள்ளூராட்சித் தேர்தல்களுக்குப் போதுமான கால அவகாசம் இருப்பதால் அவற்றைப் பின்போடுவது தொடர்பில் அவசரமான தீர்மானமெதையும் அரசாங்கம் எடுக்கத் தேவையில்லை என்று நேற்று முன்தினம் கொழும்பில் செய்தியாளர் மகாநாட்டில் தெரிவித்த ஐ.தே.க.வின் பேச்சாளர்களில் ஒருவரான காலி மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் கஜந்த கருணாதிலக வெள்ள நிலைவரம் நீண்ட நாட்களுக்குத் தொடரக்கூடிய சாத்தியமில்லை என்பதால் தேர்தல்களைப் பின்போடுவது குறித்து அவசர முடிவு எதையும் அரசாங்கம் எடுக்கக்கூடாது என்று வலியுறுத்திக் கேட்டிருக்கிறார். வெள்ளப்பாதிப்பு தேர்தல்களில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தப் போவதில்லை என்பதே கருணாதிலகவின் அபிப்பிராயமாக இருக்கிறது. படுமோசமாக அதிகரித்துச் செல்லும் வாழ்க்கைச் செலவு மற்றும் பல நெருக்கடிகளின் விளைவாக ஆளும் கட்சியினர் மக்கள் முன்செல்வதில் பெரும் சிக்கல்களை எதிர்நோக்குவதால் வெள்ளப்பாதிப்பை ஒரு சாத்தியப்போக்காகக் கூறித் தேர்தல்களுக்கு முகங்கொடுப்பதைத் தவிர்ப்பதற்கு முயற்சிக்கக்கூடும் என்றும் ஐ.தே.க.பேச்சாளர் செய்தியாளர்கள் மத்தியில் தெரிவித்திருக்கிறார்.

கூரையைப் பிரித்துக் கொண்டு வானளாவ உயர்ந்து சென்று கொண்டிருக்கும் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பை ஓரளவுக்கேனும் கட்டுப்படுத்துவதற்கு வக்கில்லாததாக இருக்கும் அரசாங்கத்தின் மீது மக்கள் பெரும் அதிருப்தி கொள்ள ஆரம்பித்திருக்கிறார்கள் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், அதற்காக ஐ.தே.க.வுக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு அதிகரித்து வருகிறது என்று அர்த்தமில்லை. வாழ்க்கைச் செலவு அதிகரிப்பினால் மக்களுக்கு ஏற்பட்டிருக்கின்ற கஷ்டநிலைமையைப் பயன்படுத்தி உள்ளூராட்சித் தேர்தல்களில் தங்களது வாய்ப்புகளை அதிகரிக்க முடியுமா என்று ஐ.தே.க.தலைவர்கள் அங்கலாய்க்கிறார்கள் என்பதிலும் சந்தேகமில்லை. அந்த அங்கலாய்ப்பினால் அவர்கள் இலட்சக்கணக்கான மக்களைப் படுமோசமாகப் பாதித்து 18 மாவட்டங்களில் பெரும்பாலான பகுதிகளை நீரில் மூழ்கடித்திருக்கும் வெள்ளக் கொடுமையைக் கூட பாரதூரமானதாக நினைக்க மனமில்லாதவர்களாக இருக்கிறார்கள் என்பது பெரும் வேதனையைத் தருகிறது.அரசியல் அனுகூலத்துக்கு முன்னால் வெள்ளமென்ன, புயல் என்ன, சுனாமி தான் என்ன?

நன்றி தினக்குரல்

No comments: