எனது இலங்கைப் பயணம் - செ.பாஸ்கரன்

.
இத்தொடரின் 10ம் பகுதி  இவ்வாரம் இடம்பெறவில்லை அடுத்த வாரம் தொடரும் என்பதை அறியத் தருகிறோம்.

எனது இலங்கைப் பயணம் - பகுதி 9


இப்போது நாங்கள் முல்லைத்தீவை நோக்கி செல்கின்றோம். இயல்பாகவே மனதில் ஒரு நெருடல் சேர்ந்து கொள்கிறது. முல்லைத்தீவை நன்கு தெரிந்த வாகன ஓட்டி, அவருடன் இன்னொரு உதவியாளர், மற்றும் நாங்கள். முதலிலேயே வற்றாப்பழை அம்மன் கோவிலுக்கு செல்வதாகத்தான் எவர் கேட்டாலும் சொல்வதென திட்டமிட்டுக்கொண்டு செல்கின்றோம். முல்லைத்தீவு வீதியில் சோதனைச் சாவடியில் நிறுத்தப்பட்டு,  நாங்கள் செல்லுமிடம் பற்றி கேட்டுக்கொண்டு பதிந்துவிட்டு செல்ல அனுமதிக்கின்றார்கள். மீண்டும் ஒரு தடை முகாம் வருகின்றது அதில்நிறுத்தி எங்கள் பயணம் பற்றி கேட்டுவிட்டு தொடர்ந்து பிரதான சாலையில் செல்ல முடியாது ஜனாதிதிபதியின் மகன் நாமல் ராஜபக்ச இன்று இந்த வீதியில் முல்லைத்தீவு செல்லுகின்றார் ஆகவே உள் பாதையால் சென்று மீண்டும் பிரதான வீதியில் சேர்ந்து கொள்ளுங்கள் என்று இராணுவத்தினர் கேட்கின்றார்கள்.




முல்லைத்தீவு நன்றாக தெரிந்த சாரதி சரி என்று கூறிவிட்டு ஒரு 7 கிலோமீற்ரர் சுற்றி போகவேண்டும் என்று கூறிவிட்டு வண்டியை துரிதப்படுத்துகின்றார். உள்பாதையால் செல்லும் போது அவர்கள் இப்படி அனுப்பியதும் ஒரு வகையில் நல்லதென்றே கருதினோம் காரணம் பல குடும்பங்களை சந்தித்து கதைத்து பல கதைகளையும் கேட்கக் கூடியதாக இருந்தது. வானொலி பத்திரிகைகளில் வந்த விடயங்களைவிட அந்த மனிதர்களோடு பேசியதில் பல விடயங்களுக்கு தெளிவு கிடைத்தது. வீடுகள் கட்டிக்கொண்டும் வளவுகள் துப்பரவாக்கிக்கொண்டும் வேகமாக இயங்கிக் கொண்டிருந்தார்கள். பார்த்த பெரும்பாலானவர்களிடம் நம்பிக்கை இருந்தது. அத்தனை சோகத்திலும் வன்னி மண்ணுக்கே உரிய புன்னகை அவர்கள் முகத்தில் தெரிய அவர்கள் பேசிய விதம். அவர்கள் எவரை நம்பாவிட்டாலும் அந்த மண்ணை நம்புகின்றார்கள் என்பது தெரிந்தது.
மீண்டும் சுற்றி வந்து முல்லைத்தீவு றோட்டில் ஏறுவதற்கு வந்தபோது தடுத்து நிறுத்தப்பட்டோம். காரணம் சொல்லாமலே புரிந்தது. 20 பதுக்கு மேற்பட்ட வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்தது. ஆமி பொலிஸ் என்று காவல் போடப்பட்டிருந்தது. அங்கே நாமல் நின்று விட்டு அப்போதுதான் புறப்பட ஆயத்தமாகின்றார். ஒரு மணிநேரம் தாமதித்து மீண்டும் நாம் செல்ல அனுமதிக்கப்பட்டோம்.


கடைசியில் வற்றாப்பளை அம்மன் ஆலயத்தை வந்தடைந்து அம்மன் சன்னிதியில் வணங்கிவிட்டு நந்திக்கடலை நோக்கி நடந்தேன். மே 2009 தில் குருதிக்கடலாக கிடந்த அந்தக்கடல் ஒன்றும் அறியாததுபோல் அமைதியாக கிடந்தது. அத்தனை மரணஓலங்களையும் வெளியில் தெரியாமல் தனக்குள் விழுங்கிக் கொண்ட அந்தக் கடல் ஆளரவமற்று இராணுவ காவலுமின்றி வற்றிக்கிடக்கிறது. இதைக்கடக்க முனைந்த எத்தனை மனிதர்கள் உயிர் பறிக்கப்பட்டு அதில் விழுந்து கிடந்திருப்பார்கள் என்ற சிந்தனை பொறிதட்ட அந்தக் கரைகளில் சிவப்புக் குருதிக்கறை படிந்திருக்கிறதா என்று அந்த மணலைக் கிளறிப் பார்கின்றேன். 30 வருடப் போரின் முடிவு இங்குதான் நிகழ்ந்தது என்பதை எண்ணிப் பார்த்தபோது 25 வருடங்களுக்கு முன்பு நானும் நாங்களும் நடந்து திரிந்த அந்த நினைவுகள் மின்னி மறைகிறது. "தண்ணீர் விட்டா வளர்த்தோம் சர்வேசா இப்பயிரை கண்ணீரால் காத்தோம் கருகத் திருவுளமோ" என்ற பாரதியின் வரிகளின் நினைவுகளோடு கண்கள் பனித்தன. எந்த மக்களுக்காக நாம் குரல் கொடுத்தோமோ எந்தமக்களுக்காக இலங்கை வரைபடத்தில் புதிய கோடு போட்டோமோ அவை எதுவும் நிறைவேறாது துயரத்தை மட்டும் சுமந்து நிற்கும் அந்த மக்களிடம் விதி என்கிறார்கள் சிலர் நாங்கள் விதைத்தது என்று என்மனம் கூச்சல் போடுகிறது. அந்த இடத்தை விட்டு நகர்கின்றேன்.


நாங்கள் சந்திக்க வந்த அந்த கிராமத்து மக்கள் வருகின்றார்கள். அதில் சில முக்கிமானவர்களோடு எந்த வகையில் உதவி செய்யவேண்டும் எந்த விதமான உதவிகள் செய்ய வேண்டும் என்று உரையாடுகின்றோம். அதன்பின் அந்தகிராமத்தில் மீளக் குடியேற்றப்பட்ட மக்கள் பலரை சந்திக்கின்றோம். எங்குமே சோகம் ஒவ்வொரு வீட்டிலும் துயரக்கதைகள் தூங்கிக் கொண்டிருக்கிறது. துரத்த வளிதெரியாது தவித்துக்கொண்டிருக்கின்றார்கள். காலில்லாதவர்கள், கையில்தாவர்கள், தாயை இழந்தவர்கள், தந்தையை இழந்தவர்கள், புருசனை பிள்ளையை பறிகொடுத்தவர்கள் பார்கின்ற இடமெல்லாம் பரிதாபத்திற்குரியவர்களாகவே இருக்கின்றார்கள். நான் எத்தனையோ இளப்புக்களின் போது உதவிக்குப் போயிருந்தவன், வன்னிக் குடியேற்றம் மட்டக்களப்பு சூறாவெளி உதவிக் குழு போன்ற வற்றில் 80பதுகளில் செயலாற்றியிருந்தவன் ஆனால் ஒட்டுமொத்தமாக ஒரு பிரதேசத்து மக்கள் இப்படி ஒரு இழப்பில் துடித்ததை அன்றுதான் பார்க்கக் கூடியதாக இருந்தது. பார்க்குமிடமெல்லாம் 18, 19, 20 வயதுப் பெண்கள் கணவனை இழந்தவர்களாக குழந்தைகளைக் கையில் வைத்துக்கொண்டு கதறுகின்ற காட்சி நெஞ்சைவிட்டு அகல மறுக்கிறது. ஒருவரிடமும் கேட்கவேண்டிய அவசியம் இருக்கவில்லை பார்த்தவுடனேயே தெரிந்து விடுகிறது.

 "என்ன தொழில் செய்யப் போகின்றீர்கள் உங்களுக்கு என்ன செய்யவேண்டும்" என்று கேட்டவுடன் இரண்டு கண்களாலும் கண்ணீர் பொல பொல என்று கொட்டுகின்றது." நாங்கள் என்ன செய்வதெண்டு எங்களுக்கே தெரியாது" என்று அழுதவண்ணம் வானத்தைப் பார்க்கின்றார்கள்.
அவர்களுடைய சோகக் கதையை யாரிடமும் சொல்ல முடியாது. முகாமில் இருந்து வந்து மீளக் குடியேற்றப்பட்டவர்களுக்கு அரசாங்கம் அரிசி, சீனி பருப்பு என்பன கொடுப்பதாகவும் நிலம் உள்ளவர்களுக்கு ஒரு சிறிய வீடு கட்டுவதற்கு ஒரு வெளிநாடு ( இந்தியா என்று குறிப்பிட்டார்கள் அதன் உண்மை விபரம் அறிய முடியவில்லை) உதவி செய்கின்றது. முதலில் அத்திவாரம் போடுவதற்கு காசும் பொருட்களும் கொடுத்துள்ளார்கள். அது போட்டு முடிந்தவுடன் அதைப் பார்த்து விட்டு சுவர் வைப்பதற்கான உதவி வழங்கியுள்ளார்கள். அதுவும் முடிந்தவுடன் கூரைக்கான உதவி வழங்குகின்றார்கள். அனேகமான வீடுகள் இந்த இரண்டாம் கட்டம் தாண்டி மூன்றாம் கட்டத்தில் உள்ளதை பார்க்கக் கூடியதாக இருந்தது. முகாமில் இருக்காமல் உறவுகளோடு இருந்து, பின் இங்கு வந்தவர்களுக்கு இந்த வீட்டு உதவி கிடைக்கவில்லை என்பது வேதனைக் குரியதாக இருந்தது. "அது பற்றி எம் பிக்களிடம் அல்லது மந்திரிமாரிடம் பேசினீர்களா" என்று கேட்டதற்கு  "இங்க எவனய்யா எங்கட பிரச்சினய பாக்க வாறாங்கள், நீங்கள்தான் முதலில வந்திருக்கிற தமிழாக்கள்" என்று விரக்தியோடு கூறினார்கள்." இன்று ஜனாதிபதியின் மகன் வந்தாரே நீங்கள் பார்க்கவில்லையா" என்று கேட்டேன். சிலர் கூறினார்கள் "போனாங்கள், நாங்கள் முக்கியமாக் கேட்டது புதுக்குடியிருப்பில இருக்கிற பயிச்செய்கைக்கான காணியள திருப்பி தரவேண்டுமெண்டு, அதுக்கு அவரும் உடனடியா, அதிகாரியளுக்கு உத்தரவு போட்டேர் , உடன காணியள குடுக்கவேணும் எண்டு, பிறகு எங்களட்ட சொன்னேர், நாளைக்கு எயாபோர்ஸ் இருக்கிற இடத்தை தவிர மற்ற இடங்களுக்கு நீங்கள் போகலாம் எண்டும், விவசாயத்த துவங்கலாம் எண்டும் " இப்படி கூறி முடித்தார்கள். ( புதுக் குடியிருப்பு செல்லும் வளியில் புலிகள் வைத்திருந்த ஓடுபாதையும் தளமும் இப்போது திருத்தப்பட்டு மிகப்பெரிய வான் படை நிலையமாக கட்டப்பட்டுள்ளது)
அரசியல் வாதிகளின் தந்திரமும் மக்களை ஏமாற்றும் தன்மையும் தொடர்ந்து கொண்டுதானிருக்கிறது. பல அழுத்தங்களால் ஏற்கெனவே மக்களிடம் கையளிக்க இருந்த காணிகளை நாமல் ராஜபக்ச வந்து ஏதோ தான் சொல்லித்தான் நடப்பது போல் ஒரு காட்சியை அரங்கேற்றி விட்டு சென்றிருக்கின்றார். மக்களும் நம்புகின்றார்கள். நம்புவதோ இல்லையோ என்பதற்கு மேலாக நம் காணிகள் நம் கைக்கு வந்தால் சரி என்று நினைக்கின்றார்கள்.   ( இந்தியாவில் நேருவும் அதன்பின் இந்திரா காந்தி ஆகியோரின் தேர்தல் தொகுதியாக இருந்தது அமேதி தொகுதியாகும் அது மிகவும் படிப்பறிவு இல்லாத மக்கள் கூடிய இடமென்று புள்ளி விபரம் காட்டும். ஒரு பிரதமருடைய தொகுதி ஏன் இப்படி உள்ளது என்று கேட்டால் படிப்பறிவுள்ளவர்களாக மாற்றி விட்டால் சிந்திக்க தொடங்கி விடுவார்கள் வாக்குச் சீட்டைப் பெறுவது கடினம் அதுதான் ரகசியம் ) எமது மக்களையும் காப்பாற்ற வேண்டுமானால் கல்வியறிவை எம்மவர்கள் மேம்படுத்தவேண்டும்.


அதன் பின் நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று அவர்களோடு பேசி ஒரு முடிவெடுக்கின்றோம். அந்த மக்கள் கேட்டார்கள் ,"தொழில் வேண்டும் காணியைத்தான் நம்பியிருக்கிறோம் அதை உழுது விதைக்க வேண்டும், அறுவடை செய்வதற்கு முன்பு போல் ஆண்கள் இல்லை. இருப்பவர்களும் பெரும்பாலும் ஊனமுற்றவர்கள் ஆகவே இந்தக் கிராமத்துக்கு ஒரு உளவு யந்திரமும் ஒரு சூடடிக்கும் இயந்திரமும் தந்தால் இந்த கிராம மக்கள் அனைவரும் பாவிப்போம்" என்றார்கள். லண்டனில் இருந்து வந்த நண்பர் அவை இரண்டையும் தானும் தன்னுடைய நண்பர்களும் செய்து தருவதாக உறுதியளிக்கின்றார். இன்னும் சிலர் "தையல் மெசின் இருந்தால் தாங்கள் தைத்து பிழைப்பை நடத்த முடியும்" என்றார்கள். சிலர் "கச்சான் தோட்டத்திற்கு தண்ணீர் இறைப்பதற்கு தண்ணீர் இறைக்கும் இயந்திரம் வாங்கித் தந்தால் தங்கள் சீவியத்தை ஓரளவு சமாளிக்லாம்" என்றார்கள். உடனடியாக நான் அங்கிருந்து ஒஸ்ரேலியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தை தொடர்புகொண்டு அந்த மக்களின் வேண்டுகோளை அவர்கள் மூலமாகவே முன்வைத்தேன். உடனடியாகவே சில நேயர்கள் தையல் இயந்திரங்களையும் தண்ணீர் இறைக்கும் யந்திரத்தையும் தாங்கள் கொடுப்பதாக கூறினார்கள் அவற்றை மறு நாள் நாங்கள் வாங்கி சமூகப்பெரியவர்களுக்கு முன்பாக அந்த மக்களுக்கு கொடுத்து அவர்கள்  பெற்றுக்கொண்டதற்கான கடிதங்களும் பெற்றுக்கொண்டோம். அதற்கான பணத்தை நான் அவுஸ்ரேலியா வந்தவுடன் அந்த நல்ல மனம் படைத்தவர்கள் தந்தார்கள், இன்னும் சிலர் தருவதாக கூறியுள்ளார்கள். இதற்காக அவுஸ்ரேலிய தமிழ் ஒலிபரப்புக்கூட்டுத்தாபனத்திற்கு நன்றியை தெரிவிக்கின்றேன். இந்த வானொலி இன்னும் அவர்களுக்கு உதவ முன்வந்துள்ளது மட்டுமல்ல இன்னும் பல இடங்களுக்கு பல வகையில் உதவிக்கொண்டிருக்கின்றது என்பதை நன்றியோடு கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.
இன்றைய தினம் இருட்டி விட்டது. நாங்கள் அன்றிரவு அங்கேயே தங்குவதென முடிவெடுத்தோம். கட்டிடங்கள் எதுவுமே இல்லாது அழிக்கப்பட்ட இடம் அம்மன் கோவில் மடத்தில் தங்குவதற்கு முடிவுசெய்தோம் ஊர் மக்கள் மிகவும் அன்பாக இருந்தார்கள். ஆமியால் எந்த பிரச்சினையும் வராது தாங்கள் பார்த்துக்கொள்கின்றோம் என்று எமக்குத் தென்பையும் தந்தார்கள். நீண்ட இரவாக அந்த இரவு அங்கே கழிந்தது.



மறுநாள் அம்மன் கோவிலிலே அபிசேகம் செய்து வழிபட்டோம் வந்திருந்த கிராம மக்களுக்கு மீண்டும் நண்பர் உடைகளாகவும் பணமாகவும் பல உதவிகளைச் செய்தார். பெரும்பாலான கிராமமக்கள் கூடியிருந்தார்கள். போரின் போது நடந்தவைகள் அனைத்தையும் ஒளிவு மறைவின்றி கூறினார்கள். இராணுவத்தின் செல்தாக்குதல்களாலும் துப்பாக்கி சூட்டினாலும் பல்லாயிரக் கணக்கான மக்கள் இறந்ததாகவும்; தங்களை வெளியேறி இராணுவத்திடம் சரணடையவிடாது புலிகள் தடுத்ததாகவும். தடுத்ததையும் மீறி இரவோடு இரவாக களவாக நந்திக்கடலைத் தாண்டி இராணுவத்திடம் செல்லும்போது புலிகளின் துப்பாக்கிச் சூட்டினால் இறந்தவர்கள் பலர் என்றும் கண்ணீரோடு கூறினார்கள். உறவுகளையும் உடைமைகளையும் போருக்கு தானம் செய்தவர்கள் இன்று வாழ்வதற்காக போராடிக் கொண்டிருக்கின்றார்கள். இவர்களுக்கு உடனடித்தேவை வாழ்வாதாரம் மாத்திரேமே. இதை யார் செய்வார்கள் என்று ஏங்கிக் கொண்டிருக்கின்றார்கள். ஆனால் பலர் இவர்களை வைத்து அரசியல் செய்கின்றார்களே தவிர அவர்கள் வாழ்வைப்பற்றி சிந்திக்கின்றார்கள் இல்லை என்பது கசப்பான உண்மை.
அந்த மக்களுக்கு உதவி புரிந்துகொண்டிருந்தபோது இரண்டு பேர் வந்தார்கள் எங்களுக்குத் தெரியாமல் எங்களைப் போட்டோ எடுத்ததை அவதானிக்கக் கூடியதாக இருந்தது.. ஆலயத்தின் குருக்களிடம் எம்மைப்பற்றி கேட்டிருக்கின்றார்கள். எந்த அமைப்பு, ஏன் உதவி செய்கின்றார்கள் என்பது போன்ற பல கேள்விகள் ஆனால் எம்மிடம் எதுவும் பேசவில்லை சென்று விட்டார்கள். அவர்கள் இராணுவத்தின் உளவுப் பிரிவினராக இயங்கும் தமிழர்கள் என்றும், முன்பு புலி உறுப்பினர்களாக இருந்தவர்கள் என்றும் கூறப்பட்டது. சில நிமிட நேரத்தின் பின் இராணுவவாகனம் வந்து நின்றது. அதில் இருந்த பெரிய அதிகாரி உள்ளே வர மற்றவர்கள் வெளியில் காத்திருந்தார்கள். நாங்கள் தொடர்ந்தும் நாங்கள் செய்ததை செய்து கொண்டேயிருந்தோம் அவர் நேரே குருக்களிடம் சென்று உரையாடிவிட்டு சென்று விட்டார். எம்மைப்பற்றி கேட்டதாகவும் எங்கிருந்து வந்தவர்கள் என்றும் ஏதாவது அமைப்புக்ளோடு சம்பந்தப் பட்டவர்களா என்றும் கேட்டதாக அறிந்தோம். மதியம் போல் முல்லைத்தீவு பட்டினத்தையும் பொக்கணையையும் பார்ப்பதற்காக புறப்பட்டோம்.


இந்தக் கட்டுரையின் 9 வது பாகம் இதுவாகும் இதன் முன்னைய பகுதிகளைப் பார்வையிடுவதற்கு இடப்பக்கத்தில் உள்ள மேலும் சில பக்கங்கள் என்ற தலைப்பின் கீழ் எனது இலங்கைப் பயணம் என்ற தலைப்பை கிளிக் செய்யுங்கள்.

5 comments:

kirrukan said...

[quote]( இந்தியாவில் நேருவும் அதன்பின் இந்திரா காந்தி ஆகியோரின் தேர்தல் தொகுதியாக இருந்தது அமோதி தொகுதியாகும் அது மிகவும் படிப்பறிவு இல்லாத மக்கள் கூடிய இடமென்று புள்ளி விபரம் காட்டும். ஒரு பிரதமருடைய தொகுதி ஏன் இப்படி உள்ளது என்று கேட்டால் படிப்பறிவுள்ளவர்களாக மாற்றி விட்டால் சிந்திக்க தொடங்கி விடுவார்கள் வாக்குச் சீட்டைப் பெறுவது கடினம் அதுதான் ரகசியம் ) [/quote]


அதுதான் ராகுல் காந்தியும் அந்த தொகுதியில் நிற்க்கப் போகிறார் போல கிடக்கு..

அவுஸ்ரேலியா தமிழ் ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்துக்கு நன்றிகள்.

[quote]

நாங்கள் விதைத்தது என்று என்மனம் கூச்சல் போடுகிறது[/quote]
எனக்கு ஒரு சந்தேகம், அந்த மக்கள் உரிமைக்காக குரல் கொடுத்தது தப்பா?

செ.பாஸ்கரன் said...

வருகைக்கு நன்றி கிறுக்கன்.
நிட்சயமாக இல்லை மக்கள் சக்தி மாபெரும் சக்தி பின்னால் திரண்டுவந்த அந்த மிகப்பெரிய சக்தியை கொண்டு சாதிக்காமல் எது எதுக்கோ எல்லாம் பிணக்குப்பட்டுக் கொண்டு இன்று இந்த நிலைக்கு வந்துவிட்டோம். அந்த மக்களை திரட்டியதில் எங்களுக்கும் பெரிய பங்கு இருக்கின்றதே அதைத்தான் குறிப்பிடுகின்றேன். அந்த நாட்டில் விடுதலைக்காக திரண்ட மக்கள்தொகை வரலாற்றில் முன்பு திரண்டதுமில்லை இனி திரளப்போவதும் இல்லை.

Gowri said...

"எமது மக்களையும் காப்பாற்ற வேண்டுமானால் கல்வியறிவை எம்மவர்கள் மேம்படுத்தவேண்டும்."

கல்வியறிவையும் அத்துடன் வேலை வாய்ப்புக்களையும் ஏற்படுத்தி கொடுத்து .தமிழர்கள் தங்கள் சொந்தக்காலில் நிற்பதை ஊக்கு விக்க வேண்டும் அதற்கு புலம் பெயர்ந்தவர்கள் தான் உதவி செய்ய வேண்டும்

Anonymous said...

அங்கிருந்து ATBC ஊடாக உதவி கோரியபோது உதவ முன்வந்தவர்களை பாராட்டுவதோடு பாஸ்கரன் எடுத்த முயற்சியையும் பாராட்டுகிறேன். அங்கு செல்பவர்கள் எல்லோரும் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு சென்று இப்படி உதவிகள் செய்தாலே அங்குள்ள மக்கள் நிமிர்ந்து விடுவார்கள்

கலைசெல்வி

Anonymous said...

உங்கள் நண்பர் செய்தது போல நீங்கள் பசில் ராஜபக்சேவை சந்தித்து கை குலுக்கவில்லையா?
- சந்திரன்