முக நூலின் இன்னொரு முகம்! - பூலியன்

.
பேஸ்புக் தெரியுமா உங்களுக்கு? தெரியாவிட்டால் இந்த நூற்றாண்டில் வாழத் தகுதியற்றவர் என்கிறது நவீனகால இளைஞர் கூட்டம். ட்விட்டர் பரிச்சயம் இல்லை என்றால் நீங்கள் இந்தக் காலத்துக்கு ஒத்து வராத ஆள் என்கிறார்கள். இந்த சமூக வலைத்தளங்கள்தான் இன்றைய தகவல் பரிமாற்றத்தின் முதுகெலும்பு.

சுஷ்மா ஸ்வராஜ் போன்ற பரபரப்பாக இயங்கும் அரசியல் தலைவர்கள்கூட சூடான செய்திகளை ட்விட்டரில்தான் தருகிறார்கள். அவர்களைப் பின்தொடராமல் விட்டால், ஆறிப்போன தகவல்கள்தான் நமக்குக் கிடைக்கும். சினிமா நட்சத்திரங்களின் ட்விட்டர் செய்திகளைக் கவனித்தால் நிறைய கிசுகிசுக்கள் கிடைக்கும். இன்னும் சில காலத்தில் நம்மூர் குப்புசாமியும் மாரிச்சாமியும்கூட ட்விட்டரிலும் பேஸ்புக்கிலும் கணக்கு வைத்திருப்பார்கள். அந்த அளவுக்கு இந்த வலைத் தளங்கள் செல்வாக்குப் பெற்று வருகின்றன.பேஸ்புக்கின் பெயரைத்தான் முகநூல் என்று மொழியாக்கம் செய்திருக்கிறது தமிழ்கூறும் நல்லுலகம்.

காலையில் பல் துலக்கிவிட்டேன் என்பது முதல் ஒபாமா வீட்டு நாய்க்குட்டிக்குக் காய்ச்சல் என்பது வரை உலகின் எல்லா நிகழ்வுகளையும் அறிவிப்பதற்கு இந்த இணையதளம் பயன்படுத்தப்படுகிறது. நான் வருத்தமாக இருக்கிறேன் என்று பேஸ்புக்கில் கண்ணீர் வடித்தால், உலகத்தின் பல மூலைகளிலிருந்தும் ஆறுதல் வருகிறது. காதலைச் சொல்லவும், முத்தமிடவும், கட்டிப் பிடித்துக் கொள்ளவும் இந்த வலைத்தளத்தில் வசதி இருக்கிறது. நமது பண்பாட்டைச் சிறையாக நினைக்கும் புதிய தலைமுறையினர், இந்த வசதிகளை நன்றாகவே பயன்படுத்திக் கொள்கிறார்கள்.

பருவநிலை மாற்றத்துக்கு எதிராகவும், மீனவர்களுக்கு ஆதரவாகவும் தெருக்களில் போராட்டம் நடக்கிறதோ இல்லையோ, ட்விட்டரிலும் பேஸ்புக்கிலும் கண்டிப்பாக நடக்கும். ஸ்பெக்ட்ரம் முறைகேடும், எகிப்து எழுச்சியும் காரசாரமாக விவாதிக்கப்படும். பி.டி. கத்திரிக்காய் வேண்டாம் என்றும், போஸ்கோ தொழிற்சாலை கூடவே கூடாது என்றும் காரசாரமாக பிரசாரம் செய்யப்படும். அரசுக்குக் கண்டனம் தெரிவிக்கப்படும். கையெழுத்து இயக்கம்கூட நடக்கும். இதெல்லாம் அரசின் காதுகளை எட்டுமா என்று அசட்டுத் தனமாகக் கேட்கக்கூடாது. இது நவீன போராட்டக் களம் என நினைத்துக் கொண்டு அமைதியாகப் போய்விட வேண்டியதுதான்.

சட்டங்களுக்கு இங்கு வேலை இல்லை. இந்திய இறையாண்மைக்கு எதிராகப் பேசினால் தேசியப் பாதுகாப்புச் சட்டம் பாயும்; மதகுருமார்களை கேலிச் சித்திரமாக வரைந்தால் ஆண்டுக் கணக்கில் தண்டனை கிடைக்கும்; நீதிமன்றத்தை அவமதித்தால் சிறைக்குச் செல்ல வேண்டும். இதுதான் பொதுவான சட்டம். சில மேற்கத்திய நாடுகள் பேஸ்புக்கில் எழுதுவதைக் கண்காணிக்கின்றன. விதிமீறல்கள் இருந்தால் தண்டிக்கின்றன. ஆனால், இந்தியா போன்ற நாடுகளில் இன்னும் அந்த அளவுக்கு விழிப்புணர்வு இல்லை. இங்குள்ள வலையுலகம் இதையெல்லாம் பொருள்படுத்துவது இல்லை. எல்லோரும் திட்டப்படுகிறார்கள், எல்லாமே விமர்சிக்கப்படுகின்றன. அந்த அளவுக்குச் சுதந்திரம் இருக்கிறது.

இந்தச் சுதந்திரம் இப்போது எதிர்மறையாகப் பயன்படுகிறது. பேஸ்புக்கில் கணக்கு வைத்திருப்போரின் தனிப்பட்ட தகவல்கள் எந்த அளவுக்குப் பாதுகாக்கப்படுகின்றன என்பது குறித்து அவ்வப்போது கேள்வி எழுப்பப்படுவதுண்டு. அண்மையில் பேஸ்புக் நிறுவனரின் கணக்கையே இணையக் குறும்பர் யாரோ திருடி, கண்டனச் செய்தியை வெளியிட்டார். சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துவோர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இணைய வலைத்தள ஜாம்பவானுக்கே இந்தக் கதி என்றால், அவரை நம்பிக் கணக்கு வைத்திருக்கும் கோடிக்கணக்கானோரின் நிலை குறித்து கவலை எழுந்தது.

இப்போது இன்னொரு விவகாரம். பேஸ்புக்கில் கணக்கு வைத்திருப்போரில் பெரும்பாலானோர் தங்களது தனிப்பட்ட வகையிலான புகைப்படங்களை தளத்தில் வெளியிடுகின்றனர். அதுவும் தங்களைப் பற்றிய சுயவிவரக் குறிப்பில் இருக்கும் முகப்புப் புகைப்படம் மிகவும் பிரபலம். தன்னம்பிக்கை இல்லாதவர்கள்தான் முகத்தை மறைத்துக் கொள்வார்கள் என்று தத்துவம் வேறு சொல்லப்படுகிறது. இந்த முகப்புப் புகைப்படத்தை யார் வேண்டுமானாலும் பார்க்கலாம். பொதுவெளியில் காணக்கிடைக்கும். இது தவிர புகைப்படத் தொகுப்பும் இருக்கும். இப்போது இந்தப் புகைப்படங்கள் எல்லாம் திருடப்படுவது அம்பலமாகியிருக்கிறது. இந்தப் புகைப்படங்களைத் திருடி அப்படி என்ன செய்துவிட முடியும் என்கிறீர்களா?

தற்போது பேஸ்புக்கில் உள்ள புகைப்படங்களைத் திருடி ஆபாசமான டேட்டிங் இணையதளம் ஒன்று வெளியிட்டிருக்கிறது. லவ்லி ஃபேஸஸ் என்கிற அந்த இணையதளம் சுமார் 2.5 லட்சம் பேரின் பேஸ்புக் முகப்பு புகைப்படங்களை திருடியிருப்பதாக ஒப்புக் கொண்டிருக்கிறது. இந்தப் புகைப்படங்கள் அனைத்தும் முக உணர்வை அடையாளங் காணும் மென்பொருளின் உதவியுடன் வகைப்படுத்தப்பட்டு இவர் இப்படிப்பட்டவர், இவருடன் டேட்டிங் செல்ல அணுகவும் என்கிற ரீதியில் சேவை அளிக்கிறது. இதில் ஆண்கள் பெண்கள் என வித்தியாசம் இல்லாமல் எல்லோரின் புகைப்படங்களும் இடம்பெற்றிருக்கின்றன. சமூக வலைத்தளங்களின் கட்டுப்பாடுகளை உடைத்து அனைவரையும் இணைக்கும் முயற்சி இது என்று இந்த டேட்டிங் இணையதள உரிமையாளர்கள் தங்களது செயலை நியாயப்படுத்தியிருக்கிறார்கள்.

ஆனால், ஒரு டேட்டிங் இணையதளத்தில் தனது படம் இடம்பெறுவதை, அதுவும் தன்னுடைய அனுமதியே இல்லாமல் இடம்பெறுவதை யாரும் விரும்ப மாட்டார்கள். என்னதான் அத்துமீறுதல், கட்டுடைத்தல் போன்ற நவீன மரபுகள் உருவாக்கிக் கொண்டிருந்தாலும், இந்தியச் சமூகம் இவற்றை உள்வாங்கிக் கொள்வதற்கு இன்னும் சில காலம் பிடிக்கும். அதுவரையில் முகநூலில் எச்சரிக்கையுடன் முகம் காட்டுவதே நல்லது.
நன்றி தினமணி


No comments: